தூக்கு தண்டனையை அரசியலமைப்புக்குட்பட்ட மரணதண்டனை முறையாக உச்சநீதிமன்றம் ஏன் உறுதி செய்தது? -அமால் ஷேக்

மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரு முறையாக தூக்கு தண்டனையின் அரசியலமைப்புச் செல்லுபடி தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த முறை, அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் உள்ள கண்ணியத்திற்கான உரிமையை மீறவில்லை (right to dignity) என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


காலனித்துவ இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு மரண தண்டனை நிறைவேற்றும் முறை, அரசியலமைப்பு உறுதி செய்யும் மனித கண்ணியத்தை இன்றும் பாதுகாக்கிறதா? தற்போதுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், ஆம் என்று உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 18  அன்று தெரிவித்தது.


நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரு முறையாக தூக்கு தண்டனையின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையை உறுதி செய்தது. இந்த முறை அறிவியல்ரீதியாக நம்பகமற்றது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் கண்ணியமான மரணத்திற்கான உரிமையை மீறுகிறது என்றும் வாதிட்ட ஒரு பொதுநல மனுவை அது தள்ளுபடி செய்தது.




இந்த வழக்கில் இரண்டு முக்கிய தடைகள் இருப்பதாக நீதிமன்றம் கூறியது. முதலாவது, 1983-ஆம் ஆண்டு தீனா vs இந்திய அரசு (Deena vs UOI) வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தூக்கிலிடும் முறையை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக ஏற்கனவே உறுதி செய்திருந்தது. மற்றொன்று, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சட்டத்தை இயற்றியபோதும் நாடாளுமன்றம் தூக்கிலிடும் முறையைத் தொடர்ந்து வைத்திருந்தது.


இந்த அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு தூக்குமேடையை அடைந்தவுடன் முடிவடைந்து விடாது. மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் கைதிகளுக்கும் இந்தப் பாதுகாப்பு அதே அளவிலான முக்கியத்துவத்துடன் பொருந்த வேண்டும் என்று கூறியது.


தூக்கு தண்டனை ஏன் எதிர்க்கப்படுகிறது?


தூக்கு தண்டனையானது, ஒருவரின் உயரம் மற்றும் எடையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் “வீழ்த்தும் (Drop)” முறையின் மூலம் செயல்படுகிறது. இதன் நோக்கம், கழுத்துப் பகுதியில் உள்ள C2-C3 கழுத்து முதுகெலும்புகளில் முறிவு மற்றும் இடப்பெயர்வு ஏற்படுத்தி, மிகக் குறுகிய நேரத்தில் சுயநினைவை இழக்கச் செய்வதாகும்.


தீனா எதிர். இந்திய அரசு வழக்கில், உச்சநீதிமன்றம் மருத்துவச் சான்றுகள், நிபுணர் கருத்துகள் மற்றும் ஒப்பீட்டு மரணதண்டனை முறைகளை ஆராய்ந்த பின்னர், தூக்கு தண்டனையின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தது. முறையாகச் செயல்படுத்தப்படும்போது, தூக்கு தண்டனை ஒரு விரைவான மற்றும் உறுதியான மரணதண்டனை முறையாகும் என்றும், அது அரசியலமைப்பின் 21-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த முறை அறியப்பட்ட மற்ற எந்தவொரு முறையையும்விட அதிக வலியை ஏற்படுத்துவதில்லை என்றும், "மனிதாபிமானமற்ற கொடுமை, சித்திரவதை மற்றும் இழிவுபடுத்துதல்" ஆகியவற்றைத் தவிர்க்கிறது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.


ஆனால், மனுதாரர்கள், அறிவியல் புரிதலும் அரசியலமைப்பு கோட்பாடும் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்று கூறினர். தூக்கு தண்டனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும், பிரிவு 21-ல் கண்ணியமான முறையில் மரணத்தை எதிர்கொள்ளும் உரிமையும் அடங்கும் என்றும் அவர்கள் கூறினர். தூக்கு தண்டனை “கடுமையான உடல் சித்திரவதையுடனும் வலியுடனும்” இருக்கக்கூடியது என்றும், அதன் விளைவு இயல்பாகவே கணிக்க முடியாதது என்றும் அவர்கள் கூறினர். வீழ்த்தும் உயரம் (Drop) குறைவாக இருந்தால் கழுத்து நெரிக்கப்பட்டு மரணம் ஏற்படலாம்; வீழ்த்தும் உயரம் (Drop) மிகவும் அதிகமாக இருந்தால் தலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்றும் வாதிட்டனர்.


Drop என்றால் என்ன?


Drop என்பது தூக்கு தண்டனை நிறைவேற்றும்  போது உடல் கீழ்நோக்கி விழும் தூரத்தைக் குறிக்கிறது.


1882 முதல் 1945 வரை இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்ட 34 பேரின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்த 1992-ஆம் ஆண்டு ஆய்வை மனுதாரர்கள் மேற்கோள் காட்டினர். C2-C3 பகுதியில் முறிவுகள் பொதுவாகக் காணப்பட்டாலும், உடனடி மரணத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படும் “தூக்கிலிடப்பட்டவரின் எலும்பு முறிவு” (Hangman’s Fracture) 34 பேரில் 3 நபர்களிடம் மட்டுமே காணப்பட்டது. மேலும் 6 பேர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தனர். இதனால் தூக்கு தண்டனை விரைவானதும் கட்டுப்படுத்தக்கூடியதுமான முறையல்ல என்றும், எனவே அது Article 21-ஐ மீறுகிறது என்றும் அவர்கள் வாதிட்டனர். மரணம் உடனடியாக ஏற்படுவது உறுதியானதல்ல. தூக்கிலிடப்படுவதற்கு முன்பான காலகட்டமே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும், அதன் விளைவுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர்கள் கூறினர்.


2003-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 8 மரணதண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், இந்தியாவில் இதுவரை எந்தவொரு தவறான மரணதண்டனையும் பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு வாதிட்டது. அதே நேரத்தில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மரண ஊசி (Lethal Injection) முறையில் தோல்வியடைந்த சம்பவங்கள் குறித்து ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியது.




தூக்கு தண்டனை பற்றி சட்டம் என்ன சொல்கிறது?


கண்ணியத்துடன் மரணத்தை எதிர்கொள்ளும் உரிமை, அரசியலமைப்பின் 21-வது பிரிவு வழங்கும் வாழ்வதற்கான உரிமையிலிருந்து உருவாகிறது. 1996-ஆம் ஆண்டு ஜியான் கவுர் vs பஞ்சாப் மாநிலம் (Gian Kaur vs State of Punjab) வழக்கில், வாழ்வதற்கான உரிமையில் கண்ணியத்துடன் வாழ்வதும், இறுதியில் கண்ணியத்துடன் மரணத்தை எதிர்கொள்வதும் அடங்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சட்டத்தின் பிரிவு 393(5), ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்போது, அந்தத் தண்டனை "அவர் இறக்கும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று தண்டனை உத்தரவு குறிப்பிட வேண்டும் என்று கூறுகிறது.


இந்த விதி முதன்முதலில் 1861-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் (Code of Criminal Procedure (CrPC)) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரிதாக மாற்றப்படவில்லை. பல்வேறு சட்டத் திருத்தங்களுக்குப் பிறகும் இந்த விதி தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது இதே விதி பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.


சட்ட ஆணையம் என்ன கூறியுள்ளது?


இந்த சவாலின் முக்கியமான அடிப்படைகளில் ஒன்றாக, நீதிபதி M. ஜகந்நாத ராவ் தலைமையில் 2003-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்திய சட்ட ஆணையத்தின் 187-வது அறிக்கை அமைந்தது.


இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்த பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு “குற்றம் சாட்டப்பட்டவர் இறக்கும் வரை மரண ஊசி (Lethal Injection) செலுத்தும் மாற்று முறையை செயல்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்” என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்த்தது.



மேலும், நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் வழங்கப்படும் தூக்கு தண்டனைகளைச் சுட்டுக் கொல்வதன் மூலம் நிறைவேற்றலாம் என்று கூறும் இராணுவச் சட்டங்களையும் அந்த அறிக்கை ஆய்வு செய்தது. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்போது மட்டுமே சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மரணதண்டனை முறையாக இருக்க வேண்டியதில்லை என்று வாதிடுவதற்கு மனுதாரர்கள் இந்த விதிகளைச் சார்ந்திருந்தனர்.


ஆனால், சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் பரிந்துரைகள் மட்டுமே, அவை கட்டாயமானவை அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தை இயற்றும்போது நாடாளுமன்றம் தூக்கு தண்டனை முறையைத் தொடர்ந்து வைத்திருப்பதை, தற்போதுள்ள சட்ட நடைமுறையை நாடாளுமன்றம் மீண்டும் உறுதி செய்ததாக நீதிமன்றம் கருதியது.


உச்சநீதிமன்றம் ஏன் தூக்கிலிடும் முறையை உறுதி செய்தது?


தீனா வழக்கை மறுபரிசீலனை செய்ய எந்தக் காரணமும் இல்லை என நீதிமன்ற அமர்வு கண்டறிந்தது. மனுதாரர்கள் அறிவியல் சான்றுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்திருந்தாலும், அந்தச் சான்றுகள் தீனா வழக்கு தீர்மானிக்கப்பட்ட அடிப்படையை மாற்றிவிடவில்லை என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. மேலும், மரண ஊசி (Lethal Injection), மின்சாரம் செலுத்துதல் (Electrocution), மரண வாயு (Lethal Gas) அல்லது துப்பாக்கிச் சூடு (Shooting) போன்ற மாற்று முறைகள், தூக்கிலிடும் முறையைவிட சிறந்தவை அல்லது சாதகமானவை என்பதையும் மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.


தீனா வழக்கில் கூறப்பட்ட காரணங்களையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்த வழக்கில், நீண்ட வீழ்ச்சி முறை (Long-Drop Method) மூலம் தூக்கிலிடுதல், கழுத்துப் பகுதியில் ஏற்படும் முறிவின் (Cervical Fracture) மூலம் உடனடியாக சுயநினைவை இழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முறையாக விளக்கப்பட்டது. தற்போதுள்ள தூக்கிலிடும் முறை, மரண தண்டனையை “கண்ணியத்துடனும் முறையான மரியாதையுடனும் (Decency and Decorum)”, மனித கண்ணியத்தை இழிவுபடுத்தாமல் அல்லது கொடூரமாக செய்யாமல் நிறைவேற்ற வேண்டிய அரசின் கடமையை தொடர்ந்து பூர்த்தி செய்கிறது என்று நீதிமன்றம் கூறியது.


மனுவைத் தள்ளுபடி செய்தபோதிலும், இந்த விவகாரம் என்றென்றும் முடிவுக்கு வந்துவிட்டது என்று நீதிமன்ற அமர்வு கூறவில்லை. அரசியலமைப்புச் சட்டம் காலத்திற்கேற்ப வளர்ச்சியடைகிறது என்றும், எதிர்காலத்தில் புதிய அறிவியல், மருத்துவ அல்லது அனுபவ அடிப்படையிலான ஆதாரங்கள் கிடைத்து, தீனா வழக்கின் தீர்ப்புக்கு அடிப்படையாக இருந்த கருத்துகளில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டால், இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், மத்திய அரசு விரும்பினால் எதிர்காலத்தில் மாற்று மரண தண்டனை நிறைவேற்றும் முறைகளை ஆய்வு செய்யலாம் என்றும் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது.


Original Link: Why the Supreme Court upheld hanging as a constitutional mode of execution

Share: