பணப் பரிமாற்றத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, கல்வி போன்ற பிற பொதுச் சேவைத் துறைகளுக்குத் தேவைப்படும் முதலீடுகளைக் குறைத்துவிடும் என்பதைத் தரவுகள் காட்டுகின்றன.
ஆகஸ்ட் 1 அன்று, டெல்லி முதலமைச்சர் ‘லக்ஷ்மி யோஜனா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு நிபந்தனையற்ற பணப் பரிமாற்றம் (Unconditional Cash Transfer (UCT)) அடிப்படையில் மாதம் ₹2,500 வழங்கப்படும். இது சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆளும் கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். இதன் மூலம், பெண்களுக்காக உருவாக்கப்படும் இது போன்ற நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் டெல்லியும் இணைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பொருளாதார ஆய்வு மற்றும் 16-வது நிதிக் குழுவின் (Finance Commission) அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள், இது போன்ற திட்டங்களால் ஏற்படும் நிதிச் சுமை அதிகரித்து வருவது குறித்துக் கவலை தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், திட்டங்களைச் சீரமைக்கும் (rationalisation) நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகச் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டெல்லியில், இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, பயனாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் (MLA) அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் (MP) பரிந்துரை தேவை என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்த மதிப்பீடுகள், பெண்களுக்கு வழங்கப்படும் பணம் பெரும்பாலும் உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பயனுள்ள செலவுகளுக்கே பயன்படுத்தப்படுவதாகக் காட்டுகின்றன.
மேலும், தேவையான ஆவணங்கள் இல்லாத சூழல், வங்கிச் சேவைகளை அணுகுவதில் சிரமம் மற்றும் டிஜிட்டல் பதிவுகளில் ஏற்படும் பிழைகள் போன்ற வழக்கமான தடைகளும் இருந்து வருகின்றன. கவனிக்க வேண்டிய முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்தத் திட்டங்களுக்கான நிதி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளில் செய்யப்படும் பிற முதலீடுகளின் செலவில் வழங்கப்படுகிறதா? என்பதாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை, சில முக்கிய மாநிலங்களில் இந்தத் திட்டங்களுக்கான செலவு, மொத்த அரசுச் செலவினத்துடன் ஒப்பிடுகையில் எவ்வளவு உள்ளது என்பதையும், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான செலவினத்துடன் ஒப்பிடுகையில் அதன் அளவையும் காட்டுகிறது.
மாநிலத்தின் மொத்தச் செலவினத்தில், இந்த நிபந்தனையற்ற நேரடிப் பணப் பரிமாற்றத் (UCT) திட்டங்களுக்கான செலவினமானது ஜார்க்கண்டில் 10%-க்கும் அதிகமாகவும், இமாச்சலப் பிரதேசத்தில் 0.3%-க்கும் குறைவாகவும் உள்ளது. 16-வது நிதிக் குழுவின் அறிக்கையின்படி, மாநிலங்களின் மொத்தச் செலவினத்தில் ஏறக்குறைய 44% வட்டிச் செலுத்துதல், ஓய்வூதியம் மற்றும் ஊதியம் போன்றவற்றிற்காக செலவிடப்படுகிறது. புதிய முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கோ அல்லது முக்கியமான உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வதற்கோ மாநிலங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீட்டு வாய்ப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
மாநிலங்களின் மொத்த வருவாய் செலவினத்தில் சமூகத் துறைக்கான வருவாய் செலவினத்தின் விகிதம் 2011-12 முதல் நிலையாக இருப்பதாகவும் 16-வது நிதிக் குழு சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிடுகையில், 2020-21 முதல் இந்த விகிதம் சரிவைச் சந்தித்து வருகிறது. செலவு செய்யும் திறன் அதிகரித்த போதிலும், இந்தத் துறைகளுக்கான செலவினத்தில் அதற்கு இணையான அதிகரிப்பு ஏற்படவில்லை என்பதை இது காட்டுகிறது.
மிகப்பெரிய அளவிலான நிபந்தனையற்ற நேரடிப் பணப் பரிமாற்றத் (UCT) திட்டங்களைக் கொண்டுள்ள ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில், நிபந்தனையற்ற நேரடிப் பணப் பரிமாற்றங்களுக்கான செலவினமானது கல்விக்கான மொத்தச் செலவினத்தில் பாதியளவிற்கும் அதிகமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், கல்விக்கான மாநிலச் செலவினத்தில் நிபந்தனையற்ற நேரடிப் பணப் பரிமாற்றங்களுக்கான செலவினத்தின் விகிதத்தை கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.
மேலும், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், இந்தத்திட்டங்களுக்கான செலவினமானது சமந்தப்பட்ட மாநிலங்களின் ஒட்டுமொத்த சுகாதாரச் செலவினத்தை விட அதிகமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், சுகாதாரத்திற்கான மாநிலச் செலவினத்தில் நிபந்தனையற்ற நேரடிப் பணப் பரிமாற்றத்த்திட்டங்களின் செலவினம் வகிக்கும் பங்கை (%) கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.
இந்தத் திட்டங்களால் குடும்பங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், இவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்துத் தெளிவான புரிதலுடன் கூடிய விவாதங்கள் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இது வெளி காட்டுதுகிறது.
இந்தத்திட்டங்கள் விரிவடையும்போது மாநிலங்களின் நிதிச் சுமை அதிகரிக்கிறது. இது சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய செலவினங்கள் உட்பட, சமூகத் துறை சார்ந்த பிற செலவினங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். மாநில அரசுகளின் நிதி வளங்கள் குறைந்த நிலையில் இருப்பதை கருத்தில் கொள்ளும்போது, இது அச்சம் நியாயமானதாகவே உள்ளது. காலப்போக்கில், போதிய நிதி ஒதுக்கப்படாத பொது சேவைகளின் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சில அறிஞர்கள், இது போன்ற பணப் பரிமாற்றத் திட்டங்கள், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசின் தோல்விக்கான ஒரு வகையான ‘இழப்பீடு’ (Compensation) என்று கூறிவருகின்றனர். தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்பாக இந்தப் பணப் பரிமாற்றங்கள் வழங்கப்படுவதும், பலரால் அவற்றை ‘இலவசப் பண உதவி’ (Dole) என்று அழைக்கும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சிறந்த வசதிகள் மற்றும் அதிக பொறுப்புணர்வைக் கோரி நடைபெற்ற போராட்டங்கள், மக்கள் வெறும் ‘இழப்பீட்டை’ மட்டும் பெறுவதில் இனி திருப்தியடையவில்லை என்பதையும், அரசின் வளங்களில் தங்களுக்கு நியாயமான பங்கையும் கேட்கத் தொடங்கியுள்ளனர் என்பதற்கான ஓர் அறிகுறியாகக் கருதலாம்.