Showing posts with label Criminal Procedure. Show all posts
Showing posts with label Criminal Procedure. Show all posts

காவல்துறை செயல்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள். -அஜய் சிங்ஹால்

 ஆங்கிலேயர் ஆட்சிக்காலச் சட்டங்கள் தொடங்கி, தற்போதைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் வரை, இந்த மாற்றங்கள் அனைத்தும் குற்ற விசாரணை, ஆதார மேலாண்மை மற்றும் பொதுமக்கள் நீதித்துறையை அணுகும் விதம் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றி அமைத்து வருகின்றன.


150 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு, ஒரு ஜனநாயக நாட்டிற்காக அல்லாமல், நாட்டைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் (Colonial laws) உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே இயங்கி வந்தது. இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code (1860)), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure (1898)) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act (1872)) ஆகியவை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடைமுறையில் இருந்தன. இருப்பினும், காலப்போக்கில் குற்றங்களின் தன்மை மாறிவிட்டது. பாரம்பரியமான குற்றங்களில் இருந்து தற்போது  இணைய மோசடி, திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகள் என குற்றங்கள் உருமாறியுள்ளன.


ஜூலை மாதம் 1-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்களுக்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா (Bharatiya Nyay Sanhita (BNS)), இந்திய தண்டனைச் சட்டம்), பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா ((Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), குற்றவியல் நடைமுறைச் சட்டம்), மற்றும் பாரதிய சக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)), இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய புதிய சட்டங்களைக் கொண்டுவர இந்தியா ஒரு முக்கிய முடிவை எடுத்தது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய குற்றவியல் சட்ட சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது.





ஹரியானா மாநிலக் காவல் துறைத் தலைவராக (DGP), இந்த மிகப்பெரிய மாற்றத்தை ஒரு நிர்வாகியாக மட்டுமல்லாமல், களத்தில் எனது குழுவினருடன் நேரடியாகப் பணியாற்றிய ஒருவனாகவும் நான் பார்த்திருக்கிறேன். புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஹரியானா மாநிலம் தற்போது முன்னணியில் உள்ளது. மேலும், இந்த மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் நான் நேரில் கண்டேன். நாங்கள் எங்களது புலனாய்வு அதிகாரிகளுக்கு மறுபயிற்சி அளித்தோம், பணி நடைமுறைகளை மாற்றினோம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டோம். இந்த மாற்றம் சவாலானதாக இருந்தது, ஆனால் இந்தச் சீர்திருத்தம் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. உதாரணத்திற்கு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு-420 என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு-318-ஆக மாறியது. அதேபோல் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு-302 என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு-101-ஆக மாறியது. முறையான கல்வியும் பயிற்சியும் குறைவாகப் பெற்ற பல புலனாய்வு அதிகாரிகள், பல ஆண்டுகளாக தாங்கள் பின்பற்றி வந்த நடைமுறைகளை மறந்து, புதிய சட்ட விதிகளை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.


இந்த மாற்றத்தின் அளவை முழுமையாகப் புரிந்துகொள்ள, முதலில் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் நீண்டகாலமாக இருந்துவரும் சவால்களையும், புதிய சட்டங்கள் அவற்றை எவ்வாறு தீர்க்க முயல்கின்றன என்பதையும் பார்ப்பது அவசியமாகும்.


முடிவற்ற காலதாமதங்களுக்குப் பதிலாக, பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல்


இந்தியாவின் மிக முக்கியமான குற்றவியல் நீதித்துறைப் பிரச்சினை, வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் தாமதம் ஆகும். தற்போது, 5.58 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஆனால், இவற்றை விசாரிப்பதற்காக வெறும் 21,285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக, நீதித்துறை தொடர்பான நடவடிக்கைகள் தாமதம் ஆகின்றன. இது பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது. புகழ்பெற்ற இந்தித் திரைப்பட வசனமான "Tarikh pe Tarikh" (வாய்தாவுக்கு மேல் வாய்தா) என்பது வெறும் சினிமா மிகைப்படுத்தல் அல்ல, அந்த வசனம் உண்மைநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.


பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டம், சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தக்கூடிய காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க முயல்கிறது. இதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விசாரணை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு, நீதிபதிகள் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தீர்ப்பை வழங்க வேண்டும். இந்தச் சட்டம் தேவையில்லாத வழக்கு ஒத்திவைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. ஒருவேளை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியும் விசாரணை தாமதமானால், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டப்பூர்வமாகத் தானாகவே பிணை (Statutory bail) பெற தகுதி கிடைத்துவிடும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


வழக்கு விவரம் சார்ந்த காலக்கெடுவை துல்லியமாகப் பின்பற்றுவதற்குத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. மின்னணு ஆதாரங்களை நிர்வகிக்கும் அமைப்பான 'e-Sakshya' போன்ற டிஜிட்டல் ஆதாரத் தளங்கள், குற்றக் காட்சிப் பதிவுகளை அவை பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் புவியியல் இருப்பிடம் ஆகிய விவரங்களுடன் உருவாக்குகின்றன. இது ஆதாரங்களின் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் பாதுகாக்கிறது, வழக்கைச் சரியாகக் கண்காணிக்க உதவுகிறது மற்றும் நீதித்துறை அமைப்பானது குறிப்பிட்ட காலத்திற்குள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்கிறது.


விசாரணைக் கைதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காணுதல்


குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகளைச் சிறையில் கழிப்பதை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த கைதிகளில் ஏறக்குறைய 76% பேரின் உண்மை நிலைமையாகும். இவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கும் 'விசாரணைக் கைதிகள்' ஆவர். இந்தியாவின் புதிய சட்டக் கட்டமைப்பு, காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிப்பதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், கைதிகளுக்கு 'இயல்புநிலை பிணை' (Default bail) வழங்கப்படலாம். இப்போது காவல் நீட்டிப்பு விசாரணைகளுக்கு (Remand hearings) பொதுவாக காணொளி காட்சிமுறை பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஒரு குற்றத்திற்குரிய அதிகபட்ச தண்டனைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை விசாரணைக் கைதி ஏற்கனவே சிறையில் கழித்திருந்தால், அவரை விடுதலை செய்வது குறித்தும் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் ஒரு மனிதனின் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதுடன், நீதிமன்றத் தாமதங்களால் அந்த உரிமை பறிபோகாமல் இருப்பதையும் உறுதி செய்கின்றன.


சாட்சி வாக்குமூலத்திலிருந்து அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வரை 


நீதிமன்றத்தில் நீங்கள் அளிக்கும் சாட்சியமும், உங்களது நினைவாற்றலும் அல்லது பாதுகாப்பும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பையே மாற்றிவிடக்கூடும் என்பதை உணர்ந்து, நீங்கள் நீதிமன்றக் கூண்டில் சாட்சியம் அளிப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். முன்பு, நீதிமன்றங்கள் வாய்மொழி சாட்சியங்களை மட்டுமே பெருமளவில் நம்பியிருந்தன. இதனால், சாட்சிகள் மிரட்டப்படும்போதோ அல்லது அவர்கள் தங்களது சாட்சியத்தை மாற்றிப் பிறழ்சாட்சியாக (Hostile witness) மாறும்போதோ, வழக்குகள் பலவீனமடையும் சூழல் இருந்தது.


புதிய சட்டங்கள் தடய அறிவியல் (Forensic) மற்றும் மின்னணு (Electronic) ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. கடுமையான குற்றங்களுக்குத் தடயவியல் விசாரணை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் இப்போது நீதிமன்றங்களில் இன்னும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விசாரணையில் அறிவியல்பூர்வமான முறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், சாட்சிகளின் மனித நினைவாற்றலை மட்டுமே நம்பியிருக்கும் நிலை குறைந்து, ஒட்டுமொத்த ஆதாரங்களும் மிகவும் வலுவடைகின்றன.


ஹரியானாவில், நடமாடும் தடய அறிவியல் குழுக்கள் நேரடியாகக் குற்றப் பின்னணி நடக்கும் இடங்களுக்கேச் சென்றடைகின்றன. குற்றக் களம் (Scene of Crime (SOC)) சார்ந்த நிபுணர்கள், யாருடைய தலையீடும் இன்றித் தனிச்சையாகச் சான்றுகளைச் சேகரிக்கின்றனர். கைரேகைகள், DNA மரபணுச் சோதனை, டிஜிட்டல் தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் அழிந்து போவதற்கு முன்பாகவே அவை பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. இது ஆதாரங்களின் நம்பகத்தன்மையை மேலும் வலுவாக்குவதோடு, நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது.

21-ஆம் நூற்றாண்டின் குற்றங்களை அடையாளம் காணுதல்


ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள், தற்கால இணையவழிக் குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்ற அமைப்புகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகள் அல்லது கும்பல் படுகொலைகள் போன்றவற்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை அல்ல. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டம் இந்த நவீனகால குற்றங்களை நேரடியாகக் கையாள்கிறது. மேலும், இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது. கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகளுக்கு எதிரான பாதுகாப்பு போன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளால் கொண்டுவரப்பட்ட முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகள் இப்போது இந்தச் சட்டத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இதனால், குடிமக்கள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், இத்தகைய உரிமைகளைச் சட்டப்படியே நேரடியாகப் பெற முடிகிறது.


முதல் தகவல் அறிக்கையிலிருந்தே எளிதாக நீதி கிடைக்கச் செய்தல்


பலர் எந்தக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்று தெரியாத குழப்பத்தினால், தங்களுக்கு நடந்த குற்றங்களைப் புகாரளிக்காமல் தவிர்த்து வந்தனர். பல ஆண்டுகளாக, எல்லை வரம்புகள் தொடர்பாகக் காவல் நிலையங்களுக்கு இடையே நிலவி வந்த எல்லைத் தகராறுகள், மக்கள் தங்களுக்குரிய நீதியைத் தேடிச் செல்வதையே முடக்கி வைத்திருந்தன.


'Zero FIR' முறை என்பது, ஒரு குற்றம் எங்கு நடந்திருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்க அனுமதிக்கிறது. 'மின்னணு முதல் தகவல் அறிக்கை' (e-FIR) முறை மூலம் மக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வழியாகப் புகார்களைப் பதிவு செய்ய முடியும். சாட்சிகளுக்கான பாதுகாப்பு, காணொளி காட்சி மூலம் சாட்சியம் அளிப்பது மற்றும் சாட்சிகளின் அடையாளத்தை ரகசியமாகப் பாதுகாப்பது போன்ற புதிய வசதிகள், மக்கள் அச்சமின்றி நீதி வழங்கும் செயல்பாட்டில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதை உறுதி செய்கின்றன.



சிறிய தவறுகளைப் பெரிய குற்றமாகக் கருதாமல் சட்டத்தை மாற்றுவதும் (Decriminalisation) இந்தச் சீர்திருத்தங்களுக்குப் பெரிதும் துணையாக நிற்கிறது. சிறிய அளவிலான குற்றங்களுக்கு 'சமூக சேவை' (Community service) செய்வதைத் தண்டனையாக வழங்குவது, ஏற்கனவே கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகளின் சுமையைக் குறைக்கிறது. மேலும், சிறிய தவறுகளைச் செய்தவர்கள்மீது வாழ்நாள் முழுக்க 'குற்றவாளி' என்ற முத்திரை குத்தப்படுவதையும் இந்த முறை தடுக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மனிதநேயமிக்க மற்றும் நவீனகாலத்திற்கு ஏற்ற ஒரு நீதித்துறையை உருவாக்க உதவுகின்றன.


ஹரியானா மாநிலம் எவ்வாறு முதலிடத்தை பிடித்தது


சட்ட சீர்திருத்தங்கள் என்பது அவை மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்போது மட்டுமே அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. ஹரியானா மாநிலம் கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி நிலவரப்படி 94.42 புள்ளிகளைப் பெற்று, புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாட்டின் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சாதனை ஏதோ பெயரளவில் மட்டும் நடந்துவிடவில்லை. இது, தொடர்ந்து ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் முதலீடு செய்ததன் விளைவாகும்.


இந்தத் தரவரிசையானது நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது: அவை நிர்வாகச் சீர்திருத்தங்கள், செயல்பாட்டுத் திறன், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் குற்றவியல் நீதி அமைப்புடன் (Interoperable Criminal Justice System (ICJS)) ஒருங்கிணைப்பு ஆகியவை ஆகும். தற்போது ஒவ்வொரு விசாரணை அதிகாரியும் இந்தப் புதிய அமைப்பின்கீழ் பணிபுரிவதோடு, இதற்கான சிறப்பு செயலியையும் (Investigating Officer Mobile Application (I.O. Mobile Application)) பயன்படுத்தி வருகின்றனர். நடமாடும் தடய அறிவியல் பிரிவுகள் (Mobile forensic units), பலப்படுத்தப்பட்ட சாட்சிகள் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கருவிகள் ஆகியவை இப்போது களத்தில் இருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு நேரடியாக உதவி புரிகின்றன.



இந்த மேம்பாடுகள் காவல் துறையின் பணிகளைத் தாண்டி பல நன்மைகளைத் தருகின்றன. மின்னணு நீதிமன்ற அழைப்பாணை (Electronic summons), டிஜிட்டல் வழக்கு மேலாண்மை மற்றும் காணொளி காட்சி மூலம் விசாரணை (Video conferencing) ஆகியவை நேரம், பணம் மற்றும் மனித உழைப்பை மிச்சப்படுத்துகின்றன. இவை காகிதப் பயன்பாட்டையும் பயணங்களையும் குறைக்கும் அதேவேளையில், செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.


ஹரியானா மாநிலத்தின் மின்னணு அபராதச் சீட்டு (e-Challan) முறை, வெறும் நான்கு மாதங்களில் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்வை 8,165 கிலோ வரை குறைத்துள்ளது. மேலும், மின்னணு நீதிமன்ற அழைப்பாணை (e-summons) மற்றும் காணொளி வாயிலாக விசாரணைகள் மூலம் ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் 26 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதிலும், காகித ஆவணங்களைக் கையாளுவதிலும் வீணான நேரம் இப்போது மிச்சப்படுத்தப்பட்டு, அந்த நேரம் குற்ற விசாரணை மற்றும் ரோந்துப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


இதில் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது


அறிவியல் பூர்வமான முறைகளும், ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணைகளும் இப்போது மிகவும் வலுவடைந்துள்ளன. காவல்துறையைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது ஒரு சாதாரண நிர்வாக சீர்திருத்தம் மட்டுமல்ல. அது அவர்களின் நெறிமுறை சார்ந்த கடமையுமாகும். மொபைல் தடயவியல் பிரிவுகளைப் (Mobile forensic units) பயன்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் ஆதாரங்கள் மிக முக்கியமானவை என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. நீதிமன்ற அழைப்பாணைகளை மின்னணு முறையில் (e-summons) அனுப்புவது சாட்சிகளின் நேரத்தை மதிக்கிறது. மேலும், DNA மரபணுச் சோதனை, குரல் மாதிரிகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளின் ஆதரவோடு மின்னணு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்வது, காவல்துறை தங்களின் வசதியைவிட உண்மைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நீதிமன்றங்களுக்குக் காட்டுகிறது.


புதிய குற்றவியல் சட்டங்கள் இதற்கான தேவையான வழிமுறைகளையும் கருவிகளையும் வழங்கியுள்ளன. இருப்பினும், இந்தச் சட்டங்கள் வெற்றிபெற வேண்டுமானால், இதில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பினரும், அதாவது காவல்துறை, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், தடய அறிவியல் ஆய்வகங்கள், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், முழு அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.


மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, அதேநேரத்தில் நீதியை வழங்குவதில் வேகமும் நியாயமும் சம அளவில் சீராக இருக்கக்கூடிய ஒரு நீதித்துறையை உருவாக்குவதே இறுதி இலக்காகும். நமக்குத் தேவை விரைவான வழக்கு விசாரணைகள் மட்டுமல்ல, அவை நம் நாட்டின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எந்தவொரு பயமும் இல்லாமல், முழு நம்பிக்கையோடு நீதிமன்றத்தை நாடி நீதிபெறும் நிலை உருவாக வேண்டும்.


அஜய் சிங்ஹால், ஹரியானா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் ஆவார்.


Original article : New criminal laws overhauling policing and public trust. -Ajay Singhal

Share:

குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை வலுப்படுத்த குஜராத் காவல்துறையின் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி எவ்வாறு உதவுகிறது?. -பிரெண்டன் தாபி



NARIT-AI :  Narcotics Analysis & RAG-based Investigation Tool -  போதைப்பொருள் பகுப்பாய்வு மற்றும் RAG அடிப்படையிலான விசாரணை கருவி.


சிக்கலான போதைப்பொருள் வழக்குகளைக் கையாள்வதில் சட்ட அமலாக்க முகமைகளுக்கு (law enforcement agencies) நேரடிப் பகுப்பாய்வு ஆதரவை வழங்குவதற்காக, நாரிட்-ஏஐ (NARIT-AI) சட்ட விதிகள், வழக்குச் சட்டங்கள் மற்றும் புலனாய்வு நடைமுறைகளை ஒருங்கிணைக்கும்.


கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, 2020-ம் ஆண்டு முதல் குஜராத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ​​தண்டனையை உறுதி செய்வதற்காக, போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (Narcotics Drugs and Psychotropic Substances (NDPS)) கீழ் கடுமையான வழக்குகளைப் பதிவு செய்ய காவல்துறைக்கு உதவும் வகையில், குஜராத் காவல்துறை செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஒரு கருவியை உருவாக்கியுள்ளது.


இந்த மாதத் தொடக்கத்தில், குஜராத் அரசு போதைப்பொருள் பகுப்பாய்வு மற்றும் மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் (RAG) அடிப்படையிலான விசாரணைக் கருவியை (NARIT-AI) அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டக் (NDPS) கட்டமைப்பின் கீழ் சிக்கலான போதைப்பொருள் வழக்குகளைக் கையாள்வதில் சட்ட அமலாக்க முகமைகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவி, சட்ட விதிகள், வழக்குச் சட்டங்கள் மற்றும் விசாரணை நடைமுறைகளை ஒருங்கிணைத்து, புலனாய்வு அதிகாரிகளுக்கு (IO) நேரடிப் பகுப்பாய்வு ஆதரவை வழங்கும்.


இந்தக் கருவியின் உருவாக்கத்திற்கு என்ன வழிவகுத்தது? மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அதிக குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர இது காவல்துறைக்கு எவ்வாறு உதவும்? தெரிந்துகொள்ள வேண்டியவை:


செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பு


நாரிட்-ஏஐ (NARIT-AI), மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் (RAG) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் (RAG) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டமைப்பாகும். இது, பதில்களை உருவாக்குவதற்கு முன்பு நம்பகமான அறிவுத் தளங்களைக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு பெரிய மொழி மாதிரியின் (LLM) துல்லியத்தை மேம்படுத்துகிறது. இந்த விஷயத்தில், அந்த நம்பகமான அறிவுத் தளங்கள் என்பவை இந்தியாவில் உள்ள போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான சட்டங்கள், சுற்றறிக்கைகள், வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பயன்படுத்துகிறது.


2026 ஜனவரி முதல், இதன் மேம்பாட்டுப் பணிகள் மூன்று மாதங்களில் நிறைவடைந்தன. நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் இந்தியாவின் உச்சநீதிமன்றம், பல்வேறு உயர்நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய சரியான நடைமுறைகள் மற்றும் அதற்கான தொடர்புடைய விவரங்களைப் பெறுவதற்காக, குஜராத் முழுவதிலும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாகுபடிப் பயிர்களில் போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் பயிரிடுதல் தொடர்பான பறிமுதல் நிகழ்வுகளின் உண்மையான வழக்குகள், மீதான கள சோதனைகளுக்குக் கடைசி மாதம் செலவிடப்பட்டது.


நாரிட்-ஏஐ (NARIT-AI) கருவியானது, வதோதராவில் உள்ள அரசு ரயில்வே காவல்துறையில் (மேற்கு இரயில்வே) தற்போது பணியாற்றும் காவல் கண்காணிப்பாளரான (SP) அபய் சோனியால் உருவாக்கப்பட்டது. குஜராத் காவல்துறை, அமெரிக்காவின் சியாட்டிலை தலைமையிடமாகக் கொண்டதாகக் கூறப்படும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிர்வாகப் பயிற்சி புத்தொழில் நிறுவனமான கிராடியான்டே கிரியேட்டிவ் சர்வீசஸ் உடன் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியது. இருப்பினும், இந்நிறுவனம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாகவும், அதன் சேவையகங்கள் இந்தியாவில் அமைந்துள்ளதாகவும் அபய் சோனி கூறினார்.


அபய் சோனியின் கூற்றுப்படி, “போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் நடைபெறும் எந்தவொரு விசாரணையிலும் மிக முக்கியமான விஷயம் ‘செயல்முறைக்கே முன்னுரிமை’ (primacy of procedure) அளிப்பதாகும். உங்களிடம் வலுவான அல்லது மறுக்க முடியாத சான்றுகள் இருந்தாலும், ஒரே ஒரு படியில்கூட, எங்கேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டால், சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்கே அளிக்கப்படுகிறது. சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டிய பல வழக்குகளில், மக்கள் எளிதாகப் பிணை பெறுவதையும், குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவதையும்கூட கண்டிருக்கிறோம்.”


ஒவ்வொரு மாவட்டத்திலும், பெரும்பாலும் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்ட (NDPS) வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற சிறப்புச் செயல்பாட்டுக் குழுக்களுடன் (special operations groups) இணைக்கப்பட்ட, ஆவணப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை ஊழியர்களான “எழுத்தர்களின்” எண்ணிக்கை குறைவாக இருந்ததால், தாமதங்களும் பெருகிவரும் வழக்குகளும் அதிகரிக்கத் தொடங்கின. இவை சரிசெய்யப்பட வேண்டிய தெளிவான நிர்வாகக் குறைபாடுகளாக இருந்தன.


காவல்துறையில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது குறித்து 2025 டிசம்பரில்தான் கலந்துகொண்ட ஒரு அமர்வால் உத்வேகம் பெற்றதாக சோனி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸிடம் கூறினார். அங்கு, டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், கல்வித்துறையில் மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கத்தின் (RAG) நடைமுறைப் பயன்பாடு குறித்த ஒரு செயல்முறையின் ஆய்வை முன்வைத்தார். அந்தப் பேராசிரியர், ஒரு ஆசிரியர் தணிக்கையைக் காட்டினார் என்றும், அதில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி அளித்த கருத்துகள் மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்க (RAG) அமைப்பில் உள்ளீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆசிரியர் குறித்த தொகுக்கப்பட்ட அறிக்கை பெறப்பட்டது என்றும், அதன் அடிப்படையில் நிர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் சோனி கூறினார்.


இது எப்படி வேலை செய்கிறது?


பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் இணையம் முழுவதும் அலசி ஆராயும் மற்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் போலல்லாமல், மீட்டெடுப்பு-மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் (RAG) ஆனது, கொடுக்கப்பட்ட வினாவிற்குத் தொடர்புடைய தீர்வுகளை உருவாக்குவதற்காக, தனக்கு அளிக்கப்படும் தரவுகளின் ஒரு குறிப்பிட்ட தரவுத்தளத்தை மட்டுமே தேடுகிறது. நாரிட்-ஏஐ (NARIT-AI) உருவாக்குநர்கள், போதை மருந்துகளை நிர்வகிக்கும் சட்டங்கள் மற்றும் பல்வேறு தீர்ப்புகள் குறித்த தரவுகளைக் கொண்டு இதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பதில்களைப் பெறுவதற்காக, குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டு ஒரு முதல் தகவல் அறிக்கையை இதில் எளிமையாகப் பதிவேற்ற முடியும் என்றும் கூறுகின்றனர்.


"நாங்கள் இந்த கட்டுப்படுத்தப்பட்ட தரவு நூலகத்தைப் பயன்படுத்தி, ஒரு மூடிய சூழலில் இந்த மாதிரியைப் பயிற்றுவித்துள்ளோம்," என்று சோனி கூறினார். "நாரிட்-ஏஐ (NARIT-AI) இந்தியச் சூழலில் தற்போதைய, திருத்தப்பட்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் மட்டுமே கருத்தில் கொள்வது ஒருபுறம் இருக்க, அது கற்பனைகளையும் நீக்குகிறது. அதாவது, அது தானாகவே மேற்கோள்களை உருவாக்குவதில்லை. மாறாக, தனக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட தூய உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே பதில்களை உருவாக்குகிறது," என்று அவர் மேலும் கூறினார்.


குறிப்பாக, சட்டச் சூழலில் பயன்படுத்தப்பட்டபோது, ​​மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பிற கல்விசார் கட்டுரைகளுக்குப் போலியான அல்லது இல்லாத மேற்கோள்களை உருவாக்கியது மட்டுமல்லாமல், ஒருபோதும் வழங்கப்படாத தீர்ப்புகளையும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கிய நிகழ்வுகள் உள்ளன. மார்ச் மாதம் நடத்தப்பட்ட களச் சோதனைகளின்போது, ​​அந்த மூடிய அமைப்பு அதன் தரவுத்தளத்தில் உள்ள நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் மற்றும் தீர்ப்புகளுடன் இறுதி முடிவுகள் ஒத்துப்போவதை உறுதி செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த அமைப்பைச் சோதித்துப் பார்ப்பதற்காக அவர்கள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தையும் அணுகியுள்ளனர்.


நாரிட்-ஏஐ (NARIT-AI), அமலாக்கத் தரத்திலான இரட்டை அடுக்கு குறியாக்கம் (enforcement-grade double-layer encryption) மற்றும் சாண்ட்பாக்ஸ் அணுகுமுறையைப் (sandbox approach) பயன்படுத்துகிறது. மேலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளின்படியும் இது சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்த சமீபத்திய குஜராத் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, இந்தச் செயலியானது குஜராத் காவல்துறைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பொதுமக்களுக்கு அணுக முடியாததாக உள்ளது.


இந்தக் கருவி ஒரு நிலையான அமைப்பு அல்ல. சட்டங்கள் திருத்தப்படும்போதோ அல்லது பழைய சுற்றறிக்கைகளுக்குப் பதிலாக புதியவை வெளியிடப்படும்போதோ, தரவுத்தளமும் புதுப்பிக்கப்பட்டு, சமீபத்திய ஆவணங்களைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும்.


இந்த அமைப்பு பயன்படுத்த எளிதானது என்றும், ஒரு முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவேற்றி, மூன்று முறை கிளிக் செய்தால் மட்டும் போதும். குறிப்பிட்ட வழக்கின் தன்மைக்கேற்ப உருவாக்கப்படும் அறிவுறுத்தலின் பேரில் பதிலைப் பெறலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உருவாக்கத்தில் உள்ள இந்தத் தயாரிப்பின் விவரங்கள், பதிவேற்றப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் புலனாய்வு அதிகாரி (IO) தேவையான வெளியீட்டின் அளவைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.


வலுவான ஆதாரங்கள் உள்ள வழக்குகளில்கூட, வழிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படாத காரணத்தால் ஏற்படும் நடைமுறைத் தவறுகள், ஒருவரை விடுதலை செய்ய வழிவகுக்கும் என்பதை நேரடியாகக் கவனித்த சோனி, போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்ட (NDPS) வழக்குகளில் புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவும் ஒரு மூடிய அமைப்பு கருவியானது, விசாரணைகளை நடைமுறைகளுக்கு இணக்கமாக மாற்றுவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றங்களில் எதிர் தரப்பு வழக்கறிஞர்களால் பயன்படுத்தப்படக்கூடிய வழக்கின் மீதான பலவீனங்களையும் அவர்களுக்கு சுட்டிக் காட்ட உதவும் என்று கூறினார். இது, அரசு வழக்கறிஞர் தலையிடுவதற்கு முன்பே, நாரிட்-ஏஐ (NARIT-AI) ஐ ஒரு சட்ட உதவியாளராகவும் செயல்பட வைத்தது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, நாரிட்-ஏஐ (NARIT-AI) அமைப்பானது, போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் (NDPS), மூன்று குற்றவியல் சட்டங்கள் மற்றும் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ஒரு “விசாரணைத் திட்டம்”, அதனை நிறைவு செய்வதற்கான ஒரு “காலக்கெடு”, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, ஒரு “ஆதார சரிபார்ப்புப் பட்டியல்”, ஒரு வரைவு “குற்றப்பத்திரிகை”, சாத்தியமான “வழக்குத் தரப்பின் பலவீனங்கள்” மற்றும் “எதிர் தரப்பு மறுப்புகள்”, அத்துடன் ஒரு “நீதிமன்றச் சுருக்கம்” ஆகியவற்றையும் வழங்க இயலும்.


ஒரு குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கைக்கு (FIR) தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விருப்பங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரி காண முடியும் என்று சோனி தெரிவித்தார். இதன் மூலம் கிடைக்கும் முடிவு, அந்த குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே உரியதாக இருக்கும். வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், ஒரு அதிகாரி எதிர்கொள்ளக்கூடிய ஒவ்வொரு வகை வழக்கும், ஏதேனும் ஒரு சமயத்தில் ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கக்கூடும். அதனால்தான் இது சாத்தியமாகிறது.”


குஜராத் காவல்துறைக்கும் கிராடியான்டே நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, நாரிட்-ஏஐ (NARIT-AI) அறிமுகப்படுத்தப்படும். அதே எண்ணிக்கையிலான பிராந்தியங்களில் உள்ள சுமார் ஐந்து குழுக்களுக்கு இந்த அமைப்பைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும், சுற்றியுள்ள அதிகார வரம்புகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தங்கள் கேள்விகளை அங்கு அனுப்பி முடிவுகளைப் பெறலாம் என்றும் அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.


நிறுவனரீதியான குறைபாடுகள்


கடந்த மாதம் குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2023-24 நிதியாண்டுக்கான இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (CAG) அறிக்கை, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சேமிக்க முறையான சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தாதற்காகவும், போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி போதைப்பொருட்களை விரைவாக அப்புறப்படுத்தாததற்காகவும் மாநில உள்துறையைக் கடுமையாகச் சாடியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வழக்கில், 114 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா எலிகளால் அழிக்கப்பட்டதாக குஜராத் காவல்துறை தலைமை கணக்குத் தணிக்கையாளரிடம் தெரிவித்த ஒரு வழக்கத்தை மேற்கோள் காட்டி, இந்தக் குறைபாடுகள் "பல நிலைகளில் பலவீனமான நிறுவனக் கட்டுப்பாடுகளையும் மேற்பார்வைக் கண்காணிப்பின்மையையும் எடுத்துக்காட்டுகின்றன" என்று அந்தத் தணிக்கை அறிக்கை குறிப்பிட்டது.


மேலும், கடந்த ஜூலை மாதம் மக்களவையில் நட்சத்திரக் குறியிடப்பட்ட கேள்விக்கு (starred question) அளித்த பதிலில், 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின்கீழ் (NDPS), பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தண்டனை விகிதம் குறித்த விவரங்களை மத்திய அரசு வழங்கியது. குஜராத்தில், 2020-ல் 308 வழக்குகள் பதிவாகியிருந்தன. மேலும், தண்டனை விகிதம் 44.4%-ஆக இருந்தது. 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில், வழக்குகளின் எண்ணிக்கை முறையே 461 மற்றும் 508-ஆக இருந்த நிலையில், தண்டனை விகிதங்கள் முறையே 33.3% மற்றும் 25%-ஆக இருந்தன.



Original Link: How Gujarat Police’s new AI tool aims to make drug-related cases stronger to ensure convictions?.


Share:

இந்தியாவில் குற்ற ஒப்புதல் பேச்சுவார்த்தை முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? -சி. ராஜ் குமார்

முக்கிய அம்சங்கள்:


• இத்தாலியக் குற்றவியல் அறிஞர் சேசரே பெக்காரியா (Cesare Beccaria), தனது புகழ்பெற்ற நூலான ‘On Crimes and Punishments’ என்பதில், ஒரு குற்றத்தைத் தடுப்பதற்குத் கடுமையான தண்டனையைவிட, அந்தத் தண்டனை 'நிச்சயம் கிடைக்கும்' என்ற உறுதியே சிறந்தது என்று வாதிட்டார். தண்டனையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் விதிக்கப்படும் மிகக் கடுமையான தண்டனையைவிட, சிறியதாக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற உறுதியான தண்டனையே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. ஒரு வலுவான நீதி அமைப்பு என்பது வெறும் தண்டனையை மட்டும் சார்ந்தது அல்ல; மாறாக, அது தண்டனையின் நிச்சயம், அதன் சீரான தன்மை மற்றும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதைப் பொறுத்தே அமைகிறது.


• பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீண்டகாலம் நீடிக்கும் சட்டப் போராட்டங்கள் இரண்டாவது மன உளைச்சலாக மாறக்கூடும் என்கின்றனர். விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு, வழக்கு விசாரணையில் ஏற்படும் தாமதத்தால், அவர்கள் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே பல ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சொத்துத் தகராறு அல்லது விவாகரத்து போன்ற உரிமையியல் வழக்குகளில், இழுபறியான சட்டப் போராட்டங்கள் மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்துகின்றன.


• நீதிமன்றத் தாமதங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றன. மந்தமான நீதி வழங்கல் முறை காரணமாக, வணிக ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது தொழில்துறைக்கான செலவுகளை அதிகரிப்பதோடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் குறைக்கிறது. ஒரு நாட்டின் முதலீட்டுச் சூழல் சாதகமாக இல்லை என்ற எதிர்மறையான செய்தியையும் இது உலகிற்குத் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, தாமதமான நீதித்துறை செயல்பாடுகள் சாதாரண குடிமக்களுக்குச் சட்டத்தின் மீதுள்ள மரியாதையைக் குறைத்து, நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய நீதிமன்றங்களில் இன்னும் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதில் சுமார் 4.76 கோடி வழக்குகள் மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்களிலும், 63 லட்சத்திற்கும் அதிகமானவை உயர்நீதிமன்றங்களிலும், 92,000-க்கும் மேற்பட்டவை உச்சநீதிமன்றத்திலும் உள்ளன. நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில் 80%-க்கும் அதிகமானவை மாவட்ட நீதிமன்றங்களிலேயே தேங்கியுள்ளன. இங்குதான் பெரும்பாலான மக்கள் நீதித் துறையை நேரடியாக அணுகுகிறார்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த வழக்குத் தேக்கம் உச்சத்தை எட்டியது. இ-நீதிமன்றத் திட்டம் (e-Courts Project), விரைவு நீதிமன்றங்கள் (Fast-track Courts) மற்றும் லோக் அதாலத் (Lok Adalats) போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவே தெரிவிக்கின்றனர்.


• இந்தியக் குற்றவியல் நீதி அமைப்பில் குற்ற ஒப்புதல் பேச்சுவார்த்தை (Plea Bargaining) என்பது ஒப்பீட்டளவில் ஒரு புதிய கருத்தாக்கம் ஆகும். முன்னதாக, இத்தகைய பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் சமரசத் தீர்வுகள் நீதி நெறிமுறையற்றவை என்றும் இது மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) போன்ற செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் மக்கள் நம்பினர்.


• இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure (CrPC)) 2005-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம், 'குற்ற ஒப்புதல் பேச்சுவார்த்தை' (Plea Bargaining) எனும் முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இம்முறையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, தண்டனையைக் குறைத்துக் கொள்ளவோ அல்லது குறைவான குற்றச்சாட்டுகளின்கீழ் விசாரணை மேற்கொள்ளவோ வழிவகை செய்யப்படுகிறது.


• பல நாடுகளில், குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையைக் குறைக்கும் நடைமுறை நீதித்துறையின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இது அநீதியான ஒன்றாகக் கருதப்படுவதில்லை. இந்தியா இத்தகைய உலகளாவிய நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வதோடு, அவற்றை நமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நிறுவனக் கட்டமைப்புக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

Original link:

When was plea bargaining introduced in India?


Share: