புதிய, அரசு இணையதளம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைமுறைகளை எளிதாக்குமா? - அனோனா தத்

 

NOTTO (National Organ and Tissue Transplant Organisation) என்பது இந்தியாவில் உறுப்பு மற்றும் திசு தானம், மாற்று சிகிச்சைக்கான தேசிய அமைப்பாகும்.


‘NOTTO’ இணையதளம், பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் தங்கள் சிகிச்சை நிலை குறித்த தகவல்களைப் பெறவும், குறைகளைத் தெரிவிக்கவும் உதவுகிறது. நோயாளிகள், மருத்துவமனைகள், மாநில அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.


தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு (NOTTO) தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து ஆண்டுகளிலும் இது ஒரு புதிய சாதனை விகிதத்தை எட்டியுள்ளது.


தேசிய உறுப்பு தான தினத்தை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி ‘NOTTO’ அமைப்பு வெளியிட்ட வருடாந்திரத் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையானவை (16,612) நோயாளியின் உயிருடன் இருக்கும் உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் தானம் செய்த உறுப்புகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. அதேவேளையில், 3,526 அறுவை சிகிச்சைகள், உறவுமுறை இல்லாத இறந்தவர்களின் குடும்பத்தினர் தானம் செய்த உறுப்புகளைக் கொண்டு செய்யப்பட்டன.


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இறப்பிற்குப் பிறகு தானம் செய்யப்படும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. அதாவது, பத்து லட்சம் பேருக்கு ஒருவரைக் காட்டிலும் குறைவான அளவிலேயே உறுப்புத் தானம் செய்யப்படுகிறது.


உறுப்பு ஒதுக்கீடு மற்றும் இந்த ஒழுங்குமுறை அமைப்பு மேற்கொள்ளும் பிற பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதை உறுதி செய்வதற்காக, ‘NOTTO’ தனது புதிய இணையதளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், மாற்று உறுப்பு தானங்கள் மேற்கொள்வது குறித்தான முக்கியமான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.


‘NOTTO’ அமைப்பின் வருடாந்திரத் தரவுகளிலிருந்து பெறப்பட்ட முக்கியத் தகவல்கள், இந்தப் புதிய இணையதளம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது மற்றும் அந்த இரண்டு வழிகாட்டுதல்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:


வருடாந்திரத் தரவுகள் தெரிவிப்பது என்ன?


முன்னணி நிறுவனங்களின் பின்தங்கிய நிலை: இந்தியா முழுவதும் நடைபெற்ற 20,000-க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், இந்த வசதியைக் கொண்ட 11 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் (All India Institute of Medical Sciences (AIIMS)) 387 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்துள்ளன. இதில் மிக அதிகமான அறுவை சிகிச்சைகள் மிகவும் பழமையான டெல்லி எய்ம்ஸ் நிறுவனத்தில்தான் நடைபெற்றுள்ளன.

எய்ம்ஸ் (AIIMS) நிறுவனங்களில் செய்யப்பட்ட பெரும்பாலான உறுப்பு மாற்று சிகிச்சைகள் சிறுநீரகத்திற்காகவே (368) இருந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக கல்லீரல் (16) மற்றும் இதயம் (3) மாற்றப்பட்டுள்ளன. மேலும், பெரும்பாலான அறுவை சிகிச்சைகளில் உயிருடன் இருக்கும் உறவினர்களிடமிருந்தே உறுப்புகள் பெறப்பட்டுள்ளன.


மொத்தம் நடந்த 368 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளில், 326 சிகிச்சைகள் உயிருடன் இருக்கும் உறுப்பு தானம் அளிப்பவர்களைக் கொண்டே செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக, இறந்தவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புகளை ஒதுக்குவதில் 'NOTTO' அமைப்பு அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தப் புள்ளிவிவரம் வியப்பளிப்பதாக உள்ளது.


மேலும், டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை 2025-ஆம் ஆண்டில் ஒரு இதய மாற்று அறுவை சிகிச்சையைக்கூட செய்யவில்லை. 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி டாக்டர் பி. வேணுகோபால் அவர்களால் இந்தியாவின் முதல் வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதே புகழ்பெற்ற நிறுவனம் இதுதான். அந்த தினமே தேசிய உறுப்பு தான தினமாகக் கொண்டாடப்படுகிறது.


பாலின வேறுபாடு: உறுப்பு தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தபோதிலும், அந்த உறுப்புகளைப் பெற்றுக்கொள்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாகவே உள்ளனர். இந்த நிலை 2025-ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. உயிருடன் இருக்கும் உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட 16,614 உறுப்பு தானங்களில், 11,316 (68%) தானங்களைச் செய்தவர்கள் பெண்கள் ஆவர். அதேபோல, உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து உறுப்புகளைப் பெற்றுக்கொண்ட 16,611 நபர்களில், 12,903 (78%) பேர் ஆண்கள் ஆவர்.






சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளில், உறுப்பு தானம் செய்தவர்களில் 71 சதவீதம் பேர் பெண்கள், ஆனால் உறுப்பு பெற்றவர்களில் 23 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர். அதேபோல, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில், உறுப்பு தானம் அளித்தவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள், ஆனால் அதைச் பெற்றுக்கொண்டவர்களில் 21 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.


மாநில வாரியான விவரங்கள்: அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் டெல்லியில் (4,564) செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு (2,796) மற்றும் மகாராஷ்டிரா (2,136) ஆகியவை உள்ளன. இருப்பினும், டெல்லியில் செய்யப்பட்ட பெரும்பாலான உறுப்பு மாற்று சிகிச்சைகளில் இறந்தவரின் உறவினர்களிடம் இருந்தே உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. அங்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து 103 உறுப்பு மாற்று சிகிச்சைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.


உயிரிழந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகளைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான அறுவை சிகிச்சைகள் தமிழ்நாடு (804), தெலங்கானா (601) மற்றும் கர்நாடகா (575) ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன.


இந்த ஆண்டு, உறுப்பு மாற்றுத் துறையில் தமிழ்நாடு ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இத்துறையின் செயல்பாட்டு அமைப்பின்மீது கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையே இதற்குக் காரணம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் தெரிவித்தார். பெரும்பாலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்கள் தனியார் துறையில் இருந்தாலும், இந்த நடைமுறை வெளிப்படையான ஒதுக்கீடு மற்றும் செயல்பாடுகளை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


‘NOTTO’ அமைப்பின் புதிய இணையதளம்: இது ஏன் முக்கியமானது?


‘NOTTO’ (தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) அமைப்பு ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. நோயாளிகள், மருத்துவமனைகள், மாநில அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.  இது அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பு ஒதுக்கீட்டு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.


பதிவுசெய்த நோயாளிகள் தங்களின் தற்போதைய சிகிச்சை நிலையைத் தெரிந்துகொள்ளவும், புகார்களை அளிக்கவும் இந்த இணையதளம் வழிவகை செய்கிறது. மருத்துவமனைகள் இதில் புதிய நோயாளிகளைப் பதிவுசெய்யலாம், நோயாளியின் உடல்நிலை மோசமடைந்தால் அவர்களை "மிகவும் அவசரம்" எனக் குறிப்பிடலாம், உறுப்பு மாற்று சிகிச்சையின் முடிவுகள் மற்றும் தொடர் சுகாதார விவரங்களைப் பதிவுசெய்யலாம், மேலும் உறுப்புகள் கிடைக்கும்போது உடனடி அறிவிப்புகளை அனுப்பலாம். அதுமட்டுமின்றி, மருத்துவமனைகள் தங்களின் சொந்த காத்திருப்போர் பட்டியலைப் பார்க்கவும், தேவைப்படும்போது "மருத்துவமனை அனுமதிக்குழு" மற்றும் "மூளைச்சாவு சான்றிதழ் குழு" போன்ற குழுக்களை உருவாக்கவும் இத்தளம் உதவுகிறது.


மாநில அளவில் உரிய அதிகாரம் பெற்ற அதிகாரிகள், உறுப்பு மாற்று மையங்களுக்கான உரிமங்களை வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ மற்றும் குறைகளைத் தீர்க்கவோ இந்த இணையதளம் உதவுகிறது. மாநில அளவிலான ஒருங்கிணைப்பு அமைப்பிற்கு, இது ஒரு மாநில அளவிலான காத்திருப்போர் பட்டியலை உருவாக்குகிறது. இதன் மூலம் உறுப்புகள் கிடைக்கும்போது அதற்கேற்ப ஒதுக்கீடு செய்ய முடியும். ஒரு மையத்தில் பெறப்படும் உறுப்பைப் பயன்படுத்துவதில் அந்த மையத்திற்கே முதல் உரிமை உண்டு. அதைத் தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனைகள், மாநிலத்திலுள்ள மருத்துவமனைகள், மண்டல அளவிலான மருத்துவமனைகள் மற்றும் இறுதியாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் என்ற வரிசையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு அமைப்பும் இதே ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுகிறது.


‘NOTTO’ இணையதளம் ஒரு தேசிய அளவிலான காத்திருப்போர் பட்டியலையும் உருவாக்குகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உறுப்புகளை சீரான முறையில் ஒதுக்கீடு செய்ய முடிகிறது. மேலும், இந்த வலைப்பின்னல் மூலமாக உருவாக்கப்படும் அனைத்துத் தகவல்களும் 'NOTTO' அமைப்பிற்கு எளிதாகக் கிடைப்பதால், சிறந்த ஒருங்கிணைப்பையும் கண்காணிப்பையும் மேற்கொள்வது சாத்தியமாகிறது.


மாற்று உறுப்புப் பரிமாற்ற அறுவை சிகிச்சை 


மாற்று உறுப்புப் பரிமாற்ற அறுவை சிகிச்சை (Swap transplantation) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளி-உறுப்பு தானம் வழங்குபவர் (recipient–donor) தங்களுக்குள் உறுப்புகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், ஒவ்வொரு நோயாளிக்கும் பொருத்தமான உறுப்பு கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு முறை ஆகும். பல மருத்துவமனைகள் ஏற்கனவே இத்தகைய அறுவை சிகிச்சைகளைச் செய்து வந்தாலும், தற்போதைய மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் (Transplantation of Human Organs and Tissues Act (THOTA)) மற்றும் அதன் வழிகாட்டுதல்களில் இந்த முறை பற்றி குறிப்பாக எதுவும் குறிப்பிடப்படாததால், இதில் சட்டப்பூர்வமான சில குழப்பங்கள் நீடிக்கின்றன.


சமீபத்தில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் முக்கியமாக நிபுணர்களின் பரிந்துரைகளைக் கொண்டுள்ளன. உறுப்பு மாற்று சட்டங்கள் மற்றும் விதிகளில் ‘NOTTO’ இன்னும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அப்போதுதான் மாற்று அறுவை சிகிச்சைகள் (swap transplants) சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு முறைப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தமான உறுப்பு தானமளிப்பவர்களை (Donor–Recipient pairs) தேசிய அளவில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதே இதன் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்றாகும். தற்போது, இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான மாற்று உறுப்பு தானங்கள் (Swap transplants) ஒரே மருத்துவமனைக்குள்ளேயே செய்யப்படுகின்றன. சுமார் 1 சதவீத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்கள் மட்டுமே பல மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து இந்த மாற்றங்களைச் செய்கின்றன, மாநிலங்களுக்கு இடையேயான மருத்துவமனைகளை இணைப்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணையதளம் தானாகவே ஒரு தேசிய அளவிலான காத்திருப்போர் பட்டியலை உருவாக்கும் அதேவேளையில், ‘NOTTO’ (தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பும்) அமைப்பும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, இந்த மாற்று உறுப்பு தானங்களுக்கான பொருத்தமான நபர்களைக் கண்டறியத் திட்டமிட்டுள்ளது.


"தற்போது, மருத்துவமனைகள் தங்களுக்குள் மாற்று உறுப்பு தானம் செய்பவர்களைத் (Swap donors) தாங்களே கண்டறிகின்றன. ஆனால், ஒவ்வொரு மருத்துவமனையிலும் தானம் செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ஒரு தேசிய அளவிலான உறுப்புதான அமைப்பை உருவாக்கும்போது, பொருத்தமான உறுப்புதானம் செய்தவர்களை எளிதில் கண்டறிந்து உறுப்புகளை மாற்றி வழங்க முடியும்," என்று ‘NOTTO’ அமைப்பின் இயக்குநர் டாக்டர் அனில் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.


தேசியப் பட்டியலைப் பயன்படுத்தி உறுப்பு தானத்திற்கானப் பொருத்தம் சரிபார்க்கப்படும் என்றும், அதேவேளையில் பிற அனைத்து உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகளுக்கும் பின்பற்றப்படும் அதே அனுமதி வழங்கும் நடைமுறைதான், மாற்று உறுப்பு தானத்திற்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.


கர்நாடக மாநிலம் கர்நாடக பல-இணை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வழிகாட்டுதல்கள், (Karnataka Multi-Pair Kidney Paired Exchange (Swap) Transplantation Guidelines, (2026)) மூலம் ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கியிருந்தாலும், தாமதங்கள் மற்றும் நிச்சயமற்றத் தன்மைகளைத் தவிர்க்க இத்தகைய சிறுநீரக மாற்றங்களை மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் (Transplantation of Human Organs and Tissues Act (THOTA)) மற்றும் அதன் விதிகளின்கீழ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


மாநிலங்களுக்கு இடையேயான மாற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு, தற்போது இருப்பது போல இரண்டு மாநில அதிகாரிகளிடமும் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, அறுவை சிகிச்சை நடக்கும் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு அதிகாரி மட்டுமே அனுமதி அளிக்கும் புதிய முறையை ‘NOTTO’ (தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) அமைப்பு உருவாக்க வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான ஆவணங்களின் பட்டியலையும் பரிந்துரைத்துள்ளனர். இதில் அடையாளச் சான்று, உறவுமுறை சான்று மற்றும் உறுப்பு தானம் அளித்தவரின் உறுப்பு பொருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.


Original articles: Will new government portal make organ transplants easier? -Anonna Dutt

Share:

ஓர் ஒருங்கிணைந்த தேசியக் கட்டமைப்பு, இந்தியாவின் எதிர்கால எரிசக்திப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்த முயல்கிறது? - புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள தடைகளுக்கு இடையில், மேற்கு ஆசிய நெருக்கடி செங்கடல் பகுதிக்கும் பரவி வருவதால், எரிசக்தி விநியோகம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் ஆகியவற்றில் இந்தியா போன்ற நாடுகள் கூடுதல் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எண்ணெய் இறக்குமதியில் பன்முகத்தன்மை மற்றும் எத்தனால் கலப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், தனித்தனி கொள்கைகள் மூலம் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா? 


செங்கடலில் (Red Sea) கப்பல்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தொடர்ந்து நிலவிவரும் பதற்றமும் எரிசக்தி விநியோகம், கச்சா எண்ணெய் விலை மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றின் மீதான பாதிப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. பல நாடுகளைப் போலவே, இந்தியாவும் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் மோதல் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாப் அல்-மண்டப் நீரிணை (Bab al-Mandab Strait) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தும் குறைந்துள்ளது. பாப் அல்-மண்டப் பகுதி, செங்கடலை ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கும் கடல்வழிப் பாதையாகும். மேலும், இது உலகளாவிய வர்த்தகத்திற்கு, குறிப்பாக எரிபொருள் விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான மற்றொரு கடல்சார் வழித்தடமாக விளங்குகிறது.


இந்தியாவின் கண்ணோட்டத்தில், மேற்காசிய நெருக்கடி ஒரு முக்கியமான உண்மையை உணர்த்தியுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு என்பது வெறும் எரிபொருளைக் கைப்பற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை. வெளிப்புற விநியோக பாதிப்புகளைச் சமாளிக்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்குவதும் அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த பத்து ஆண்டுகளில், இத்தகைய வெளிப்புற இடையூறுகளை எதிர்கொள்ளும் தனது திறனை வலுப்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


அந்த நடவடிக்கைகள் எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருந்துள்ளன? சமீபத்தில் முன்மொழியப்பட்ட ‘நான்கு தூண்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தேசிய எரிசக்தி கட்டமைப்பு’ (four-pillar unified national energy framework), இந்தியாவின் எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எத்தகைய புதிய அணுகுமுறையை வழங்குகிறது?


பாதிப்புகளை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன்


இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதப் பங்கையும், இயற்கை எரிவாயு தேவையில் ஏறக்குறைய பாதி அளவையும் இறக்குமதி செய்கிறது. உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதால், தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் மக்களின் வருமான உயர்வு காரணமாக இந்தியாவின் எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



எனவே, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க முடியுமா என்பதே மிக முக்கியமான கேள்வியாகும். கடந்த பத்தாண்டுகளில், பல்வகைப்படுத்தப்பட்ட கச்சா எண்ணெய் ஆதாரங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அதிகரித்தல், அவசரகால பெட்ரோலிய இருப்புக்களை உருவாக்குதல், பெட்ரோலில் எத்தனால் கலத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வேகமான வளர்ச்சி போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நாடு உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் வெளிப்புறப் பாதிப்புகளைத் தாங்கி நிற்கும் இந்தியாவின் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளன.


சுத்திகரிப்பு திறன்: இந்தியாவின் உத்திசார் பலம்


இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. இந்தியா உலகிலேயே 4-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகும். இதன் சுத்திகரிப்பு திறன் ஆண்டிற்கு சுமார் 260 மில்லியன் டன்கள் ஆகும். நாட்டின் பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய எரிபொருட்களும் பிற பொருட்களும் பெரும்பாலும் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில் ஒரு பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உண்மையில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலகளவில் 7-வது இடத்தில் உள்ளது.


இந்திய சுத்திகரிப்பு ஆலைகள், பல்வேறு வகையான கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து, அதை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களாக மாற்றும் திறன் கொண்ட உலகின் மிகச்சில ஆலைகளில் ஒன்றாகும். இந்த நெகிழ்வுத்தன்மை, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளைவிட இந்தியாவுக்குச் சாதகமான பலன்களை அளிக்கிறது.


எனவே, இந்த சுத்திகரிப்புத் திறன் நாட்டின் உள்நாட்டு எரிசக்தி விநியோகம், தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றுக்கு உறுதுணையாக உள்ளது. இருப்பினும், இந்த ஆலைகள் இயங்க கச்சா எண்ணெயின் சீரான விநியோகம் முக்கியத் தேவையாக உள்ளது. எனவே, கச்சா எண்ணெய் தொடர்ந்து தங்குதடையின்றி கிடைக்கும்போது மட்டுமே, இந்தச் சுத்திகரிப்புத் திறன் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.


பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி


மேற்காசிய நெருக்கடியின்போது, இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த முறை, எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளின் சீரான விநியோகத்தை உறுதிசெய்ய உதவியது. உதாரணமாக, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) நெருக்கடி காரணமாக மேற்காசியாவிலிருந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டபோது, இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் நம்பியிருந்தது.


இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் சாதனை அளவாக நாளொன்றுக்கு 26 லட்சம் பேரல்களாக உயர்ந்தது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்காகும்.


கடந்த சில ஆண்டுகளில், இந்தியா தனது எரிசக்தி இறக்குமதி ஆதாரங்களை விரிவுபடுத்தி, தற்போது 41-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இது மேற்காசிய நாடுகளின் கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைத்துள்ளதோடு, நெருக்கடியான காலகட்டங்களில் கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசலின் போதுமான இருப்பைப் பராமரிக்கவும் உதவியுள்ளது.


ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் அவசரகால பெட்ரோலிய சேமிப்பகங்கள், குறுகியகால எண்ணெய் விநியோகத் தடைகளின்போது ஒரு பாதுகாப்புக் காரணியாகப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டவை. இருப்பினும், தற்போது இந்தச் சேமிப்பகங்களில் 3.37 மில்லியன் டன் எண்ணெய் மட்டுமே உள்ளது. இது அவற்றின் மொத்தச் சேமிப்புத் திறனான 5.33 மில்லியன் டன்னில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே ஆகும்.


மேலும், ஜூலை மாதம் 28-ஆம் தேதி, இந்தியாவின் கடற்பரப்புப் பகுதிகளில்  எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பிற நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதைக் குறைக்கவும், 84,084 கோடி ரூபாய் மதிப்பிலான 'சமுத்திர மந்தன்' (Samudra Manthan) திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


எத்தனால் கலப்பு


இந்தியாவின் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் திட்டம், 2003-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ஒரு சிறந்த எரிசக்தி சார்ந்த திட்டமாகக் கருதப்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவு 2013–14-ஆம் ஆண்டில் 1.5 சதவீதமாக இருந்தது, 2025–26-ஆம் ஆண்டில் 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா தனது 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே அடைந்து சாதனை படைத்துள்ளது.


அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி 31-ஆம் தேதி ஜூலை மாதம் 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்திட்டத்தின் மூலம் 1.97 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணி சேமிக்கப்பட்டு உள்ளது, 950 லட்சம் மெட்ரிக் டன் கார்பன் (CO₂) உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது, 316 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பயன்பாடு மாற்றீடு செய்யப்பட்டுள்ளது, மேலும், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் மதுபான ஆலை உரிமையாளர்களின் கணக்குகளுக்கு 1.66 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும். இருப்பினும், இந்தியாவின் பெரும்பாலான எத்தனால் இன்னும் கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இத்திட்டம் வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தியிருந்தாலும், நிலத்தடி நீர்மட்ட வீழ்ச்சி, நிலப் பயன்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இது செறிவூட்டப்படுவது குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஆற்றலைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு, ஒரு வளப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முயன்று மற்றொரு புதிய பிரச்சனையை உருவாக்கிவிடக்கூடாது.


அடுத்தகட்ட நடவடிக்கையானது, வேளாண் கழிவுகள், நகராட்சிப் பயன்பாட்டுக் கழிவுகள் மற்றும் உணவு அல்லாத பிற உயிரிப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் 'இரண்டாம் தலைமுறை எத்தனால்' (Second-generation ethanol) உற்பத்தியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இது வைக்கோல் மற்றும் பயிர்க் கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்கவும், ஊரகப்பகுதிகளில் உயிரிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அதிக நீர் தேவைப்படும் பயிர்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.


எனவே, எத்தனால் பயன்பாட்டைத் தனிப்பட்ட ஒரு விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது. மின்சார வாகனப் பயன்பாடு, பசுமை ஹைட்ரஜன், அழுத்தப்பட்ட உயிரி வாயு மற்றும் நிலையான விமான எரிபொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த திட்டமிடலின் ஒரு பகுதியாகவே இது இருக்க வேண்டும்.


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 


இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது. இதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறன், 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 76.38 ஜிகாவாட்டாக இருந்தது. இது 3.59 மடங்கு அதிகரித்து, 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 274.68 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, சூரிய மின்சக்தித் திறன் மட்டுமே 162.15 ஜிகாவாட் அளவை எட்டியுள்ளது. இதில் நிலத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் சுமார் 121.25 ஜிகாவாட்டும், வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் சூரியஒளி மின்தகடுகள் அமைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் 30 ஜிகாவாட்டிற்கும் அதிகமான மின்சார உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.


இந்தப் புள்ளிவிவரங்கள், உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் மிக வேகமாக நடைபெற்றுவரும் தூய்மை ஆற்றல் மாற்றங்களில் ஒன்றைக் காட்டுகின்றன. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே இனி இந்தியாவின் முதன்மை சவாலாக இருக்காது. இந்த மின்சாரத்தை மின் விநியோகக் கட்டமைப்பில் இணைப்பதுதான் மிக பெரிய சவாலாகும்.



பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சில குறிப்பிட்ட வளம் நிறைந்த மாநிலங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், மின்சாரத்திற்கான தேவை தொலைதூரத்தில் உள்ள தொழில்துறை மையங்களில்தான் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, இந்தியா ஒரு முரண்பாடான சூழலை எதிர்கொள்கிறது. போதிய மின் விநியோகக் கட்டமைப்பு இல்லாததால், போதியளவு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் இருந்தபோதிலும், நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது.


இந்திய தேசிய அறிவியல் அகாடமி (Indian National Science Academy (INSA)), மின் விநியோகக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களைத் தாமதப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. செயல்பாட்டில் உள்ள 60 ஜிகாவாட்டுக்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் மின் பகிர்மான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. அதேவேளையில், 25 ஜிகாவாட் எரிவாயு சார்ந்த மின் உற்பத்தித் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதேசமயம், இந்தியா தொடர்ந்து நிலக்கரியை இறக்குமதி செய்து வந்தபோதிலும், 2024–25-ஆம் ஆண்டில் நிலக்கரி மூலம் இயங்கும் அனல்மின் நிலையங்கள் அவற்றின் முழுத்திறனில் 68.45 சதவீத அளவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.


எனவே, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் எதிர்காலமானது மின் விநியோகக் கட்டமைப்பு, மின்கலன் சேமிப்பு, நீர் உந்தல் மின் சேமிப்பு கட்டமைப்பு, நெகிழ்வுத்தன்மை கொண்ட மின் உற்பத்தி மற்றும் அறிவார்ந்த மின் சந்தைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதைச் சார்ந்துள்ளது. ஆற்றல் மாற்றம் என்பது இனி வெறும் பெட்ரோலிய எரிபொருட்களுக்குப் பதிலாக மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவது மட்டுமே அல்ல; பல்வேறு ஆற்றல் மூலங்களை ஒன்றுசேர்த்து, மிகத் திறமையாகச் செயல்படக்கூடிய ஒரு புதிய மின்சார அமைப்பை உருவாக்குவதாகும்.


ஒருங்கிணைந்த எரிசக்தி அணுகுமுறையின் தேவை


இந்தியாவின் எரிசக்தி சார்ந்த சவால் என்பது திட்டங்களின் பற்றாக்குறை அல்ல; மாறாக, சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே ஆகும். சமீபத்திய ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எத்தனால் கலப்பு, பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள், நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் எரிசக்தி திறனுக்காக இந்தியா பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானதுதான், ஆனால் தனித்தனி கொள்கைகள் மூலமாக எரிசக்தி பாதுகாப்பை நோக்கிய இலக்கை அடைந்துவிட முடியாது.


போதுமான மின் விநியோகக் கட்டமைப்பு இல்லாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பால் நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்த முடியாது. பாதுகாப்பான கச்சா எண்ணெய் விநியோகம் இல்லாத சுத்திகரிப்பு ஆலை எப்போதுமே ஆபத்துக்குள்ளாகக் கூடியதுதான். அதேபோல, நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் எத்தனால் கலப்பை விரிவுபடுத்துவது புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


இதற்குத் தீர்வு காணும் வகையில், இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA), இந்தியாவிற்கான ஒருங்கிணைந்த தேசிய எரிசக்தி கொள்கை கட்டமைப்பு: போதுமான அளவு, அணுகல், மலிவு விலை மற்றும் தகுந்த நிலைத்தன்மை “(A Unified National Energy Policy Framework for India: Adequacy, Access, Affordability, and Appropriate Sustainability (2026)" என்ற அறிக்கையில், ஒருங்கிணைந்த ஆற்றல் கொள்கைக்கான நான்கு தூண்கள் கொண்ட ஒரு கட்டமைப்பைப் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கை இந்தியாவின் எதிர்கால ஆற்றல் தேவைகளைத் திட்டமிடுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.


இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தின் அடுத்த கட்டம்: எரிபொருள்கள், தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான தேசிய எரிசக்தி கொள்கையை (Unified National Energy Policy) உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். எரிசக்தி பாதுகாப்பு என்பது வாகனங்களை இயக்குவது அல்லது தொழிற்சாலைகளை நடத்துவது மட்டுமல்ல. பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், நீடித்த நிலையான வளர்ச்சியைப் பெறவும் உதவும் ஒரு வலுவான மற்றும் சீரான எரிசக்தி அமைப்பை உருவாக்குவதே அதன் உண்மையான நோக்கமாகும்.


மேற்காசியப் பிரச்சனை, வெளிப்புறப் பாதிப்புகளை எப்போதும் தவிர்க்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், சிறந்த முன்ஏற்பாடுகள் மூலமாக அவற்றின் தாக்கத்தைக் குறைக்க முடியும். இந்தியா ஏற்கனவே தனது எரிசக்தி பாதுகாப்பிற்கான பல முக்கியமான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு வலுவான, சீரான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட அமைப்பாக மாற்றுவதுதான் அடுத்தகட்ட சவாலாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

 

Original articles: How a unified national framework seeks to strengthen India’s future energy security. -Pushpendra Singh and Archana Singh

Share:

விண்வெளி ஆய்வுக்கான குழு (COSPAR) விக்ரம் சாராபாய் பதக்கம் பற்றி . . . -பிரியா குமாரி சுக்லா

 

COSPAR -  Committee on Space Research :  விண்வெளி ஆய்வுக்கான குழு


தற்போதைய நிகழ்வு : வானியற்பியல் ஆய்வாளர் அன்னபூர்ணி சுப்பிரமணியம் அவர்களுக்கு 'COSPAR விக்ரம் சாராபாய் பதக்கம் - 2026' வழங்கப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :


அன்னபூர்ணி சுப்பிரமணியம் பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (Indian Institute of Astrophysics (IIA)) இயக்குநராகவும், நானோ மற்றும் மென்-பொருள் அறிவியல் மையத்தின் (Centre for Nano and Soft Matter Sciences (CeNS)) இயக்குநராக கூடுதல் பொறுப்பிலும் உள்ளார்.


இவர், இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 46-வது COSPAR அறிவியல் மாநாட்டின்போது, ​​திங்களன்று இந்தப் புகழ்பெற்ற பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.


விண்வெளி ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் வளரும் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இந்த சர்வதேச பதக்கம் வழங்கப்படுகிறது. சர்வதேச அறிவியல் கவுன்சில் (International Science Council) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் (UN-COPUS வழியாக) இணைக்கப்பட்ட சர்வதேச அமைப்பான 'விண்வெளி ஆராய்ச்சிக்கான குழு' (COSPAR) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆகியவை இணைந்து இந்தப் பதக்கத்தை வழங்குகின்றன. இந்தியாவின் விண்வெளித் திட்டம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) நிறுவனரான விக்ரம் சாராபாயின் நினைவாக 1990-ம் ஆண்டில் இந்தப் பதக்கம் உருவாக்கப்பட்டது.

உங்களுக்குத் தெரியுமா? :


இந்தப் பதக்கத்தைப் பெறும் 4-வது இந்தியர் அன்னபூர்ணி சுப்பிரமணியம் ஆவார். மேலும், இந்தப் பெருமையைப் பெறும் முதல் இந்தியப் பெண் விஞ்ஞானியும், மேலும், உலக அளவில் இவ்விருதைப் பெறும் 3-வது பெண்மணியும் இவரே ஆவார். இவ்விருதைப் பெற்ற மற்ற இந்தியர்கள்: இஸ்ரோ விஞ்ஞானியும் இஸ்ரோவின் இயற்பியல் ஆய்வகத்தின் (Physical Research Laboratory) இயக்குநருமான அனில் பரத்வாஜ் (2024), இயற்பியலாளர் குர்பக்ஸ் சிங் லக்கினா (2014) மற்றும் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியும் இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான யு.ஆர். ராவ் (1996) ஆகியோர் ஆவர்.


சுப்பிரமணியம் விண்மீன் இயற்பியலில் (stellar physics) நிபுணத்துவம் பெற்றவர். இவர், விண்மீன் கூட்டங்கள் மற்றும் அருகிலுள்ள விண்மீன் அண்டங்கள் (galaxies) குறித்து ஆய்வு செய்கிறார். வானியலில் பயன்படுத்தப்படும் விண்வெளி மற்றும் தரைவழிக் கருவிகள் குறித்தும் இவர் விரிவாகப் பணியாற்றி வருகிறார். 2015-ல் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் விண்வெளி தொலைநோக்கியான 'ஆஸ்ட்ரோசாட்' (AstroSat)-ல் உள்ள 'புற ஊதா கதிர்வீச்சு இமேஜிங் தொலைநோக்கிக்கான' (Ultra-violet Imaging Telescope (UVIT)) அளவுத்தரப்பாடு விஞ்ஞானியாக (calibration scientist) இவர் முக்கிய பங்காற்றினார்.


சர்வதேச கூட்டமைப்பில் இந்தியா பங்கேற்கும் 'முப்பது மீட்டர் தொலைநோக்கி' (Thirty Metre Telescope (TMT)) திட்டத்திலும் இவர் ஈடுபட்டுள்ளார். இவர் இந்திய அறிவியல் அகாடமியின் (Indian Academy of Sciences) விரும்பத்தக்க நபராகவும், சர்வதேச வானியல் ஒன்றியத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.


COSPAR என்பது விண்வெளி விஞ்ஞானிகளுக்கான மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்றாகும். இது தனது அறிவியல் மாநாட்டை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகிறது. இந்த மாநாட்டில் பொதுவாக உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 3,000 விஞ்ஞானிகள் ஒன்றுகூடுகின்றனர். 1957-ல் சோவியத் ஒன்றியம் உலகின் முதல் செயற்கைக்கோளை ஏவியதைத் தொடர்ந்து, 1958-ல் COSPAR நிறுவப்பட்டது.


Original articles: About the COSPAR Vikram Sarabhai Medal. -Priya Kumari Shukla

Share:

ராம்சார் சதுப்பு நிலப்பகுதிகளைச் சுற்றியுள்ள சுரங்கப்பணிகளில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்? - ஜேக்கப் பி. கோஷி

 இந்தக் கேள்வியை உச்சநீதிமன்றம் ஏன் விரிவாக பரிசீலிக்க வேண்டிய நிலை உருவானது? ராம்சார் தளங்கள் என்றால் என்ன? ராம்சார் சதுப்புநிலப்பகுதிகளில் சுரங்கப்பணிகள் மேற்கொள்வது குறித்துச்சட்டம் என்ன  சொல்கிறது?


தற்போதைய செய்தி: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 'ஆசன் சதுப்பு நிலப் பாதுகாப்பு காப்பகத்தைச் (Asan Wetland Conservation Reserve) சுற்றியுள்ள 10 கி.மீ சுற்றளவில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ளும் முன் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று பிப்ரவரி 2024-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு, சமநிலையைக் கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலப்பாதுகாப்பு காப்பகங்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விளக்கமானது, முன்னதாக உத்தரகண்டில் உள்ள 'ஆசன் சதுப்பு நிலப் பாதுகாப்பு' (Asan Ramsar) பகுதிக்கு மட்டுமே இருந்த ஒரு நீதிமன்றத்தின் பாதுகாப்பு உத்தரவை, இதேபோன்று அறிவிக்கப்பட்ட பிற சதுப்பு நிலப்பாதுகாப்பு காப்பகங்களுக்கும் விரிவுபடுத்தக்கூடும்.


இந்தக்கேள்வியை உச்சநீதிமன்றம் விரிவாக பரிசீலிக்க வேண்டிய நிலை எவ்வாறு உருவானது?


இமாச்சலப்பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது இந்த உத்தரவு வந்தது. உத்தரகண்டில் உள்ள ஆசன் சதுப்பு நிலப் பாதுகாப்பு காப்பகம் தொடர்பான பிப்ரவரி 14, 2024-ன் இடைக்கால உத்தரவு தங்களுக்குத் தானாகவே பொருந்தாது என்று அந்தமாநில அரசு வாதத்தை முன் வைத்தது. ஏனெனில், ஆசன் காப்பகம் இமாச்சலப் பிரதேசத்தில் அமையவில்லை. மேலும், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைப் போல் இல்லாமல், சதுப்புப் பாதுகாப்பு காப்பகங்களுக்குச் சட்டரீதியான 'பாதுகாப்பு வளையப் பகுதி' (buffer zone) எதுவும் இல்லை என்று இமாச்சலப்பிரதேச அரசு சுட்டிக்காட்டியது.


இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, ஆசன் வழக்கில் வகுக்கப்பட்ட கொள்கை உத்தரகண்டிற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல என்று வாய்மொழியாகத் தெளிவுபடுத்தியது. சமூகக் காப்பகம் (community reserve) அல்லது சதுப்புநிலப் பாதுகாப்பு காப்பகம் எங்கு இருந்தாலும், சமநிலையைக் கருத்தில் கொண்டு ஆசன் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பொருந்தும் என்று நீதிபதி ஜாய்மால்யா பாக்சி குறிப்பிட்டார். அதே வேளையில், ஆசன் சதுப்புநிலப் பகுதி இமாச்சலப் பிரதேசம் வரை நீண்டுள்ளதா என்பதைத் சரிபார்க்குமாறு தேசிய வனவிலங்கு வாரியத்தின் (National Board for Wildlife (NBWL)) நிலைக்குழு அல்லது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு இருந்தால், 2024-ன் உத்தரவுகள் அங்கும் பொருந்தும். இல்லையெனில், சுரங்கத் தோண்டுதல் தொடர்பான முன்மொழிவுகள், நடைமுறையில் உள்ள பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்  அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.


ஆசன் (Asan) சதுப்புநிலம் தொடர்பான வழக்கின் பின்னணி என்ன?


உத்தராகண்ட் மாநிலத்தில் ஆசன் மற்றும் யமுனை ஆறுகள் சேரும் இடத்தில் அமைந்துள்ள 'ஆசன் சதுப்புநிலப் பாதுகாப்பு காப்பகம்' (Asan Wetland Conservation Reserve), 2020-ஆம் ஆண்டில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. இது வலசை வரும் நீர்ப்பறவைகளுக்கு ஒரு முக்கியமான வாழ்விடமாகவும்,  வளமான நீர்வாழ் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரவளிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.


பிப்ரவரி 14, 2024 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில், தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு (Standing Committee of the NBWL) அல்லது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் (MoEFCC) இருந்து முன் அனுமதி பெறாத பட்சத்தில், இந்தக்காப்பகத்தைச் சுற்றியுள்ள 10 கி.மீ சுற்றளவிற்குள் எந்தவொரு சுரங்க பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சதுப்புநிலம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் சூழலியல் தன்மையைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகள்மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. இந்தியா முழுவதும் உள்ள பிற சதுப்புநிலப் பாதுகாப்பு பகுதிகளுக்கும் இதே கொள்கை பொருந்தும் என்பதை  சில நாட்களுக்கு முன்னர் வந்த தெளிவுபடுத்தல் சுட்டிக்காட்டுகிறன.


ராம்சார் தளங்கள் என்றால் என்ன?


சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களைப் பாதுகாப்பதையும், அவற்றை விவேகத்துடன் பயன்படுத்துவதையும் ஊக்குவிப்பதற்காக 1971-ஆம் ஆண்டில் ஈரானின் ராம்சார் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'சதுப்புநிலங்கள் குறித்த ராம்சார் ஒப்பந்தத்தின்' (Ramsar Convention on Wetlands) கீழ் அறிவிக்கப்படும் சதுப்புநிலங்களே ராம்சார் தளங்கள் ஆகும். இந்தியா 1982-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்த  (Contracting Party) நாடாக இணைந்தது.


தற்போது இந்தியாவில் மொத்தம் 101 ராம்சார் தளங்கள் உள்ளன. இது ஆசிய நாடுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி, அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிளா ஏரி (Glaw Lake), இந்தியாவின் 101-ஆவது ராம்சார் தளமாகவும், அந்த மாநிலத்தின் முதல் ராம்சார் தளமாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 98-ஆக இருந்த இந்தியாவின் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 101-ஆக உயர்ந்தது.


ராம்சார் தளமாக அறிவிக்கப்படுவது மட்டும் இந்தியச் சட்டத்தின்கீழ் தனித்துவமான சட்டப்பூர்வ பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதில்லை. மாறாக, அந்த சதுப்புநிலம் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அங்கீகரிப்பதுடன், அதன் சுற்றுச்சூழல் தன்மையை (Ecological Character) இந்தியாவின் உள்நாட்டு சுற்றுச்சூழல் சட்டங்கள் மூலம் பாதுகாக்கும் பொறுப்பை நாட்டிற்கு வழங்குகிறது.


ராம்சார் சதுப்புநிலங்களில் சுரங்கத் தோண்டுதல் குறித்து சட்டம் என்ன கூறுகிறது?


ராம்சார் ஒப்பந்தமோ அல்லது சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017 ராம்சார் தளங்களைச்சுற்றி ஒரு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வளையத்தை விதிக்கவில்லை அல்லது அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் சுரங்கம் தோண்டுவதை வெளிப்படையாகத் தடை செய்யவில்லை.


முன்னர் அமலில் இருந்த 2010-ஆம் ஆண்டு சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், சதுப்புநிலங்களுக்குள் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான பட்டியலைக்கொண்டிருந்தன. அந்த பட்டியலில் நிலமீட்பு (Reclamation), புதிய தொழிற்சாலைகள் அமைத்தல், திடக்கழிவுகளை கொட்டுதல் மற்றும் சதுப்புநிலச் சுற்றுச்சூழலை பாதிக்கும்  நடவடிக்கையும்  இடம் பெற்று இருக்கும். மேலும், சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதிக்குள் (Zone of Influence) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விதிகளும் பட்டியலில் இருந்தன.


2017-ஆம் ஆண்டுக்கான விதிகள், முந்தைய கட்டமைப்பைமாற்றி, மாநில சதுப்புநில ஆணையங்களின் (State Wetland Authorities) கீழ் செயல்படும் ஒரு  அமைப்பை அறிமுகப்படுத்தின. இவை 2010-ஆம் ஆண்டு விதிகளில் இடம்பெற்றிருந்த தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் தெளிவான பட்டியலை நீக்கியதுடன், சதுப்புநிலங்களைக் கண்டறிந்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பை   மாநிலங்களிடமே ஒப்படைத்தன. இந்த விதிகளின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ராம்சார் ஒப்பந்தத்தின்கீழ், அங்கீகரிக்கப்பட்ட பல செயற்கையான சதுப்புநிலங்கள் இந்தக்கட்டமைப்பில் விடுபட்டுள்ளதாகவும், 2010-ஆம் ஆண்டு விதிகளின்கீழ் இருந்த பாதுகாப்பு விதிகள் இதன் மூலம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.


இந்தப் பின்னணியில், ஆசன் சதுப்புநிலப் பாதுகாப்பு காப்பகம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில், சதுப்புநிலப் பாதுகாப்பு காப்பகங்களின் 10 கி.மீ. சுற்றளவிற்குள் சுரங்கத் தோண்டுதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன் வனவிலங்கு அனுமதி (Wildlife Clearance) பெறுவது கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம், கூடுதல் நீதித்துறைப்பாதுகாப்பு (Additional Judicial Safeguard) உருவாக்கப்பட்டுள்ளது.


தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சுரங்கத் தோண்டுதலுடன் இதை ஒப்பிடும்போது நிலைமை எப்படி உள்ளது?


பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் மற்றும் வனவிலங்கு வாழிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள், பல்வேறு சட்டங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் போன்றவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன.


1972-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் (Wildlife (Protection) Act) கீழ், தேசியப்பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்குள் சுரங்கம் தோண்டும் பணி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு தேசியப்பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் சுரங்கம் தோண்டும் பணிக்கு அனுமதி வழங்கப்படாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு விதிவிலக்காக, ஒரு பெரிய சூழல் உணர்திறன் மண்டலம் (Eco-Sensitive Zone (ESZ) ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், அறிவிக்கப்பட்ட பெரிய இடைப்பகுதியே நடைமுறையில் இருக்கும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் சுரங்கம் தோண்டுவது வனவிலங்குகளுக்கு ஆபத்தானது என்பதைக் கவனித்த பின்னர், நீதிமன்றம் இந்தத்தடையை நாடு முழுவதும் விரிவுபடுத்தியது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் அமைந்துள்ள அல்லது வனவிலங்குகளின் வாழ்விடங்களைப்பாதிக்க வாய்ப்புள்ள திட்டங்களுக்கு, தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் ஆய்வும் தேவைப்படுகிறது.


வனப்பகுதிகளில், சுரங்கதோண்டும் பணிக்காக வன நிலத்தை மாற்றுப்பயன்பாட்டிற்கு (Diversion of Forest Land) பயன்படுத்துவதற்கு, 1980-ஆம் ஆண்டின் வன (பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) அதிநியம் (Van (Sanrakshan Evam Samvardhan) Adhiniyam) சட்டத்தின்கீழ், மத்திய அரசின் முன் அனுமதி கட்டாயமக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத் தோண்டும் திட்டங்கள் பொதுவாக 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின் (Environment Impact Assessment Notification, 2006) படி சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டும்.


Original articles: How will the Supreme Court order impact mining around Ramsar wetland sites? -Jacob P Koshy

Share:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்புப்படி, 2028-29 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் அளவை எட்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) வெளியிட்ட 'உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்' (World Economic Outlook) என்ற தரவுத்தளத்தின்படி, 2028-29-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போதைய விலையில்  $5.1 டிரில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின்படி, 2029-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் $5 டிரில்லியன் என்ற இலக்கைக் கடக்க உள்ளது என்றும், இந்த சாதனையை எட்டுவதற்காக அரசாங்கம் ஒரு பரந்த அடிப்படையிலான வளர்ச்சி உத்தியைக் கையாண்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.


"வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், உற்பத்தியை ஊக்குவித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSMEs)) ஆதரவளித்தல், உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், தளவாடங்களை மேம்படுத்துதல் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல், வருமான வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்கள் மூலம் திறமையான மற்றும் ஒழுங்கமைப்பாக்கப்பட்ட வரி முறையை உருவாக்குதல், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவித்தல், மனித மூலதனத்தை வலுப்படுத்துதல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பரந்த அடிப்படையிலான வளர்ச்சி உத்தியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் கூறினார்.




இந்த உத்தியானது, பொது மூலதனச் செலவினங்களுக்குத் தொடர்ச்சியான முக்கியத்துவம் அளித்தல், அந்நிய நேரடி முதலீட்டு (FDI) முறையைத் தாராளமயமாக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் வேகமான நிதி மேலாண்மை மற்றும் விலை நிலைத்தன்மை மூலம் பேரியல் பொருளாதார (macroeconomic) அடிப்படைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றால் பூர்த்தி செய்யப்படுகிறது.


மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements  (FTA)) மற்றும் விரிவான பொருளாதார கூட்டாண்மை/ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் (Comprehensive Economic Partnership/Cooperation Agreements (CEPA/CECA)) ஆகியவற்றின் வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், நாட்டின் வர்த்தகத் மீள்திறனை (Trade Resilience) அரசு வலுப்படுத்தி வருகிறது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.


உற்பத்தித்துறையை மேம்படுத்துவதற்காக, உற்பத்தி சார்ந்த ஊக்கத்திட்டம், மேக் இன் இந்தியா, தேசிய தளவாடக்கொள்கை, தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு மற்றும் பிரதமர் கதிசக்தி திட்டம் போன்ற முயற்சிகள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் நிதியமைச்சர் கூறினார்.


பிரதமரின் கதிசக்தி திட்டம் (PM GatiShakti scheme) என்றால் என்ன?


பிரதமரின் கதிசக்தி திட்டம் என்பது இந்தியாவில் அடிப்படை உள்கட்டமைப்பு, வளர்ச்சியை ஒருங்கிணைத்து, அதை வேகமாக செயல்படுத்துவதற்காக 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமாகும்.


இந்த முயற்சிகளுக்குத் துணையாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises (MSME)) துறையை வலுப்படுத்தும் வகையில், கடன் உத்தரவாத வரம்புகளை உயர்த்துதல், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் (Emergency Credit Guarantee Scheme (ECGS)), சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வகைப்பாடு விதிமுறைகளை மறு ஆய்வு செய்தல், வர்த்தகப் பெறுதல்களுக்கான தள்ளுபடி அமைப்பு (Trade Receivables Discounting System (TReDS)) சூழலை வலுப்படுத்துதல், எளிமைப்படுத்தப்பட்ட உத்யம் (Udyam) பதிவு, அரசின் மின்னணு சந்தைத் தளம் (Government e-Marketplace  (GeM)) மூலம் அதிக அணுகல் வழங்குதல் மற்றும் பிரதமர் விஸ்வகர்மா (PM Vishwakarma) திட்டத்தின்கீழ் ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு இலக்கு நோக்கிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நிதியமைச்சர் கூறினார்.


டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கி நிறுவுதல், உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres (GCCs)) ஊக்குவித்தல், மருத்துவ மதிப்புப்பயணம் மற்றும் ஆரஞ்சுப் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் சூழலமைப்பை வலுப்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் பணியாளர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான இலக்கு சார்ந்த முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் சேவைத்துறை வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்று நிதியமைச்சர் கூறினார்.


ஆரஞ்சு பொருளாதாரம் (Orange Economy) என்றால் என்ன?


 ஆரஞ்சு பொருளாதாரம் என்பது படைப்பாற்றல், கலை, கலாச்சாரம் மற்றும் அறிவுசார் சொத்துகளை அடிப்படையாகக்கொண்டு வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு பொருளாதார அமைப்பாகும்.


2026–27-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவு அறிக்கையில், சேவைத்துறையின் வளர்ச்சித் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வரும்  வகியில், தேசிய விருந்தோம்பல் நிறுவனத்தை (National Institute of Hospitality) அமைத்தல், பிராந்திய மருத்துவ மையங்களை (Regional Medical Hubs) உருவாக்குதல், துணை மருத்துவப் பணியாளர் கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்துதல், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (Animation, Visual Effects, Gaming and Comics) உள்ளடக்க உருவாக்குநர் ஆய்வகங்களை நிறுவுதல் மற்றும் பல்கலைக்கழக நகரங்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை 2026-27-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் வரவு செலவு அறிக்கையில் அறிவித்துள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.


வேளாண்மைத்துறையில், பாசன வசதிகளில் முதலீட்டை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளுதல், டிஜிட்டல் வேளாண்மையை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் பொருட்களுக்கு சிறந்த சந்தை சேவைகளை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் உற்பத்தித்திறனை உயர்த்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.


கடந்த சில ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் வரவு செலவு அறிக்கைகள், வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக இருந்து வரும் குறைமின்கடத்திகள், மின்னணுவியல், உயிரி-மருந்துகள், அரிய வகை கனிமங்கள், ரசாயனங்கள், மூலதனப்பொருட்கள், தூய எரிசக்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற முக்கியத்துறைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கு முன்னுரிமை அளித்துள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.


தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ற திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதையும், வளர்ந்து வரும் இந்தத் துறைகளுக்குத் தேவையான எதிர்காலத் தயார்நிலை கொண்ட பணியாளர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட பிரதமர் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் மாற்றுத் (Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs (PM-SETU)) திட்டம், இந்த முயற்சிகளுக்கு வலுசேர்க்கிறது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவின் நடுத்தர கால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை வலுப்படுத்தும் என்றும், 2047-ஆம் ஆண்டுக்குள் “வளர்ந்த இந்தியா” (Viksit Bharat) என்ற நீண்டகால தேசிய இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.


மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024–25-ஆம்  நிதியாண்டில், நிதிச் சொத்துகளின் பத்திரப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு உரிமைகளை அமல்படுத்தும் சட்டம், 2002 (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act  (SARFAESI Act)) கீழ் வங்கிகள் மொத்தம் 2,15,709 வழக்குகளை பதிவு செய்துள்ளன. அவற்றில் தொடர்புடைய மொத்தத் தொகை ₹1,03,180 கோடி ஆகும் நிதியமைச்சர் தெரிவித்தார்.


இதன் மூலம் வங்கிகளால் ₹32,466 கோடியை மீட்க முடிந்தது என்று நிதியமைச்சர் கூறினார்.


Original articles: Indian economy to hit $5-trillion mark in FY29 as per IMF: Finance Minister Nirmala Sitharaman.

Share:

நேட்டோ (NATO), மாற்றத்திற்கான ஒரு புதிய உத்திசார் காலகட்டத்தில் நுழைகிறது. - அத்வித்யா மதன்

 நேட்டோவின் (NATO) ஐரோப்பியக் கவனம் சார்ந்த மாற்றம் இந்தியாவுக்குப் புதிய உத்திசார் மற்றும் பாதுகாப்பு வாய்ப்புகளை வழங்குகிறது.


1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization (NATO)) உருவாக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக, வாஷிங்டன் (US) ஐரோப்பாவைத் தனது பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்குமாறும், அதேவேளையில் தனது சொந்தப் பாதுகாப்பிற்கான முதன்மைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தி வருகிறது. இது அட்லாண்டிக் கடலைக் கடந்த நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் குறிப்பதோடு, இந்த அமைப்பின் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தையும் உணர்த்துகிறது. நேட்டோ அமைப்பு நீடிக்குமா என்பது இனி முக்கியக் கேள்வி அல்ல. மாறாக, மாறிவரும் இராஜதந்திரச் சூழலுக்கு அது எவ்வாறு தன்னை மாற்றியமைத்துக்கொள்கிறது என்பதே முக்கியமானது.



அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம்


அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு உத்தி (நவம்பர் 2025), நேட்டோ அமைப்பை அமெரிக்காவின் முதன்மையான அட்லாண்டிக் கூட்டணிக் கட்டமைப்பாகத் தக்கவைத்துக் கொண்டது. அதேவேளையில், ஐரோப்பியக் கூட்டமைப்புகளிடமிருந்து வாஷிங்டன் எதிர்பார்க்கும் விஷயங்களில், குறிப்பாகப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கூட்டுப் பாதுகாப்புப் பொறுப்புகள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் சுட்டிக்காட்டியது. ஐரோப்பாவின் முதன்மைப் பாதுகாப்பு உத்தரவாததாரராக அமெரிக்கா செயல்பட்ட காலம் முடிவுக்கு வருவதாகவும், வளமான ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்தக் கண்டத்தைப் பாதுகாப்பதில் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அது வாதிட்டது. சுமைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான புதிய அளவுகோலாக, பாதுகாப்புச் செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5%-ஆக உயர்த்தும் நேட்டோவின் முடிவை இந்த உத்தி ஆதரித்தது. அதே சமயம், அமெரிக்கா இனி இந்த அமைப்பின் ஒரே இராணுவத் தூணாக இல்லாமல், இராஜதந்திரரீதியாகச் செயல்பட உதவும் சக்தியாகவும் (strategic enabler), அணுசக்திப் பாதுகாப்பு உத்தரவாததாரராகவும், அரசியல் ஒருங்கிணைப்பாளராகவும் மட்டுமே இருக்கும் என்று அது திட்டமிட்டது. வலுவான மற்றும் சுயசார்பு கொண்ட ஐரோப்பாவை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம், வாஷிங்டனால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது உத்திசார் கவனத்தை அதிகளவில் செலுத்த முடியும்.


இந்தச் சமநிலை மாற்றமானது ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிகிறது. 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை சுமார் 1,00,000 ஆக உயர்ந்தது. அதன்பிறகு, வாஷிங்டன் படிப்படியாக அந்த எண்ணிக்கையைக் குறைத்தது. 2025-26 காலகட்டத்தில், ஜெர்மனியிலிருந்து சுமார் 5,000 வீரர்களைத் திரும்பப் பெற்றது, போலந்துக்கு 4,000 வீரர்களை அனுப்பும் திட்டத்தை ரத்து செய்தது மற்றும் ஐரோப்பாவில் இருந்த 'படைப்பிரிவு போர் அணிகளை' (Brigade Combat Teams) நான்கிலிருந்து மூன்றாகக் குறைத்தது. இதன் விளைவாக, ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை சுமார் 75,000 முதல் 80,000 வீரர்களாகக் குறைந்தது. இது உக்ரைன் போருக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த படை எண்ணிக்கைக்கு நெருக்கமான அளவாகும். ஜூலை 2026-ல் அங்காராவில் நடைபெற்ற 36-வது நேட்டோ உச்சிமாநாடு இந்த மாற்றத்தை மேலும் உறுதிப்படுத்தியது. பிரிவு 5-க்கான கூட்டணியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், உறுப்பு நாடுகள் 2026-ல் உக்ரைனுக்கு €70 பில்லியன் இராணுவ உதவியை வழங்குவதாகவும், 2027-ல் அதே அளவிலான ஆதரவைத் தொடர உறுதியளிப்பதாகவும், ஐரோப்பிய தலைமையிலான நீண்டதூர துல்லியத் தாக்குதல் திறன்களின் (long-range precision strike capabilities) வளர்ச்சிக்கு ஒப்புதல் அளித்ததாகவும், நேட்டோவின் பாதுகாப்புத் தொழில் தளத்தை வலுப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியதாகவும் உறுதியளித்தன. இதிலிருந்து வெளிப்பட்ட ஒட்டுமொத்த செய்தி தெளிவாக இருந்தது. அமெரிக்கா இந்தோ-பசிபிக் பகுதிக்கு அதிகளவில் முன்னுரிமை அளிப்பதால், ஐரோப்பா தனது மரபுசார் பாதுகாப்புக்கு அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும்.


நேட்டோவின் முதல் பொதுச்செயலாளரான லார்ட் இஸ்மே (Lord Ismay), கூட்டணியின் உண்மையான நோக்கத்தை "ரஷ்யர்களை வெளியே வைத்திருப்பது, அமெரிக்கர்களை உள்ளே வைத்திருப்பது மற்றும் ஜெர்மானியர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது" என்று பிரபலமாகக் குறிப்பிட்டார். இந்தக் கூற்று பனிப்போரின் இராஜதந்திரரீதியில் தர்க்கத்தைப் பிரதிபலித்தாலும், நேட்டோ இன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. அதை ரஷ்யாவைத் தடுத்து நிறுத்துதல், அமெரிக்காவை ஈடுபாட்டுடன் வைத்திருத்தல் மற்றும் ஐரோப்பாவைத் தயாராக வைத்திருத்தல் என்று சுருக்கமாகக் கூறலாம்.


காலப்போக்கில் நேட்டோவின் பரிணாம வளர்ச்சி


நேட்டோ கூட்டணியின் பரிணாம வளர்ச்சியை மூன்று கட்டங்களாகக் காணலாம். நேட்டோ-1.0 (1949-1991), சோவியத் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் அட்லாண்டிக் கடந்த ஒற்றுமையைப் பாதுகாக்கவும் பெருமளவில் அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தியையே நம்பியிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேட்டோ-2.0 (1991-2022) உருவானது. இது கிழக்கு நோக்கி விரிவடைந்து, முன்னாள் வார்சா ஒப்பந்த (Warsaw Pact) உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, பால்கன் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பிய பாதுகாப்புச் செலவினங்கள் குறைந்து, உளவுத்துறை, தளவாடங்கள், உத்திசார் நகர்வுத்திறன் மற்றும் உயர்தர இராணுவத் திறன்களுக்காக அமெரிக்காவைச் சார்ந்திருப்பது அதிகரித்தது. இதன் விளைவாக, சுமைப் பகிர்வு (burden sharing), அதாவது பாதுகாப்புப் பொறுப்புகளையும் செலவுகளையும் எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பது குறித்த பிரச்சினை, மேலும் சர்ச்சைக்குரியதாக மாறியது.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, நேட்டோவின் மூன்றாவது கட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. இந்தக் கட்டத்தில், அட்லாண்டிக் கடந்த கூட்டாண்மை மேலும் சமநிலையானதாக மாறியுள்ளது. இதில், மரபுசார் பாதுகாப்பிற்கான முதன்மைப் பொறுப்பை ஐரோப்பா ஏற்கும் அதேவேளையில், அணுசக்தித் தடுப்பு, உளவுத்துறை, தொலைதூரத் துல்லியத் தாக்குதல் திறன்கள் மற்றும் உலகளாவிய சக்திப் பரவல் போன்ற இராஜதந்திரரீதியில் வசதிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்குகிறது. இது அமெரிக்கா விலகியதைக் காட்டிலும், இராஜதந்திரரீதியில் மறுபகிர்வைப் பற்றிய ஒரு கதையாகும்.


2025-ம் ஆண்டு ஹேக் உச்சிமாநாட்டில் (Hague Summit) ஐரோப்பாவின் வலுவான பதில் தெளிவாகத் தெரிந்தது. அங்கு, நேட்டோ உறுப்பு நாடுகள் 2035-ம் ஆண்டுக்குள் தங்களின் முக்கிய பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 3.5% ஆக அதிகரிக்க உறுதியளித்தன. மேலும், இதன் முன்னேற்றம் 2029-ல் மதிப்பாய்வு செய்யப்படும். ஜெர்மனி 2023 முதல் பாதுகாப்புச் செலவினங்களை இரட்டிப்பாக்கியுள்ளதுடன், ரஷ்யாவைத் தடுப்பதற்காக இராணுவத் திறனை மீண்டும் கட்டியெழுப்பும் அதே வேளையில், 2029-ம் ஆண்டுக்குள் அதே இலக்கை அடையவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், நேட்டோ (NATO) அமைப்பை எதிர்கொள்ளும் வகையில் புதிய தலைமையகங்கள், படைப்பிரிவுகள் மற்றும் தளங்களுடன் ரஷ்யா (மாஸ்கோ) தனது மேற்குப் பிராந்திய இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைத்துள்ளது.


இருப்பினும், பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பது மட்டுமே கடினமான சவால் அல்ல. அமெரிக்க இராணுவக் கட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு அமைப்பை உருவாக்குவதே உண்மையான சவாலாகும். ஐரோப்பிய இராணுவங்கள் வலிமை பெற்றாலும், உளவுத்துறை, கண்காணிப்பு, செயற்கைக்கோள் ஆதரவு, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், உத்திசார் வான்வழிப் போக்குவரத்து, ஏவுகணைப் பாதுகாப்பு, நீண்ட தூரத் துல்லியத் தாக்குதல் திறன்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அணு ஆயுதப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக அவை இன்றும் அமெரிக்காவையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. குண்டுவீசும் விமானங்கள், போர் விமானங்கள், வானில் எரிபொருள் நிரப்பும் டாங்கர்கள், போர்க்கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட விரைவு எதிர்வினைச் சொத்துக்களை வாஷிங்டன் குறைத்ததும், ஜெர்மனிக்கு டோமஹாக் (Tomahawk) குரூஸ் ஏவுகணைகளை நிலைநிறுத்துவதையும், அந்தச் சார்புநிலையின் அளவை விளக்குகின்றன. எனவே, ஐரோப்பாவின் மையமான இக்கட்டான நிலை என்பது பெரிய ஆயுதப் படைகளை உருவாக்குவது மட்டுமல்ல, நேட்டோ அமைப்பின் செயல்திறனுக்கு நீண்டகாலமாக அடித்தளமாக விளங்கிய ஒருங்கிணைந்த திறன்களை வளர்ப்பதே ஆகும். போலந்தின் (Poland) வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் குறிப்பிட்டதுபோல, ஐரோப்பா அமெரிக்க இராணுவ சக்திக்கு ஈடாக இருக்க வேண்டியதில்லை. அது ரஷ்யாவைவிட வலிமையாக இருந்தால் மட்டும் போதும்.


புது தில்லியும் மறுசமநிலைப்படுத்தலும்


இந்தியாவைப் பொறுத்தவரை, நேட்டோ அமைப்பின் மாற்றம் என்பது ஐரோப்பாவைப் பற்றியதைவிட, அமெரிக்காவின் உத்திசார் கவனத்தை மறுபகிர்வு செய்வதைப் பற்றியது. தனது சொந்தப் பாதுகாப்பிற்கான அதிகப் பொறுப்பை ஏற்கும் திறன் கொண்ட ஒரு ஐரோப்பா, சீனாவின் அதிகரித்துவரும் ஆதிக்கத்திற்கு மத்தியில் பிராந்திய சமநிலையை வலுப்படுத்தி, இந்தோ-பசிபிக் பகுதிக்கு வாஷிங்டன் தனது இராஜதந்திரக் கவனம், இராணுவ வளங்கள் மற்றும் இராஜதந்திரரீதியில் முதலீடுகளை அர்ப்பணிக்க வழிவகுக்கும். அதே நேரத்தில், அதிகத் திறன் கொண்ட ஒரு ஐரோப்பா, பாதுகாப்பு உற்பத்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, குறைமின்கடத்திகள் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய நட்பு நாடாக உருவெடுக்க முடியும்.


எனவே, புது தில்லி இந்த மாற்றங்களை கூட்டணி அரசியலின் கண்ணோட்டத்தில் பார்க்காமல், உத்திசார் வாய்ப்புகளின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய ஒத்துழைப்பு, இராஜதந்திரரீதியில் தன்னாட்சிக்கான இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டைப் பாதிக்காமல், அதற்கு வலு சேர்க்கும். விவேகத்துடன் வழிநடத்தப்பட்டால், நேட்டோ அமைப்பின் புதிய இராஜதந்திர மாதிரியானது இந்தியாவின் பாதுகாப்புத் தொழில் கூட்டாண்மைகளை விரிவுபடுத்தவும், தொழில்நுட்ப நவீனமயமாக்கலை விரைவுபடுத்தவும், மேலும் பெருகிவரும் பன்முனை உலகில் ஒரு முன்னணி சக்தியாக அதன் நிலையை வலுப்படுத்தவும் முடியும்.


அத்வித்யா மதன், லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் கீழ் 15 பஞ்சாப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார், மணிப்பூரின் சுராசந்த்பூரில் டி.ஐ.ஜி.யாக 27 செக்டருக்குத் தலைமை தாங்கினார், மேலும் மேற்குப் பிராந்தியத் தலைமையகத்தில் செயல்பாட்டு தளவாடங்கள் பிரிவின் பிரிகேடியராகவும் இருந்தார். அவர் தற்போது புவிசார் அரசியல், சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வாளராக உள்ளார்.


Original articles: NATO enters a new strategic era of transformation. -Advitya Madan

Share:

செப்டம்பர் மாதம் புது தில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள் என்ன? - கண்ணல் அச்சுதன்

 'மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' (Building for Resilience, Innovation, Cooperation and Sustainability) என்ற கருப்பொருளானது, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு வலிமையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


தற்போதைய நிகழ்வு : 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், புது தில்லியில் நடைபெறவுள்ள இந்த பன்முகத்தன்மை கொண்ட நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்தியா முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இம்மாநாட்டின் போது நடைபெறும் விவாதங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். முக்கிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே, அமைச்சர்கள் அளவிலான கூட்டங்கள் மற்றும் பணிக்குழு விவாதங்கள் பல நடத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நாடுகளின் 11 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது.


18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு எப்போது நடைபெறும்?


தலைநகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் முக்கியமானவை. இந்தியா ஜனவரி 1, 2026 அன்று பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது. 2026-ம் ஆண்டின் இறுதியில் இப்பொறுப்பை சீனாவிடம் ஒப்படைக்கும். இந்தியா இதற்கு முன்பு 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இப்பொறுப்பை வகித்துள்ளது.


தற்போது பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் எவை?


பிரிக்ஸ் அமைப்பில் தற்போது 11 முழு உறுப்பினர்கள் உள்ளனர். அவை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் இந்தோனேசியா ஆகும். இது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் 2006-ம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது. பின்னர் டிசம்பர் 2010-ல் தென்னாப்பிரிக்கா இதில் இணைந்தது. 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இணைக்கப்பட்டதன் மூலம் இந்த அமைப்பு விரிவடைந்தது. இந்தோனேசியா 2025-ல் இணைந்து, இதில் சேர்ந்த மிகச் சமீபத்திய நாடாக உள்ளது. உறுப்பு நாடுகளைத் தவிர, பெலாரஸ், ​​பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய கூட்டணி நாடுகளும் இதில் உள்ளன.




நடத்தும் நாட்டின் பங்கு என்ன?


இந்த அமைப்புக்குரிய பல பொதுவான முன்னுரிமை விவகாரங்கள் குறித்து, 11 நாடுகளின் பிரதிநிதிகளுடனான கூட்டங்களை இந்தியா ஒருங்கிணைத்து வருகிறது. தலைமை வகிக்கும் நாடாக, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இக்குழுவின் உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துகளும், கவலைகளும் செவிசாய்ப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். விவாதங்களை முன்னெடுப்பது மட்டுமின்றி, உச்சிமாநாட்டின் இறுதிப் பிரகடனத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் உறுப்பினர்களிடையே இந்தியா ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும்.


இதுவரை, விண்வெளிப் பொருளாதாரம், விவசாயம், பேரிடர் தாங்கும் திறன், பெண்கள் அதிகாரமளித்தல், கலாச்சாரம் மற்றும் தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் பணிக்குழுக்களின் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதிலும் எதிர்த்துப் போராடுவதிலும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உறுப்பினர்கள் 'கவுஹாத்தி பிரகடனத்தை' (Guwahati Declaration) ஏற்றுக்கொண்டுள்ளனர்.


இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?


இந்தியாவின் தலைமைத்துவ ஆவணங்களின்படி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கூட்டுப் பொறுப்பு, நடைமுறை ஒத்துழைப்பு மற்றும் மக்கள் மைய அணுகுமுறை ஆகியவை இந்த உச்சிமாநாட்டை வழிநடத்தும் முக்கிய நெறிமுறைகளாக உள்ளன. 'மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' (Building for Resilience, Innovation, Cooperation and Sustainability) என்ற கருப்பொருள், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு வலிமையைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




இந்த உச்சிமாநாடு ஏன் உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது?


உலகின் மொத்த மக்கள்தொகையில் குறைந்தது 50 சதவீதத்தினர் பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் வசிக்கின்றனர். உலகளாவிய ஒழுங்கமைப்பில் (global order) தங்களின் வலுவான இடத்தைப் பிடிக்க முயலும் வளர்ந்துவரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளாக இந்தியா திகழ்வதால், உச்சிமாநாட்டின் போது நடைபெறும் விவாதங்கள் உலக வர்த்தகத்தின் கண்ணோட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். காலப்போக்கில் இக்குழு விரிவடைந்ததோடு, அதன் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 'உலகளாவிய தெற்கு' (Global South - வளரும் நாடுகள்) நாடுகளின் கவலைகளுக்குக் வலுவான குரல் கொடுப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.


இந்த உச்சிமாநாட்டிற்கான இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகள் என்ன?


மே 14, 2026 அன்று நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவுக்கான முன்னுரிமைக்குரிய அம்சங்களை எடுத்துரைத்தார். இதில், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல், சந்தைகளை விரிவுபடுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். விவசாயம், புத்தாக்கம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் கூட்டமைப்புகளை ஏற்படுத்துவதும் வலியுறுத்தப்பட்டது. தூய ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விவாதங்களும் செயல்திட்டத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரிக்ஸ் அமைப்பிற்குள் உள்ள பல்வேறு நலன்களுக்கு இடையே சமநிலையைப் பேணுவதில் இந்தியா எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ன?


புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் நிலவும் சூழலில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. குறிப்பாக, ஈரான் மற்றும் உக்ரைனில் நடைபெறும் போர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளைப் பாதிக்கும் வகையிலான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை இந்தியா வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தான் உறுப்பினராக உள்ள 'குவாட்' (Quad) மற்றும் ஜி20 (G20) போன்ற குழுக்களில் தனது தலைமைத்துவம் எவ்வாறு பார்க்கப்படும் என்பதையும் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வர்த்தகத்திற்குத் தேசிய நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது போன்ற விஷயங்கள் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் வரவேற்கப்படலாம் என்றாலும், ஈரான் மற்றும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா இவற்றைச் சாதகமாகப் பார்க்க வாய்ப்பில்லை.


பிரிக்ஸ் அமைப்புக்குள்ளேயேகூட, உறுப்பு நாடுகள் மிகவும் மாறுபட்ட பொருளாதார முன்னுரிமைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த நலன்கள் பெருமளவில் வேறுபடுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் துணைநிலை அதிகாரிகள் மற்றும் சிறப்புத் தூதர்களின் கூட்டத்தின்போது, ​​போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் பிரதிநிதிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன.


எதிர்பார்க்கக்கூடிய சாத்தியமான விளைவுகள் யாவை?


உலகளாவிய நிர்வாகம், பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்த பொதுவான நிலைப்பாடுகள் அடங்கிய கூட்டுப் பிரகடனம் (joint declaration) ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தித் துறையிலான உறவுகள், வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றில் புதிய முன்னெடுப்புகளையும் இக்குழு அறிவிக்கக்கூடும். மேலும், 'உலகளாவிய தெற்கு' (Global South - வளரும் நாடுகள்) நாடுகளுக்கான ஒரு சக்திவாய்ந்த அமைப்பாகப் பிரிக்ஸ் வகிக்கும் பங்கை வலுப்படுத்துவதற்கும் இந்த உச்சிமாநாடு உதவும்.


Original articles: What key issues of the BRICS Summit to be held in New Delhi in September? -Kannal Achuthan

Share:

முன்னணி இடம் : 'கேலோ இந்தியா' திட்டத்தின் (Khelo India Scheme) அடுத்த கட்டம் குறித்து . . .

 இந்தியா தனது விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.


2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் லட்சியத்திற்கு உள்ள மிகப்பெரிய தடைகளில் ஒன்று, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாதது ஆகும். இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால், பதக்கப் பட்டியலில் முதல் 10 நாடுகளுக்குள் இடம்பெற முயற்சிக்கும். இது மிகவும் சவாலான ஒரு இலக்காகும். 21-ம் நூற்றாண்டில், 2021-ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களுடன் 48-வது இடத்தைப் பிடித்ததே இந்தியாவின் சிறந்த சாதனையாக இருந்தது. அதேவேளையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களுடன் 71-வது இடத்தைப் பிடித்தது. ஒலிம்பிக் போட்டிகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் (elite group of Olympic nations) பட்டியலில் இணைய, இந்தியா சுமார் 30 முதல் 40 பதக்கங்களை வெல்ல வேண்டியுள்ளது. இதில் ஈரிலக்க எண்ணிக்கையிலான தங்கப் பதக்கங்களையும் வெல்ல வேண்டும். இந்த ஒலிம்பிக் கனவை நனவாக்க, 'கேலோ இந்தியா' (Khelo India) திட்டத்தின் புதிய கட்டத்திற்காக ₹29,054 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது முந்தைய ஒதுக்கீட்டைவிட எட்டு மடங்கு அதிகம். 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் திறமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதே இந்த லட்சியத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். தற்போது மாவட்டத்திற்கு சராசரியாக ஒன்று என்ற அளவில் (மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டவை) உள்ள கேலோ இந்தியா மையங்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான சிறப்பு மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அகாடமிகளின் எண்ணிக்கையை, சராசரியாக இரண்டு அல்லது மூன்றாக உயர்த்த இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது. பள்ளிகள் மற்றும் விளையாட்டு மன்றங்களை (sports clubs) ஈடுபடுத்துதல், திறமையான குழந்தைகளை மன்ற அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தல், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அடிமட்ட அளவிலான பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.


ஆங்கில மொழியால் ஏற்படும் தகவல் தொடர்புத் தடையை நீக்கி உள்ளூர் பயிற்சியாளர்களின் அறிவை மேம்படுத்துதல், பயிற்சியை தரப்படுத்த 'தேசிய பயிற்சியாளர் அங்கீகார வாரியம்' (National Coach Accreditation Board) அமைத்தல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் போன்ற புதிய அணுகுமுறைகள், அடிப்படை நிலையிலேயே சரியான பயிற்சியை வழங்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க, கல்வியையும் விளையாட்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் 'கேலோ இந்தியா ஃபீடர் பள்ளிகள்' (Feeder Schools) மற்றும் 'கேலோ இந்தியா உத்கிருஷ்ட வித்யாலயா' (Khelo India Utkrishta Vidyalaya) ஆகிய முன்னெடுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது 2,904 விளையாட்டு வீரர்களைக் கொண்ட 'கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள்' திட்டம் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 'வளர்ந்து வரும் கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள்' (Emerging Khelo India Athletes) திட்டம் ஆகியவற்றின் மூலம், திறமையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 28,000-ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறமையாளர்களைக் கண்டறிதல், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தரவுகளையும் பராமரிக்க விளையாட்டுச் சூழலை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலான தகவல் தொடர்பு வழிமுறையை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய கூறுகளாகும். தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கான உதவிகள் உட்பட, 2026-31 காலகட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ₹36,441 கோடியாக உள்ளது. இருப்பினும், இத்திட்டத்தை திறம்படவும் வெளிப்படையாகவும் செயல்படுத்துவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். 2036 ஒலிம்பிக் மற்றும் அதற்குப் பிந்தைய போட்டிகளைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே 'டார்கெட் ஒலிம்பிக் போடியம்' (Target Olympic Podium Scheme (TOPS)) திட்டத்தின் ஆதரவைப் பெற்றுள்ள திறமையாளர்களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது மிக முக்கியமாகும். அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இதற்கான ஒரு உடனடிச் சோதனையாக அமையும். விளையாட்டுத் துறையில் ஒரு வல்லரசாக உருவெடுக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிக்கு மற்றொரு முக்கியத் தடையாக இருப்பது, ஊக்கமருந்து பயன்பாட்டின் மையமாக (doping hub) அது அறியப்படுவதுதான். விரும்பிய முடிவுகளை அடைய, கடுமையான ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கைகள், 'ஃபிட் இந்தியா' (Fit India) இயக்கத்தின் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் அடித்தள நிலையில் விளையாட்டு மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.


Original articles: ​Top spot: On the new phase of the Khelo India Scheme.

Share: