தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொது அதிகார அமைப்பு (public authority) என்பது எதைக் குறிக்கிறது? - திலீப் பி. சந்திரன்

 2026-ஆம் ஆண்டு மே மாதத்தில் , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்' கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India (BCCI)) ஒரு "பொது அதிகார அமைப்பு" (public authority) அல்ல என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்தது. இருப்பினும், ஒரு நிறுவனம் பொதுப் பணிகளை அல்லது "பொது நடவடிக்கைகளை" மேற்கொள்வது அதனை அந்தச்சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவருமா என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், ஒரு "பொது அதிகார அமைப்பு" அல்ல என்றும், எனவே அந்தச்சட்டத்தின்கீழ் தகவல்களை வெளியிடுமாறு வாரியத்தை நிர்பந்திக்க முடியாது என்றும் மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission (CIC)) தீர்ப்பளித்தது.


2026-ஆம் ஆண்டு மே மாதம் வழங்கிய தீர்ப்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பது 'தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் (Tamil Nadu Societies Registration Act) சட்டம், 1975'-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம் என்பதை மத்திய தகவல் ஆணையம் (CIC) சுட்டிக்காட்டியது. பதிவு செய்வதன் மூலம் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற தனிநபர்களின் தனியார் அமைப்பு என்ற வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அரசின் எந்தவொரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டிற்குள் வராது என்று   குறிப்பிட்டது.




இந்தத் தீர்ப்பு, பேச்சு மற்றும் கருத்து வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையின் முக்கிய அங்கமாக இருந்து வரும், தெரிந்துகொள்ளும் உரிமை" (Right to Know) தொடர்பாகவும், பொது அதிகார அமைப்பு (Public Authority) என்ற கருத்து தொடர்பாகவும் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் தெரிந்து கொள்ளும் உரிமை எவ்வாறு 2005-ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டமாக உருவானது. மேலும், அந்தச்சட்டத்தின்கீழ் பொது அதிகார அமைப்பு என்பது எதைக் குறிக்கிறது?


தெரிந்து கொள்வதற்கான உரிமையின் அரசியலமைப்புரீதியான அடித்தளம்


உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகள், தகவல் பெறும் உரிமை சட்டத்தை  மக்களின் உயிர்நாடியாக அங்கீகரிக்கின்றன. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (1948) 19-வது பிரிவும், மக்கள் மற்றும் 1966-ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 19(2)-வது பிரிவும், தகவல்களைத் தேடுதல், பெறுதல் மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றை கருத்துச் சுதந்திரத்தின் ஒரு முக்கிய அடையாளமாக உறுதிப்படுத்துகின்றன.


இந்தியாவில், அரசியலமைப்பின் பிரிவு 19(1)(அ)-ன் கீழ் உள்ள பேச்சு மற்றும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையின் முக்கியப்பகுதியாக 'அறியும் உரிமையை' (right to know) உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றியுள்ளது. எடுத்துக்காட்டாக, 1975-ஆம் ஆண்டு 'உத்தரப் பிரதேச மாநிலம் vs ராஜ் நரேன்' (State of Uttar Pradesh vs Raj Narain) வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில், நாட்டு மக்கள் ஒவ்வொரு பொது நடவடிக்கை குறித்தும், பொதுப் பொறுப்பில் உள்ளவர்களால் பொதுவெளியில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல் குறித்தும் தெரிந்துகொள்ளும் உரிமையை பெற்றுள்ளனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


1986-ஆம் ஆண்டு எல். கே. கூல்வால் vs ராஜஸ்தான் மாநிலம் (L K Koolwal vs State of Rajasthan) வழக்கில், “அரசியலமைப்பின் 19(அ) பிரிவின்கீழ் பேச்சுரிமை உள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. பேச்சுரிமை என்பது தெரிந்து கொள்வதற்கான உரிமையின் அடிப்படையாக  அமைந்துள்ளது.



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) பரிணாம வளர்ச்சி


பின்னர், 1990-களில் ராஜஸ்தானில் செயல்பட்ட மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் (Mazdoor Kisan Shakti Sangathan (MKSS)) முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் இயக்கத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைக்கான (Right to Information) போராட்டம் வலுப்பெற்றது.


பொது விசாரணைகளின்போது போலி வருகைப் பதிவேடுகளையும் பிற மசோதாக்களையும் வெளிப்படையாக ஆய்வு செய்த தேவதுங்கிரி கிராம மக்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையாக உருவெடுத்தனர். இந்த அடிப்படை இயக்கம் இறுதியில் 2005-ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் (Right to Information Act) சட்டத்திற்கு வழிவகுத்தது.


பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை ஊக்குவித்தல், ஊழலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தகவல் தெரிந்த குடிமக்கள் மூலம் பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இந்தச் சட்டம் 2005-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமலுக்கு வந்தது. இருப்பினும், இந்தச் சட்டத்தின்கீழ் மிக முக்கியமாக எழும் கேள்வி, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) கீழ் பொது அதிகார அமைப்பு (Public Authority) என்று எதை வரையறுக்கலாம்? என்பது ஆகும்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act)கீழ் பொது அதிகார அமைப்பு


அறியும் உரிமைச்சட்டத்தின்,பிரிவு 2(h)-ன் கீழ், பொது அதிகார அமைப்பு (Public Authority) என்பது பின்வரும் வழிகளில் உருவாக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட அதிகாரம், அமைப்பு அல்லது தன்னாட்சி நிறுவனத்தையும் குறிக்கிறது: அவை,


(அ) அரசியலமைப்பின் மூலம் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்புகள்.


(ஆ) நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள்;


(இ) மாநில சட்டமன்றம் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வேறு அமைப்புகள்.


(ஈ)  மத்திய அல்லது மாநில அரசு வெளியிடும் அறிவிப்பு (Notification) அல்லது அரசாணை (Order) மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஆகும்.


இந்த வரையறையானது, உரிய அரசாங்கங்களுக்குச் சொந்தமான, அவற்றால் கட்டுப்படுத்தப்படும் அல்லது கணிசமாக நிதியளிக்கப்படும் அனைத்து அதிகார அமைப்பு அல்லது நிறுவனத்திற்கும் விரிவடைகிறது. சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் நிதிகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகளவில் பெறும் அரசு சாரா அமைப்புகளும் இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வருகின்றன.


இந்தச் சட்டம் பொது அதிகார அமைப்பிற்கு ஒரு வரையறையை வழங்குகிறது. இதன்மூலம், அரசாங்க அதிகாரசபைகள் மட்டுமல்லாமல், அரசாங்க நிதி மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளும் அதன் வரம்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன.


பொது அதிகாரிகளின் முக்கிய கடமைகள்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4, பொது அதிகார அமைப்புகளின் முக்கிய கடமைகளை வரையறுக்கிறது. தகவல்களை எளிதாக பெறுவதற்கு வசதியாக, பொது அதிகார அமைப்புகள் தங்களின் அனைத்து பதிவுகளையும்  முறையாகப் பட்டியலிட்டு மற்றும் அட்டவணைப்படுத்தி அதைக் கட்டாயமாக பராமரிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் தங்களின் நிறுவனங்கள், செயல்பாடுகள், கடமைகள், முடிவெடுக்கும் செயல்முறை மற்றும் பிற முக்கிய தகவல்களின் விவரங்களை வெளியிடவும், ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் வேண்டும் என்றும் இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது..


இருப்பினும், முறையான கோரிக்கைகளின் தேவையைக் குறைக்கும்  வகையில், இணையம் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்புகள் மூலமாகவும், முடிந்தவரை உள்ளூர் மொழியிலும், பொது மக்களுக்கு சீரான இடைவெளியில் முடிந்தவரை அதிக தகவல்களைப் வழங்குமாறு இந்தச் சட்டம் பொது அதிகார அமைப்புகளை ஊக்கப்படுத்துகிறது.


மேலும், தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், சட்ட விதிகளுக்கு ஏற்ப விண்ணப்பதாரர்களுக்கு கேட்ட தகவல்களை வழங்குவதற்கும், பொது அதிகார அமைப்புகள் தங்களின் அனைத்து நிர்வாகப் பிரிவுகள் மற்றும் அலுவலகங்களில் பொதுத் தகவல் அலுவலர்களை (Public Information Officers (PIO)) நியமிப்பது கட்டாயமான செயல்முறையாகும்.


இருப்பினும், ஒரு நிறுவனம் தனது பொதுப் பணிகளை அல்லது “பொது நடவடிக்கைகளை” மேற்கொள்வது, அதனைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவருமா இல்லையா என்பதே ஒரு முக்கியக் கேள்வியாக எழுகிறது.


பொதுச் செயல்பாடுகள் (public actions) ஒரு அமைப்பை "பொது அதிகார அமைப்பாக" (public authority) தீர்மானிக்க முடியுமா?


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India (BCCI)) தொடர்பான தனது மே 2026-ஆம் ஆண்டு வழக்கில், மத்திய தகவல் ஆணையம் (CIC) உச்சநீதிமன்றத்தின் மூன்று முக்கியத் தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு தனது தீர்ப்பை வழங்கியது. அவை:


தலப்பலம் சர்வீஸ் கூட்டுறவு வங்கி vs  கேரளா மாநிலம் (Thalappalam Service Cooperative Bank vs State of Kerala),


ஜீ டெலிஃபிலிம்ஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா (Zee Telefilms vs Union of India),


டால்கோ இன்ஜினியரிங் vs சதீஷ் பிரபாகர் பத்யே (Dalco Engineering vs Satish Prabhakar Padhye) வழக்குகளாகும்.


2005-ஆம் ஆண்டு ஜீ டெலிஃபிலிம்ஸ் vs இந்திய அரசு வழக்கில், அரசியலமைப்பின் 12-வது பிரிவின் வரையறைப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அரசின் கீழ் வரும் அமைப்பு என்று கருதப்படாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், அந்த அமைப்பு முக்கிய பொதுப் பணிகளை மேற்கொள்கிறது என்பதைப் பல்வேறு நீதிமன்றக் கருத்துகளும் நிபுணர் குழு அறிக்கைகளும் அங்கீகரித்துள்ளன.


2018-ஆம் ஆண்டில், அப்போதைய மத்திய தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலுவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு பொது அதிகார அமைப்பு என்று கூறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பரப்புவதற்கான வழிமுறைகளை அமைக்குமாறு அந்த அமைப்புக்கு உத்தரவிட்டார்.


இருந்த போதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை செப்டம்பர் 2025-ல் புதிதாகப் பரிசீலிப்பதற்காக மத்திய தகவல் ஆணையத்திற்கே (CIC) திருப்பி அனுப்பியது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு “பொது அதிகார அமைப்பு” அல்ல என்று தீர்ப்பளித்ததன் மூலம், ஆணையம் 2018-ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்தது.


பொதுப் பணிகள் மட்டுமே ஏன் போதுமானதாக இல்லை?


இருப்பினும், மத்திய தகவல் ஆணையத்தின்  (Central Information Commission (CIC)) தீர்ப்பை விமர்சிப்பவர்கள் ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர்: அரசின் மறைமுக ஒப்புதலுடன் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 'இந்தியா' என்ற பெயரைப் பயன்படுத்துதல், வரி விலக்குகள், கிரிக்கெட் மீதான ஒழுங்குமுறை அதிகாரம் மற்றும் தேசிய அணியைத் தேர்ந்தெடுத்தல் போன்ற 'பொது அதிகாரம்' (public authority) சார்ந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சலுகைகளை பெற்ற வருகிறது என்பது அவர்களது வாதமாக உள்ளது.


இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அனுபவிக்கும் சில வரி சலுகைகள், அரசு அதற்குப் அளவில் நிதியுதவி அளிப்பதாகக் கருதப்படாது என்று மத்திய தகவல் ஆணையம் கூறியது. மேலும், முக்கிய பொதுப் பணிகளை மேற்கொள்வது மட்டுமே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பொது அதிகாரம் என்ற வரம்பிற்குள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தானாகவே கொண்டு வந்துவிடாது என்று  மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டது.



மேலும், பொது அதிகாரம் (public authority) என்பதை வரையறுக்கும் வகையில், இந்தச்சட்டத்தில் "பொதுச் செயல்பாடு" (public function) என்ற சொல் எந்த ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை. மாறாக, அரசாங்கக் கட்டுப்பாட்டின் தன்மை மற்றும் பொது நிதியுதவியின் அளவு ஆகியவற்றின் மீதே இந்தச்சட்டம் கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற சட்டரீதியான அளவுகோல்களே நீதிமன்ற விளக்கத்தின் முக்கியயப் புள்ளியாக அமைந்துள்ளன.


அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் கணிசமான நிதியுதவி


தகவல் அறியும் உரிமைச் சட்டம், “கணிசமான நிதியுதவி” மற்றும் “பொருத்தமான அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுவது” போன்ற சொற்களுக்கு தெளிவான வரையறை வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும், மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) முடிவுகளும் நீதிமன்றத் தலையீடுகளும் அவ்வப்போது இந்தச் சொற்களின் பயன்பாட்டைத் தெளிவுபடுத்த முயற்சிக்கின்றன.


2013-ஆம் ஆண்டு தலப்பலம் சேவை கூட்டுறவு வங்கி லிமிடெட் மற்றும் பிறர் எதிர் கேரள மாநிலம் மற்றும் பிறர் (Thalappalam Service Cooperative Bank Ltd. & Others vs State of Kerala & Others) வழக்கில், உச்சநீதிமன்றம், கூட்டுறவு சங்கங்கள் (Cooperative Societies) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொது அதிகார அமைப்புகள் (Public Authorities) அல்ல என்று தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் "கட்டுப்பாடு" என்பது கணிசமான (Substantial) மற்றும் நேரடியான கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை மட்டுமே எந்த ஒரு நிறுவனத்தையும் அந்தச்சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப் போதுமானதல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


மேலும், நீதிமன்றம் “கணிசமான நிதி” (substantial financing) என்ற சொல்லை, அது இல்லாமல் ஒரு அமைப்பு நடைமுறையில் இயங்க முடியாது என்பதால் “முக்கியமானது” எனக் குறுகிய முறையில் வரையறுத்துள்ளது. இந்த விளக்கங்கள், முக்கிய பொதுப்பணிகளைச் செய்யும் மற்றும் அரசாங்கங்களால் விரிவாக ஒழுங்குபடுத்தப்படும் அரசு அல்லாத அமைப்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்கு வெளியே வைக்கின்றன.



சட்டப்பூர்வ விளக்கங்களை தாண்டி (Beyond Legal Formalism)


சட்டப்பூர்வ விளக்கங்களைத் தாண்டி, பொதுப் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள், அவற்றின் வடிவம் மற்றும் அமைப்பின் தன்மையைப் பொருட்படுத்தாமல், தங்கள் நிர்வாகத்தில் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தவும் அவற்றை அதிகரிக்கவும் முயற்சி செய்யலாம். அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு மக்கள் அந்த நிறுவனங்களின்மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும், சமூகத்தில் சமூக மூலதனம் (Social Capital) உருவாகவும் அது உதவும்.


மேலும், சந்தை நலன்கள் (Market Considerations) அல்லது போட்டியில் முன்னிலை பெறும் உரிமை (Competitive Advantage) போன்ற காரணங்கள், நிர்வாக வெளிப்படைத்தன்மை என்ற ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்பை புறக்கணிக்கக் கூடாது. இறுதியாக, சட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சொற்களுக்கு தெளிவான விளக்கம் அளிப்பதும், அந்த சொற்களின் வரம்பை தெளிவாக நிர்ணயிப்பதும்,  வெளிப்படைத்தன்மைச் சட்டங்கள் அதிக நிறுவனங்களுக்கு பொருந்தும் வகையில் அதன் வரம்பை விரிவுபடுத்த உதவும்.


Original article : What constitutes public authority under the RTI Act. -Dileep P Chandran

Share:

பார்வைக்கு அப்பாற்பட்டு வானிலிருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகள் (Beyond-Visual-Range Air-to-Air Missiles (BVRAAMs)) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


இந்தியா தனது 'அஸ்திரா' (Astra) ஏவுகணைகளை வேறொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதைக் குறிப்பதால், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகள் இந்தோனேசியாவின் Su-30 ரக போர் விமானப் படையில் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படும்.


இந்த ஒப்பந்தமானது பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளின் (BrahMos supersonic cruise missiles) விற்பனை, முக்கிய பாதுகாப்புத் தொழில்நுட்பப் பரிமாற்றம், முக்கியமான கனிம வளங்களை பிரித்தெடுத்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பிற முக்கிய ஒப்பந்தங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Defence Research and Development Organisation (DRDO)) உருவாக்கப்பட்ட 'அஸ்திரா', உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பார்வைக்கு அப்பாற்பட்டு வானிலிருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகளின் (BVRAAM) ஒரு வகையாகும். இவை விமானப்படை மற்றும் கடற்படையில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.


பார்வைக்கு அப்பாற்பட்டு சென்று (Beyond-Visual-Range (BVR)) செயல்படும் ஏவுகணைகள் என்பவை 20 கடல் மைல்கள் அல்லது 37 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை ஆகும்.  வானிலிருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகள் (Air-to-air missiles) என்பவை முக்கியமாக வான்வழியில் உள்ள ஒரு இலக்கை அழிப்பதற்காக, மற்றொரு வான்வழி வாகனத்திலிருந்து (போர் விமானம் போன்றவை) ஏவப்படுபவை ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா? 


உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பார்வைக்கு அப்பாற்பட்டு வானிலிருந்து வானுக்கு பாயும் ஏவுகணையான 'அஸ்திரா', போர் விமானங்களில் பொருத்தப்படும் வகையிலும், மிக வேகமாக திசைமாறிச் செல்லும் திறன் கொண்ட சூப்பர்சோனிக் விமானங்களைத் தாக்கி அழிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடையுள்ள அதிக வெடிதிறன் கொண்ட 'முன்-துண்டாக்கப்படும் போர்முனையை' (pre-fragmented warhead) கொண்டுள்ள இந்த ஏவுகணை, 70 கி.மீ-க்கும் அதிகமான தூரம் செல்லும் திறன் கொண்டது. மேலும், இது மணிக்கு 5,555 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் தனது இலக்கை நோக்கிப் பாயும் வல்லமை பெற்றது. இந்த ஏவுகணை அனைத்து வானிலை நிலைகளிலும், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் செயல்படும் திறன் கொண்டது.


இந்த ஏவுகணையானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்டது. இதனுடன் சுமார் 50 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பங்காற்றியுள்ளன. பல்வேறு செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்த ஏவுகணையின் பல வகைகளை உருவாக்கும் பணிகளில் அவை ஈடுபட்டன.





அஸ்திரா Mk 1 (Astra Mk 1) ஏவுகணைகளை வழங்குவதற்காக இந்தோனேசியாவுடன் செவ்வாய்க்கிழமை கையெழுத்தான ஒப்பந்தம், வேறொரு நாட்டிற்கு இந்த ஏவுகணைகள் ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறையாகும். இது மற்ற நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்வதற்கான நல்ல வாய்ப்புகள் இருப்பதைக் காட்டுகிறது. இந்தியா இந்தோனேசியாவுக்கு மட்டுமல்லாமல், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வழங்கவுள்ளது. எதிர்காலத்தில், அஸ்திரா ஏவுகணைகளை விற்பனை செய்வதற்காக இந்தியா நட்பு நாடுகளுடன் மேலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளக்கூடும்.


Original article : What are beyond-visual-range air-to-air missiles (BVRAAM)? -Priya Kumari Shukla

Share:

அடிப்படை உரிமைகளின் 'கிடைமட்டப் பயன்பாடு' (horizontal application) ஏன் கவனம் பெற்றுள்ளது? -ரோஷ்னி யாதவ்

 தனியார் ஊடகங்களுக்கு எதிராகவும் அடிப்படை உரிமைகளை அமல்படுத்த முடியுமா? ''கிடைமட்டப் பயன்பாடு' (horizontal application) என்பதன் உண்மையான பொருள் என்ன? தனியுரிமை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் சட்டப்பிரிவு 19 உரிமைகளுக்கு இடையிலான சமநிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏன் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது? 


தற்போதைய செய்தி :


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகள், பாரம்பரியமாக அரசிற்கு எதிராக குடிமக்களுக்கான ஒரு பாதுகாப்பு கவசமாகப் பார்க்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும், ஜூலை 1 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, இந்த உரிமைகளின் "கிடைமட்டப் பயன்பாட்டை" விரிவுபடுத்தியது. அதன்படி, தனியார் ஊடக நிறுவனங்கள் ஒரு "பொதுப் பணியை" (public function) மேற்கொள்கின்றன என்றும், ஒரு தனிநபரின் தனியுரிமையை மீறினால் அவற்றின்மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.


இந்தச் சூழலில், அடிப்படை உரிமைகளின் செங்குத்து மற்றும் கிடைமட்டப் பயன்பாடுகள் (vertical and horizontal application) குறித்து அறிந்துகொள்வதோடு, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திர உரிமையையும் புரிந்துகொள்வோம்.


Vertical application (செங்குத்து பயன்பாடு) – குறிப்பிட்ட ஒரு துறை அல்லது தொழிலுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள் அல்லது அமைப்பு.

Example: மருத்துவமனை மேலாண்மை மென்பொருள், வங்கி மென்பொருள்.


Horizontal application (கிடைமட்ட பயன்பாடு) – பல துறைகளிலும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய பயன்பாட்டு மென்பொருள் அல்லது அமைப்பு.

Example: Microsoft Word, Excel, Email, Database Management Systems.


முக்கிய அம்சங்கள் :


1. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான விவரங்களை ஒளிபரப்பியதற்காக, டிவி டுடே நெட்வொர்க் (TV Today Network) நிறுவனத்தை ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று 2013-ல் ஒற்றை நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்தது.


2. நீதிபதி சி. ஹரி சங்கர் அவர்கள் தனக்காகவும், நீதிபதி ஓ. பி. சுக்லாவின் சார்பாகவும் எழுதிய இந்தத் தீர்ப்பு, பத்திரிகை சுதந்திரம், தனியுரிமை உரிமை மற்றும் ஊடகங்களுக்கு எதிராகக் குடிமக்கள் வழக்கு தொடரக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டக் கோட்பாடுகளை வகுத்துள்ளது.


3. ஊடகங்கள் தனியாருக்குச் சொந்தமானவையாக இருந்தாலும், அவை ஒரு “பொதுப் பணியை” (public function) மேற்கொள்கின்றன என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, செய்திகளைப் பரப்புவதிலும் பொதுக் கருத்தை உருவாக்குவதிலும் ஊடகங்களின் பங்கு சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதால், அது ஒரு பொதுப் பணியாக அமைகிறது என்று அது வாதிட்டது.


4. “ஊடகங்கள் எந்தவொரு பொதுச் செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்று கருதுவது யதார்த்தமற்றது” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், “அத்தகைய பொதுப் பணியைச் செய்யும்போது மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாமலோ அல்லது சேதமடையாமலோ இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய "பொதுக் கடமை" இதில் உள்ளார்ந்துள்ளதாகத் தெரிவித்தது.



5. இதன் அடிப்படையில், நீதிமன்றம் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை 'கிடைமட்டமாக' (horizontally) செயல்படுத்தியது. பொதுவாக, அடிப்படை உரிமைகள் பொதுவாக செங்குத்தாக (vertically) செயல்படுத்தப்படும் நிலையில், ஒரு குடிமகன் அவற்றை அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுத்தும்போது, கிடைமட்டச் செயல்பாடு (horizontal application) ஒரு குடிமகன் இந்த உரிமைகளை அரசு சாரா அமைப்புக்கு எதிராகச் செயல்படுத்த அனுமதிக்கிறது.


6. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, 2023-ம் ஆண்டின் கௌஷல் கிஷோர் தீர்ப்பில் (Kaushal Kishor judgment), சில அடிப்படை உரிமைகளைத் தனிநபர்களுக்கு எதிராகப் பரவலாகச் செயல்படுத்தலாம் என்று தீர்ப்பளித்து, இந்தக் கொள்கையை நிலைநாட்டியது.


7. தற்போது டெல்லி உயர்நீதிமன்றம், ஊடகங்கள் தொடர்பான வழக்குகளில் தனிநபர் உரிமைக்கும் இந்தக் கொள்கையை விரிவுபடுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட அந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு, அவரது தனியுரிமையில் ஒரு சட்டவிரோத அத்துமீறல் என்றும், எனவே ஒரு 'நீதிப்பேராணை (Writ)' அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றத்தில் பண இழப்பீடு வழங்குவது நியாயமானது என்றும் அது தீர்ப்பளித்துள்ளது.

உரிமைகளின் செங்குத்து மற்றும் கிடைமட்ட பயன்பாடுகள் என்றால் என்ன?


உரிமைகளின் செங்குத்துப் பயன்பாடு (Vertical application of rights) என்பது, அவற்றை அரசுக்கு எதிராக மட்டுமே அமல்படுத்த முடியும் என்பதாகும். அதேசமயம், உரிமைகளின் கிடைமட்டப் பயன்பாடு (Horizontal application of rights) என்பது, அவற்றை மற்ற குடிமக்களுக்கு எதிராகவும் அமல்படுத்த முடியும் என்பதாகும். உதாரணமாக, வாழ்வதற்கான உரிமையைப் பரந்த அளவில் பயன்படுத்தும்போது, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமையை மீறும் வகையில் மாசுபாட்டை ஏற்படுத்தும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஒரு குடிமகன் வழக்குத் தொடர முடியும்.


உங்களுக்குத் தெரியுமா?

          தீண்டாமையைத் தடைசெய்யும் (பிரிவு 17), ஆட்கடத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலைத் தடைசெய்யும் (பிரிவு 23) போன்ற அடிப்படை உரிமைகள், அரசுக்கும் மற்ற தனிநபர்களுக்கும் எதிராகக் கிடைக்கின்றன.


தனியுரிமை (Right to Privacy) என்றால் என்ன?

1. ஆகஸ்ட் 2017-ல், இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு கே. புட்டஸ்வாமி vs இந்திய ஒன்றியம் வழக்கு" (K. Puttaswamy vs Union of India Case) தனியுரிமைக்கான உரிமை என்பது, சட்டப்பிரிவின் 21-வது பிரிவின்கீழ் உள்ள வாழ்வதற்கான மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையின் உள்ளார்ந்த பகுதியாகவும், அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியால் உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரங்களின் ஒரு பகுதியாகவும் பாதுகாக்கப்படுகிறது" என்று ஒருமனதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு

        இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு, வாழ்வு மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. இது ஒவ்வொரு நபரின் வாழ்வையும் தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. அத்துடன், வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் தன்னிச்சையாகப் பறிக்கப்படுவதற்கெதிரான பாதுகாப்புகளையும் இது வழங்குகிறது.


2. சமீப ஆண்டுகளில் தனியுரிமை பல்வேறு சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் இதன் துல்லியமான பொருள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.


3. அலோக் பிரசன்ன குமார் தனிநபர் உரிமை குற்த்து குறிப்பிட்டதாவது, தனிநபரின் உரிமையின் மையமாக மூன்று கூறுகள் கருதப்படுகின்றன. அவை, தனிநபர் தன்னாட்சி (Personal autonomy), முடிவுகளை எடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் தன்னைப் பற்றிய தகவல்களுக்கு என்ன நடக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கிறது.

பேச்சுரிமை (Right to Freedom of Speech) என்பது என்ன?


1. இந்திய அரசியலமைப்பின் பகுதி III-ல் உள்ள பிரிவு 19(1)(a), அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது.


2. இந்த உரிமை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது வெளிநாட்டினருக்குக் கிடைக்காது. பிரிவு 19 (1) சில சுதந்திரங்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. அதனுடன், அனைத்து குடிமக்களுக்கும் பின்வரும் உரிமைகள் உண்டு என்று குறிப்பிடுகிறது. அவை,


(a) ​​பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு;

(b) அமைதியாகவும் ஆயுதங்கள் இன்றியும் ஒன்றுகூடுவது;

(c) சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை அமைத்தல்;

(d) இந்தியப் பிரதேசம் முழுவதும் சுதந்திரமாக நடமாடுவதற்கு;

(e) இந்தியப் பிரதேசத்தின் எந்தவொரு பகுதியிலும் வசிப்பதற்கும் குடியேறுவதற்கும்; மற்றும்

(f) நீக்கப்பட்டது

(g) எந்தவொரு தொழிலையும் அல்லது பணியையும், வணிகத்தையும் அல்லது வியாபாரத்தையும் மேற்கொள்ளும் உரிமை.

(குறிப்பு : தொடக்கத்தில், சரத்து 19 (1) (f) மற்றும் சரத்து 31 ஆகியவை சொத்துரிமையைக் கொண்டிருந்தன. அதாவது, சட்டத்தின் அதிகாரத்தின் மூலம் பொது நோக்கங்களுக்காக அரசு கட்டாயமாக கையகப்படுத்தும் உரிமைக்கு உட்பட்டு சொத்தை கையகப்படுத்துதல், வைத்திருத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய உரிமைகள் இதில் அடங்கும். இருப்பினும், 1978-ம் ஆண்டின் அரசியலமைப்பு (44வது திருத்தம்) சட்டம் (Constitution (44th Amendment) Act), சரத்து 19 (1)-ன் உட்பிரிவு (f) மற்றும் சரத்து 31 ஆகியவற்றை அரசியலமைப்பிலிருந்து நீக்கியபோது சொத்துரிமை ஒரு அடிப்படை உரிமையாக இல்லாமல் போனது.)


3. பிரிவு 19 (1)-ல் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் முழுமையானதோ அல்லது தடையற்றதோ அல்ல. அதைத் தொடர்ந்து பிரிவு 19(2)-ன்கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இது பின்வரும் தலைப்புகளின்கீழ் பேச்சு சுதந்திரத்திற்கான விதிவிலக்குகள் அல்லது "நியாயமான கட்டுப்பாடுகளை" பட்டியலிடுகிறது. அவை,


→ அரசின் பாதுகாப்பு,

→ வெளிநாடுகளுடனான நட்புறவு

→ பொது ஒழுங்கு,

→ கண்ணியம் மற்றும் ஒழுக்கம்,

→ நீதிமன்ற அவமதிப்பு,

→ அவதூறு,

→ குற்றம் செய்யத் தூண்டுதல்,

→ இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு.





அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 226-ன் கீழ் நீதிப்பேராணை (Writ) அதிகாரம்

         அரசியலமைப்பின் 226-வது பிரிவின்கீழ், அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்காகவும், அத்துடன் அரசுக்கோ அல்லது பொதுக் கடமைகளை ஆற்றும் அதிகாரிகளுக்கோ எதிராக வேறு எந்தவொரு சட்டப்பூர்வ உரிமைக்காகவும் நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றங்களுக்கு உண்டு.

 

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு-2026 


1. 180 நாடுகளை மதிப்பீடு செய்யும் உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீடு, அதன் 25 ஆண்டு கால வரலாற்றிலேயே மிகக் குறைந்த சராசரி மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளது. இது 'ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders) அமைப்பால் வெளியிடப்படும் ஒரு வருடாந்திர அறிக்கையாகும்.


2. இந்தக் குறியீட்டின் 25 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தவரை “கடினமான” அல்லது “மிகவும் தீவிரமான” பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.


3. இந்த அறிக்கையின்படி, “இந்த ஆண்டு இக்குறியீட்டின் சட்டரீதியான குறியீட்டெண் (legal indicator) மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. 2025 மற்றும் 2026-க்கு இடையில், 60%-க்கும் மேற்பட்ட நாடுகளில் (அதாவது 180-ல் 110 நாடுகளில்) இந்த மதிப்பெண் மோசமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியா (157-வது இடம்), எகிப்து (169-வது இடம்), இஸ்ரேல் (116-வது இடம்) மற்றும் ஜார்ஜியா (135-வது இடம்) ஆகிய நாடுகளில் இச்சரிவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது."


4. இந்தக் குறியீடு, பத்திரிகைத் துறையைப் பாதிக்கும் பொருளாதாரம், சட்டம், பாதுகாப்பு, அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை அளவிடுகிறது. இவற்றில், இந்த ஆண்டு சட்டரீதியான சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது.


5. இக்குறியீட்டில், நார்வே தொடர்ந்து 10-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், எரித்திரியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கடைசி இடத்தில் நீடித்தது.


6. இந்தியாவைப் பொறுத்தவரை, அது தரவரிசையில் மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. 2025-ல் 151-வது இடத்தில் இருந்த அது, தற்போது 2026-ல் 31.96 என்ற உலகளாவிய மதிப்பெண்ணுடன் 157-வது இடத்திற்கு வந்துள்ளது. இந்நாடு தொடர்ந்து "மிகவும் மோசமான" (very serious) பிரிவிலேயே நீடிக்கிறது.

தரவரிசை

நாடு

நிலை

1

நார்வே

நன்று

2

நெதர்லாந்து

நன்று

33

ஆஸ்திரேலியா

திருப்திகரமான

87

நேபாளம்

சிக்கலான

134

இலங்கை

கடினம்

153

பாகிஸ்தான்

மிகவும் தீவிரமான

157

இந்தியா

மிகவும் தீவிரமான

175

ஆப்கானிஸ்தான்

மிகவும் தீவிரமான

Original article : Why horizontal application of fundamental rights is in news? -Roshni Yadav

Share:

உலகளவில் புற்றுநோய் பாதிப்புகள் ஏன் அதிகரித்து வருகின்றன? -பிந்து ஷாஜன் பேரப்படன்

 புற்றுநோய் குறித்த உலகளாவிய நிலை அறிக்கை 2026: உயர் வருவாய் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட ஏழை நாடுகளில் மிகவும் அத்தியாவசியமான முதல் 20 புற்றுநோய் மருந்துகளின் இருப்பு வெறும் 9 விழுக்காட்டிலிருந்து 54 விழுக்காடு (9% - 54%) மட்டுமே உள்ளது. ஆனால், உயர் வருவாய் கொண்ட நாடுகளில் இது 68 விழுக்காட்டிலிருந்து 94 விழுக்காடு (68% - 94%) வரை கிடைக்கிறது.


உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (International Agency for Research on Cancer (IARC)) ஆகியவை இணைந்து 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் தேதி வெளியிட்ட ‘Global Status Report on Cancer 2026’ அறிக்கையில், இதய நோய்களுக்கு அடுத்தபடியாக உலகளவில் மனிதர்களின் இறப்பிற்குப் புற்றுநோய் இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2.06 கோடி புதிய புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதோடு, ஏறக்குறைய 1 கோடி இறப்புகளும் நிகழ்கின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி நடத்தப்பட்ட இந்த முதல் உலகளாவிய கணக்கெடுப்பு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 3.5 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கிறது.


அறிக்கையில் புதிதாக என்ன கூறப்பட்டுள்ளது?


உலகெங்கிலும் உள்ள குடும்பங்களுக்குப் புற்றுநோய் தொடர்ந்து மிகப்பெரிய நிதி மற்றும் சமூகச் சுமையாக இருந்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 45% பேர் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பாதிக்கும் மேற்பட்டோர் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மேலும், நோயாளிகளைப் பராமரிப்பவர்கள் அனைவருமே மனஅழுத்தம், ஊதியமில்லாப் பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் சமூகத் தனிமை ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.

அத்தியாவசியப் புற்றுநோய் மருந்துப் பொருட்கள் கிடைப்பது இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளது. அதிக வருவாய் உள்ள வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அங்கு 68% முதல் 94% வரை மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள ஏழை நாடுகளில், மிக முக்கியமான உயர்தர 20 புற்றுநோய் மருந்துகளில் வெறும் 9% முதல் 54% வரையிலான மருந்துகள் மட்டுமே கிடைக்கின்றன.


மேலும், புற்றுநோய் என்பது மிக இளம்வயதிலேயே ஏற்படும் மரணங்களுக்கும் ஒரு முக்கியக் காரணமாக மாறி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில், 41 நாடுகளில் இளம்வயது மரணங்களுக்குப் புற்றுநோயே முதன்மைக் காரணமாக இருந்தது. 37 நாடுகளில் இரண்டாவது முக்கியக் காரணமாகவும், 47 நாடுகளில் மூன்றாவது முக்கியக் காரணமாகவும் புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது.


புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல், சிகிச்சை மற்றும் ஆதரவுப் பராமரிப்பு ஆகியவற்றைப் பெறுவதில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதிக வருமானம் உள்ள நாடுகளில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 87 விழுக்காட்டினர் நோய் கண்டறியப்பட்ட பிறகு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது உயிர்வாழ்கின்றனர். ஆனால், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் சுமார் 42 விழுக்காட்டினர் மட்டுமே ஐந்து ஆண்டு காலம் வரை உயிர்வாழ்கின்றனர். மேலும், உலகளவில் மூன்று நாடுகளில் ஒரு நாட்டுக்கும் குறைவான நாடுகளே தங்களின் உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டுத் (Universal Health Coverage (UHC)) திட்டங்களில் புற்றுநோய் சிகிச்சையையும் சேர்த்துள்ளன.


உலகளவில் பதிவாகும் ஒவ்வொரு 10 புற்றுநோய் பாதிப்புகளிலும் ஏறக்குறைய நான்கு பாதிப்புகள், முன்னெச்சரிக்கையாகத் தடுத்திருக்கக்கூடிய சில ஆபத்தான காரணிகளோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. இவற்றில் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus (HPV)), ஹெபடைடிஸ் பி மற்றும் சி (Hepatitis B and C), மற்றும் ஹெலிகோபாக்டர் பைலோரி (Helicobacter pylori) போன்ற கிருமித் தொற்றுகளும், மதுப்பழக்கம், புகையிலை பயன்பாடு, அதிக உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index (BMI)) மற்றும் உடற்பயிற்சி இல்லாமை போன்ற பழக்கவழக்கங்களும் அடங்கும். புற்றுநோயை வராமல் தடுப்பதன் முக்கியத்துவத்தை இது நமக்கு உணர்த்துகிறது. 

உலகளவில் புற்றுநோயினால் ஏற்படும் மரணங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் முதன்மைக் காரணமாக இருந்து வருகிறது.


ஆண்களுக்கு நுரையீரல், சிறுநீர்ப்பை அருகே இருக்கும் சுரப்பி (Prostate) மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் மிக முக்கியமானவையாக உள்ளன. அதேநேரத்தில் பெண்களுக்கு மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் ஒட்டுமொத்தப் பாதிப்பில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன.


வெவ்வேறு பிராந்தியங்களில் புற்றுநோய் எவ்வாறு வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது: உலக சுகாதார அமைப்பு (WHO) தனது அறிக்கையில், புற்றுநோயின் பாதிப்பு பிராந்தியங்களுக்கு இடையே கணிசமாக வேறுபடுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில், ஆசியாவின் மிகப்பெரிய மக்கள்தொகையை எதிரொலிக்கும் விதமாக, உலகளவில் பதிவான மொத்த புற்றுநோய் பாதிப்புகளில் பாதியளவுக்கும் மேலாகவும் (50.7%) மற்றும் இறப்புகளில் பாதிக்கு மேலாகவும் (56.5%) ஆசியாவிலேயே பதிவாகியுள்ளன.


உலக மக்கள்தொகையில் சுமார் 9 விழுக்காடு மட்டுமே கொண்டுள்ள ஐரோப்பா, உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகளில் 21 விழுக்காட்டையும், அதனால் ஏற்படும் மரணங்களில் 20 விழுக்காட்டையும் கொண்டுள்ளது. அதாவது, அதன் மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது அங்கு புற்றுநோயின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் புற்றுநோய் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.


புற்றுநோய் பாதிப்பின் அடிப்படையில் இந்தியா மற்ற நாடுகளுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது, மேலும் இது ஏன் ஒரு முக்கிய கவலையாக மாறி வருகிறது?


இந்தியாவில் புற்றுநோய் என்பது அறிவிக்கப்பட வேண்டிய ஒரு நோய் (Notifiable disease) அல்ல; இதன் காரணமாக, இந்நோய் குறித்த துல்லியமான தரவுகளைச் சேகரிப்பது கடினமாக உள்ளது. நாட்டின் இறப்புப் பதிவு முறையிலும் பல குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக, மரணத்திற்கான காரணங்கள் முழுமையற்றதாகவோ அல்லது தவறாகவோ பதிவு செய்யப்படுவதும் இதில் அடங்கும்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் (Indian Council of Medical Research -National Cancer Registry Programme (ICMR-NCRP)) மற்றும் இந்திய புற்றுநோய் மரபணு வரைபடம் (Indian Cancer Genome Atlas (ICGA)) ஆகியவற்றின் சமீபத்திய தரவுகளின்படி, புற்றுநோய் என்பது இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்துவரும் பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது.


புதிய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிதல், சிகிச்சைக்கான வசதிகளைப் பெறுதல் மற்றும் உயிர் பிழைப்பதற்கான விகிதம் ஆகியவற்றில் இன்னும் பெரிய சவால்கள் நீடிக்கவே செய்கின்றன.


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15.6 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகளும், ஏறக்குறைய 8.7 லட்சம் புற்றுநோய் மரணங்களும் பதிவாவதாக மத்திய சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் இதய நோய்களுக்கு அடுத்தபடியாக, மரணத்தை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கியக் காரணியாகப் புற்றுநோய் உருவெடுத்துள்ளது.


இந்தப் புற்றுநோயின் பாதிப்பு இந்தியா முழுவதும் ஒரே சீராக இல்லை. வடகிழக்கு மாநிலங்களில்—குறிப்பாக மிஸோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் ஆகியவற்றில், உலகிலேயே மிக அதிகமான புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் உள்ளன. குறிப்பாக, புகையிலையினால் ஏற்படும் புற்றுநோய்கள் இங்கு மிக அதிகம். பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் மிகவும் பொதுவானதாக உள்ளது. ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் புகையிலை பயன்பாடு ஆகும்.


இவை தவிர நுரையீரல், கர்ப்பப்பை வாய், உணவுப்பாதை, வயிறு மற்றும் குடல் புற்றுநோய்களும் மற்ற பொதுவான புற்றுநோய்களாக உள்ளன.




சுகாதார அமைச்சகத்தின்படி, அதிகரித்துவரும் இந்த புற்றுநோய் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணங்கள்: வயது முதிர்ந்த மக்கள் தொகை, புகையிலை மற்றும் மதுப் பயன்பாடு, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி இல்லாமை, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மற்றும் ஹெபடைடிஸ் பி, சி (Hepatitis B & C) போன்ற தொற்றுநோய்கள் மற்றும் காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் ஆகும்.


மேம்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் அது குறித்த தகவல்கள் வெளியாவது முன்பைவிட இப்போது அதிகரித்திருந்த போதிலும், புற்றுநோயாளிகளில் ஏறக்குறைய 60 முதல் 70 விழுக்காட்டினருக்கு நோய் மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. அந்தச் சூழலில், அவர்களுக்குத் தரப்படும் சிகிச்சையின் பலன் குறைவாக இருப்பதோடு, அதற்கான செலவும் அதிகரிக்கிறது.


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான மாநிலங்களவையின் நாடாளுமன்ற நிலைக்குழு, 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'புற்றுநோய் பராமரிப்புத் திட்டம் மற்றும் மேலாண்மை: தடுப்பு, கண்டறிதல், ஆராய்ச்சி, கட்டுப்படியாகும் தன்மை மற்றும் புற்றுநோய் சிகிச்சை' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு, மருத்துவ வசதிகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்காதது, போதிய சிகிச்சைச் சேவைகள் இல்லாதது மற்றும் முறையான சிகிச்சைக்கான செலவுகளை ஏழை எளிய மக்களால் சமாளிக்க முடியாதது ஆகியவையே முக்கியக் காரணங்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.


தகுதியான மருத்துவர்கள், மருத்துவமனைகள், முறையான சிகிச்சை மற்றும் மருந்துகள் ஆகியவை சரியான நேரத்தில் கிடைப்பது பெரும்பாலும் பெருநகரங்களில் மட்டுமே சாத்தியமாக உள்ளது. இதனால் நாட்டின் பெரும்பகுதிகளில் தரமான புற்றுநோய் சிகிச்சை கிடைப்பதில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், பிராந்தியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள், சமூக-பொருளாதார நிலைகள், விழிப்புணர்வு இல்லாமை, உடல்நலக் குறைபாடுகளை அலட்சியப்படுத்தும் போக்கு மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவ வளங்களின் பற்றாக்குறை ஆகியவை திறம்படப் புற்றுநோய் சிகிச்சை அளிப்பதைக் கடினமாக்குகின்றன என்றும் அந்தக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளில் சுமார் 80 விழுக்காட்டினர் நோய் மிகவும் முற்றிய, தீவிரமான நிலையிலேயே மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். இதுவே நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இறப்போரின் விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக அமைகிறது.


தேசிய தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (National Programme for Prevention and Control of Non-Communicable Diseases (NP-NCD)) அரசாங்கம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. மேலும், புற்றுநோய் மையங்களை வலுப்படுத்துதல், ஜன் ஔஷதி (Jan Aushadhi) மற்றும் அம்ரித் (AMRIT) மருந்தகத் திட்டங்கள் மூலம் சில குறிப்பிட்ட புற்றுநோய் மருந்துகளின் விலையைக் குறைத்தல், ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்டத்தின்கீழ் மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் உயிர்காக்கும் பல புற்றுநோய் மருந்துகளுக்குச் சுங்க வரியிலிருந்து விலக்கு அளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை  ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும், நம் நாட்டில் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கும் நோயாளிகள் தங்களின் சொந்தப் பணத்திலிருந்து அதிக அளவில் செலவுசெய்ய வேண்டியிருப்பது இன்னும் ஒரு பெரிய கவலையாகவே நீடிக்கிறது.      


Original article : Why Cancer cases are rising worldwide. -Bindu Shajan Perappadan

Share:

குஜராத் ஏன் தரவு மையங்களில் (data centres) ₹6 லட்சம் கோடி முதலீடு செய்கிறது? -அபினய் தேஷ்பாண்டே

 அடுத்த சில ஆண்டுகளில் ₹6 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 7.5 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட தரவு மையங்களை உருவாக்குவதன் மூலம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா போன்ற நன்கு நிறுவப்பட்ட முக்கிய தரவு மையங்களுக்கு இணையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள குஜராத் மாநில அரசு இலக்கு வைத்துள்ளது.


தற்போதைய நிகழ்வு : குஜராத் அரசு தனது முதல் தரவு மையக் கொள்கையை (2026-2029) வெளியிட்டபோது, ​​அது ஒரு புதிய தொழில்துறைக் கொள்கையை (new industrial policy) அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் இத்தகைய கொள்கையைக் கொண்டுவரும் முதல் மாநிலமாக உருவெடுத்து, உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஒன்றில் நுழையத் தனது இலக்கையும் வெளிப்படுத்தியது.


அடுத்த சில ஆண்டுகளில் ₹6 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 7.5 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட தரவு மையங்களை உருவாக்குவதன் மூலம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா போன்ற நன்கு நிறுவப்பட்ட முக்கிய தரவு மையங்களுக்கு இணையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள குஜராத் மாநிலம் நம்புகிறது. இக்கொள்கை இந்தியா முழுவதும் நிலவும் ஒரு பரந்த போக்கையும் பிரதிபலிக்கிறது. அதாவது, மாநிலங்கள் இப்போது தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள், துறைமுகங்கள் அல்லது வாகன உற்பத்தி ஆலைகளை ஈர்ப்பதற்காக மட்டுமே போட்டியிடுவதில்லை. அவை இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) முதல் இணையவழி வங்கிச் சேவை வரை அனைத்திற்கும் திறன்மிக்க டிஜிட்டல் உள்கட்டமைப்பை வழங்குவதற்காகப் போட்டியிடுகின்றன.



முதலமைச்சர் பூபேந்திர படேலால் தொடங்கப்பட்ட இந்தக் கொள்கையானது, இத்துறையின் அதிக நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மூலதன மானியம், வட்டி மானியம், மின் கட்டண ஆதரவு, மாநில ஜிஎஸ்டி (SGST) திருப்பிச் செலுத்துதல், முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களிலிருந்து விலக்கு மற்றும் சொந்த கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான (captive desalination plants) நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நிதி மற்றும் நிதி சாரா சலுகைகளை வழங்குகிறது.


செயற்கை நுண்ணறிவு, மேகக் கணினியம் (cloud computing), டிஜிட்டல் பரிவர்த்தனைகள், மின்-வணிகம்(e-commerce), மின்னணு உற்பத்தி மற்றும் பிற தரவு சார்ந்த துறைகளின் விரைவான வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ளவும், அதே நேரத்தில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் குஜராத்தின் நிலையை வலுப்படுத்தவும் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியது.


தரவு மையம் (Data Centre) என்றால் என்ன?


குறிப்பிடும்படியாக, தரவு மையம் (Data Centre) என்பது இணையத்தின் உண்மையான இருப்பிடமாகும். அது, டிஜிட்டல் தகவல்களைச் செயலாக்கி, சேமித்து, அனுப்பும் ஆயிரக்கணக்கான சேவையகங்கள், வலையமைப்பு உபகரணங்கள் மற்றும் சேமிப்பு அமைப்புகளால் நிரம்பிய, மிகவும் பாதுகாப்பான ஒரு கட்டிடமாகும். வாட்ஸப் செய்தி அனுப்புவது, யுபிஐ மூலம் பணம் செலுத்துவது, நெட்ஃபிளிக்ஸில் திரைப்படம் பார்ப்பது, கூகுள் டிரைவில் புகைப்படங்களைச் சேமிப்பது, அமேசானில் பொருட்கள் வாங்குவது அல்லது ஒரு செயற்கை நுண்ணறிவுடன் உரையாடுவது போன்ற ஒவ்வொரு இணையச் செயல்பாடும், இந்த வசதிகள் வழியாகப் பயணிக்கும் தரவுகளையே சார்ந்துள்ளது.


அலுவலக கணினிக் கட்டுப்பாட்டு அறைகளைப் (office server room) போலல்லாமல், நவீன தரவு மையங்கள் என்பவை, கிட்டத்தட்ட எந்த இடையூறும் இன்றி 24 மணி நேரமும் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான, தொழிற்சாலை அளவிலான வசதிகளாகும். ஒரு நாளின் ஒவ்வொரு நொடியும் சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, அவற்றுக்குத் தொடர்ச்சியான மின்சாரம், அதிவேக ஒளிநார் (ஃபைபர்) இணைப்பு (fibre connectivity), அதிநவீன குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் பல அடுக்கு காப்பு உள்கட்டமைப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.


அவற்றுக்கு ஏன் ஒரு கொள்கை தேவை?


குஜராத் மாநிலம், தரவு மையக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் என்று மாநில தலைமைச் செயலாளர் எம்.கே. தாஸ் கூறினார். இருப்பினும், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற குறைந்தது 15-16 மாநிலங்கள் இப்போது தங்களுக்கென பிரத்யேக தரவு மையக் கொள்கையை (அல்லது தரவு மையங்களை குறிப்பாக உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் கொள்கையை) கொண்டுள்ளன.


ஒரு பிரத்யேகக் கொள்கையானது, பல பத்தாண்டுகளுக்குத் தடையற்ற மின்சாரத்திற்கு உத்தரவாதம் அளிப்பது, நம்பகமான நீர் விநியோகத்தை வழங்குவது, பல அதிவேக ஒளிநார் (high-speed fibre) வழித்தடங்களை உறுதி செய்வது, விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல்களை வழங்குவது மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்காக நிலத்தைக் கிடைக்கச் செய்வது போன்ற விஷயங்களில் முதலீட்டாளர்களுக்கு உறுதியை அளிக்கிறது. அதே நேரத்தில், பெரிய தரவு மையங்களை நிறுவுவதற்கான செலவைக் குறைத்து, அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் நிதிச் சலுகைகளையும் அது விவரிக்கிறது. அவை, நிலத்தையும் வரிச் சலுகைகளையும் மட்டுமே எதிர்பார்க்கும் மற்ற கனரகத் தொழில்களைப் போன்றவையல்ல.


குஜராத் ஏன் ஆர்வம் காட்டுகிறது?


உலகின் கிட்டத்தட்ட 20% தரவுகளை இந்தியா உருவாக்கும் அதே வேளையில், உலகளாவிய தரவு மையத் திறனில் (world's data centre capacity) அதன் பங்கு சுமார் 3% மட்டுமே என்றும், அதேசமயம் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து உலகளாவிய திறனில் சுமார் 70 சதவீதத்தைக் கொண்டுள்ளன என்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செயலாளர் பி. பாரதி கூறினார்.



குஜராத்தைப் பொறுத்தவரை, இந்தக் கொள்கையானது உற்பத்தி, துறைமுகங்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் போன்ற அதன் வழக்கமான பலங்களைத் தாண்டி விரிவடைவதற்கான ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாக அமைகிறது.


தோலேரா (Dholera) மற்றும் கிஃப்ட் சிட்டி (GIFT City) போன்ற தொழில் மையங்களுடன், குறிப்பாக சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தியில், இந்தியாவின் மிக வலிமையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் ஒன்றை குஜராத் மாநிலம் ஏற்கனவே கொண்டுள்ளது. ஒரு தரவு மையத்தின் இயக்கச் செலவுகளில் மின்சாரம் ஒரு கணிசமான பங்கைக் கொண்டிருப்பதால், தங்களின் கார்பன் தடத்தைக் குறைக்க விரும்பும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கான அணுகல் ஒரு முக்கியமாக மாறியுள்ளது. இந்த மாநிலம் விரிவான தொழில்துறை நிலம், ஒப்பீட்டளவில் நம்பகமான மின் பரிமாற்ற வலையமைப்பு, முக்கிய துறைமுகங்கள் மற்றும் நன்கு வளர்ந்த தளவாடச் சூழலமைப்பையும் வழங்குகிறது. மேலும், இந்த மாநிலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் விரும்புகிறது. நீண்ட கால அடிப்படையில் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்கள் (cloud computing companies), செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்கும் ஒரு சூழலமைப்பை உருவாக்கவும் இது விரும்புகிறது.


என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன?


விக்சித் குஜராத் – தரவு மையக் கொள்கை 2026-29 (Viksit Gujarat – Data Centre Policy), நிதி மற்றும் நிதி சாரா சலுகைகளை வழங்குகிறது. அவை, மூலதனம் மற்றும் வட்டி மானியங்கள், மின் கட்டண ஆதரவு, மாநில விற்பனை வரி (SGST) திருப்பிச் செலுத்துதல், மின்சார வரி திருப்பிச் செலுத்துதல், கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான ஆதரவு மற்றும் முத்திரை வரி விலக்குகள் ஆகியவை ஆகும். இதுதவிர, தனித்தனியாக, பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு, வணிகச் செயல்பாடுகள் தொடங்கும் தேதியிலிருந்து 20 ஆண்டு காலத்திற்கு உண்மையில் செலுத்தப்பட்ட மின்சார வரியை முழுமையாகத் திரும்பச் செலுத்தும் சலுகையை மாநில அரசு முன்பு வழங்கியுள்ளது.


மேலும், இது தடையற்ற மின்சார விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்புக்கான ஊக்கத்தொகைகள் மற்றும் திட்டங்களுக்கு ஒரே அமைப்பின் மூலம் பெறப்படும் அனுமதி (single-window clearance) ஆகியவற்றையும் வழங்குகிறது.


குஜராத் மாநிலத்திற்குள் செயல்படும் தரவு மையங்களின் செயல்பாடு, மேலாண்மை, பராமரிப்பு மற்றும் ஆதரவு ஆகியவை, 1972-ம் ஆண்டின் குஜராத் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் (Gujarat Essential Services Maintenance Act) கீழ் ஒரு “அத்தியாவசிய சேவையாக” கருதப்படும்.


தரவு மையங்கள் குறிப்பாக எந்த ஊக்கத்தொகைகளை எதிர்பார்க்கின்றன?


மானிய விலையிலோ அல்லது குறைந்தபட்ச விலையிலோ நிலம், மலிவான மற்றும் உறுதியான மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம், வரிச் சலுகை, ஒரே அமைப்பின் மூலம் பெறப்படும் ஒப்புதல்கள், மேலும் மிக முக்கியமாக, அரசியல் நிலைத்தன்மை ஆகியவை தேவைப்படுகின்றன. ஏனெனில், ஒரு தரவு மையம் என்பது 20-30 ஆண்டு கால உள்கட்டமைப்பு முதலீடாகும். இதற்கு பெரும்பாலும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும். தங்கள் முதலீட்டைக் கட்டுப்படுத்தும் விதிகள் கணிக்க முடியாத வகையில் மாறாது என்ற நம்பிக்கை நிறுவனங்களுக்குத் தேவை.


குஜராத் எந்த மாநிலங்களுடன் போட்டியிடுகிறது?


தற்போது ஏறக்குறைய ஒவ்வொரு முக்கிய மாநிலமும் ஒரு தரவு மையக் கொள்கையைக் கொண்டுள்ளது. இதில், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் ஆகும். ஆனால், ஆந்திரப் பிரதேசத்துடன்தான் கடுமையான போட்டி நிலவுகிறது. விசாகப்பட்டினத்தில் கூகுளின் சுமார் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான 1-ஜிகாவாட் வசதியையும், விஜயநகரத்தில் ரிலையன்ஸின் தனியான ஏஐ தரவு மையத் திட்டத்தையும் (Reliance AI data centre project) பெற்ற பிறகு, ஆந்திரப் பிரதேசம் ஒரு மாபெரும் அளவிலான மையமாக (hyperscale hub) உருவெடுத்துள்ளது.


தரவு மையங்களுக்கு ஏன் அதிக நீர் தேவைப்படுகிறது?


குளிரூட்டலே இதற்கு முக்கியக் காரணம். ஆயிரக்கணக்கான ஜிபியூ கணினி தொகுப்புகள் (GPU clusters) பெருமளவு வெப்பத்தை உருவாக்குகின்றன. மேலும், குளிரூட்டல் இல்லாவிட்டால் அவை விரைவில் செயலிழந்துவிடும். இந்த வெப்பத்தை அகற்றி, உபகரணங்கள் பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்ய, குளிரூட்டும் கோபுரங்கள் (cooling towers) மற்றும் குளிர்-நீர் அமைப்புகளில் நீர் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.


ஒப்பீட்டளவில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலமான குஜராத்தால், இதுபோன்ற திட்டங்களை ஆதரிக்க முடியுமா?


குஜராத் பல பகுதிகளில் தொடர்ச்சியான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, பெரிய தரவு மையக் குழுமங்களை உருவாக்க வேண்டுமானால், நீடித்த நீர் மேலாண்மை அவசியமாகிறது. ஒரு தரவு மைய நிறுவனத்திற்கு 24 மணி நேரமும் தடையற்ற நீர் விநியோகத்தை வழங்குவதாக இந்தக் கொள்கை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. நீடித்த நீர் தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில், 20% மூலதன ஆதரவு அல்லது ஒரு மில்லியன் லிட்டர் (MLD) க்கு ₹2 கோடி என்ற அளவில், சொந்த கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கான ஆதரவையும் அவர்கள் வழங்குகிறார்கள். குஜராத்திற்கு ஒரு இயற்கையான சாதகம் உள்ளது. அதன் நீண்ட கடற்கரை, கடல்நீர் குளிர்விப்பு வசதியை அளிக்கிறது. மாநிலத்தில் உள்ள பல தொழிற்பேட்டைகள் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத் தங்கள் தொழிற்சாலை செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றன. இது எதிர்காலத் தரவு மைய மேம்பாடுகளுக்கு ஒரு சாத்தியமான முன்மாதிரியாக அமைகிறது.


தரவு மையங்களுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுமா?


செயற்கை நுண்ணறிவின் வருகையால் இது மிகவும் அதிகமாகிறது. அறிக்கைகளின்படி, ஒரு எளிய செயற்கை நுண்ணறிவுத் தூண்டுதல், ஒரு வினாடிக்கு மைக்ரோவேவ் (microwave) இயக்குவதற்குத் தேவையான மின்சாரத்தை நுகருகிறது. இதனால்தான், தரவு மையங்களால் நுகரப்படும் மின்சாரத்தில் 51% பசுமை ஆற்றலில் இருந்து வர வேண்டும் என்று குஜராத் ஒழுங்குப்படுத்திய  கொள்கை குறிப்பிடுகிறது.


தரவு மையங்கள் பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குகின்றனவா?


உற்பத்தித் தொழில்களைப் போல தரவு மையங்கள் பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இயங்கும் ஒரு மாபெரும் அளவிலான தரவு மையம் (hyperscale hub), செயல்பாட்டுக்கு வந்தவுடன், அதன் செயல்பாடுகள், பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குப் பொறுப்பான ஒரு சில நூறு உயர் திறன் கொண்ட தொழிலாளர்களை மட்டுமே நேரடியாகப் பணியமர்த்தக்கூடும். கட்டுமானப் பணிகள் முடிந்தபிறகு, உடல் உழைப்பு எதுவும் இருக்காது.


இருப்பினும், இதன் பரந்த பொருளாதாரத் தாக்கம் நேரடி வேலைவாய்ப்பையும் தாண்டிச் செல்கிறது. கட்டுமானம், மின் பொறியியல், இயந்திர அமைப்புகள், குளிரூட்டும் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு சேவைகள், உபகரணப் பராமரிப்பு, கிளவுட் சேவைகள், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆகிய அனைத்தும் இத்துறையின் வளர்ச்சியால் பயனடைகின்றன. தரவு மையங்கள், தங்களைச் சுற்றி மிகப் பெரிய டிஜிட்டல் பொருளாதாரத்தை ஈர்க்கும் ஒரு துணை உள்கட்டமைப்பாகச் செயல்படுகின்றன.


Original article : Why is Gujarat betting ₹6 lakh crore on data centres? -Abhinay Deshpande

Share: