காஷ்மீர் குறித்த தீர்மானம் 47: ஐக்கிய நாடுகள் சபையில் (UN) இந்தியா 'அதிகார அரசியலை' எதிர்கொண்ட தருணம். -யாஷீ

 ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 47 (UN Resolution 47), ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சென்று, அதனை ஒரு சர்வதேச விவகாரமாக மாற்றியதற்காக ஜவஹர்லால் நேரு அன்றிலிருந்து இன்று வரை விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்தியா ஏன் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது மற்றும் அங்கு என்ன நடந்தது?


78 ஆண்டுகளுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீர் மோதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை, "இந்தியா-பாகிஸ்தான் விவகாரம்" என்று அழைக்கப்படும் தீர்மானம் 47-ஐ (Resolution 47) ஏற்றுக்கொண்டது. போர் நடந்து கொண்டிருந்த சூழலில் இந்தியா இந்தப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்ற போதிலும், ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் இந்தியா எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்திருந்தது.


அப்போதிருந்து, காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றதற்காகவும், அதை ஒரு "சர்வதேசப் பிரச்சினையாக" மாற்றியதற்காகவும் நேருவின் அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி, 'X' தளத்தில் வெளியிட்ட கருத்தில், நேருவின் இந்த முடிவே காஷ்மீர் விவகாரம் எழுபது ஆண்டுகளாகத் தொடரக் காரணமாகிவிட்டது என்று கூறியுள்ளது. தெளிவான மற்றும் உறுதியான தீர்வுக்குப் பதிலாக, இந்த முடிவு நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளுக்கும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் மற்றும் ராஜதந்திரச் சிக்கல்களுக்கும் வழிவகுத்ததாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை இந்தியா எந்தச் சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கொண்டு சென்றது? அங்கு என்ன நடந்தது, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 47-வது தீர்மானம் (UN Resolution 47) என்றால் என்ன?



பிரிவினை, போர், பொது வாக்கெடுப்பு


இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்த ஜம்மு-காஷ்மீர் பகுதியின் இந்து மன்னரான மகாராஜா ஹரி சிங், இரு நாடுகளுடனும் இணைய விரும்பவில்லை. அவர் தனது தேசத்தை ஒரு நடுநிலையான நாடாக, அதாவது "கிழக்கின் சுவிட்சர்லாந்து" (Switzerland of the East) போல சுதந்திரமாக வைத்திருக்க விரும்பினார்.


இரண்டே மாதங்களில், அதாவது அக்டோபர் மாதம் 1947-ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் ஆதரவோடும் ஆயுதங்களோடும் வந்த பழங்குடியினப் போராளிகள் (பாகிஸ்தான் இதை மறுத்த போதிலும்), வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் வழியாக அந்தப் பகுதிக்குள் நுழைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரி சிங், இந்தியாவின் உதவியைக் கோரினார். அவர் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணையச் சம்மதித்த பின்னரே, இந்தியா அவருக்கு உதவ ஒப்புக்கொண்டது.


வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஏ.ஜி. நூரானி, தனது 'The Kashmir Dispute' என்ற புத்தகத்தில், காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் அவர்கள் இந்தியாவோடு இணைந்த பிறகு, மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் ஹரி சிங், ‘இந்தியாவின் உதவியை நாடுவது தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆனால், எனது மாநிலம் இந்தியாவுடன் இணையாத வரை இந்தியாவால் எனக்கு ராணுவ உதவியை அனுப்ப முடியாது. எனவே, இந்தியாவுடன் இணைய நான் முடிவு செய்து, அதற்கான அதிகாரப்பூர்வ இணைப்பு ஆவணத்தை அனுப்புகிறேன். மேலும், தனது நாட்டு மக்களைத் தாக்குதல்காரர்களிடம் கைவிடுவதற்குப் பதிலாக, இந்தியாவுடன் இணைவது மட்டுமே ஒரே வழி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மவுண்ட்பேட்டன் பிரபு தனது பதிலில், ஒரு பகுதி நாட்டோடு இணைவதில் சர்ச்சை ஏற்படும்போது, அந்தப் பகுதியின் மக்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், காஷ்மீரில் அமைதி திரும்பிய பிறகு மற்றும் ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, அந்த மாநிலம் இந்தியாவுடனேயே நீடிக்க வேண்டுமா என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


நேரு மற்றும் வல்லபாய் படேல் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுக்கும், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு 'வாக்கெடுப்பு' (Plebiscite) என்பது மிக முக்கியமானதாக இருந்தது. காஷ்மீர் மக்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுப்பது, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவை விட்டுப் பிரிய விரும்புகின்றன என்ற பாகிஸ்தானின் வாதத்தை முறியடிக்கும் என்று அவர்கள் கருதினர். அதேபோல, இஸ்லாமிய ஆட்சியாளரால் ஆளப்பட்ட, இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகத் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைந்தபோது, பிப்ரவரி மாதம் 1948-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, அந்தப் பிரச்சினைக்கு இந்தியாவிற்கு ஆதரவான ஒரு தெளிவான தீர்வைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.


காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையை ஈடுபடுத்துகிறது


காஷ்மீர் போர்க்களத்தில் இந்தியப் படைகள் பெரும் முன்னேற்றம் கண்டன. குறிப்பாக திராஸ் (Dras), கார்கில் (Kargil) மற்றும் பூஞ்ச் (Poonch) அருகே உள்ள மலைப்பகுதிகளை மீண்டும் கைப்பற்றின. இருப்பினும், போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது, மேலும் இது பஞ்சாப் உள்ளிட்ட பகுதிக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவியதாகவும் கூறப்படுகிறது.


இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லுமாறு மவுண்ட்பேட்டன் பரிந்துரைத்தார். பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லியும் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்ப வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். வரலாற்றாசிரியர் அலெக்ஸ் வான் துன்செல்மேன், தனது 'Indian Summer' என்கிற புத்தகத்தில் அட்லியின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளார். அதாவது, பாகிஸ்தானுக்குள் நுழைய தங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருப்பதாக இந்தியா நம்புவதைக் கண்டு தான் மிகுந்த கவலையடைந்ததாக அட்லி குறிப்பிட்டிருந்தார்.


இந்தச் சூழலில், ஊடுருவல்காரர்களை வெளியேற்றும்படி பாகிஸ்தானைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு எளிய கோரிக்கையுடன், இந்தியா ஐக்கிய நாடுகள் சபையை (UN) அணுக முடிவு செய்தது. 


பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் (UN Security Council) இந்தியா முன்வைத்த கோரிக்கையைப் பற்றி நேரு விளக்கினார். பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்த கோரிக்கைகள் பின்வருமாறு: (1) ஜம்மு-காஷ்மீர் மீதான ஊடுருவலில் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் (ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள்) ஈடுபடுவதையோ அல்லது ஆதரவளிப்பதையோ நிறுத்த வேண்டும்; (2) பாகிஸ்தான் குடிமக்கள் இந்தப் போரில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள வேண்டும்; மற்றும் (3) ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தான் நிலப்பரப்பைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும், அதோடு போரை நீட்டிக்கச் செய்யும் ராணுவ தளவாடங்கள் அல்லது இதர உதவிகள் அவர்களுக்குக் கிடைப்பதையும் நிறுத்த வேண்டும். பாதுகாப்பு சபையிடம் இந்தியாவின் முறையீடு இந்தத் தற்காலிகப் புள்ளிகளுடன் மட்டுமே தொடர்புடையது என்பதை நேரு தெளிவுபடுத்தினார்.


இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையில் உண்மையில் நடந்தது, எதிர்பார்த்ததைவிட வேறுவிதமாக அமைந்தது.


ஆங்கிலேயர்களால் ஏமாற்றப்பட்டவர்கள்


பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை, நாடு பிரிவினையின் போது ஏற்பட்ட ஒரு பெரிய சிக்கலின் பகுதியாகவே சித்தரித்தது. இந்தியா இஸ்லாமியர்களைத் தவறாக நடத்துவதாகக் குற்றம் சாட்டிய பாகிஸ்தான், அங்கு "துன்பப்படும்" தனது சக இஸ்லாமிய சகோதரர்களுக்கு உதவுவதற்காகவே ஊடுருவல்காரர்கள் காஷ்மீருக்குள் நுழைந்ததாகக் கூறியது.


பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கைகளுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஆதரவு அளித்தன. இதற்கு முக்கியக் காரணம், சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான போரில் இந்தியாவைவிட பாகிஸ்தான் ஒரு சிறந்த கூட்டாளியாகத் தெரிந்ததே ஆகும். மேலும், வரலாற்றாசிரியர் டேன்சல்மேன் குறிப்பிடுவது போல, அந்தச் சமயத்தில் இஸ்ரேல் நாடு உருவாகிக் கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்களின் நலன்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் செயல்படுவதாகத் தெரிந்தால், பாலஸ்தீன விவகாரத்தைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரும்பிவிடும் என்று இங்கிலாந்து பிரதமர் அட்லி  அஞ்சினார்.

வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா தனது 'India After Gandhi' என்ற புத்தகத்தில், 1948-ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடந்த ஐநா அமர்வுகள் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்: பாதுகாப்புச் சபையில் தனது நிகழ்ச்சி நிரலில் இருந்த ‘ஜம்மு-காஷ்மீர் விவகாரம்’ என்பதை ‘இந்தியா-பாகிஸ்தான் விவகாரம்’ என மாற்றியபோது, இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத் தோல்வியைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 


நேரு மிகுந்த ஏமாற்றமடைந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, 1948-ஆம் ஆண்டில் ஜம்முவில் ஆற்றிய உரையில் அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்: காஷ்மீருக்கு உதவ இந்தியா படைகளை அனுப்பியிருந்தாலும், அங்கு ஒரு அமைதியான மற்றும் நீடித்த தீர்வே இந்தியாவுக்குத் தேவை என்று கூறினார். காஷ்மீரில் மக்கள் நீண்டகாலம் துன்பப்படுவதையோ அல்லது பாகிஸ்தானுடன் முழுமையான போர் ஏற்படுவதையோ இந்தியா விரும்பவில்லை. எனவே, ஆழமாகச் சிந்தித்து, இந்தச் சிக்கலை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இருப்பினும், அந்தப் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காண்பதற்குப் பதிலாக, உலக வல்லரசு நாடுகள் அதைத் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டன. இது இந்தியாவிற்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான (UN) இந்தியத் தூதுக்குழுவை வழிநடத்திய என். கோபாலசாமி அய்யங்காருக்கு நேரு ஒரு செய்தி அனுப்பினார். அதில், பிரிட்டனுக்கான இந்திய உயர் தூதராக இருந்த கிருஷ்ணா மேனன், கிளமெண்ட் அட்லீ மற்றும் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் ஆகியோரை மீண்டும் சந்தித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். லண்டனிலிருந்து வந்ததாகக் கூறப்படும் அறிவுறுத்தல்களுக்கும், நியூயார்க்கில் பிலிப் நோயல்-பேக்கர் (Philip Noël-Baker) உண்மையில் பின்பற்றும் கொள்கைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து நேரு மிகுந்த கவலை கொண்டுள்ளதாக மேனன் அவர்களிடம் விளக்கினார். நோயல்-பேக்கர் தனக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளைச் சரியாகப் பின்பற்றாததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று மேனன் கருதினார்.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பிரிட்டிஷ் தூதுக்குழுவை வழிநடத்திய நோயல்-பேக்கர் (Noël-Baker), இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு பெரும் இனப்படுகொலையைத் தடுக்க வெளிநாடுகளின் தலையீடு அவசியம் என்று நம்பினார்.


"இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம்; பாதுகாப்புச் சபையின் முன்மொழியப்பட்ட நடவடிக்கை" என்ற தலைப்பில் ஜனவரி மாதம் 1948-ஆம் ஆண்டில் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று ஒரு முக்கியத் தகவலைக் குறிப்பிடுகிறது. அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் சிக்கலால் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக நோயல்-பேக்கர் (Noël-Baker) எச்சரித்திருந்தார். இரு தரப்பினருமே பின்வாங்கத் தயாராக இல்லாத நிலையில், ஒரு சர்வதேச அதிகார அமைப்பால் மட்டுமே போரைத் தடுக்க முடியும் என்றும் குறிபிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 47


ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UN Security Council) தீர்மானங்கள் குறித்த இணையதளத்தில், தீர்மானம் 47 (Resolution 47) பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் சேர வேண்டுமா அல்லது பாகிஸ்தானுடன் சேர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க, ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பு நடத்துவதற்குத் தேவையான சூழலை உருவாக்கவும், போரை நிறுத்தவும் இந்தத் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது. மேலும், அமைதியை நிலைநாட்டப் பல்வேறு நடவடிக்கைகளையும் இது பரிந்துரைக்கிறது; அதாவது, அந்தப் பகுதியைச் சேராத போராளிகளை வெளியேற்றுவது, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான குறைந்தபட்ச அளவை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியப் படைகளை படிப்படியாகக் குறைப்பது, மற்றும் மக்களை மிரட்டல் அல்லது வற்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது போன்றவை இதில் அடங்கும்.


பாகிஸ்தான் தனது படைகளை முழுமையாகத் திரும்பப் பெறவில்லை என்று இந்தியா வாதிட்டதால், அந்தப் பொது வாக்கெடுப்பு ஒருபோதும் நடைபெறவில்லை.


1954-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கம்காட்டி ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், ஜவஹர்லால் நேரு பொது வாக்கெடுப்பு நடத்துவதை தீவிரமாக எதிர்த்தார். அதே சமயம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஜனநாயக நடைமுறைகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தது. 1949-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்பில் சட்டப்பிரிவு-370 (Article 370) சேர்க்கப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவு அந்தப் பகுதிக்கு இந்தியாவிற்குள் ஒரு தனி அங்கீகாரத்தை வழங்கியது. பின்னர், ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி, 2019-ஆம் ஆண்டு இந்த சட்டப்பிரிவு-370 நீக்கப்பட்டது.


Original link:

Resolution 47 on Kashmir: When India ran into ‘power politics’ at the UN.


Share:

இந்தியாவின் வடிவமைக்கப்பட்ட அரிசி அறிமுகம் செய்யப்பட்டது. -குஷ்பூ குமாரி

வடிவமைக்கப்பட்ட அரிசி (Designer Rice) என்பது அதிக புரதச்சத்தும் மற்றும் குறைந்த சர்க்கரை குறியீடும் (Low Glycemic Index) கொண்ட ஒரு புதிய வகை அரிசியாகும்; இது நாம் உணவிலிருந்து ஆற்றலைப் பெறும் முறையை மேம்படுத்த உதவும். இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? சர்க்கரை குறியீடு (Glycemic Index (GI)) மற்றும் சர்க்கரை சுமை (Glycemic Load (GL)) ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன? 


திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் - தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் (Council of Scientific and Industrial Research (CSIR) - (National Institute for Interdisciplinary Science and Technology (NIIST)) சேர்ந்த விஞ்ஞானிகள், “வடிவமைக்கப்பட்ட அரிசி” (Designer Rice) எனப்படும் ஒரு சிறப்பு வகை அரிசியை உருவாக்கியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின்கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின்கீழ் (CSIR) உள்ள ஒரு முன்னணி ஆராய்ச்சி ஆய்வகம்தான் இந்த தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIIST) ஆகும்.


இந்த அரிசி அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற “CSIR-NIIST Tech Connect: From Lab to Market” என்ற நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பம் ‘Tata Consumer Products Limited’ மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘SS Soul Foods’ ஆகிய நிறுவனங்களுக்கு வணிகரீதியாக மாற்றப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. விஞ்ஞானிகள் இந்த வடிவமைக்கப்பட்ட அரிசியை (Designer rice) உருவாக்க மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. மாறாக, உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தையே (Food-processing technology) பயன்படுத்தியுள்ளனர். இது நமது அடிப்படை உணவான அரிசியின் கட்டமைப்பில் செய்யப்பட்ட ஒரு அடிப்படையான மறுவடிவம் ஆகும்.

2. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் - தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CSIR-NIIST) இயக்குநரும், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருமான டாக்டர் சி. ஆனந்தராமகிருஷ்ணன் இதைப் பற்றி விளக்கமளிக்கையில், "ஒரு கட்டிடத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பாரம்பரிய அரிசி என்பது பெரும்பாலும் 'சர்க்கரை செங்கற்களால்' (மாவுச்சத்து) ஆன ஒரு வீட்டைப் போன்றது என்றால், எங்கள் குழு அந்த வீட்டைப் பிரித்தெடுத்து, அதில் இருந்த அதிகப்படியான மாவுச்சத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 'புரதத் தூண்களை' (Protein beams) கொண்டு அதை மாற்றியமைத்துள்ளது," என்று கூறினார்.


3. அந்தக் குழுவினர், உடைந்த அரிசியை அரைத்து மாவாக்கி, அதனுடன் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்களைக் கலந்து, மீண்டும் அரிசி வடிவிலான தானியங்களாக மாற்றினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட அரிசி, பார்ப்பதற்கும், தொடுவதற்கும், சுவைப்பதற்கும் சாதாரண அரிசி போலவே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.


வடிவமைக்கப்பட்ட அரிசியின் நன்மைகள்


* குறைந்த சர்க்கரை குறியீடு (Low GI): இந்த வடிவமைக்கப்பட்ட அரிசி (Designer Rice) மிகவும் பயனுள்ளது; ஏனெனில் இதன் சர்க்கரை குறியீடு (GI) அளவானது 55-க்கும் குறைவாக உள்ளது. இது உடலில் ஆற்றலை மிக மெதுவாக வெளியிடுகிறது என்றும் இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் ரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தவிர்பபதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


* புரதச்சத்தின் ஆற்றல் மையம்: சாதாரண அரிசியில் 6 முதல் 8 சதவீதம் மட்டுமே புரதச்சத்து இருக்கும் நிலையில், இந்த வகை அரிசியில் 20 சதவீதத்திற்கும் அதிகமான புரதச்சத்து நிறைந்துள்ளது.


* வலுவூட்டப்பட்ட பாதுகாப்பு: இரும்புச்சத்து, போலிக் அமிலம் (Folic acid) மற்றும் வைட்டமின் பி12 (Vitamin B12) ஆகியவற்றை நேரடியாக அரிசியின் உட்பகுதியிலேயே சேர்ப்பதன் மூலம், இரத்த சோகை (anaemia) ஏற்படுவதற்கான ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைக்கிறது.


4. இந்தியாவில் நிலவும் முரண்பாடான ஆரோக்கிய நெருக்கடியைச் சுட்டிக்காட்டுதல். விஞ்ஞானிகள் இதை “மறைமுகப் பசி” (Hidden hunger) எனப்படும் சவாலை எதிர்கொள்வதற்கான தீர்வுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். டாக்டர் சுதீப் கர்மாக்கர், இந்த கண்டுபிடிப்பு ஒரு “சுழற்சி பொருளாதாரத்தின்” (Circular economy) சிறந்த முன்னுதாரணம் என்றும் குறிப்பிட்டார். அரிசி ஆலைகளில் வெளியேற்றப்படும் உபரிப் பொருளான உடைந்த அரிசியைப் பயன்படுத்துவதன் மூலம், இதுவரை சரியாகப் பயன்படுத்தப்படாத ஒரு வளத்திற்கு, உழவர்கள் கூடுதல் மதிப்பு சேர்க்கும் வாய்ப்பை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.


சர்க்கரை குறியீடு (GI)


5. சர்க்கரை குறியீடு (GI) என்பது ஒரு உணவு எவ்வளவு விரைவாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (குளுக்கோஸ்) அளவை உயர்த்துகிறது என்பதை அளவிடும் முறையாகும். கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) கொண்ட உணவுகளுக்கு மட்டுமே இந்தச் சர்க்கரை குறியீட்டு அளவு உண்டு. உணவுகள், இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு அதிகரிக்கின்றன என்பதைப் பொறுத்து, அவை 0 முதல் 100 வரை வகைப்படுத்தப்படுகின்றன. 

6. பொதுவாக, குறைந்த சர்க்கரை குறியீடு (Low GI) கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை மெதுவாகவே அதிகரிக்கின்றன. முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் போன்றவை குறைந்த சர்க்கரை குறியீடு மதிப்பைக் கொண்ட உணவுகள் ஆகும். இந்த உணவுகள் உடல் எடையைக் குறைக்கவும், நீண்டநேரம் பசி எடுக்காமல் தடுக்கவும் உதவுகின்றன. மேலும், இவை இன்சுலின் உணர்திறனை (Insulin sensitivity) மேம்படுத்தி, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.


இரத்தச் சர்க்கரைச் சுமை (GL)


7. இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியியல் நிபுணரான (Endocrinologist) டாக்டர் சதுர்வேதி கூறுகையில், இரத்தச் சர்க்கரைச் சுமை (GL) என்பது மிகவும் நடைமுறைக்கு ஏற்ற ஒரு அளவீடு ஆகும். ஏனெனில், இது நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டின் (மாவுச்சத்து) வகை மற்றும் அதன் அளவு ஆகிய இரண்டையுமே கணக்கில் கொள்கிறது. ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என்று மட்டும் பார்க்காமல், நாம் உணவை உண்ணும்போது அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எந்த அளவுக்கு உண்மையாகப் பாதிக்கிறது என்பதை  இந்த அளவீடு காட்டுகிறது.


8. இரத்தச் சர்க்கரைச் சுமை (Glycemic Load) என்பது ஒரு உணவின் சர்க்கரை குறியீட்டையும் (Glycemic Index), அந்த உணவில் உள்ள கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) அளவையும் கணக்கில் கொள்கிறது. ஒரு உணவின் சர்க்கரை குறியீடு (GI) மதிப்பையும், அதில் உள்ள கார்போஹைட்ரேட் அளவையும் பெருக்கி, வரும் விடையை 100-ஆல் வகுப்பதன் மூலம் இரத்தச் சர்க்கரைச் சுமை (GL) அளவு கணக்கிடப்படுகிறது. இதன்படி, அதிக சர்க்கரை குறியீடு மதிப்பைக் கொண்டிருந்தாலும், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட ஒரு உணவு 'குறைந்த இரத்தச் சர்க்கரைச் சுமை' மதிப்பைப் பெறலாம்; அதேபோல் குறைந்த சர்க்கரை குறியீடு கொண்ட உணவு 'அதிக இரத்தச் சர்க்கரைச் சுமை' மதிப்பையும் பெறலாம்.




இந்தியாவின் அரிசி உற்பத்தி குறித்து


9. 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா சுமார் 150 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தியுடன், சீனாவை (145.28 மில்லியன் டன்) முந்தி, 2024–25 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.


10. நெல் சாகுபடிக்கு வெப்பமான மற்றும் ஈரப்பதமான தட்பவெப்பநிலை, அதிகப்படியான நீர் மற்றும் ஆற்றுப் படிவுகளால் உருவான வண்டல் மண் (alluvial soil) ஆகியவை அவசியமாகும். ஆறுகளின் வெள்ளச் சமவெளிகள் நெல் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற, அதிக விளைச்சல் தரும் பகுதிகளாக விளங்குகின்றன.


11. நெற்பயிர் 20°C முதல் 37.5°C வரையிலான வெப்பநிலையில் மிகச்சிறப்பாக வளர்கிறது. இது காரீஃப் (தென்மேற்குப் பருவமழை காலம்) மற்றும் ரபி (குளிர்காலமும் வசந்த காலமும்) ஆகிய இரு காலங்களிலும் பயிரிடப்படுகிறது. மேலும், இது பல்வேறுபட்ட நிலப்பரப்புகளிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது.


செறிவூட்டப்பட்ட அரிசி


1. 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மத்திய அரசு பிரதமர் ஏழைகள் நல உணவுத் திட்டம் ( Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY)) மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர திட்டங்களின்கீழ் வழங்கப்படும் அரிசியில் சத்துக்களைச் சேர்க்கும் "செறிவூட்டப்பட்ட அரிசி" முறையைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தது. 


2. மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகக்குறைந்த பாதிப்புடன், பொதுச் சுகாதார நன்மைகளை வழங்குவதற்காகவும், உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவதற்காகவும், அந்த உணவில் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்துக்களின் அளவைத் திட்டமிட்டு அதிகரிப்பதே உணவுச் செறிவூட்டல் முறை என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)), வரையறுக்கிறது


3. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (National Family Health Survey (NFHS-5)), பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நிலவும் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாடும், பெண்களிடையே பரவலாகக் காணப்படும் இரத்த சோகை காரணமாக, 'உணவு செறிவூட்டல்' ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. அரிசியில் நுண் ஊட்டச்சத்துக்களைச் (Micronutrients) சேர்ப்பதன் மூலம், ஏழை எளிய மக்களின் உணவுத் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.


4. அரிசியில் நுண் ஊட்டச்சத்துக்களைச் சேர்ப்பதற்கு பூசுதல் (coating), தூவுதல் (dusting) மற்றும் வெளியேற்றுதல் (extrusion) போன்ற பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில், 'வெளியேற்றுதல்' (extrusion) முறையே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது; இதில் ஒரு ‘extruder’ இயந்திரத்தைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் (Fortified Rice Kernels (FRK)) தயாரிக்கப்படுகின்றன.


5. உலர்ந்த அரிசி மாவுடன் மிகச்சிறிய அளவிலான ஊட்டச்சத்துக்கள் கலக்கப்பட்டு, அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இந்தக் கலவையானது வெப்பமூட்டும் வசதி கொண்ட 'Twin-screw extruder' என்ற இயந்திரத்தின் வழியாக செலுத்தப்படுகிறது. இதன்மூலம் சாதாரண அரிசியின் வடிவிலேயே செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த அரிசி மணிகள் பார்ப்பதற்கு "சாதாரண அரிசியைப் போலவே" இருக்க வேண்டும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.


6. இந்த அரிசி மணிகள் உலர்த்தப்பட்டு, குளிரூட்டப்பட்டு, பின்னர் சிப்பம் (Packaged) செய்யப்படுகின்றன. இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் (FRK) குறைந்தது 12 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த மணிகளை சாதாரண அரிசியுடன் கலந்து 'செறிவூட்டப்பட்ட அரிசி' தயாரிக்கப்படுகிறது. மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 1 கிலோ சாதாரண அரிசிக்கு 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் சேர்க்கப்பட வேண்டும்.


7. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின்படி, 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து (28–42.5 மி.கி), போலிக் அமிலம் (75–125 மைக்ரோகிராம்) மற்றும் வைட்டமின் பி12 (0.75–1.25 மைக்ரோகிராம்) ஆகியவை அடங்கியுள்ளன.


8. ஒரு கிலோ அரிசியுடன் துத்தநாகம் (Zinc - 10 மி.கி முதல் 15 மி.கி), வைட்டமின் A (500-750 மைக்ரோகிராம் RE), வைட்டமின் B-1 (1 மி.கி முதல் 1.5 மி.கி), வைட்டமின் B-2 (1.25 மி.கி முதல் 1.75 மி.கி), வைட்டமின் B-3 (12.5 மி.கி முதல் 20 மி.கி) மற்றும் வைட்டமின் B-6 (1.5 மி.கி முதல் 2.5 மி.கி) ஆகிய சத்துக்களையும் சேர்த்து செறிவூட்டப்படலாம் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

Original link:

India’s Designer Rice launched.


Share:

இந்தியா இனி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு அல்ல. ஆனால், தரவரிசையைவிட உள்நாட்டு சீர்திருத்தத் திட்டங்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

குறிப்பாக மின்சாரம் மற்றும் உரங்கள் போன்ற அரசியல் ரீதியாக அதிக சர்ச்சைக்குரிய துறைகளில், சீர்திருத்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியுடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவரிசையில் இந்தியா ஆறாவது இடத்திற்குச் சரிந்துள்ளது. தற்போதைய அமெரிக்க டாலர் மதிப்பிலான பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானும் இங்கிலாந்தும் இந்தியாவை முந்தியுள்ளன. 2026-ம் ஆண்டிற்கு, இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பை சர்வதேச நாணய நிதியம் 4.15 டிரில்லியன் டாலராக மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் மதிப்பான 3.92 டிரில்லியன் டாலரிலிருந்து அதிகரித்துள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்தின் பொருளாதாரத்தின் அளவு 4.27 டிரில்லியன் டாலராகவும், ஜப்பானின் பொருளாதாரத்தின் அளவு 4.38 டிரில்லியன் டாலராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை இந்தியாவை விட சற்றே அதிகமாகும்.


இந்தத் தரவரிசைகளில் இந்தியா பின்தங்கியதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கிடும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம். புதிய மதிப்பீட்டு முறையின்கீழ் (2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு), அரசாங்கம் பல்வேறு வழிமுறை மாற்றங்களைச் செய்து, புதிய கணக்கீட்டு முறையையும் அறிமுகப்படுத்தியது. பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்பட்ட புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள், பொருளாதாரத்தின் மிகவும் துல்லியமான ஒரு நிலையை வழங்குகின்றன. இருப்பினும், முந்தைய மதிப்பீட்டுத் தொடர், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சுமார் மூன்று முதல் நான்கு சதவீதம் வரை கூடுதலாக மதிப்பீடு செய்திருந்ததும் இந்தத் திருத்தத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 2025-26-ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.357 டிரில்லியனிலிருந்து ரூ.345 டிரில்லியனாக மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இரண்டாவது காரணம் நாணய மாற்று விகிதம் (exchange rate) ஆகும். சர்வதேச நாணய நிதியம் (IMF) பொருளாதாரங்களை அமெரிக்க டாலர் அடிப்படையில் ஒப்பிடுவதால், அமெரிக்க டாலருக்கு எதிரான எந்தவொரு உள்நாட்டு நாணயத்தின் மாற்று விகிதமும் ஒரு முக்கியக் காரணியாகிறது. கடந்த ஆண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் கிட்டத்தட்ட 10 சதவீதம் பலவீனமடைந்துள்ளது. முதலில் அமெரிக்க வரிகள் விதிக்கப்பட்டதாலும், பின்னர், ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற சூழலே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. பெரும்பாலான மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரே உண்மையில் பலவீனமடைந்திருந்த ஒரு காலகட்டத்தில் இது நிகழ்ந்திருப்பது, இந்தப் பலவீனத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. இதன் ஒட்டுமொத்த விளைவாக, டாலர் மதிப்பில் கணக்கிடும்போது, ​​ஏற்கனவே ரூபாய் மதிப்பில் பின்தங்கியுள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்தைவிட மேலும் பின்தங்கியுள்ளது.


இந்த பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், 2027-ல் இந்தியா இங்கிலாந்து மற்றும் ஜப்பானை முந்தி, பின்னர் 2031-ல் ஜெர்மனியை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இருப்பினும், இது உள்நாட்டு சீர்திருத்தத் திட்டங்களை, குறிப்பாக மின்சாரம் மற்றும் உரங்கள் போன்ற அரசியல்ரீதியாக அதிக சர்ச்சைக்குரிய துறைகளில், தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தைக் குறைத்துவிடக் கூடாது. கோவிட் பெருந்தொற்று முதல் உக்ரைன் மற்றும் ஈரானில் நடந்த போர்கள் வரை, இந்திய மற்றும் உலகப் பொருளாதாரம் சமீபத்தில் சந்தித்த தொடர்ச்சியான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, கொள்கை வகுப்பாளர்கள் இதுபோன்ற அபாயங்களைத் தங்கள் உத்திகளில் கணக்கில் எடுத்துக்கொள்வது விவேகமானதாக இருக்கும்.

Original link:

India is no longer the fourth-largest economy in the world. But domestic reform agenda matters more than ranking.


Share:

இந்திய இரயில்வே: பழமையான காலனித்துவ அடையாளத்திலிருந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வலிமையான இயந்திரமாக உருவெடுத்துள்ளது. -கண்ணன் கே

இந்திய இரயில்வேயின் உருமாற்றம் இரண்டு வழிகளில் நிகழ்ந்து வருகிறது. முதலாவது, பயணிகள் அனுபவத்தில் ஏற்படும் ஒரு புரட்சி; இரண்டாவது, சரக்குப் போக்குவரத்து மற்றும் தொழில்துறை திறனின் நவீனமயமாக்கலாகும். இந்தியாவின் மிகப் பழமையான உள்கட்டமைப்பான இந்திய இரயில்வே, தொடர்ந்து ஒரு வளர்ச்சியின் வலிமைமிக்க இயந்திரமாகத் திகழ்வதை, இதுபோன்ற நடவடிக்கைகள் எவ்வாறு உறுதி செய்கின்றன?


நாட்டின் மிகவும் பிரபலமான ரயில் வழித்தடங்களில் ஒன்றான ஹவுரா-சென்னை வழித்தடத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், பாலசோரிலிருந்து பிரம்மபூர் வரை ஒடிசாவின் கடலோரப் பகுதி வழியாக நான்கு வழித்தடங்களை அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னெடுப்புகள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, ஒடிசாவை தேசிய சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


பயணிகளின் அனுபவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துடன் சேர்த்து, முக்கிய வழித்தடங்களில் நெரிசலைக் குறைப்பதற்கும் சரக்கு போக்குவரத்துப் பாதைகளை வலுப்படுத்துவதற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம், இந்திய ரயில்வேக்குள் நிகழும் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காட்டுகிறது. இரயில்வே கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்தும் போக்குவரத்து மற்றும் செயல்பாட்டுத் தடைகள் எவை, மேலும் தற்போதைய நவீனமயமாக்கல் செயல்முறை அவற்றை எவ்வாறு தீர்க்க முயல்கிறது?


செயல்பாட்டுத் தடைகளைச் சமாளிப்பதற்கான உத்தி


பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் முயற்சிகளின் தொடர்ச்சியாக, 'வந்தே பாரத்' மற்றும் அதிவேக ரயில் (High-Speed Rail (HSR)) போன்ற  முயற்சிகளின்  மூலமாக இந்திய ரயில்வே பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. 'Make in India'  முயற்சிகளின்  மூலமாக, நவீன, வசதியான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ரயில் பயணத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக  இது போன்றச் சேவைகள் அமைந்திருந்தாலும், நீண்டகாலமாக நிலவிவரும் தளவாடம் சார்ந்த வரம்புகளையும் பலவீனமான  மற்றும் பழமையான ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கான  முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.


கடினமான மற்றும் மெதுவாகச் செல்லும் சரக்கு ரயில்களால், ரயில்வே வழித்தடங்கள் கடுமையான நெரிசலை எதிர்கொள்கின்றன. எனவே, இந்திய ரயில்வே வணிகத்தை மேம்படுத்துவதற்காக, மொத்த சரக்குகள் மட்டுமின்றி, சாலை வழியாகக் கொண்டு செல்லப்படும் பொருட்களில் கவனம் செலுத்தி, தனது சேவைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று இரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.


இந்தப் பின்னணியில், இந்திய ரயில்வேயின் தற்போதைய மாற்றமானது, மூன்று முக்கிய உத்திகளின் மூலம் இதற்குத் தீர்வு காண முயல்கிறது:


1. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (Dedicated Freight Corridors (DFCs)): சரக்குப் போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு இரயில் பாதைகளான பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாடு முழுவதும் பொருட்கள்  கொண்டு செல்லப்படும் விதத்தை  மாற்றியமைத்து வருகின்றன. ரயில் பாதைகளை விடுவிப்பதோடு, இந்த வழித்தடங்கள் சரக்குப் போக்குவரத்தின் செலவையும் நேரத்தையும் குறைக்கவும் உதவுகின்றன.


2. கவச் 4.0 (Kavach 4.0): இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு (Automatic Train Protection) அமைப்பாகும். ரயில் விபத்துகளைத் தடுக்கவும், அதிக நடமாட்டம் உள்ள பாதைகளில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை உறுதி செய்யவும் இது நாடு முழுவதும் நிறுவப்பட்டு வருகிறது.


3. நிகர-பூஜ்ஜிய (Net-zero) மற்றும் தன்னிறைவு பெற்ற எதிர்காலம்: பசுமை ஆற்றலை நோக்கிய ஒரு மாற்றம் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, தன்னிறைவு பெற்ற எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான தற்சார்பு திறன்.


இவை ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்வோம்.


சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள், தளவாடத் துறையில் எப்படி ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன?


இந்திய ரயில்வே தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, மெதுவாகச் செல்லும் சரக்கு ரயில்களும், அதிவேகப் பயணிகள் ரயில்களும் ஒரே தண்டவாளத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறையையே பின்பற்றி வருகிறது. முந்தைய ஆண்டுகளில் ரயில்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இந்த முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.


ஆனால் இன்று, இது ஒரு சிக்கலான நிலையை உருவாக்கியுள்ளது.  பயணிகள் ரயில்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் தாமதமடைகின்றன. அதேசமயம், கனரக சரக்கு ரயில்களின் போக்குவரத்து காரணமாக, ‘வந்தே பாரத்’ போன்ற அதிவேக ரயில்களின் வேகமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

சரக்கு ரயில்களின் பிரத்யேகப் பயன்பாட்டிற்காக சரக்கு நெடுஞ்சாலைகளை (Cargo Highways) உருவாக்குவதன் மூலம், பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (Dedicated Freight Corridor (DFCs))  பிரச்சினையைத் தீர்க்க முயல்கின்றன. 1,506 கி.மீ நீளமுள்ள மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடம் (Western Dedicated Freight Corridor (WDFC)) மார்ச் 2026-ல் நிறைவடைய உள்ளது. மேலும், இது இந்தச் சவாலை எதிர்கொள்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.


மேற்கு மற்றும் கிழக்கு (1,337 கி.மீ) பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், இந்திய இரயில்வே தனது தண்டவாளங்களில் அதிவேகப் பயணத்திற்கான கூடுதல் இடவசதியை உருவாக்க முடியும். இந்த வழித்தடங்கள் சரக்கு ரயில்களின் வேகத்தை தற்போதைய சராசரியான 25 கி.மீலிருந்து 75 முதல் 100 கி.மீ வரை உயர்த்தும். இதன் மூலம் அழுகும் பொருட்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த மூலப்பொருட்களை மிக வேகமாகப் கொண்டு செல்ல முடியும் என்கின்றனர்.


முக்கியமாக, சரக்குப் போக்குவரத்தின் பெரும்பகுதியை இந்த வழித்தடங்களுக்கு மாற்றுவது, பயணிகள் ரயில்களுக்கான தற்போதைய தண்டவாளங்களின் நெரிசலைக் குறைக்கும். இந்த வழித்தடங்கள் மூலம் தண்டவாளங்களில் இடவசதி ஏற்படுத்தப்படாவிட்டால், அதிவேகப் பயணிகள் ரயில் என்ற இந்திய ரயில்வேயின் இலக்கு சாத்தியமற்றதாகவே இருக்கும்.


மேலும், தேசிய தளவாடக் கொள்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக இருக்கும் தளவாடச் செலவுகளை, சர்வதேச அளவிலான 8 சதவீதத்திற்கு குறைக்கும் இலக்கை அடைவதற்கு இந்த வழித்தடங்கள் மிக முக்கியமானவையாக இருக்கும். இந்தச் செலவைக் குறைப்பதன் மூலம் கிடைக்கும் கணிசமான சேமிப்புத் தொகை, நுகர்வோருக்குப் பயனாகச் சென்றடையும் அல்லது உள்கட்டமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மீண்டும் முதலீடு செய்யப்படும்.





இறுதி தூர இணைப்பைச் சரிசெய்தல்


மேலும், சரக்கு ரயில் பாதைகளின் நவீனமயமாக்கல் என்பது பிரத்யேகப் பாதைகளைத் தாண்டியும் விரிவடைகிறது. பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டத்தின்கீழ், சரக்கு போக்குவரத்தின் “இறுதி தூர” இணைப்பை (last mile connectivity) மேம்படுத்த, கதி சக்தி சரக்கு முனையங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இவை, ரயில்  வழிதடங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் ஒருங்கிணைக்கும் நவீன பல்முனைப் போக்குவரத்து மையங்களாகும். சரக்குப் போக்குவரத்தை ரயில் பாதைகளில் மட்டுமல்லாமல், முழு விநியோகச் சங்கிலியிலும் சரக்குப் போக்குவரத்தை வேகப்படுத்துகின்றன. இந்த ஒருங்கிணைப்பு, Make in India' உற்பத்தி இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியமானது.


 இதுபோன்ற போக்குவரத்து மையங்களைத் தொழிற்பேட்டைகளுக்கு உள்ளேயோ அல்லது அருகிலோ அமைப்பது, சரக்கு அனுப்பப்பட்டதிலிருந்து அது இறுதியாக விநியோகிக்கப்படும் கால அளவைக் கணிசமாகக் குறைக்கும். இதன்மூலம், உற்பத்திச் செலவு குறைந்ததாகவும், காலவரையறைக்குட்பட்டதாகவும், ஏற்றுமதிக்குத்  ஏற்றதாகவும் மாறும்.


வெறும் சரக்குகளின் எடையை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், வேகம் மற்றும் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்திய ரயில்வேயின் இந்த மாற்றம், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதைக் காட்டுகிறது.


கவச் மற்றும் அதனை தாண்டிய  பாதுகாப்பு கவசம்


நவீன ரயில்வே அமைப்பில் பயணிகள் மற்றும் சரக்கு பாதுகாப்பை உறுதிசெய்வது மிக அவசியமானது. வரலாற்றுரீதியாக, இந்திய ரயில்வே பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ரயில் ஓட்டுநர்களின் விழிப்புணர்வைக் கண்காணிக்கும் கைமுறை சிக்னல் முறைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளை (Vigilance Control Devices (VCDs)) சார்ந்திருந்தனர். இருப்பினும், அதிக நெரிசல் கொண்ட ரயில்வே வழித்தடங்களில், மனிதத் தவறுகளால் ஏற்படும் அபாயங்களை இத்தகைய அமைப்புகளால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.


இதற்குத் தீர்வு காணும் வகையில், இந்திய ரயில்வே 2020-ஆம் ஆண்டில் 'கவச்' (Kavach) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பினால் (Research Designs & Standards Organisation (RDSO)) உருவாக்கப்பட்ட 'கவச்', விபத்து இல்லாத நிலையை அடையும் இலக்கை ஏற்படுத்துவதற்கான ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.


இதன் சமீபத்திய பதிப்பான கவச் 4.0, சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையத்தின்படி (International Electrotechnical Commission (IEC)), உலகின் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரமான பாதுகாப்பு ஒருமைப்பாட்டு நிலை 4-யைப் (Safety Integrity Level (SIL-4)) பூர்த்தி செய்கிறது.


இது ரயில் நிலையங்கள், ரயில் என்ஜின்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு அருகிலுள்ள உபகரணங்களுக்கு இடையே தொடர்ச்சியான தகவல் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் செயல் முறையில் உள்ளது. உதாரணமாக, ஒரு என்ஜின் ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறினாலோ அல்லது சிக்னல் பிழைகள் காரணமாக இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்துவிட்டாலோ, 'கவச்'  அமைப்பானது தானாகவே கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு பிரேக் போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆபத்தான நிலையில் சிக்னலை மீறிச் செல்வது (Signal Passing at Danger (SPAD)) மற்றும் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் நிலை தடுக்கப்படுகிறது.


பாதுகாப்பு மட்டுமின்றி, கவச் தண்டவாளப் பரப்பை மேலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் உதவுகிறது. ஒவ்வொரு ரயிலின் இருப்பிடம் மற்றும் வேகம் குறித்த தகவல்களை வழங்கும் ஒரு தானியங்கி அமைப்பைப் பயன்படுத்துவதால், பாதுகாப்பு அபாயங்கள் ஏதுமின்றி இரண்டு ரயில்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம், புதிய தண்டவாளங்களை அமைப்பதற்கான முதலீட்டுத் தேவையைத் தற்காலிகமாகக் குறைத்து, இருக்கும் தண்டவாளங்களிலேயே கூடுதல் இரயில்களை இயக்க இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.

பசுமை ஆற்றல் மற்றும்  தற்சார்புத் திறன்


நவீனமயமாக்கல் இயக்கத்தின் மூன்றாவது தூண், பசுமை ஆற்றலை நோக்கிய மாற்றம் மற்றும் மேம்பட்ட தற்சார்புத் திறன் ஆகும். இந்திய ரயில்வே, தனது அகல இருப்புப்பாதை கட்டமைப்புகளை முழுமையாக மின்மயமாக்குவதன் மூலமும், இருப்புப்பாதை   நிலையங்களின் கூரைகள் முழுவதும் பெரிய அளவில் சூரிய மின்தகடுகளை நிறுவுவதன் மூலமும், 2030-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்திய நிலையை அடைய ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.


இந்த மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இறக்குமதி செய்யப்படும் டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம், ரயில்வேயானது இறக்குமதி சார்புநிலையையும், உலகளாவிய எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கிறது. மேலும், 'பாரம்பரியத்திற்கான ஹைட்ரஜன்'  முயற்சியின் ஒரு பகுதியாக, மலைப்பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளில் ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்களை இயக்கவும் திட்டங்கள் உள்ளன. இது, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதிலும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளிலும் ரயில்வே துறையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.


நிலைத்தன்மையுடன், இந்திய ரயில்வே உள்நாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் மற்றும் கவச் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தளங்களின் உள்நாட்டு மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவை தற்சார்பை நோக்கிய ஒரு மாற்றத்தின்  எடுத்துக்காட்டுகளாகும்.

இது 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் ஒரு பகுதியாக, இத்தகைய தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. இந்திய ரயில்வே, ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் நிலையிலிருந்து, தற்போது வளர்ந்துவரும் நாடுகளுக்கு ரயில்வே உள்கட்டமைப்பை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மாறுவது, அதன் பயணத்தில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்கின்றனர்.




இந்திய இரயில்வே துறையை மறுசீரமைப்பதை நோக்கி


இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் என்பது வெறும் ரயில்களையும் ரயில் நிலையங்களையும் புதுப்பிப்பது மட்டுமல்ல. இது நாட்டின் ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பையே மாற்றி அமைக்கும் ஒரு மாபெரும் மறுசீரமைப்பு நடவடிக்கையாகும். பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (DFCs) மூலம் சரக்கு ரயில்களையும் பயணிகள் ரயில்களையும் தனித்தனியாகப் பிரிப்பது, கவாச் 4.0 (Kavach 4.0) போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம், காலனித்துவ காலத்து அடையாளமாக இருந்த இந்திய ரயில்வே, தற்போது வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் "இரும்பு முதுகெலும்பாக" மாறி வருகிறது.


இந்த மாற்றம் இரண்டு தளங்களில் நடைபெற்று வருகிறது. முதலாவது, வேகம், வசதிகள் மற்றும் மொத்தப் பயணத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தில் ஒரு புரட்சியை உருவாக்குகிறது. இரண்டாவது வெளிப்படையாக தெரியாததாக இருந்தாலும், சரக்கு போக்குவரத்தையும் தொழில்துறை செயல்திறனையும் நவீனமயமாக்குவது ஆகும்.


இந்த நடவடிக்கைகளின் மூலம், இந்தியா 2047-ஆம் ஆண்டை நோக்கிப் பயணிக்கும்போது, நாட்டின் மிகத்தொன்மையான உள்கட்டமைப்புகள்கூட இந்தியாவின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு வலிமையான இயந்திரமாகத் தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்படுகிறது. மேலும், இது தடையற்ற, பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்து வசதிகளின் மூலம் தேசத்தை ஒன்றிணைக்கிறது.

Original link:

Indian Railways: From an aging colonial relic to a powerful engine of growth.


Share:

பஹல்காம் தாக்குதல் ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு அமைப்பில் ஒரு தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியது எப்படி? - தீப்திமான் திவாரி

ஜம்மு & காஷ்மீரின் பாதுகாப்பு அமைப்புக்கு, ஏப்ரல் 22 துயரச் சம்பவம் ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு முன்பு ஒருபோதும் சுற்றுலாப் பயணிகள் இவ்வளவு பெரிய அளவில் குறிவைக்கப்பட்டதில்லை. இது, அனுமானங்களையும், பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவதையும் மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தியது.


ஓராண்டுக்கு முன்பு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரைச் சவாரிகளால் மட்டுமே கலைக்கப்பட்டிருந்த பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளிகளின் அமைதி, தானியங்கித் துப்பாக்கிச் சூட்டினால் சிதைக்கப்பட்டது. ஏப்ரல் 22, 2025 அன்று, மூன்று பயங்கரவாதிகள் மரத்திலிருந்து வெளிப்பட்டு, அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேரைக் கொன்றனர். ஜம்மு & காஷ்மீரின் பாதுகாப்பு அமைப்புக்கு, இந்தத் தாக்குதல் ஒரு துயரம் மட்டுமல்ல, அது ஒரு அமைப்புரீதியான அதிர்ச்சியாகவும் இருந்தது. இதற்கு முன்பு ஒருபோதும் சுற்றுலாப் பயணிகள் இவ்வளவு பெரிய அளவில் குறிவைக்கப்பட்டதில்லை. இது, அனுமானங்களையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தியது.


பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், பஹல்காம் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது முன்னதாக, நகர்ப்புறங்களில் உள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினையாற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது. இப்போது, கவனம் மாறியுள்ளது. பாதுகாப்பு அமைப்பு மிகவும் பரவலாகவும், இது உளவுத் தகவல்களால் இயக்கப்படுகிறது. இந்த வலைப்பின்னல், உயரமான மலைப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதையும், உள்ளூர் வலையமைப்புகளை ஒருங்கிணைப்பதையும், மேலும் கண்காணிப்பு மற்றும் துல்லியமான செயல்பாடுகள் அதிகமாகச் சார்ந்திருப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த பாதுகாப்பு வலைப்பின்னல் தன்னை மாற்றியமைத்துக் கொண்ட போதிலும், பஹல்காம் சம்பவத்தால் வெளிப்பட்ட குறைபாடுகள், பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நடக்கும் உரையாடல்களைத் தொடர்ந்து வடிவமைத்து வருகின்றன.


இடைவெளிகளை அங்கீகரித்தல்


பஹல்காம் தாக்குதல், கடந்த ஆண்டுகளில் நிர்வாகக் கொள்கையை வழிநடத்தி வந்த “இயல்பு நிலை” என்ற கருத்தாக்கத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தியது. காலப்போக்கில், நகர்ப்புற வன்முறையில் ஏற்பட்ட தொடர்ச்சியான சரிவும், சுற்றுலாவில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பும், பிர் பஞ்சால் மலைத்தொடர் முழுவதும் உள்ள தொலைதூர, உயரமான இடங்களைத் திறப்பதை ஊக்குவித்திருந்தன. பெருந்தொற்றுக்குப் பிறகு அணுகக்கூடியதாக மாற்றப்பட்ட சுமார் 75 இடங்களில், சிந்தன் டாப், பூட்டா பத்ரி மற்றும் பல இடங்களும் இதில் அடங்கும்.


"இந்த இடங்கள் பிரமிக்க வைக்கும் அழகுடையவையாக இருந்தபோதிலும், இராஜதந்திரரீதியாக அபாயகரமானவையாக இருந்தன. இந்தப் பகுதிகளில் தீவிரவாதிகளின் இருப்பு இடையிடையே இருந்தபோதிலும் ஒருபோதும் முழுமையாக மறையாத, வரலாற்றுரீதியான ஊடுருவல் வழித்தடங்களில் அல்லது அதற்கு அருகில் அமைந்திருந்தன" என்று ஒரு பாதுகாப்பு அமைப்பு அதிகாரி கூறினார்.


தீவிரவாதக் குழுக்கள், நகரங்களில் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் அல்லது பாதுகாப்புப் படைகளுடனான நேரடி மோதல்கள் போன்ற தங்களுக்குப் பழக்கமான வழிமுறைகளையே தொடரும் என்பதே பாதுகாப்பு அமைப்பின் அனுமானமாக இருந்து வந்தது. ஒப்பீட்டளவில் பாதுகாப்பற்ற புல்வெளிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் முக்கிய இலக்குகளாக மாறக்கூடும் என்ற சாத்தியக்கூறு முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


உண்மையில், இந்த இடங்களில் பலவும், பாதுகாக்கப்படுவதைவிட வேகமாகத் திறக்கப்பட்ட “மென்மையான எல்லைகளாக” (soft frontiers) செயல்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக 50-க்கும் மேற்பட்ட அத்தகைய இடங்கள் மூடப்பட்டதை, ஜம்மு & காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஒருவர் குறிப்பிட்டாரென்றால், அது “இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான உந்துதல், பாதுகாப்பு வலையமைப்பின் விரிவாக்கத்தை விஞ்சிவிட்டது என்பதற்கான ஓர் ஒப்புதல்” ஆகும்.


சாலைகளைக் கைப்பற்றுவதிலிருந்து மலைத்தொடர்களைக் கைப்பற்றுவது வரை


இந்தத் தாக்குதல் ஒரு பலவீனத்தை வெளிப்படுத்தியதோடு, பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதில் ஒரு கட்டமைப்பு மாற்றத்திற்கு வழிவகுத்தது. கடந்த ஓராண்டில், பாதுகாப்புப் படைகள் பிர் பஞ்சால் மலைத்தொடரின் உயரமான பகுதிகளில் 43 தற்காலிக செயல்பாட்டுத் தளங்களை (Temporary Operating Bases (TOB)) நிறுவியுள்ளன. தற்போது சி.ஆர்.பி.எஃப் (CRPF) மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (Rashtriya Rifles) படையினர் 3,000 முதல் கிட்டத்தட்ட 9,000 அடி வரையிலான உயரங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.


தீவிரவாதக் குழுக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் முறையைத் தடுக்க அவர்களுக்கு உதவுகிறது. மலைத்தொடர்களையும் அடர்ந்த வனப்பகுதிகளையும் ஆக்கிரமிப்பதன் மூலம், பாதுகாப்புப் படைகள் வழக்கமான ஊடுருவல் முதல் செயல்படுத்தல் சுழற்சியைச் (infiltration-to-execution cycle,) சீர்குலைக்க நோக்கம் கொண்டுள்ளன. அந்த நேரத்தில், சிறிய குழுக்கள் வனப் பாதைகள் வழியாக நுழைந்து, பதுங்கியிருந்து, வாய்ப்புகள் கிடைக்கும்போது தாக்குதல் நடத்தும்.


ஜம்மு & காஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் விவரித்ததாவது, இந்த மாற்றம் என்பது “சாலையைக் காப்பதிலிருந்து” “மலைத்தொடரைக் காப்பதை” கவனம் செலுத்துவதை நோக்கமாக கொண்டதாகும். அதாவது, கண்ணுக்குத் தெரியும், நெடுஞ்சாலையை மையமாகக் கொண்ட பாதுகாப்பிலிருந்து விலகி, முன்னர் இந்தப் பகுதிகள் குறைவாகக் கண்காணிக்கப்பட்ட பகுதிகளில் நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நோக்கிய ஒரு நகர்வு ஆகும்.


தொழில்நுட்பமும் "மனிதப் பாதுகாப்பு அரணும்


பாதுகாப்புப் படைகளை இடமாற்றம் செய்வதோடு, பாதுகாப்பு அமைப்பு இப்போது அதிக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கடந்த ஆண்டில், சுற்றுலாப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய 50,000-க்கும் மேற்பட்ட நபர்களான குதிரைப் பராமரிப்பாளர்கள், வழிகாட்டிகள், புகைப்படக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆதார் இணைக்கப்பட்ட தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கியூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டைகள் (QR-coded ID) வழங்கப்பட்டுள்ளன.


இந்த இலக்கிற்கு இரண்டு பகுதிகள் உள்ளன. முதலாவதாக, சுற்றுலாப் பகுதிகளில் உடனடிச் சரிபார்ப்பைச் சாத்தியமாக்குவதும், தரைவழிப் பணியாளர் (over-ground worker (OGW)) வலையமைப்புகள் சேவைப் பொருளாதாரத்திற்குள் ஊடுருவி விடுமோ என்ற அபாயத்தைக் குறைப்பதும் ஆகும். முக்கிய சுற்றுலா வழித்தடங்களைச் சுற்றி ஒரு “மனிதப் பாதுகாப்பு அரணை” (human firewall) உருவாக்குவதாக அதிகாரிகள் இதை விவரிக்கின்றனர்.


கண்காணிப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மையங்களில் முகத்தை அடையாளம் காணும் கருவிகள் (Facial Recognition Devices) நிறுவப்பட்டுள்ளன. அதேசமயம், ஆளில்லா விமான வழித்தடங்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய புல்வெளிகள் மற்றும் மலையேற்றப் பாதைகளின்மீது தொடர்ச்சியான வான்வழி கண்காணிப்பை வழங்குகின்றன. பார்வையாளர்களைத் தடுக்கக்கூடிய வெளிப்படையான இராணுவமயமாக்கல் இல்லாமல், ஒரு பாதுகாப்பு இருப்பைப் பேணுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


இந்த அணுகுமுறையானது, தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட பல தளங்களை நிர்வாகம் படிப்படியாக மீண்டும் திறக்க வழிவகுத்துள்ளது. ஆனால் இது தனியுரிமை மற்றும் இத்தகைய தீவிர கண்காணிப்பின் நீண்டகால நிலைத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. இந்தப் பிரச்சினைகள் அதிகாரப்பூர்வ உரையாடல்களில் பெரும்பாலும் விவாதிக்கப்படாமலேயே இருக்கின்றன.


உளவுத்துறை சார்ந்த துல்லியம்


ஒருவேளை, மிக முக்கியமான மாற்றம் என்பது புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை நோக்கியதாகவே அமைந்துள்ளது. ஜூலை 2025-ல், 'ஆபரேஷன் மகாதேவ்' (Operation Mahadev) திட்டத்தின் கீழ், பாதுகாப்புப் படைகள் மனிதப் புலனாய்வு மற்றும் ஆளில்லா விமானக் கண்காணிப்பு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி, ஹர்வான் மலைப்பகுதிகளில் நடந்த பஹல்காம் படுகொலைகளுக்குப் பின்னணியில் இருந்த மூன்று பேர் கொண்ட குழுவைக் கண்டுபிடித்து அழித்தன.


அதன்பிறகு, அதிகாரிகள் தொடர்ச்சியான இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை, 'உளவுத்துறைக்கு முன்னுரிமை' (intelligence-first) அளிக்கும் அணுகுமுறைக்கான சான்றாகச் சுட்டிக்காட்டுகின்றனர். இதில், நவம்பர் 2025-ல் 'மருத்துவர் மாதிரி' (Doctor Module) என்று அழைக்கப்படும் பகுதி கலைக்கப்பட்டதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஜம்மு & காஷ்மீரில் இருந்து வந்த தீமூட்டும் சுவரொட்டிகள் குறித்த விசாரணையின் விளைவாக, ஹரியானாவில் 350 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டதோடு, ஒரு பரந்த வலையமைப்பை முடக்குவதற்கும் வழிவகுத்தது. இது, நாடு முழுவதும் தொடர்ச்சியாக நிகழவிருந்த தாக்குதல்களைத் தடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் தொடங்கி, அதிலேயே முடிவடைந்தது.


கிஷ்வார்-டோடா பகுதியில் சைஃபுல்லா குழுவைச் செயலிழக்கச் செய்ததும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் லஷ்கர்-இ-தைபாவின் (Lashkar-e-Taiba) பன்னாட்டு ஆள்சேர்ப்புப் பிரிவு ஒன்றை முறியடித்தது போன்ற மிகச் சமீபத்திய நடவடிக்கைகள், குறைந்தபட்ச சேதங்களுடன் கூடிய துல்லியமான, உளவுத்துறை ஆதரவுடனான தாக்குதல்கள் என்ற ஒரே மாதிரியான நிலையையே பின்பற்றியுள்ளன.


தனிப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதை விட, புவியியல் ரீதியாகப் பரந்துள்ள வலையமைப்புகளை வலுவாகக் கண்காணிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஏற்றுக்கொள்வதற்கான வரம்புகள்


இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், பாதுகாப்பு கட்டமைப்பு இன்னும் முழுமையாக ஊடுருவ முடியாததாக இல்லை. ஊடுருவல் மற்றும் கடினமான சூழல்களில் நிலவும் உளவுத்துறை இடைவெளிகள் ஆகிய இரண்டு கட்டுப்பாடுகளே உள் மதிப்பீடுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.


சமீபத்திய செயற்கைக்கோள் திட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து, அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற பிரத்யேக கண்காணிப்புத் திறன்களை நிறுவுவதில் ஏற்பட்ட தாமதம், கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control) நெடுகிலும், குறிப்பாக மோசமான வானிலையின்போது, ​​தொடர்ச்சியான கண்காணிப்பைப் பேணுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தியுள்ளது. தரைவழி உணர்விகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் திறம்படச் செயல்பட்டாலும், அவை பள்ளத்தாக்கின் தீவிரமான காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படக் கூடியவையாகவே இருக்கின்றன.


இன்னும் அடிப்படையாக, அடர்ந்த வனப் பகுதிகளில் மனித உளவுத்துறை தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. பிர் பஞ்சால் மலையின் அடர்ந்த விதானம், சிறிய, நகரும் "கலப்பின" குழுக்கள், குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது, கண்டறியப்படுவதைத் தவிர்க்கப் போதுமான மறைப்பை இன்னும் வழங்குகிறது.


"ஒரு பயங்கரவாதி உள்ளே நுழைந்துவிட்டால், அவன் ஏதாவது செய்துவிடுவான். பாகிஸ்தான் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வரை, ஏதோ ஒன்று நடந்துகொண்டே இருக்கும். தலிபான்களுடனான தொடர் போரின் காரணமாக, அது தற்போது தனது மேற்கு எல்லையில் மும்முரமாக இருப்பது ஒரு நல்ல விஷயம்" என்று மத்திய பாதுகாப்பு அமைப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

Original link:

How the Pahalgam attack forced a radical security shift in J&K?


Share:

இந்தியாவின் முறைசாரா நகர்ப்புற தொழிலாளர் வளத்திற்கான சவால்கள். -திகேந்தர் சிங் பன்வார்

நொய்டாவில் சமீபத்தில் நடந்த தொழிலாளர்கள் போராட்டம், இந்தியாவின் நகர்ப்புறங்களின் நிலையற்றத் தன்மையை வெளிக் கொண்டு வருகிறது.


நொய்டாவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்  சில நாட்களுக்கு முன்னர் நடத்திய போராட்டங்கள், இந்தியாவின் நகர்ப்புறங்களில் நிலவும் நிலையற்றத் தன்மையை வெளிக்காட்டுகின்றன. இந்தப் பேராட்டங்கள் ஒரு சிறிய பகுதி மட்டுமே; பேராட்டங்கள் இந்தியாவின் பிற நகர்ப்புறப் பகுதிகளிலும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக, முறைசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களின்  பேரம் பேசும் திறன் அதிகாரம், நகராட்சி, மாநில மற்றும் ஒன்றிய அரசு அமைப்புகள் மற்றும் அவர்களின் முதலாளிகளுடன் ஒப்பிடும்போது,   குறைந்து வருகிறது.


இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 90% முறைசாரா தொழிலாளர் படையினராக உள்ளனர். நகர்ப்புறங்களில், காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) படி, நிரந்தர சம்பளம் அல்லது ஊதியம் பெறும் வேலைவாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள் எந்த எழுத்துப் பூர்வ ஒப்பந்தமும் இல்லாமல், முறைசாரா அல்லது தற்காலிகப் பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.


என்ன தவறாக நடந்தது என்பது நகர்புற உற்பத்தி அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களுடன் தொடர்புடைய நீண்டகாலக் கதையாகும். நகரங்கள், தொழில்துறை உற்பத்தி மையங்களாக இருந்த நிலையிலிருந்து, சமூக மறுசீரமைப்பு (social reproduction) மையங்களாக மாறிவிட்டன. நகர்புறங்களில் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்துறை குறைந்து விட்டது. மும்பையில் உள்ள ஆலைகள் மூடப்பட்டதும், அகமதாபாத் நெய் தொழிற்சாலைகள் மூடப்பட்டதும் இதற்கு ஒரு உதாரணமாகும். இதன் விளைவாக, நகரங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் முக்கிய பகுதிகளில் இருந்து விலகி, சிதறிய அமைப்புகளாக மாறிவிட்டன. இப்போது கவனம், பாதுகாப்பற்ற வாழ்க்கையை நிர்வகிப்பதில் உள்ளது. இதையே “சமூக மறுசீரமைப்பின் நகரமயமாக்கல்”  (urbanisation of social reproduction) என்று கூறுகிறார்கள். எளிமையாகச் சொன்னால், வாழ்வாதாரம் முக்கியமாகி விட்டது. சமையல் செய்வது, சுத்தம் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெறுவது முக்கியமானதாக மாறிவிட்டது. இந்த மாற்றம் என்பது, நகரங்களின் வடிவமைப்பு, அரசியல் மற்றும் வாழ்க்கை ஆகியவை தற்போது உயிர்வாழ்வதற்கான அன்றாடப் போராட்டங்களாலேயே அதிகம் வடிவமைக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.


உரிமைகள் முதல் தேவை அடிப்படையிலான சேவைகள் வரை


இந்த மாற்றம் உற்பத்தி மாற்றங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அது அடிப்படை சேவைகளையும், அரசின் பங்கையும் மாற்றியது. ஜான் வில்லியம்சன் என்பவரால் உருவாக்கப்பட்ட 'வாஷிங்டன் ஒருமித்த கருத்து' (Washington Consensus) வளர்ச்சிக்கான வழிகாட்டும் அணுகுமுறையாக மாறியது. இந்த அணுகுமுறையின் கீழ், அரசு தண்ணீர், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உரிமை அடிப்படையிலான சேவைகளை வழங்குவதிலிருந்து விலகியது. அதற்குப் பதிலாக, வரவு-செலவு சமநிலை, வரி சீர்திருத்தங்கள், வர்த்தக சுதந்திரம் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தேவையும் வளர்ச்சியும் சார்ந்த மாதிரியை ஏற்றுக்கொண்டது. தண்ணீரையும் கல்வியையும் தொழில்துறையாக மாற்றியதால், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. அதன் விளைவாக உழைக்கும் வர்கத்தின் சந்தையின் இறக்கங்களை எதிர்கொண்டு, தங்களுக்கான இடங்களை மீட்டெடுக்கும் திறனையும் இழந்தனர்.


நகர்ப்புற தொழிலாளர்களின் பாதிப்பு நிலை (precariousness) என்பது முறைசாரா வேலைவாய்ப்பு, நில உரிமை பாதுகாப்பின்மை, மற்றும் நகர வாழ்க்கையின் உயர்ந்த செலவு ஆகியவற்றின் இணைப்பாகும். நகர்ப்புற ஏழைகளில் 40% பேர் குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் மாத வருமானத்தின் 30% முதல் 50% வரை பகுதியை குடிசை பகுதிகளில் முறைசாரா வீடுகளுக்கான வாடகையாக செலவிடுகின்றனர். இந்த வீடுகளில் அடிப்படை சுகாதார வசதிகளும் சட்டபூர்வ பாதுகாப்பும் இல்லை. மேலும், இந்தியாவின் நகர்ப்புற ஒழுங்கற்ற குடியிருப்புகளில் 60% பகுதிகள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தாழ்வான இடங்களிலும் ஆபத்தான பகுதிகளிலும் அமைந்துள்ளன. இது அவர்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மையை அதிகரிக்கிறது.


நீர் மற்றும் மின்சாரத்தைச் சந்தை அடிப்படையிலான பயனர் கட்டண மாதிரிகளுக்கு மாற்றுவது போன்ற அத்தியாவசிய சேவைகளின் தனியார்மயமாக்கல்; ‘உலகத் தரம் வாய்ந்த’ உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர அசையாச் சொத்துக்களுக்காக சேரிப்பகுதிகளை மேம்படுத்தி, அவற்றை வெளியேற்றுதல்; தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்துதல்; இயற்கையும் இயற்கை இடங்களும்  வணிகமயமாக்கப்படும் நகர்ப்புறப் பொதுவெளிகளை அபகரித்தல் போன்றவற்றால் இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது. வீட்டுவசதித் துறையில், அரசு நேரடியாக வீடுகளை வழங்கும் அமைப்பாக இருந்து, தனியார் நில வள மேம்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் குறைந்த வருவாய் பிரிவினருக்கான குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பொது நிலங்கள், உயர்தரத் திட்டங்களுக்குத் மாற்றியமைக்கப்பட்டன.


இந்திய ரிசர்வ் வங்கியின் 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, பிணையம் இல்லாத காரணத்தால், நகர்ப்புற ஏழைகள் பெரும்பாலும் முறைசார் வங்கிச் சேவைகளைத் தவிர்த்து, வட்டிக்குப்பணம் கொடுப்பவர்களை நாடுவதால், அவர்கள் தீராத கடன்களில் சிக்குகின்றனர்.


நகர்ப்புற ஒடுக்குமுறைகளின் சந்திப்பு (Urban intersectionality)


கேரள நகர ஆணையம், உழைக்கும் மக்களின் கொள்கைகளை பல கோணங்களில், பலதரப்பட்ட பார்வைகளிலிருந்து நகர்ப்புறக் கொள்கையை அணுக முயன்றுள்ளது. நகர மன்றத்தில் உள்ள 'தொழிலாளர் மன்றம்' (workers council) என்பது, முறைசாராத் தொழிலாளர்கள் நகர நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின் இணை-உற்பத்தியாளர்களாக மாறும் அத்தகைய இடங்களை மீட்டெடுப்பதற்கான வழிகளில் ஒன்றாகும். காலநிலை மாற்றம், பேரிடர்கள் மற்றும் நிலையற்ற வளர்ச்சி செயல்முறைகள் ஆகியவற்றின் நகர்ப்புறச் சுழலில், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் முறைசாராத் துறைத் தொழிலாளர்களுக்கும் இடையே பலதரப்பட்ட இணைப்புகளை உருவாக்குவது முக்கியமானதாகும்.


டிகேந்தர் சிங் பன்வார் கேரள நகர ஆணையத்தின் உறுப்பினர் ஆவார்.


Original link:

Challenges for India’s informal urban workforce.


Share: