இந்த வருடம் இந்தியாவின் சுதந்திர தினமும் அமெரிக்காவின் தேசிய தேனீக்கள் தினமும் ஒரே நாளில் அமைந்தன. ஒரு தேனீ என்பது மனிதனின் விரல்நுனியில் அமரக்கூடிய மிகச்சிறிய பூச்சியாகும். அப்படியிருக்க, அமெரிக்கா இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது? ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கருத்துப்படி, பயிர்களில் மகரந்தச் சேர்க்கையைச் செய்து முடிக்கும் தேனீக்களின் பங்களிப்புதான் உலகளாவிய வேளாண் உற்பத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமாகும். இது உலகின் முன்னணி 115 உணவுப் பயிர்களில் 87 பயிர்களின் விளைச்சலை கணிசமாக உயர்த்துகிறது என்று அசோக் குலாட்டி, சுவாங்கி ராத் மற்றும் தன்மய் அதிகாரி ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
முக்கிய அம்சங்கள்:
• தேனீக்கள் பயிர் விளைச்சலை அதிகரிப்பதோடு, வேளாண் விளைபொருட்களின் ஊட்டச்சத்துத் தரத்தையும் மேம்படுத்துகின்றன. இந்தியா தனது வேளாண்துறையை உற்பத்தித்திறன் மிக்கதாகவும் சத்தானதாகவும் மாற்ற வேண்டுமானால், தேனீக்களை வேளாண் தொழிலாளர்களின் சிறந்த நண்பர்களாகக் கருத வேண்டும். உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் கடுகு வயல்களையோ அல்லது இமாச்சலப் பிரதேசத்தின் ஆப்பிள் தோட்டங்களையோ கடந்து செல்லும்போது, இந்தப் பூச்சிகளின் பங்களிப்பை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தேனீக்களின் உதவியால் இந்தியா உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய தேன் உற்பத்தியாளராகவும், சீனாவிற்கும் நியூசிலாந்திற்கும் அடுத்தபடியாக, மதிப்பின் அடிப்படையில் மூன்றாவது மிகப்பெரிய தேன் ஏற்றுமதியாளராகவும் உருவெடுத்துள்ளது.
• மகரந்தச் சேர்க்கையைத் தவிர்த்து, தேனீ வளர்ப்பு மூலம் வேளாண் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கவும் தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன. இந்தியாவில் தேன் உற்பத்தியானது கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது 2013-14-ஆம் ஆண்டில் சுமார் 76,000 டன்னாக இருந்த உற்பத்தியானது, 2025-26-ஆம் ஆண்டில் சுமார் 1,51,000 டன்னாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் தேன் உற்பத்தித் திறனின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மேலும், இந்தியாவில் உற்பத்தியாகும் தேனில் ஏறக்குறைய 70 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு 2025-26-ஆம் ஆண்டில் சுமார் 208 மில்லியன் அமெரிக்க டாலராகும். உலகளாவிய தேன் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 8.4 சதவீதமாக உள்ளது.
• இருப்பினும், இந்தியாவின் அதிக மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது, நாட்டின் உள்நாட்டு தேன் சந்தை சிறிய அளவிலேயே உள்ளது. இந்தியாவில் ஒரு நபரின் சராசரி தேன் நுகர்வு ஆண்டுக்கு சுமார் 37 கிராம் மட்டுமே, இது இந்தத் துறையில் இன்னும் பயன்படுத்தப்படாத மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருப்பதைக் காட்டுகிறது. தேனின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதும், சில்லறை விற்பனை வாய்ப்புகள் மேம்படுவதும் ஒரு பலமான உள்நாட்டு சந்தையை உருவாக்கும். இது வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்த உதவுவதோடு, உயர்தர தேனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
• இந்தத் பல்வகைப்படுத்தல் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாடத்தை வெளிப்படுத்துகிறது. வர்த்தகத் தடைகள் பல நேரங்களில் மீள்தன்மையையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கின்றன. ஒரே ஒரு முக்கிய வாடிக்கையாளரை மட்டும் நம்பியிருப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் தேன் துறை பல்வேறு நாடுகளின் சந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இது ஒரே ஒரு நாட்டைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, நீண்டகால ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது.
• சீர்திருத்தங்களும் முதலீடுகளும் மட்டுமே இந்த வாய்ப்பு நிலையான மாற்றத்தைத் தருமா அல்லது தற்காலிகமானதாக மட்டுமே இருக்குமா என்பதைத் தீர்மானிக்கும். அணுக்கரு காந்த அதிர்வு (Nuclear Magnetic Resonance (NMR)) பரிசோதனைக்கூடங்களில் முதலீடு செய்வது, மண்டலம் சார்ந்த பதப்படுத்துதல் (cluster-based processing), சுந்தரவனக் காடுகள் மற்றும் ராம்பன் சுலை போன்ற தனித்துவமான பூ வகை தேன்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது, மற்றும் வேளாண் குழுக்களை வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளாக மாற்றுவது ஆகியவை விதிமுறைகளுக்கான செலவைக் குறைத்து, இந்திய தேன் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியாவின் உயர்தரச் சந்தைகளுக்குச் செல்ல உதவும். தேன் மெழுகு, புரோபோலிஸ் (பிசின்), ராயல் ஜெல்லி மற்றும் மகரந்தம் உள்ளிட்ட உலகளாவிய தேனீ உற்பத்திப் பொருட்களின் சந்தை ஏற்கனவே மிகப்பெரியதாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில் இதன் மதிப்பு சுமார் 12.7 பில்லியன் டாலர் மற்றும் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியா மொத்த தேன் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருக்காமல், அதிக மதிப்புள்ள பிற தேனீ சார்ந்த பொருட்களுக்குத் தன் கவனத்தை விரிவுபடுத்த ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
• நிதி ஆயோக் (NITI Aayog) தகவலின்படி, இனிப்புப் புரட்சி (Sweet Revolution) என்பது இந்திய அரசின் ஒரு இலட்சியத் திட்டமாகும். இது தரமான தேன் மற்றும் அது சார்ந்த பிற பொருட்களின் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக, தேனீ வளர்ப்பை (Apiculture) ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
— தேனீ வளர்ப்பு என்பது குறைந்த முதலீடும், அதிக திறமையும் தேவைப்படும் ஒரு வணிக மாதிரியாகும். இதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக உருவெடுத்துள்ளது. இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த பொருள் என்பதால், நல்ல தரமான தேனுக்கான தேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுமட்டுமன்றி, ராயல் ஜெல்லி (Royal jelly), தேன் மெழுகு (Beeswax), மகரந்தம் (Pollens) போன்ற தேனீ வளர்ப்பு சார்ந்த பிற பொருட்களும் மருந்துகள், உணவு மற்றும் பானங்கள், அழகுசாதனப் பொருட்கள் எனப் பல துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
— தேனீ வளர்ப்பை விரிவுபடுத்துவது வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தேனீப் பாதுகாப்பை உறுதி செய்யும், மேலும் பயிர் உற்பத்தித்திறனையும் மகரந்தச் சேர்க்கையையும் அதிகரிக்கும். 'இனிப்புப் புரட்சிக்கு' ஊக்கமளிக்கும் வகையில், அறிவியல் பூர்வமான தேனீ வளர்ப்பை ஒரு இயக்கமாகச் செயல்படுத்தி, அதன் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அரசாங்கம் தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தைத் தொடங்கியது.
— உலகின் ஏழு அறியப்பட்ட தேனீ சிற்றினங்களில் நான்கு இந்தியாவில் காணப்படுகின்றன. இவற்றில் ‘கிழக்கத்திய தேனீ’ (Apis cerana) மற்றும் 'ஐரோப்பிய தேனீ’ (Apis mellifera) ஆகிய இரண்டும் வளர்ப்புத் தேனீக்களாகவும், ‘மலைத் தேனீ’ (Apis dorsata) மற்றும் ‘சிறிய தேனீ’ (Apis florea) ஆகிய இரண்டும் காட்டுத் தேனீக்களாகவும் இருக்கின்றன. தேனீக்கள் மகரந்தச்சேர்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. குறிப்பாக எண்ணெய் வித்துக்கள், பழத்தோட்டப் பயிர்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், மரப் பயிர்கள் மற்றும் அலங்கார மலர்கள் ஆகியவை தேனீக்களின் மகரந்தச்சேர்க்கையால் பெருமளவில் பயனடையும் முதன்மைப் பயிர்களாகும்.
— தேனீக்களின் பாதுகாப்பும் அவற்றின் இனப்பெருக்கமும் அப்பகுதியில் உள்ள உள்ளூர் தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளையே முழுமையாகச் சார்ந்துள்ளன. ஏனெனில், இந்தத் தாவரங்களே தேனீக்களுக்குத் தேவையான முதன்மை உணவாக விளங்குகின்றன. சுமார் 500 வகையான பூக்கும் தாவரங்கள் தேனீக்களின் தீவனத்திற்கான முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. கடுகு, தைல மரம், லிச்சி, சூரியகாந்தி, புங்கன், இமயமலைப் பலவகை மலர்கள், கருவேல மரம் மற்றும் காட்டுப் பூக்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் தேன், வெவ்வேறு வகையான இயற்கைச் சுவைகளைத் தருகிறது. தாவரங்களின் இந்தத் தாராளமான இருப்பு, தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக லாபம் தரும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.