இந்தியாவின் உயிரிபொருளாதாரம் (bioeconomy) : முன்னேற்றம் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம் -அமிதாப் சின்ஹா

 உயிரி தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்பட்ட, இந்திய உயிரிபொருளாதார அறிக்கையில் (India BioEconomy Report), இந்தத் துறை 2030-ம் ஆண்டில் சுமார் 300 பில்லியன் டாலர்களாகவும், 2047-ம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலராகவும் வளர ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறது.


2024-ம் ஆண்டில் இந்தியாவின் உயிரி பொருளாதாரம் (India’s bioeconomy) $165 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2%-க்கும் அதிகமாக இருக்கும் என்றும் ஒரு புதிய அரசாங்க அறிக்கை மதிப்பிட்டுள்ளது.


இந்திய உயிரிபொருளாதார அறிக்கையானது, உயிரி தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்பட்டது. இந்தத் துறை, அதிக வளர்ச்சிக்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று இது குறிப்பிடுகிறது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர்களையும், 2047-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர்களையும் எட்டக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


உயிரி வளங்களைப் பயன்படுத்துதல் (Utilising bioresources)


உயிரி பொருளாதாரம் என்பது உயிரியல் வளங்களின் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள்) தொழில்துறை பயன்பாடு மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் இயற்கை உயிரியல் செயல்முறைகளின் பிரதிபலிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.


இந்த யோசனை புதியதல்ல. உயிரி வளங்கள் மற்றும் இயற்கை செயல்முறைகள் நீண்டகாலமாக சுகாதாரம், மருந்துகள் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவற்றின் பயன்பாடு இப்போது மற்ற பகுதிகளுக்கும் விரிவடைந்து வருகிறது. தாவரங்கள் அல்லது நுண்ணுயிரிகள் போன்ற உயிரியல் வளங்கள் புதுப்பிக்கத்தக்கவை. மேலும், இவை மலிவு விலையில் மற்றும் உள்ளூரிலும் கிடைக்கின்றன. அதே நேரத்தில், இயற்கை செயல்முறைகள் மிகவும் நிலையானவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகும்.


எத்தனாலின் அதிகரித்து வரும் பயன்பாடு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். கரும்பு அல்லது சோளம் போன்ற பயிர்களை நுண்ணுயிரிகளுடன் நொதித்தல் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. எத்தனால் என்பது ஹைட்ரோகார்பன்களிலிருந்து வரும் எரிபொருட்களுக்கு ஒரு உயிரியல் மாற்றாகும். நவீன உயிரியல் துணிகள், பிளாஸ்டிக், கட்டுமானப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பல இரசாயனங்களுக்கு நிலையான மாற்றுகளை வழங்குகிறது.


சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற பாரம்பரிய துறைகளில், அதிக உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான உந்துதல் உள்ளது. உயிரி தொழில்நுட்பம் என்பது விரும்பிய தயாரிப்புகள் அல்லது பயன்பாடுகளை உருவாக்க உயிரியல் வளங்கள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. உயிரி மருந்துகளின் (biomedicines) வளர்ச்சி ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இவை வேதியியல் அல்ல, உயிரி வளங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மற்றொரு எடுத்துக்காட்டு செயற்கை உயிரியல், இது குறிப்பிட்ட பண்புகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நுண்ணுயிரிகளை வளர்ப்பதை உள்ளடக்கியது. இந்த இரண்டு பகுதிகளிலும் உயிரி தொழில்நுட்பம் பெரிய பங்கை வகிக்கிறது.


பொருளாதார செயல்முறைகளில் உயிரியலின் பயன்பாடு இன்னும் குறைவாக இருப்பதால், அதற்கான சாத்தியமான பயன்பாடுகள் பல இருப்பதால், விரைவான வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. உண்மையில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்கனவே நடந்து வருகிறது.


வளர்ந்து வரும் தடம் (Growing footprint)


      இந்தியாவின் உயிரியல் பொருளாதாரத்தின் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது. 2020-ல் சுமார் $86 பில்லியனில் இருந்து 2024-ல் $165 பில்லியனாக (வரைபடத்தைப் பார்க்கவும்) வளர்ந்துள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளில் உயிரி பொருளாதாரத்தில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90% அதிகரித்துள்ளது. இது 2021-ல் 5,365 நிறுவனங்களிலிருந்து 2024-ல் 10,075 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் மீண்டும் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ​​இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட 35 மில்லியன் மக்களை வேலைக்கு அமர்த்த முடியும் என்று அறிக்கை கூறுகிறது.


உயிரிபொருளாதாரத்தின் மதிப்பில் கிட்டத்தட்ட பாதி (தோராயமாக $78 பில்லியன்) தொழில்துறை துறையில், குறிப்பாக உயிரி எரிபொருள் (biofuels) மற்றும் பயோபிளாஸ்டிக்ஸ் (bioplastics) போன்றவற்றின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மருந்துத் துறை மொத்த மதிப்பில் மேலும் 35% ஆகும். இதில், தடுப்பூசிகள் முக்கிய பங்களிப்பாளராக உள்ளன.


2024 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவு ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம் (research and IT) ஆகும். இதில் உயிரி தொழில்நுட்ப மென்பொருள் மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து ஆராய்ச்சிக்கு உதவும் உயிரி தகவல் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.


       மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் உயிரி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக உற்பத்தி செய்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது (அட்டவணையைப் பார்க்கவும்). முழுவதும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியமும் 6% க்கும் குறைவாகவே பங்களித்தன.


கடந்த ஐந்து ஆண்டுகளின் அதிக வளர்ச்சியைப் பராமரிப்பது சவாலானதாக இருக்கும். இதற்கு அதிக புதுமை, உயிரி அடிப்படையிலான தீர்வுகளை அளவிடுவதற்கான சிறந்த ஆதரவு மற்றும் கொள்கை மற்றும் உள்கட்டமைப்பு தடைகளை நீக்குதல் தேவைப்படும். பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைப்பதும் வளர்ச்சியைத் தக்கவைக்க முக்கியமானதாக இருக்கும்.


ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2% பங்கு அமெரிக்கா மற்றும் சீனாவின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தாலும், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் உயிரியல் பொருளாதாரம் அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20%-க்கும் அதிகமாக உள்ளது.


பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம் (BioE3) உந்துதல்


2024-ம் ஆண்டில், பொருளாதார செயல்முறைகளில் உயிரி தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் BioE3 கொள்கையை (பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம்) அறிமுகப்படுத்தியது.


இந்தியாவை உயிரி உற்பத்திக்கான உலகளாவிய மையமாகவும், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய மையமாகவும் மாற்றுவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.


அதிநவீன தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்துவதும் பயன்படுத்துவதும் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் எதிர்காலத்திற்கு இந்தியாவைத் தயார்படுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும். உயிரி உற்பத்தியை ஊக்குவிக்க பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்களின் வலையமைப்பை உருவாக்குவதை ஆதரிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இது உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள், நொதிகள், செயல்பாட்டு உணவுகள், துல்லியமான உயிரி சிகிச்சை, கடல் மற்றும் விண்வெளி உயிரி தொழில்நுட்பம் மற்றும் காலநிலை-எதிர்ப்பு விவசாயம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும்.


இந்த பகுதிகளில் சிலவற்றில் இந்தியா ஏற்கனவே நன்கு வலுவான திறன்களைக் கொண்டுள்ளது. இது வணிக ரீதியாக வெற்றிகரமான தயாரிப்புகளை உருவாக்க இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்க எளிதாக இருக்கும்.


இந்த திட்டங்களை அமைப்பதற்கான முதல் முன்மொழிவுகள் தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றன.


ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, உற்பத்தித்திறன் மற்றும் விளைச்சலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில் தொடர்ந்து தயக்கம் உள்ளது. விவசாய உயிரி தொழில்நுட்பத்தில் உள்ள இந்த ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையை நிவர்த்தி செய்ய அறிக்கை அழைப்பு விடுக்கிறது.


தேசிய உயிரியல் பொருளாதார இயக்கம் மற்றும் உயிரி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஒற்றைச் சாளர ஒழுங்குமுறை வழிமுறைகளை (single-window regulatory mechanisms) உருவாக்கவும் அறிக்கை பரிந்துரைக்கிறது.



Original article:

Share:

நீதிபதி வர்மா வழக்கு: உச்சநீதிமன்றம் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் -கே.கே. வேணுகோபால்

 இந்த வழக்கின் தீர்ப்பு, முக்கியமான நீதித்துறை சீர்திருத்தத்திற்கான ஒரு வாய்ப்பை இழந்துவிட்டது.


அரசியலமைப்பின் 124-வது பிரிவு, உச்சநீதிமன்றம் எவ்வாறு உருவாக்கப்பட்டது மற்றும் அரசியலமைப்பைப் பற்றிக் கூறுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பார் என்று அது கூறுகிறது. "ஆலோசனை" என்பதற்குப் பதிலாக "ஒப்புதல்" என்று மாற்றப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்ட ஒரு பரிந்துரையை பி.ஆர். அம்பேத்கர் உடனடியாக நிராகரித்தார். பி.ஆர். அம்பேத்கர் நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதிக்கு நடைமுறையில் தனி அதிகாரத்தை (veto) அனுமதிப்பது தலைமை நீதிபதிக்கு அதிகாரத்தை மாற்றுவதாகும்   என்று கூறினார். அதை நாங்கள் குடியரசுத்தலைவரிடமோ அல்லது அன்றைய அரசாங்கத்திடமோ ஒப்படைக்கத் தயாராக இல்லை. எனவே, அதுவும் ஒரு ஆபத்தான முன்மொழிவு என்று நான் நினைக்கிறேன் என்று பி.ஆர். அம்பேத்கர் கூறினார்.


சுதந்திரத்திற்குப் பிறகு முதல் 20 ஆண்டுகளுக்கு, நீதிபதிகளை நியமிக்கும் முறை சிறப்பாக செயல்பட்டது. மேலும், சிறந்த புலமை மற்றும் நேர்மை கொண்ட நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும், நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. இது 1981-ல் எஸ்.பி. குப்தா வழக்கின் போது முதல் நீதிபதிகள் தலையிட வழிவகுத்தது. இந்த வழக்கில், பிரிவு 124-ல் உள்ள "ஆலோசனை" (consultation) என்ற வார்த்தைக்கு "ஒப்புதல்" (concurrence) என்று பொருள் இருக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர். எனவே தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் எந்த நீதிபதியையும் நியமிக்க முடியாது. இருப்பினும், நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது.


முதல் நீதிபதிகள் வழக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த போதிலும், 1990-களில் அது மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்த முறை, உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை மாற்றி, "ஆலோசனை" என்பது "ஒப்புதல்" என்று தீர்ப்பளித்தது. இதன் விளைவாக, நீதிமன்றம் கொலீஜியம் முறையை அறிமுகப்படுத்தியது. அதில் தலைமை நீதிபதியும் நான்கு மூத்த நீதிபதிகளும் நீதித்துறை நியமனங்களை முடிவு செய்வார்கள். இந்த அமைப்பு முதலில் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. மேலும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திடமிருந்து நீதித்துறைக்கு மாற்றியது.


2014-ஆம் ஆண்டில் அரசியல் நிலைப்பாடு (political spectrum) நாடு முழுவதும் ஒருமித்த கருத்து எழுந்தது, இதன் விளைவாக 99-வது அரசியலமைப்பு திருத்தம் சட்டம் உருவானது.  இந்த சட்டம் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission (NJAC)) நிறுவியது. NJAC ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகள், ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் மற்றும் இரண்டு புலமை பெற்ற நபர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பார்கள். ஆனால், 2015-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் 4:1 என்ற விகிதத்தில் NJAC-ஐ அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது. பலர் இதை நீதித்துறை சீர்திருத்தத்திற்கு ஒரு பின்னடைவாகக் கருதினர். சட்ட அமைச்சர் மற்றும் இரண்டு முக்கிய நபர்கள் உட்பட, நீதிபதிகள் நியமனங்களில் அவர்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்தியது. இது நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்தது என்று நீதிமன்றம் கூறியது. அதன் முடிவை நியாயப்படுத்த "அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டை" (Basic Structure Doctrine) அது பயன்படுத்தியது. இருப்பினும், இந்த காரணத்தைப் புரிந்துகொள்வது  கடினமாக உள்ளது.


அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஹார்லன் சட்ட மாணவர்களிடம் பேசியபோது கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது: "நாங்கள் காங்கிரசின் ஒரு சட்டத்தை விரும்பவில்லை என்றால், அதை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு அதிக சிரமம் இல்லை," என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.


கொலீஜியம் அமைப்பிலும் குறைபாடுகள் இருந்தன. NJAC வழக்கில், நீதிபதி ஜஸ்தி செலமேஸ்வரின் மாறுபட்ட தீர்ப்பு அதன் பல தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது. பல ஆண்டுகளாக, நீதிபதிகள் நியமனங்களில் பல சிக்கல்கள் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகள், இரண்டாவது மற்றும் மூன்றாவது நீதிபதிகள் வழக்குகளால் உருவாக்கப்பட்ட கொலீஜியம் அமைப்பு, சுதந்திரமான மற்றும் திறமையான நீதித்துறையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகுமா என்ற சந்தேகத்தை எழுப்பின.


நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரூமா பால் ஆற்றிய உரையையும் அவர் குறிப்பிடுகிறார். அதில் நீதித்துறை நியமனங்களுக்கான கொலீஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். மேலும், அதை "இந்த நாட்டில் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட ரகசியங்களில் ஒன்று" என்று விவரித்தார். அவர் தொடர்ந்து ரகசிய நியமன செயல்முறை ஒரு நபரின் திறன்கள் மற்றும் பொருத்தம் பற்றிய தகவல்களைக் கட்டுப்படுத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். சில நேரங்களில், கொலீஜியம் உறுப்பினர்கள் சமரசம் செய்து கொள்கிறார்கள். இது கேள்விக்குரிய நியமனங்களுக்கு வழிவகுக்கிறது. இது வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும். அமைப்புக்குள் பாரபட்சம் மற்றும் பரப்புரை காரணமாக நீதித்துறை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் பெரும்பான்மை தீர்ப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால், நீதிபதி செல்லமேஸ்வரின் கவலைகளையும் ஆதரித்தார். கொலீஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் நம்பகத்தன்மை இல்லை என்று அவர் கூறினார். மேலும், நம்பிக்கையின்மை அமைப்பின் நற்பெயரை சேதப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


நியமன முறைமையில் NJAC அரசாங்கத்திற்கு மீண்டும் பிரதிநிதித்துவத்தை வழங்கியது, அசல் விதியானது நியமனத்திற்கான நபர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், உண்மையான நியமனத்தைச் செய்வதிலும் பிரத்யேக உரிமையை வழங்கியது. இந்தத் திருத்தம் நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது. ராம் ஜெத்மலானி மட்டுமே அதை எதிர்த்தார். 16 மாநில சட்டமன்றங்களும் இதை அங்கீகரித்தன.


அப்போதைய அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோஹத்கி அவர்கள் தரப்பில் சிறந்த வாதங்களை முன்வைத்த பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்திற்காக நான் ஆஜரானேன். வழக்கு எடுத்துச் செல்லும் திசையை உணர்ந்து, ஒரு சட்டத்தை "கீழே வாசிப்பது" என்ற கோட்பாட்டை நீதிமன்றங்கள் அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் அரசியலமைப்பு திருத்தத்தையும் சட்டத்தையும் காப்பாற்ற முயற்சித்தேன். ஆனால், அரசியலமைப்புத் திருத்தத்தைக் காப்பாற்றும் நோக்கத்தில் இருந்த எனது பரிந்துரைகளை நீதிபதிகள் ஏற்கவில்லை.


சுவாரஸ்யமாக, தீர்ப்பு வழங்கப்பட்ட சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பான்மையினரில் ஒருவராக இருந்த நீதிபதி குரியன் ஜோசப், NJAC திருத்தத்தை ரத்து செய்ததற்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். இப்போது விஷயங்களைப் பார்த்த பிறகு NJAC தீர்ப்பின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நான் இப்போது வருந்துகிறேன் என்று அவர் கூறினார்.


"இப்போது" என்ற சொல் தீர்ப்பு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் கொலீஜியம் எவ்வாறு செயல்பட்டது என்பதைக் குறிக்கிறது.


இரண்டாவது மற்றும் மூன்றாவது நீதிபதிகள் வழக்குகளில் நீதிமன்றம் பிரிவு 124-ஐ தவறாகப் புரிந்து கொண்டது. குறைந்தது மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டால், NJAC வழக்கு உண்மையான நீதித்துறை சீர்திருத்தத்திற்கான ஒரு தவறவிட்ட வாய்ப்பாகும்.


இந்தப் பிரச்சினை முக்கியமானது மற்றும் பொது நலனுக்காக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் SP குப்தா தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டதைப் போலவே, தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தின் (National Judicial Appointments Commission (NJAC)) தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


எழுத்தாளர் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்.



Original article:

Share:

புதிய தரவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 44(3) பற்றி செயற்பாட்டாளர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள்? -ஷ்யாம்லால் யாதவ்

 காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மார்ச் 23 அன்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் (MeitY) அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதினார். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் (Digital Personal Data Protection Act) பிரிவு 44(3)-ஐ ரத்து செய்யக் கோரி கோரி கடிதம் எழுதினார். இது தகவல் அறியும் உரிமை சட்டத்தை "அழிக்கும்" என்று அவர் கூறினார்.


செவ்வாய்க்கிழமைமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், அரசாங்கம் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023-ஐப் பயன்படுத்தி, தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான பொதுமக்களின் தகவல்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துகிறது.


ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை நாடாளுமன்றத்தில் சந்தித்த ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு, தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ஐ எவ்வாறு மாற்றியுள்ளது என்பது குறித்து விவாதித்தது. இந்த மாற்றம் மக்கள் தகவல்களை அணுகுவதை கடினமாக்கும் என்று குழு தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மார்ச் 23 அன்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதி, தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ நீக்கக் கோரினர். இந்தப் பிரிவு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தும் என்று அவர் கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஆர்வலர்களான அருணா ராய், நிகில் டே, பிரசாந்த் பூஷன் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்ப தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வரவிருக்கும் மாற்றத்தை எதிர்த்து கடந்த வாரம் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினர்.


தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் (Digital Personal Data Protection Act (DPDP)) பிரிவு 44(3):


DPDP சட்டம் ஆகஸ்ட் 11, 2023 அன்று குடியரசுத்தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், சட்டத்தின் கீழ் விதிகளை இறுதி செய்தவுடன் அது நடைமுறைக்கு வரும். ஜனவரி மாதம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள், 2025 வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டது. கருத்துகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 18 அன்று முடிவடைந்தது.


DPDP சட்டம் தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உரிமையையும், சட்டப்பூர்வ நோக்கங்களுக்காகவும், அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விவகாரங்களுக்காகவும் அத்தகைய தனிப்பட்ட தரவை செயலாக்க வேண்டியதன் அவசியத்தையும் அங்கீகரிக்கும் வகையில் டிஜிட்டல் தனிப்பட்ட தரவை செயலாக்குவதை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


DPDP சட்டத்தின் பிரிவு 44(3), RTI சட்டத்தின் பிரிவு 8(1)(j)-ல் செய்யப்படும் ஒரு மாற்றத்தைக் குறிப்பிடுகிறது. இந்த மாற்றம், 2005 சட்டத்தின் கீழ் அரசு நிறுவனங்கள் வெளியிட வேண்டிய தகவல்களின் அளவை வெகுவாகக் குறைக்கும் என்று RTI ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (Right to Information Act) பிரிவு 8(1)(j):


இந்தப் பிரிவு, தனிப்பட்ட தகவலுக்கும் பொது நடவடிக்கைகள் அல்லது நலன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பகிர்வது நல்ல காரணமின்றி ஒருவரின் தனியுரிமையை ஆக்கிரமிக்கும். விதிவிலக்காக ஒன்றிய பொது தகவல் அதிகாரி அல்லது மாநில பொது தகவல் அதிகாரி அல்லது மேல்முறையீட்டு அதிகாரி தனிநபரின் தனியுரிமையைவிட பரந்த பொது நலன் முக்கியமானது என்று முடிவு செய்தால் மட்டுமே இந்த தனிப்பட்ட தகவலைப் பகிர முடியும்.


தகவல் மறுப்பதற்கான நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக, DPDP சட்டத்தின் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் (Digital Personal Data Protection Act (DPDP)) பிரிவு 44(3) RTI சட்டத்தில் இந்த பிரிவை சுருக்குகிறது. அது தகவல் அறியும் உரிமை சட்டம், 2005-ன் பிரிவு 8-ல், துணைப் பிரிவு (1)-ல், பிரிவு (j)-க்குப் பதிலாக, (j) தனிப்பட்ட தகவலுடன் தொடர்புடைய தகவல் பிரிவு மாற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது. 


மாற்றம் ஏன் முக்கியமானது


ஒரு குடிமகனின் தகவல் அறியும் உரிமைக்கும் ​​ஒரு தனிநபரின் தனியுரிமைக்கும் இடையிலான மோதல் பரவலாக விவாதிக்கப்படுகிறது.


பல ஆண்டுகளாக, ஒன்றிய மற்றும் மாநில தகவல் ஆணையங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(j)-ன் அடிப்படையில் தகவல்களை வெளியிடுவதா அல்லது மறுப்பதா என்பது குறித்து பல முடிவுகளை எடுத்துள்ளன.


தகவல் அறியும் உரிமை மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு அதை மதிப்பாய்வு செய்தது. பிரிவு 8(1) (a) முதல் (j) வரையிலான பல்வேறு வகைகளை உள்ளடக்கிய வெளிப்படுத்தலுக்கான விலக்குகளை பட்டியலிட்டது.


பிரிவு 8(1)-ல் உள்ள ஒரு பொதுவான விதி, நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு மறுக்க முடியாத எந்தவொரு தகவலையும் பொதுமக்களுக்கு மறுக்கக்கூடாது என்று கூறுகிறது.


பொது ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் போன்ற பல தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவது, ஒரு பொது நோக்கத்திற்கு சேவை செய்வதாகக் கருதப்படுவதால் தான் என்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், அனைத்து "தனிப்பட்ட தகவல்களுக்கும்" விலக்கு அளிப்பது, பொதுமக்கள் முக்கியமான தகவல்களை அணுகுவதைத் தடுக்கப் பயன்படும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


ஷியாம்லால் யாதவ், புலனாய்வு அறிக்கையிடலுக்கு ஆர்டிஐயை திறம்பட பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். அவர் விசாரணைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share:

நிதி மசோதா 2025 என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள்:


• மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்தின் போது, ​​பிப்ரவரி 13 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா, இப்போது தேர்வுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


• அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளுக்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். புதிய வருமான வரி மசோதா மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். புதிய நிதி மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் டிஜிட்டல் பதிவும் மதிப்பீட்டிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.


• புதிய வருமான வரி மசோதாவில் தனியுரிமை குறித்த எதிர்க்கட்சிகளின் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கூகுள் மேப்ஸ் வரலாறு, வாட்ஸ்அப் அரட்டைகள் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை சரிபார்ப்பது கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கண்டறிய அரசாங்கத்திற்கு உதவியுள்ளது என்று நிதியமைச்சர் கூறினார்.

• புதிய மசோதா வரி அதிகாரிகள் தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின் போது கணினிகள், இணைய வர்த்தகம் மற்றும் முதலீட்டு கணக்குகள் மற்றும் மேகக்கணினி சேவையகம் உள்ளிட்டவற்றின் அணுகல் மீறுவதற்கு வரி அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்குகிறது.


• 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் ஒரு நபரின் வருமானம் மற்றும் செலவுகளின் பதிவுகளை மட்டுமே சரிபார்க்க அனுமதித்ததால், புதிய மசோதாவில் இந்த விதி சேர்க்கப்படும் என்று சீதாராமன் விளக்கினார்.


• 1961-ஆம் ஆண்டு சட்டத்தில் டிஜிட்டல் பதிவுகள் குறிப்பிடப்படவில்லை. எனவே, கடவுக்குறியீடுகளைப் பகிர்வதைத் தவிர்க்க மக்கள் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்று நிதியமைச்சர் கூறினார். தற்போது, தேர்வுக் குழுவிடம் உள்ள புதிய வருமான வரி மசோதா, டிஜிட்டல் பதிவுகளைச் சேர்ப்பதன் மூலம் இடைவெளியை சரிசெய்கிறது என்று சீதாராமன் கூறினார்.





உங்களுக்குத் தெரியுமா:


• மார்ச் 25 அன்று, மக்களவையில் நிதி மசோதா 2025-ஐ 35 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆன்லைன் விளம்பரங்களுக்கான 6% டிஜிட்டல் வரியை நீக்குவதும் அடங்கும். நிதி மசோதா 2025-ஐ நிறைவேற்றுவதன் மூலம், பட்ஜெட்டை அங்கீகரிப்பதில் மக்களவை தனது பங்கை நிறைவு செய்தது.


• பொதுவாக, நிதி மசோதா என்பது அரசாங்க வருவாய் அல்லது செலவினம் தொடர்பான எந்தவொரு மசோதாவையும் குறிக்கிறது. பண மசோதா (Money Bill) என்பது ஒரு சிறப்பு வகை நிதி மசோதா ஆகும். இது பிரிவு 110(1)(a) முதல் (g) வரை பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட விவகாரங்களை மட்டுமே குறிப்பிடுகிறது. ஒரு பண மசோதா சபாநாயகரால் சான்றளிக்கப்பட வேண்டும். சபாநாயகரின் ஒப்புதலுடன் கூடிய நிதி மசோதாக்கள் மட்டுமே பண மசோதாக்களாகக் கருதப்படும்.


• சபாநாயகரால் சான்றளிக்கப்படாத நிதி மசோதாக்கள் இரண்டு வகைகளாகும்: பிரிவு 110-ல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விஷயத்தையும் கொண்ட மசோதாக்கள். அந்த விவகாரங்களை மட்டும் கொண்டிருக்காத மசோதாக்கள் [பிரிவு 117 (1)]; மற்றும் பிரிவு 117 (3) ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (Consolidated Fund) செலவினங்களை உள்ளடக்கிய விதிகளைக் கொண்ட சாதாரண மசோதாக்கள்  ஆகும்.


• பண மசோதாவைப் போன்ற முதல் வகை மசோதாவை மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். மேலும், அதற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் தேவை. இருப்பினும், பண மசோதாக்களுக்குப் பொருந்தும் அனைத்து கட்டுப்பாடுகளும் இதில் இல்லை. பிரிவு 117(3)-ன் கீழ் உள்ள மசோதாக்கள் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்படலாம். ஆனால், அவை பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் தேவை.


• அரசியலமைப்பின் பிரிவு 110 (1)-ன் கீழ், பின்வரும் அனைத்து அல்லது ஏதேனும் விவகாரங்களையும் கையாளும் விதிகளை மட்டுமே கொண்டிருந்தால் ஒரு மசோதா பண மசோதாவாகக் கருதப்படுகிறது:


(அ) எந்தவொரு வரியையும் சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல்.


(ஆ) அரசாங்கம் கடன் வாங்கும் விதிகளை ஒழுங்குபடுத்துதல்


(இ) வைப்புத்தொகை மற்றும் திரும்பப் பெறுதல் உட்பட ஒருங்கிணைந்த நிதி அல்லது தற்செயல் நிதியை நிர்வகித்தல்.


(ஈ) இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து பணத்தைப் பயன்படுத்துவது.


(உ) எந்தவொரு செலவினத்தையும் இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தில் வசூலிக்கப்படும் செலவினமாக அறிவிப்பது அல்லது அத்தகைய செலவினத்தின் அளவை அதிகரிப்பது.


(ஊ) ஒருங்கிணைந்த நிதி அல்லது இந்திய பொதுக் கணக்கிலிருந்து அரசாங்கப் பணத்தைக் கையாளுதல், சேமித்தல், செலவு செய்தல் அல்லது தணிக்கை செய்தல்.


(எ) முன்னர் (அ) முதல் (ஊ) வரை குறிப்பிடப்பட்ட புள்ளிகளுடன் தொடர்புடைய வேறு ஏதேனும் விதிகளை கொண்டிருந்தால் ஒரு மசோதா பண மசோதாவாகக் கருதப்படுகிறது.



Original article:

Share:

மாசு கட்டுப்பாட்டு நிதி குறைவாகப் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : 2024-25 நிதியாண்டில் “மாசு கட்டுப்பாடு” திட்டத்திற்காக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.858 கோடியில் 1 சதவீதத்திற்கும் குறைவான தொகையே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.


முக்கிய அம்சங்கள் :


• 2025-26-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையில் நிதி மோசமாகப் பயன்படுத்தப்பட்டதைக் கண்டு அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்றக் குழு அதிர்ச்சியடைந்தது. இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்து அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டது.


• ஒதுக்கப்பட்ட ரூ858 கோடியில் ஜனவரி 21-ஆம் தேதி வரை ரூ7.22 கோடி மட்டுமே செலவிடப்பட்டது குறித்து குழு ஆச்சரியப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தொடர அனுமதிக்காகக் காத்திருப்பதால், நிதியைப் பயன்படுத்த இயலாது என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கடந்த இரண்டு நிதியாண்டுகளில், இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவு அறிக்கை நிதி முழுமையாக செலவிட்டதாக அமைச்சகம் அறிக்கை காட்டுகிறது.


• “மாசு கட்டுப்பாடு” திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ₹858 கோடி பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டு குழு அதிர்ச்சியடைந்தது. இந்தத் தொகை அமைச்சகத்தின் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 27.44% ஆகும். நிதியாண்டு முடிவடையும் நிலையில் கூட, 2025-26 வரை இந்தத் திட்டத்தைத் (Control of Pollution Scheme) தொடர ஒப்புதல் அளிக்காமல் இருந்ததே தாமதத்திற்குக் காரணம் என்று அறிக்கை கூறுகிறது.


• நாடாளுமன்ற மேற்பார்வையின் ஒரு பகுதியாக, துறை தொடர்பான நிலைக்குழுக்கள், வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது அரசு அமைச்சகங்களின் செலவு மற்றும் செயல்திறனை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா:


• தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் (National Clean Air Programme (NCAP)) முக்கிய பகுதியாக இருக்கும் “மாசு கட்டுப்பாடு” திட்டத்திற்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதியளிக்கிறது. 2026-ஆம் ஆண்டிற்குள் 131 நகரங்களில் நுண்ணிய துகள்களால் 10 (நுண்ணிய மாசுபடுத்திகள்) மாசுபாட்டைக் குறைப்பதை NCAP நோக்கமாகக் கொண்டுள்ளது. 15-வது நிதி ஆணையம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 49 நகரங்களில் NCAP-க்கு நிதியளிக்கிறது. அதே நேரத்தில் “மாசு கட்டுப்பாடு” திட்டம் காற்று தரத் தரங்களை பூர்த்தி செய்யத் தவறும் 82 நகரங்களில் காற்றைச் சுத்தம் செய்ய உதவுகிறது.


• நாடு முழுவதும் காற்று, நீர் மற்றும் ஒலி மாசுபாடு மற்றும் அவற்றின் தர நிலைகளைக் கண்காணிக்க “மாசுக் கட்டுப்பாடு” திட்டம் 2018-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பலவீனமான மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு நிதியுதவி மற்றும் மாசு அளவைக் கண்காணிக்கும் திட்டம் ஆகியவை அடங்கும். சமீபத்தில், உலக காற்று தர அறிக்கை 2024 டெல்லியை உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக மதிப்பிட்டுள்ளது. சராசரியாக PM2.5 அளவு ஒரு கன மீட்டருக்கு 91.8 மைக்ரோகிராம் ஆகும். உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளன என்பதையும் இது கண்டறிந்துள்ளது.


• காலநிலை மாற்றப் பிரச்சினைகள் குறித்து, உலகளாவிய காலநிலை முயற்சிகள் மற்றும் காலநிலை நிதியிலிருந்து அமெரிக்க நிர்வாகம் விலகுவது குறித்து House குழு கவலை தெரிவித்தது. இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதால், பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அது கூறியது.



Original article:

Share:

தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் 2014 -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி :  துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர், 2014ஆம் ஆண்டு தேசிய நீதித்துறை நியமன ஆணைய (NJAC) சட்டம் பற்றிப் பேசினார். நீதிபதிகளை நியமிப்பதற்கான இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்காவிட்டால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றார். டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து தற்போது மாற்றப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் புது தில்லி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பண மூட்டைகள் தொடர்பான சர்ச்சையின் மத்தியில் அவரது கருத்து வந்தது.


முக்கிய அம்சங்கள்:


  • இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தன்கர் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். அதே நாளில், மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்றக் குழு நீதிபதி வர்மாவின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியது. பின்பு, பிற்பகலில் அவரது வீட்டிற்குச் சென்றது.


  • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய குழு, துக்ளக் கிரசென்ட்டில் உள்ள நீதிபதி வர்மாவின் பங்களாவிற்கு மதியம் சுமார் 1:30 மணியளவில் வந்து கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆய்வு செய்தனர்


  • திங்களன்று, உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் முடிவை உறுதிப்படுத்தியது. நீதிபதிகளின் கருத்துகளையும், நீதிபதி வர்மாவின் பதிலையும் அவர்கள் மதிப்பாய்வு செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிபதி வர்மா இந்த இடமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


  • உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் குறித்து தன்கர் மிகுந்த கவலையடைந்தார். திங்களன்று, மாநிலங்களவைத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் அவர் இந்த விவகாரம் குறித்து விவாதித்தார்.


உங்களுக்குத் தெரியுமா?:


  • அரசியலமைப்பு (99வது திருத்தம்) சட்டம் மற்றும் NJAC சட்டம் ஆகியவை 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. அவர்கள் கொலீஜியம் முறையை மாற்றியமைத்து, நீதிபதிகளை நியமிக்க ஒரு ஆணையத்தை (National Judicial Appointments Commission (NJAC)) உருவாக்கினர். இந்த மாற்றம் நீதிபதிகள் நியமனங்களில் அரசாங்கத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கியது.


  • இந்திய தலைமை நீதிபதி தலைவராகவும், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகள் உறுப்பினர்களாகவும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரை ஒரு உறுப்பினராகவும், சிவில் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு மரியாதைக்குரிய நபர்களையும் உள்ளடக்கியதாக NJAC உருவாக்கப்பட்டது. இந்த சிவில் சமூக உறுப்பினர்களில் ஒருவர் தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்றொரு உறுப்பினர் SC/ST/OBC/சிறுபான்மை சமூகங்கள் அல்லது பெண்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். உச்ச நீதிமன்றம் அக்டோபர் 2015ஆம் ஆண்டில் இந்தச் சட்டங்கள் ரத்து செய்தது.


  • NJAC சட்டம், நீதிபதிகளை ஆறு பேர் கொண்ட குழுவால் நியமிக்க பரிந்துரைத்தது. இந்தக் குழுவில் இந்திய தலைமை நீதிபதி (CJI) தலைமை தாங்குவார்.  மேலும்,  இதில் இரண்டு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் இரண்டு "புகழ்பெற்ற" நபர்கள் அடங்குவர். பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவால் இரண்டு புகழ்பெற்ற நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


  • நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் நியமிப்பதற்கும் முடிவெடுப்பதில் நீதித்துறைக்கு மிக உயர்ந்த அதிகாரத்தை வழங்காவிட்டால், எந்தவொரு மாற்று செயல்முறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.



Original article:

Share:

மின்சாரத்திற்கு மாறுதல்: இந்தியா மற்றும் மின்சார வாகனத் துறை குறித்து . . .

 மின்சார வாகனத் துறையில் போட்டியிட இந்தியா நம்பகமான வர்த்தக நாடாக இருக்க வேண்டும்.


மின்சார வாகன (EV) மின்கலன்கள் (பேட்டரிகள்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 35 மூலதன பொருட்கள் மற்றும் மொபைல் போன் மின்கலன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 28 பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கும் இந்தியாவின் முடிவு, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுத்தமான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான வரவேற்கத்தக்க படியாகும். 


இது மத்திய பட்ஜெட் 2025-26-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் முன்மொழியப்பட்டு, செவ்வாயன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதா (Finance Bill) 2025 மூலம் முறைப்படுத்தப்பட்டது. இது ஒரு இராஜதந்திர கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது. 


முன்னதாக மார்ச் மாதத்தில், சீன மின்சார வாகன நிறுவனமான BYD தனது Super E-platform”  வெளியிட்டது.  இது ஒரு வாகனத்திற்கு 500-கிலோமீட்டர் தூரத்தை வெறும் ஐந்து நிமிட சார்ஜிங் மூலம் வழங்கும் திறன் கொண்டது. இந்த கண்டுபிடிப்பு வழக்கமான வாகனங்களின் வசதிக்கு நேரடியாக சவால் விடுவதுடன், பாரம்பரிய எரிபொருள் நிலையங்களைப் போலவே எங்கும் பரவி பயன்படுத்தப்பட்டால், உலகளாவிய மின்சார வாகன மாற்றத்தை துரிதப்படுத்தலாம். ஒரு மின்சார வாகனத்தில் பேட்டரிகள் மிகவும் விலையுயர்ந்த கூறுகளாக இருக்கின்றன. இது வாகனத்தின் விலையில் சுமார் 40% ஆகும். 


குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மின்சார வாகனங்களின் அதிக விலை அவற்றின் பயன்பாட்டைக் குறைத்துள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தேவையைக் குறைப்பதன் நீண்டகால நன்மை இருந்தபோதிலும் இது நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவிற்கு முக்கியமானது. மின்சார வாகன பேட்டரிகளை தயாரிப்பதற்கான உள்ளூர் தொழில்நுட்பம் இல்லாதது மற்றொரு பெரிய சவாலாகும். தற்போது, ​​சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின்படி, உலகளவில் உள்ள அனைத்து மின்சார வாகன பேட்டரிகளிலும் 70%-க்கும் அதிகமானவற்றை உற்பத்தி செய்யும் சீனா இந்தத் தொழிலுக்கு தலைமை தாங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், லித்தியம்-ஃபெரோ-பாஸ்பேட் (lithium-Ferro-phosphate (LFP)) பேட்டரி தொழில்துறை தரநிலையாக மாறியுள்ளது. ஏனெனில், இது குறைந்த விலை, அதிக ஆற்றலைச் சேமிக்கிறது மற்றும் வெப்பத்தை சிறப்பாகக் கையாளுகிறது.


2024ஆம் ஆண்டில், சீனாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கார்களிலும் 45% மின்சார வாகனங்கள் (EVகள்), அதே நேரத்தில் இந்தியாவில், பயணிகள் கார் சந்தையில் மின்சார வாகனங்கள் 2% மட்டுமே இருந்தன. இருப்பினும், மின்சார இரு சக்கர வாகனங்கள் (e2w) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. 2024ஆம் ஆண்டில் 1.14 மில்லியன் யூனிட்டுகள் விற்கப்பட்டன. இது மொத்த மின்சார வாகன விற்பனையில் 60% ஆகும்.


இந்தியாவின் வரி விலக்குகள் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும், கட்டணங்களைத் தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், போக்குவரத்துத் துறையில் மாசுபாட்டைக் குறைப்பதே பெரிய குறிக்கோளாக உள்ளது. இதைச் செய்ய, உலகளாவிய மின்சார வாகன பேட்டரி விநியோகச் சங்கிலியின் ஆரம்ப கட்டங்கள் (சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு) மற்றும் பிந்தைய கட்டங்கள் (உற்பத்தி மற்றும் அசெம்பிளி) இரண்டிலும் இந்தியா ஈடுபட வேண்டும். இது தொழில்நுட்பப் பகிர்வு மூலம் பேட்டரி செலவுகளைக் குறைக்க உதவும். மேலும், தங்கள் விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்த விரும்பும் நாடுகளுக்கு சீனாவிற்கு வலுவான மாற்றாக இந்தியாவை மாற்றும்.


மின்சார வாகனங்களில் நீண்டகால வெற்றிக்கு, இந்தியா சாதகமான வர்த்தகக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் உலகளாவிய பேட்டரி சந்தையில் வலுவான நிலையை உருவாக்க வேண்டும்.



Original article:

Share:

தண்ணீரை சேமிப்பதில் சமூகங்களின் பங்கு -கனிகா ஜம்வால்

 மார்ச் 22, உலக நீர் தினத்தன்று, தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்காக தண்ணீரைச் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். கூட்டு முயற்சிகள் மூலம் இதைச் செய்ய முடியும் என்று அவர் கூறினார். அதே நாளில், ஜல் சக்தி அமைச்சகம் ஜல் சக்தி அபியான்: மழை நீரை கைப்பற்று (Catch the Rain) 2025, பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த பிரச்சாரம் மக்களை தண்ணீர் சேமிப்பில் ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.





கருத்தில் கொள்ள வேண்டிய சிக்கல்கள்


இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவின் நீர் கொள்கைகளை, குறிப்பாக கிராமப்புறங்களில் நாம் விரிவாகப் பார்க்க வேண்டும். புதிய சுற்றுச்சூழல் சவால்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பற்றிய சிறந்த அறிவும் கிராமப்புற நீர் கொள்கைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. கொள்கை வகுப்பாளர்கள் பின்வரும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.


முதலாவதாக, கொள்கைகள் சமூகங்களின் முடிவுகளில் பங்கேற்கவும், அவர்களின் பாரம்பரிய சுற்றுச்சூழல் நடைமுறைகளை ஆதரிக்கவும் உதவ வேண்டும். பழங்குடியினர் மற்றும் உள்ளூர் சமூகங்கள் தங்கள் சூழலைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டுள்ளன. தற்போதைய கொள்கைகள் அவர்களை பங்கேற்க அனுமதிக்கின்றன. ஆனால், அவை நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. அரசாங்கம் இன்னும் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. மேலும், சமூகங்கள் தண்ணீரை நிர்வகிப்பதற்கான சொந்த வழிகளை அங்கீகரித்து வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை கொள்கைகள் புறக்கணித்துள்ளன. அதற்குப் பதிலாக, நீர் நிர்வாகத்திற்கான சீரான விதிகளை அவர்கள் அமல்படுத்தியுள்ளனர். இது உண்மையான சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் குறிக்கோளுக்கு எதிரானது.


எடுத்துக்காட்டாக, நீர் பயனர் சங்கங்கள் (Water User Associations (WUAs)) என்பது விவசாயிகள் ஒன்றாக நீர்ப்பாசனத்தை நிர்வகிக்க உதவுவதற்காக 1990ஆம் ஆண்டுகளில் இருந்து வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குழுக்களாகும். விவசாயத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் இந்தக் குழுக்களின் உறுப்பினர்களாக உள்ளனர். நீர்ப்பாசன ஆதாரங்களை நிர்வகிப்பதற்கு அவர்கள் பொறுப்பாக இருந்தாலும், முடிவுகளை எடுப்பதில் அவர்களுக்கு மிகக் குறைந்த அதிகாரமே உள்ளது.


இரண்டாவதாக, ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்கள் போன்றோர் சுற்றுச்சூழல் நெருக்கடிகளால் மற்றவர்களைவிட அதிகமாக பாதிக்கப்படுவதை நீர் கொள்கைகள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், சமூக மற்றும் பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கொள்கைகள் இந்த பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாக்கும், அதே நேரத்தில் தண்ணீரை நிர்வகிக்கும் அவர்களின் திறனையும் அங்கீகரிக்க வேண்டும். 


மூன்றாவதாக, கொள்கைகள் சிதறிய நீர் மேலாண்மை சிக்கலைத் தீர்க்க வேண்டும். இதன் பொருள் இயற்கையின் பல்வேறு பகுதிகளான காடுகள், நீர், நிலம் மற்றும் பல்லுயிர் போன்றவை வெவ்வேறு கொள்கைகள் மற்றும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த அணுகுமுறை இந்த கூறுகள் ஒன்றையொன்று எவ்வாறு சார்ந்துள்ளது என்பதை புறக்கணிக்கிறது. அவற்றை ஒன்றாக நிர்வகிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவை மிகக் குறைவு மற்றும் மிகவும் பயனுள்ளதாக இல்லை. கொள்கைகள் நன்கு ஒருங்கிணைக்கப்படாததால், அவை பெரும்பாலும் தங்கள் இலக்குகளை அடையத் தவறிவிடுகின்றன. மேலும், அவை  ஒன்றுக்கொன்று எதிராகவும் செயல்படக்கூடும்.


ஒருங்கிணைந்த அணுகுமுறையின் சிறந்த எடுத்துக்காட்டு மேற்கு இந்தியாவில் உள்ள கிராமப்புற சமூகங்களிலிருந்து வருகிறது. அவர்கள் ஓரான்ஸ் (orans) எனப்படும் ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். இது ஆழமான மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த புனித காடுகள் ஆகும். சில சமூகங்கள் நீர் பாதுகாப்புக்கும் (water conservation) ஓரான்களைப் பயன்படுத்துகின்றன.  ஓரான்ஸில் உள்ள மரங்களும் புல்லும் மழைநீரைப் பிடித்து மேற்பரப்பு ஓடுவதைத் தடுக்க உதவுகின்றன. இந்த பயனுள்ள நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அவசியமான சுற்றுச்சூழல் அமைப்புடன் நீர் எவ்வாறு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.


நான்காவதாக, உலகம் முழுவதும், சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் இயற்கையின் நலன்களைச் சேர்ப்பதில் கவனம் அதிகரித்து வருகிறது. இதன் பொருள் சட்டங்கள் மனித தேவைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், இயற்கையின் மதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல நீதிமன்றங்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன மற்றும் இயற்கையின் உரிமைகளை அங்கீகரித்துள்ளன.

கடைசி பிரச்சினை காலநிலை மாற்றம் தண்ணீரை எவ்வாறு பாதிக்கிறது என்பதுதான். பூமி வெப்பமடைவதால், இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று நேச்சர் இதழில் சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை கூறுகிறது. காலநிலை மற்றும் நீர் கொள்கைகள் இரண்டும் இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொள்ள வேண்டும். நீர் கொள்கைகள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக நீர் அமைப்புகளை வலுப்படுத்தவும், ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்தவும் உதவ வேண்டும். குறிப்பாக, காலநிலை கொள்கைகள் மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது பற்றியவை ஆகும் மற்றும் நீர் பற்றாக்குறைக்கு எதிராக சுற்றுச்சூழல் அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் 


தண்ணீரை திறம்பட நிர்வகிப்பதில் உள்ளூர் மற்றும் பழங்குடி சமூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, கிராமப்புற நீர் கொள்கைகளில் இந்த சமூகங்களை தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும். இதன் பொருள் ஈடுபாடு பற்றி பேசுவது மட்டுமல்லாமல், உண்மையில் அவர்களின் குரல்களைக் கேட்டு முடிவுகளில் சேர்ப்பதிலும் உள்ளது. இருப்பினும், சில சமூக நடைமுறைகளுக்கு வரம்புகள் இருக்கலாம். அவற்றை தேவைப்படும்போது விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாடு மூலம் இவற்றை மேம்படுத்த வேண்டும்.


கனிகா ஜம்வால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவி.



Original article:

Share: