இந்தியாவின் மின்சார வாகன இலக்கிற்கு பொருத்தமான ஒரு மின்கட்டமைப்பு உத்தி தேவை -காவ்யா வத்வா

இந்தியாவின் மின்சார வாகனம் (EV) தொடர்பான எதிர்காலம், ஒரு வலுவான மற்றும் தூய்மையான எரிசக்தி மின்கட்டமைப்பைச் சார்ந்துள்ளது.


ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் பதட்டங்களின் விளைவாக கச்சா எண்ணெய் விலைகள் உயரும்போதெல்லாம், இந்தியாவின் இறக்குமதிச் செலவு கடுமையாக அதிகரிக்கிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய பதற்றம், பாட்னா மற்றும் புனே போன்ற நகரங்களில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்திப் பயணிக்கும் பலரை, மின்சார வாகனங்களை (EVs) வாங்குவது குறித்து தீவிரமாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. இதில், தினசரி பயணத் தொலைவு குறைவாக இருப்பது, எரிபொருள் செலவில் விரைவான சேமிப்பு மற்றும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான குறைந்தபட்சச் செலவு ஆகியவை இந்தியாவின் மின்சார வாகனப் போக்குவரத்திற்கு இருசக்கர வாகனங்களே வழிவகுக்கும் என்பதைக் குறிக்கின்றன. இது தெளிவற்ற ஒரு மாற்றமாகவும் திகழ்கிறது. எனினும், இந்த மாற்றத்தின் வெளிப்படைத்தன்மை, உண்மையான உள்கட்டமைப்புச் சவாலை மறைத்துவிடக்கூடும் என்ற அபாயத்தைக் கொண்டுள்ளது. இங்குள்ள மிகப்பெரிய சவால் மின்சார இருசக்கர வாகனங்கள் அல்ல, மாறாக, எதிர்காலத்தில் சரக்குப் போக்குவரத்திற்குத் தேவையான மின் எரிபொருளை வழங்கவிருக்கும் மின் கட்டமைப்புதான் அந்தப் பெரிய சவாலாகும்.


இரண்டாவது மின் எரிபொருள் உருவாக்குவதற்கான கணக்கீடு


இந்தியாவில் ஏறக்குறைய 42 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த இந்த அனைத்து வாகனங்களையும் முழுமையாக மின்மயமாக்க, மின் உற்பத்தியில் மிகப்பெரிய அளவிலான மாற்றம் தேவைப்படும். ஏனெனில், வாகனங்கள் பயன்படுத்தும் ஆற்றலின் அளவும், அவை ஓராண்டில் கடக்கும் பயணத் தொலைவும் ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபடுகின்றன. இதற்காக, இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 900 TWh முதல் 1,100 TWh வரையிலான மின்சாரம் தேவைப்படும். 2047-ம் ஆண்டிற்குள் மொத்த வாகனங்களில் 50 சதவீதம் மட்டுமே மின்சார வாகனங்களாக மாறினாலும் (இது ஒரு மிதமான மதிப்பீடே ஆகும்), நாட்டிற்கு சுமார் 500 TWh கூடுதல் மின்சாரம் தேவைப்படும். இந்த அளவு, இந்தியாவின் தற்போதைய ஓராண்டு மின் உற்பத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்குச் சமமானதாகும். இந்தியப் போக்குவரத்தை மின்மயமாக்குவது என்பது, எழுபது ஆண்டுகளாகக் கட்டமைத்திருக்கும் தற்போதைய மின்-அமைப்பிற்கு இணையான, மற்றொரு பெரிய மின்-அமைப்பை புதிதாக உருவாக்குவதற்குச் சமமானதாக இருக்கும்.


இருசக்கர வாகனங்களின் பயன்பாடு, மின்கட்டமைப்பில் படிப்படியான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று கருதுவது இயல்பானது. மக்கள் பெரும்பாலும் தெருக்களில் காணப்படும் மின்சார இருசக்கர வாகனங்கள் மூலமாகவே இந்த மாற்றத்தைக் காண்கிறார்கள். அரசாங்கங்கள் பெரும்பாலும் பொதுக்கூட்டங்களில் அறிவிக்கப்படும் மானியங்கள் மூலம் இதை முன்வைக்கின்றன. இருப்பினும், இந்தியாவில் மிகப்பெரிய வாகன வகையாக விளங்கும் 309 மில்லியன் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனங்களாக மாறினாலும், அவை சுமார் 55 TWh முதல் 75 TWh வரையிலான மின்சாரத் தேவையை மட்டுமே அதிகரிக்கும். இந்த மதிப்பீடு, ஆண்டுக்கு 5,000 கி.மீ முதல் 7,000 கி.மீ வரையிலான பயன்பாடு மற்றும் ஒரு கிலோமீட்டருக்கு 0.035 kWh ஆற்றல் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது, முழுமையான மாற்றத்தின் கீழ் கணிக்கப்பட்ட மொத்த மின்சார வாகனத் தேவையில் 7%-க்கும் குறைவாகவே இருக்கும். எனவே, இருசக்கர வாகனங்களின் அரசியல் முக்கியத்துவம் அவற்றின் மின் கட்டமைப்பு தாக்கத்திற்கு நேர்மாறான விகிதத்தில் உள்ளது.


இந்தக் கட்டுரையில் உள்ள தரவுகள், வாகன் தேசியப் பதிவேட்டுத் தரவுகள் (VAHAN National Register data), பரிவஹான் பகுப்பாய்வுத் தளம் (Parivahan analytics portal), CSTEP சரக்கு மின்மயமாக்கல் ஆராய்ச்சி (CSTEP freight electrification research) மற்றும் ICCT கனரக வாகனப் பகுப்பாய்வு (ICCT heavy-duty vehicle analysis) ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வாகனக் குழு அளவிலான மாதிரியாக்கத்திலிருந்து பெறப்பட்ட கணக்கீட்டாளர்களின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. சரக்கு வாகனங்கள், அவற்றின் ஆற்றல் பயன்பாடு மற்றும் ஆண்டுப் பயணத் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் கனரக சரக்கு வாகனங்கள் (heavy goods vehicles (HGVs)) மற்றும் நடுத்தர சரக்கு வாகனங்கள் (medium goods vehicles (MGVs)) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கோள் காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் மூன்று சூழ்நிலைகளின் நடுத்தர அளவைப் பிரதிபலிக்கின்றன. மேலும், முழுமையான மின்மயமாக்கலுக்கான மதிப்பீடுகள், மேல்-வரம்பு கணிப்புகளாகக் கருதப்படுகின்றன. சரக்குப் போக்குவரத்தில்தான் மிகப்பெரிய சவால் உள்ளது. மேலும் அதன் புள்ளிவிவரங்கள் வியக்கத்தக்கவை. ஒரு கனரக சரக்கு வாகனம், சுமார் 25 பயணிகள் கார்களுக்குச் சமமான புகையை வெளியிடுகிறது. இந்தியாவில் ஏறக்குறைய 6.26 மில்லியன் கனரக சரக்கு வாகனங்கள் (HGV) உள்ளன. ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 60,000 கி.மீ. தூரத்திற்கு, ஒரு கிலோமீட்டருக்கு 1.2 முதல் 1.5 kWh வரை மின்சாரத்தை பயன்படுத்துகிறது. அவற்றை மட்டும் மின்மயமாக்குவதற்கு ஆண்டுக்கு 450 TWh முதல் 565 TWh வரை தேவைப்படும். குறைந்த ஆனால் குறிப்பிடத்தக்க ஆற்றல் அடர்த்தி கொண்ட சுமார் பத்து லட்சம் நடுத்தர சரக்கு வாகனங்களையும் (MGV) சேர்த்தால், மொத்த சரக்கு வாகனங்களுக்கான மின்சாரம் 500 TWh முதல் 600 TWh வரை தேவைப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் சரக்கு வாகனங்கள் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தாலும், இருசக்கர வாகனங்களுக்கான மின்சாரத் தேவையைவிட இந்த அளவு பல மடங்கு அதிகமாகும்.


எனவே, கொள்கை வகுப்பாளர்கள் “இந்தியாவின் சாலைகளை மின்மயமாக்குவது” குறித்துப் பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் இந்தியாவின் விநியோகச் சங்கிலிகளை மின்மயமாக்குவது குறித்தே பேசுகின்றனர்.


இது களத்திலேயே இப்போதே தெளிவாகத் தெரிகிறது. பல மாநிலங்களில், உயர் அழுத்த மின்-நிலைய இணைப்புகளை நாடும் வாகனக் குழும இயக்குநர்கள் நீண்ட தாமதங்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சவால் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல, நிதி சார்ந்ததும் ஆகும். ஏற்கனவே, கணிசமான திரட்டப்பட்ட இழப்புகளால் சுமை அதிகரித்துள்ள மின் விநியோக நிறுவனங்கள், தாங்கள் நிதி ஒதுக்கீடு செய்யாத விநியோக மேம்பாடுகளை எதிர்கொள்கின்றன.


மாலை ஏழு மணிக்கு என்ன நடக்கிறது? வருடாந்திர தேவையின் புள்ளிவிவரங்கள் இந்த நிலைமையின் ஒரு பகுதியை மட்டுமே கூறுகின்றன. மின்கட்டமைப்பு, வருடாந்திர மின்சார நுகர்வால் மட்டும் அழுத்தத்திற்கு உள்ளாவதில்லை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் திடீர் தேவை அதிகரிப்புகளால் அவை அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. மாலை நேரத்தில் மில்லியன் கணக்கான வாகனங்கள் மின்னேற்றம் செய்யப்பட்டால், நிர்வகிக்கப்பட்ட மின்னேற்ற நிலைமைகளின் கீழ், பல நூறு ஜிகாவாட் கூடுதல் சுமைகள் ஏற்படும் என்று ஆய்வு மாதிரிகள் குறிப்பிடுகின்றன. முறையான மேலாண்மை இல்லாமல், இந்த அபாயம் மின் கட்டமைப்பின் நிலையற்ற தன்மை, மின் விநியோகத் தடைகள் மற்றும் மின்சாரக் கட்டணங்களில் ஏற்படும் திடீர் உயர்வுகள் ஆகியவை அடங்கும். இவை மின்சார வாகன உரிமையாளர்களை மட்டுமல்ல, அனைத்து நுகர்வோரையும் பாதிக்கும்.


இதற்கான தீர்வுகள் ஏற்கனவே உள்ளன. இவற்றில் பயன்பாட்டு நேர அடிப்படையிலான விலை நிர்ணயம், சூரிய ஒளி நேரங்களில் பணியிடங்களில் மின்னேற்றம் செய்தல், மின்னேற்ற மையங்களில் மின்கலன் சேமிப்பு மற்றும் இலகுவான வாகனங்களுக்கான வலையமைப்புகளை மாற்றுதல் ஆகியவை அடங்கும். பல மாநிலங்கள் ஆரம்பகால மின்சார வாகனக் கட்டணக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால், இன்று நிறுவப்படும் மின்னேற்றிகள் மின்கட்டமைப்பு சில நிபந்தனைகளுக்கு ஏற்ப செயல்படும் என்பதை எந்த தேசிய தரநிலையும் உறுதி செய்வதில்லை. இப்போது நிறுவப்படும் ஒவ்வொரு வழக்கமான மின்னேற்றியும் பிற்காலத்தில் ஒரு மறுசீரமைப்புச் செலவாகவே அமைகிறது.


மின் கட்டமைப்பிற்கு உண்மையில் என்ன தேவை


இந்த அளவிலான மின்சார வாகன மின்னேற்றம், மின் உற்பத்தி அமைப்பின் மீது இரண்டு தனித்துவமான தேவைகளை முன்வைக்கிறது. முதலாவது, மின்சாரத் தேவையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகரிப்பு. இதற்கு நூற்றுக்கணக்கான டெராவாட்-மணிநேரக் கூடுதல் மின்சாரம் தேவைப்படலாம். இரண்டாவது, நம்பகத்தன்மைக்கான தேவை. சரக்குக் கிடங்குகள், நெடுஞ்சாலை மின்னேற்றும் நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மின் வலையமைப்புகளுக்கு, சூரியன் உதிக்கும்போதோ அல்லது காற்று வீசும்போதோ மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படுகிறது. எந்தவொரு நம்பகமான உத்தியும் இந்த இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.



ஒவ்வொரு முக்கிய ஆற்றல் மூலமும் ஒரு தனித்துவமான பலத்தைக் கொண்டுள்ளது. சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் மிகக் குறைந்த செலவையும், மிக வேகமாக விரிவாக்கக்கூடிய கட்டமைப்பை நிறுவுவதையும் வழங்குகின்றன. ஆனால் அவை 25%-30% திறன் காரணிகளில் மட்டுமே செயல்படுகின்றன. எனவே நம்பகத்தன்மைக்கு சேமிப்பு அல்லது துணை மின் உற்பத்தி தேவைப்படுகிறது. அணுசக்தி, வானிலையைப் பொருட்படுத்தாமல், அதிக திறன் காரணி மற்றும் குறைந்த கார்பன் கொண்ட அடிப்படைச் சுமையை வழங்குகிறது. இருப்பினும், அணுமின் நிலையங்களைக் கட்டுவதற்கு நீண்ட காலம் ஆகும் மற்றும் மிக அதிக ஆரம்ப முதலீடு தேவைப்படுகிறது. நீரேற்று நீர் சேமிப்பு மற்றும் மின்கலன்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சாரத் தேவையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமநிலைப்படுத்த உதவுகின்றன. எரிவாயு அடிப்படையிலான மின்சாரம், மாற்றத்தின்போது குறுகியகால உச்சத் தேவையைக் கையாள முடியும்.


இந்தக் கலவையில் சேர்க்கப்படாத ஒன்று, விரிவாக்கப்பட்ட நிலக்கரிப் பயன்பாடு ஆகும். கூடுதலாகக் கிடைக்கும் டெராவாட்-மணி ஆற்றல் பெரும்பாலும் நிலக்கரியிலிருந்து கிடைத்தால், இந்தியா எண்ணெய் சார்ந்திருப்பதை நிலக்கரி சார்பாக மாற்றிவிடுகிறது. அதாவது, வளைகுடா நாடுகளுக்குப் பதிலாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து அதிக நிலக்கரியை இறக்குமதி செய்யும். அதே நேரத்தில், வெளியேற்றப்படும் புகையில் பெரிய குறைப்பு எதுவும் இருக்காது. மின் கட்டமைப்பு, அது மாற்றியமைக்கும் எரிபொருளைவிடத் தூய்மையானதாக இல்லாவிட்டால், மின்மயமாக்கலின் அடிப்படைக் கொள்கையே தோல்வியடைகிறது. பல்வகைப்படுத்தப்பட்ட தூய்மையான ஆற்றல் தொகுப்பு இந்தப் பிரச்சனையைத் தீர்க்கமுடியும். அத்தகைய அமைப்பில், ஒவ்வொரு ஆற்றல் மூலமும் அதன் திறன்களுக்கு ஏற்பப் பயன்படுத்தப்படும். இது புதிய மின் உற்பத்தித் திறனுக்கான தேவையை பாதியாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ குறைக்கக்கூடும். நிலையான அடிப்படை மின்சுமை தேவைப்படும் நெடுஞ்சாலைப் பாதைகள் மற்றும் நகர்ப்புற மையங்களுக்கு, தேவை மையங்களுக்கு அருகில் அமைந்துள்ள நுண் மட்டு அணு உலைகள் (micro modular nuclear reactors), வானிலையைச் சாராத ஒரு தீர்வை வழங்குகின்றன.




மேலும், ஒரு பின்தொடர் சவாலும் உள்ளது. கோடிக்கணக்கான மின்சார வாகனங்களின் மின்கலன்கள் காலப்போக்கில் அவற்றின் ஆயுட்காலத்தின் முடிவை எட்டும். ஆனால், இந்தியாவில் தேவையான அளவிற்கு மறுசுழற்சி உள்கட்டமைப்பு இன்னும் இல்லை. அது இல்லாமல், இந்த மாற்றம் ஒரு ஆற்றல் நெருக்கடியைத் தீர்க்கும் அதே வேளையில், ஒரு புதிய கழிவு நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது.


எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்


மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நான்கு விஷயங்கள் உள்ளன. தேசிய மின்சாரக் கொள்கையின் வரைவில் மின்சார வாகனங்களுக்கான (EV) தேவை குறித்த கணிப்புகள் அடங்கியுள்ளன. இருப்பினும், இந்தக் கணிப்புகள் இன்னும் திறன் திட்டமிடலுக்கு வழிகாட்டவில்லை. 2047-ம் ஆண்டுக்குள் 30%, 50%, மற்றும் 100% வாகனக் குழும மின்மயமாக்கலை மாதிரியாக்கும்போது, மின்சார வாகனச் சுமையை ஒரு முதன்மைக் காரணியாக மாற்றுவது இத்துறைக்குத் தெளிவைத் தரும். அனைத்து புதிய உள்கட்டமைப்புகளுக்கும் உபகரணத் தர மட்டத்தில் திறன்-மின்னேற்றி ஆற்றல் (Smart-charging capability) கட்டாயமாக்கப்பட வேண்டும்.


மின்சார கனரக வானங்கள் வணிகரீதியான அளவை எட்டுவதற்கு முன்பு, தங்க நாற்கரம் (Golden Quadrilateral) மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்களுக்கு (Dedicated Freight Corridors) ஒரு கூட்டு ஆற்றல்-வரைபடப் பயிற்சி (joint power-mapping exercise) தேவைப்படுகிறது. போக்குவரத்து, மின்சாரம் மற்றும் விநியோக நிதித் துறை ஆகியவற்றை இணைக்கும் ஒரு அமைச்சகங்களுக்கு இடையேயான செயல்முறை, இந்த அமைப்பின் எந்தப் பகுதியும் தனித்துத் திட்டமிடவில்லை என்பதை உறுதி செய்யும். மேலும், மின்சார வாகனத் தயார்நிலை அளவுகோல்களுடன் சீர்திருத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் (Revamped Distribution Sector Scheme (RDSS)) மூலம் விநியோக நிறுவனங்களின் நிதியை வலுப்படுத்துவது, இறுதிநிலை விநியோகத்தைச் சாத்தியமாக்குவதற்கு அவசியமாகும்.


இந்த வாரம் பாட்னாவில் மின்சார ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுக்கும் பயணி சரியான முடிவை எடுக்கிறார். திட்டமிடல் இந்த இலட்சியத்திற்கு ஈடுகொடுக்கிறதா என்பதுதான் கேள்வி. இந்தியாவின் மின்சார வாகன மாற்றம் தவிர்க்க முடியாதது. இதனை நிலைத்திருக்கச் செய்யும் மின் கட்டமைப்பை உருவாக்குவதே தற்போதைய பணியாகும்.


காவ்யா வத்வா ஒரு ஆற்றல் மற்றும் மூலோபாயப் பாதுகாப்புக் கொள்கை ஆய்வாளர் ஆவார்.


Original Link: India’s EV ambition needs a grid strategy to match 


Share:

வளரிளம் பருவ உறவுகள் 'குற்றங்களாக' மாறும்போது : போக்சோ (POCSO) சட்டத்தை சீரமைக்க வேண்டியதன் அவசியம். -ரோகிணி நாராயணன்

தற்போதுள்ள சட்ட வடிவம், சுரண்டல் நோக்கிலான பாலியல் அத்துமீறல்களையும், வளரிளம் பருவத்தினரின் காதல் உறவுகளையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுவதில்லை. இதனால், சட்டம் இன்னும் சரியாக அங்கீகரிக்காத சில இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நீதிமன்றங்கள் தள்ளப்படுகின்றன.


குழந்தைகளைப் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காக, கடுமையான மற்றும் தெளிவான விதிகளுடன் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (Protection of Children from Sexual Offences Act, 2012 (POCSO)) கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தற்போது நீதிமன்றங்களுக்கு வரும் பல சிக்கலான வழக்குகள், இந்தச் சட்டத்தின் கடுமையான விதிகளுக்குள் பொருந்தாத வளரிளம் பருவத்தினரின் காதல் உறவுகள் சார்ந்தவையாக உள்ளன.

சட்டத்தின்படி 'பாதிக்கப்பட்டவர்' என்று கருதப்படும் ஒரு பெண், எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை, நான் எந்தச் சட்டப் பூர்வமான நடவடிக்கையையும் விரும்பவில்லை என்று கூறி, குற்றவியல் நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்க்கும்போது, குற்றவியல் சட்டம் என்ன செய்ய வேண்டும்?


ஹர்மீத் சிங் vs மாநிலம் (டெல்லி தேசிய தலைநகரப் பகுதி) (Harmeet Singh v. State (NCT of Delhi)) என்ற வழக்கின் விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 17-வயது சிறுமி, தற்போது தகுந்த வயதை அடைந்து, இந்த வழக்கின் மனுதாரரையே (Petitioner) திருமணமும் செய்து கொண்டு, இப்போது ஒரு குழந்தைக்குத் தாயாகவும் உள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்தது. இதே போன்ற ஒரு பார்வையை சமீபத்திய மாதங்களில் பம்பாய் மற்றும் மேகாலயா உயர்நீதிமன்றங்களும் ‘Vijay Laxman Rotke’ மற்றும் ‘Shri Phrangbatnam Kharkongor’ ஆகிய வழக்குகளில் எடுத்துள்ளன. அதாவது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டம் எந்த மாதிரியான பாலியல் சுரண்டல்களைத் தடுக்க உருவாக்கப்பட்டதோ, அந்த வகையான சுரண்டல்கள் இந்த வழக்குகளின் பின்னணியில் இல்லாததால், நீதிமன்றங்கள் அவற்றின் மீதான சட்டநடவடிக்கைகளை ரத்து செய்தன.


வளரிளம் பருவத்தினரின் சிக்கலான காதல் மற்றும் நட்புரீதியான உறவுகளின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள்மீது ஒரே மாதிரியான சட்டத்தை ஒரே வரியில் திணிப்பது குறித்து நீதிமன்றங்களுக்கு இடையே அதிகரித்து வரும் கவலையை இந்தத் தீர்ப்புகள் வெளிப்படுத்துகின்றன.


மிகவும் கவனமான நீதித்துறை அணுகுமுறை


வழக்குடன் தொடர்புடைய இருதரப்பினரும் பின்னாளில் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் சட்டபூர்வ அணுகுமுறை கடுமையான சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஏனெனில், இது மறைமுகமாகக் குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பதாகவும், பின்னாளில் கட்டாய உறவுகளை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துவிடலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் பின்னாளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காகவே, அனைத்து இளம்பருவ உறவுகளையும் தானாகவே பாதிப்பில்லாதவை என்று கருதிவிட முடியாது.


ஹர்மீத் சிங் (Harmeet Singh) வழக்கின் தீர்ப்பை முக்கியமானதாக மாற்றுவது எதுவென்றால், அது ஒரு சமநிலையான மற்றும் கொள்கைரீதியான அணுகுமுறையைக் கண்டறிய முயல்கிறது. டெல்லி உயர்நீதிமன்றம், திருமணம் செய்துகொள்வதையோ அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதையோ மட்டுமே வழக்கு நிவாரணத்திற்கான போதுமான காரணங்களாகக் கருதவில்லை. மாறாக, நீதிமன்றங்களுக்கு அது தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது :

முதலாவதாக, சட்டபூர்வமாகப் பாதிக்கப்பட்ட நபர் முற்றிலும் தனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் செயல்படுகிறாரா, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறாரா, மற்றும் அவர் எந்தவொரு கட்டாயத்திற்கும், தவறான வழிகாட்டுதலுக்கும் அல்லது ஏமாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும். இரண்டாவதாக, நீதிமன்றங்கள் வழக்கின் உண்மைகளை கவனமாக ஆராய வேண்டும் — அதாவது அந்த உறவு சுரண்டல்மிக்கதாக இல்லாமல் இருதரப்பு சம்மதத்துடன் இருந்ததா, வன்முறை அல்லது கொடுமை நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் ஏதேனும் உள்ளதா, மற்றும் இருதரப்பினருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் எதைக் காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும். மூன்றாவதாக, ஒன்றாக வாழ்வது அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது போன்ற பிற்கால குடும்ப ஏற்பாடுகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளக்கூடாது; மாறாக அவை உண்மையானவைதான் என்று நீதிமன்றத்திற்கு நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும்.


கட்டமைப்புரீதியான பெரும் இடைவெளி


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act) நோக்கம் மிகவும் தெளிவானது. ஏனெனில், சுரண்டல் என்பது எப்போதும் வெளியில் தெரிவது இல்லை, மேலும் ஒரு குழந்தை தனக்கு நேர்ந்த தீங்கை வெளிப்படுத்தும் திறனை மட்டுமே இந்தச் சட்டம் நம்பியிருக்க முடியாது. இருப்பினும், தற்போதைய சட்டம் சுரண்டல் நோக்கத்துடன் நடக்கும் துஷ்பிரயோகத்தையும், பதின்ம வயதினருக்கு இடையேயான உறவுகளையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இதனால், சட்டம் அங்கீகரிக்க மறுக்கும் இந்த இடைவெளியை நீதிமன்றங்கள் தங்களின் சொந்தப் பொறுப்பில் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.


தற்போதைய சூழ்நிலையை மேலும் கவனிக்கத்தக்கதாக மாற்றுவது என்னவென்றால், 2011-ஆம் ஆண்டின் போக்சோ சட்ட வரைவு (POCSO Bill), 16 முதல் 18-வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரின் சம்மதத்துடன் கூடிய உறவுகளுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பரிந்துரைத்தது. அதில், அந்தச் சம்மதமானது கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல், தேவையற்ற செல்வாக்கு அல்லது சம்மதம் தெரிவிக்க முடியாத நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றம் வேறு ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. சட்டப்படி 18-வயதுக்குட்பட்ட அனைவருமே 'குழந்தை' என்று வரையறுக்கப்பட்டவுடன், சம்மதம் என்பது சட்டரீதியாகத் தனது முக்கியத்துவத்தை முற்றிலும் இழந்துவிட்டது. இது கொடூரமான துஷ்பிரயோக வழக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காதல் உறவு வழக்குகளிலும் இதே நிலையை உருவாக்குகிறது.


சட்டத்தின் அடுத்தகட்ட  நடவடிக்கை என்னவாக இருக்கும்?


நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை அதிக உணர்வுத்திறனுடன் கையாளத் தொடங்கியிருப்பது ஊக்கமளிக்கிறது. இருப்பினும், நீதிமன்றத்தின் தலையீடு என்பது வழக்கமாக ஒரு நபர் குற்றவியல் வழக்கின் நிச்சயமற்ற தன்மையையும் சுமையையும் எதிர்கொண்ட பிறகே கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், அவர்களுக்கு நீதிமன்ற நிவாரணம் கிடைப்பதற்கு முன்பே அந்த இளம் வயதினரின் வாழ்க்கையை மாற்றிவிடக்கூடும். இந்தச் சிக்கல் ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனை என்றால், இதற்கான தீர்வும் நாடாளுமன்றச் சட்டங்கள் மூலமாகவே வழங்கப்பட வேண்டும்.


முதலாவதாக, நாடாளுமன்றம் மிகவும் குறுகிய வரம்பிற்குட்பட்ட 'நெருங்கிய வயது விதிவிலக்கு' (Close-in-age exception) என்ற ஒரு அம்சத்தைப் பரிசீலிக்கலாம். உத்தரப்பிரதேச மாநிலம் vs அனுருத் (State of UP v. Anurudh) என்ற வழக்கில், இருதரப்பு சம்மதத்துடன் கூடிய உண்மையான பதின்பருவ காதல் உறவுகளுக்காகச் சட்டத்தில் ஒரு "ரோமியோ மற்றும் ஜூலியட்" விதியை (Romeo and Juliet clause) கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அரசியலமைப்பு அனுபவங்களும் இதில் வழிகாட்டுகின்றன. தென் ஆப்பிரிக்காவின் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான டெடி பியர் கிளினிக் (Teddy Bear Clinic for Abused Children) வழக்கில், அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதின்பருவத்தினருக்கு (Minors) இடையிலான சம்மதத்துடனான நெருக்கத்தைக் குற்றமாக்கும் சட்டங்களை ரத்து செய்தது. ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பதின்பருவ உறவுகளின் முக்கியத்துவத்தையும், முழுமையான குற்றமயமாக்கல் ஒருவருடைய கண்ணியத்திற்கு ஏற்படுத்தும் தீங்கையும் நீதிமன்றம் அங்கீகரித்தது. இந்தியா இத்தகைய ஒரு கட்டமைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாவிட்டாலும், அதற்குப் பின்னால் உள்ள கவலையை நாம் புறக்கணித்துவிட முடியாது.


இரண்டாவதாக, ஹர்மீத் சிங் (Harmeet Singh) வழக்கில் காணப்பட்டதைப் போன்ற விரிவான ஆழமான நீதித்துறை மறுஆய்வு என்பது பல ஆண்டுகள் வழக்கு நடந்த பிறகுதான் கிடைக்க வேண்டும் என்பதில்லை. முழுமையான குற்றவியல் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே — பரஸ்பர சம்மதம், இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம், சுரண்டல் கூறுகள் ஏதேனும் உள்ளதா மற்றும் அதன் பின்னணிச் சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலேயே மதிப்பீடு செய்வதற்கான ஒரு பரிசீலனைத் தரநிலையை நாடாளுமன்றம் அல்லது காவல்துறையின் வழிகாட்டுதல்கள் உருவாக்கலாம்.


மூன்றாவதாக, எந்தவொரு சுரண்டலும் இல்லாத ஒருசில குறிப்பிட்ட வழக்குகளில், அதற்கான தீர்வு எப்போதும் குற்றவியல் விசாரணையாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாகக் கடுமையான குற்றவியல் தண்டனையைப் பயன்படுத்துவதைவிட, சிறுவர் நல நடவடிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் வயதுக்கு ஏற்ற வழிகாட்டுதல்களை வழங்குவது சில நேரங்களில் அவர்களுக்குச் சிறந்த பாதுகாப்பையும் மறுவாழ்வையும் அளிக்கக்கூடும் என்கின்றனர்.


நீதிமன்றங்களால்கூட இறுதிப் பூர்வமாக விடையளிக்க முடியாத ஒரு கேள்வி


தனிப்பட்ட வழக்குகளில், மிகக் கடுமையான மற்றும் பொதுவான சட்டங்களின் பிடியிலிருந்து எழும் கடுமையான பாதிப்புகளை நீதிமன்றங்கள் தளர்த்தலாம். ஆனால், பதின்ம வயதினரின் உறவுகளையும், சுரண்டல் நோக்கத்துடனான பாலியல் வன்கொடுமைகளையும், சட்டம் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற பெரிய கேள்விக்கு நீதிமன்றங்களால் மட்டுமே தீர்வு கண்டுவிடமுடியாது. பாராளுமன்றம், இந்தச் சிக்கலை நேரடியாகக் கையில் எடுத்துச் சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை, நீதிமன்றங்கள் இதுபோன்ற கடினமான வழக்குகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


ரோகிணி நாராயணன், டெல்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் (Advocate) ஆவார்.





Share:

தெருநாய்களுக்கு உணவளிப்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது: வழக்கின் பின்னணி குறித்து… -அமால் ஷேக்

இந்த வழக்கு முதலில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வு கடந்த 2025- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் உள்ள பொது இடங்களில் உள்ள தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களுக்கு மாற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வருடமாகப் பொது பாதுகாப்பு, விலங்குகள் நலன் மற்றும் இந்தியாவின் தெருநாய்கள் மக்கள்தொகையை நிர்வகிப்பதில் நீதிமன்றத்தின் தலையீடு ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு தேசிய விவாதமாக மாறியுள்ள, இந்தத் தெருநாய்கள் தொடர்பான Suo motu (நீதிமன்றமாகவே முன்வந்து எடுத்த வழக்கு) விவகாரத்தில், உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது.



இந்த வழக்கு தொடரப்படுவதற்கான உடனடிக் காரணம் என்ன?


டெல்லியில் நாய் கடித்ததாலும் மற்றும் ரேபிஸ் (Rabies) தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினாலும் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தி அறிக்கையைக் கவனித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தத் தெருநாய்கள் பிரச்சினையைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் நாய் தாக்குதல்களாலும், ரேபிஸ் மரணங்களாலும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், தெருநாய்கள் பிரச்சினை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியது.


இந்த வழக்கு முதலில் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்த அமர்வு டெல்லி முழுவதும் உள்ள நகராட்சி அதிகாரிகளுக்குத் தெருநாய்களைப் பொது இடங்களிலிருந்து அகற்றி காப்பகங்களுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. மேலும், பொதுமக்கள் நாய் தாக்குதல்கள் பற்றிய பயமின்றி சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, அந்த நாய்களை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது என்றும் கூறியது.


இந்த உத்தரவு விலங்கு நல அமைப்புகள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை பெற்றது. இந்த வழிகாட்டுதல்கள் 2023-ஆம் ஆண்டின் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு (Animal Birth Control Rules (ABC Rules)) முரணானது என்று அவர்கள் கூறினர். இந்த விதிகளின்படி, தெருநாய்கள் எந்தப் பகுதியிலிருந்து பிடிக்கப்பட்டதோ, அதே பகுதியிலேயே அவை கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு மீண்டும் விடப்பட வேண்டும்.


பின்னர், இந்த உத்தரவைத் திரும்பப்பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த விஷயம் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான பெரிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் வைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் பின்னர் முந்தைய கடுமையான உத்தரவுகளைத் தளர்த்தி, விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) விதிகளின்கீழ் தற்போதுள்ள, கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கும் கொள்கையையே மீண்டும் நடைமுறைப்படுத்தியது. அதே நேரத்தில், வெறிநாய் கடித்த அல்லது மிகவும் ஆக்ரோஷமான நாய்களை மட்டும் காப்பகங்களில் வைக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது. மேலும், இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பதையும் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.


முந்தைய விசாரணைகள்


நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மற்றும் குடியிருப்பு சங்க அமைப்புகளும், குறிப்பாகப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அதிகரித்து வரும் நாய் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டதாக வாதிட்டனர். குழந்தைகளும் முதியவர்களும் தொடர்ந்து பாதிக்கப்படும்போது, இந்தச் சிக்கலை வெறும் விலங்கு நலப் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது என்று அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


விலங்கு நல அமைப்புகள் இதற்கு நேர்மாறான வாதத்தை முன்வைத்தன. தெருநாய்களைப் பெரிய அளவில் அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது நிலையான தீர்வும் அல்ல, பயனுள்ளதும் அல்ல என்று அவர்கள் கூறினர். நாய்கள் பொதுவாகத் தங்களின் எல்லைகளை வகுத்து வாழும் விலங்குகள் என்பதால், ஒரு பகுதியிலிருந்து கருத்தடை செய்யப்பட்ட நாய்களை அப்புறப்படுத்தினால், அந்த இடத்திற்குள் கருத்தடை செய்யப்படாத புதிய நாய்கள் நுழைந்துவிடும். இது காலப்போக்கில் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


நாளடைவில், இந்த வழக்கின் விசாரணையானது நகராட்சி அமைப்புகளும் மாநிலங்களும் எவ்வாறு நாய்களுக்கான கருத்தடை, காப்பகங்கள் மற்றும் தடுப்பூசி கொள்கைகளைச் செயல்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்டது.




கடந்த நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், நீதிமன்றம் மற்றொரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களிலிருந்து தெருநாய்களை அப்புறப்படுத்துமாறு மாநிலங்களுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் (National Highways Authority of India (NHAI)) உத்தரவிட்டது. மேலும், இந்த வளாகங்களைச் சுற்றி வேலி அமைக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டது.


விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் என்ன சொல்கின்றன?


விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள், 2023 (Animal Birth Control Rules (2023)), தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழிகளாகக் கருத்தடை மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி போடுவதை முதன்மைப்படுத்துகின்றன. மேலும், இந்த விதிகளின்படி, கருத்தடை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் அவை பிடிக்கப்பட்ட அதே பகுதியிலேயே கொண்டு போய் விடவேண்டும். ஏனெனில், தெருநாய்கள் இயற்கையாகவே தங்கள் எல்லைகளை வகுத்து வாழும் குணம் கொண்டவை ஆகும்.


இந்த விதிகள் தெரு நாய்களை கண்மூடித்தனமாக கொல்வதற்கோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதற்கோ அனுமதிப்பதில்லை. வெறிநாய்க்கடி நோய் (Rabies) பாதித்த, குணப்படுத்த முடியாத நோய்வாய்ப்பட்ட அல்லது காயம் அடைந்த விலங்குகளுக்கு மட்டுமே கருணைக்கொலை (Euthanasia) செய்ய அனுமதிக்கப்படுகிறது.


இந்த வழக்கு சில அரசியலமைப்புச் சட்டச் சிக்கல்களையும் எழுப்பியுள்ளது. விலங்கு நல அமைப்புகள், உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று குடிமக்களைக் கேட்டுக்கொள்ளும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு-51A(g)-ஐ (அடிப்படை கடமை) ஆதாரமாக நம்பியிருந்தன. அதேநேரத்தில், பொதுமக்கள் மற்றும் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய மனுதாரர்கள், கட்டுப்பாடற்ற தெரு நாய்களின் பெருக்கம் குடிமக்களின் பிரிவு-19 (சுதந்திரமாக நடமாடும் உரிமை) மற்றும் பிரிவு-21 (பாதுகாப்பாக வாழும் உரிமை) ஆகியவற்றின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாக வாதிட்டனர்.


Original Link: Supreme Court to announce ruling on feeding stray dogs: Recalling the case.


Share:

இந்திய நீதிமன்றங்கள் ஏன் தாமதமாகச் செயல்படுகின்றன? : நீதிமன்ற மேலாளர்களின் தேவை குறித்து… -ஷாகுன் சூர்யம் மற்றும் லவீஷ் பண்டாரி

இந்திய நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், தொழில்முறை நீதிமன்ற மேலாளர்களைக் கொண்டு நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துமாறு மாநில அரசுகளுக்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்திய நீதிமன்றங்களில் ஏற்படும் இந்தத் தாமதங்கள், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு பொதுவான மற்றும் அடிக்கடி விவாதிக்கப்படும் பிரச்சனையாகும். இதனால் மக்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட இழப்புகளுடன், இது நாட்டின் பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தத் தாமதங்கள் முதலீட்டுப் பணத்தை முடக்குகின்றன, வணிகச் செலவுகளை அதிகரிக்கின்றன, புதிய முதலீடுகளை முடக்குகின்றன மற்றும் பொது வளங்களின் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விளைவுகளை துல்லியமாக அளவிடும் ஆய்வுகள் குறைவாகவே இருந்தாலும், சில மதிப்பீடுகளின்படி, இந்தத் தாமதங்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) சுமார் 1.5 முதல் 2 சதவீதம் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்கின்றனர்.


இந்திய நீதித்துறை அமைப்பு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தப் பிரச்சனையின் வீரியம் தெளிவாகத் புரிகிறது.  மேலும், இது காலப்போக்கில் மோசமடைந்து வருவதாகத் தோன்றுகிறது. வழக்குகள் நீதிமன்றத்திற்குள் வரும் விதம், அவை கையாளப்படும் முறை மற்றும் அது சார்ந்த பிற நிறுவனங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல ஒன்றோடொன்று தொடர்புடைய காரணங்களால் இந்தத் தாமதங்கள் ஏற்படுகின்றன. தெளிவற்ற முறையில் இயற்றப்படும் சட்டங்கள், ஊழியர்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் திறமையற்ற நடைமுறைகள் போன்ற பல காரணிகளே இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


இந்தச் செயல்முறையில் உள்ள ஒரு முக்கியப் பிரச்சனை என்னவென்றால், நீதிமன்றங்களுக்குத் தேவையான தொழில்முறை நிர்வாக ஆதரவு தொடர்ந்து தட்டுப்பாடாகவே இருப்பதுதான். நீதிமன்றங்கள் என்பது வெறும் தீர்ப்புகளை வழங்கும் இடங்கள் மட்டுமல்ல, அவை முறையான நிர்வாகம் தேவைப்படும் பெரிய மற்றும் சிக்கலான அமைப்புகளாகும். நீண்டகாலமாக இந்த நிர்வாகப் பணிகளில் பெரும்பாலானவற்றை நீதிபதிகளே கவனித்து வருகின்றனர். ஒரு நிர்வாக ஆதரவு கிடைத்தால், அது நீதிபதிகள் சிறந்த முடிவுகளை எடுக்கவும், அவர்களின் நேரத்தைச் சேமிக்கவும், ஒட்டுமொத்த நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும் பெரிதும் உதவும் என்கின்றனர்.


இந்தத் துறைசார்ந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் 13-வது நிதி ஆணைய (13th Finance Commission) 2010–2015 காலத்திலிருந்தே தொடங்கின. நீதிபதிகள் தங்களின் நீதித்துறை சாராத பிற வேலைகளால் பெரும் பணிச்சுமைக்கு ஆளாகியிருப்பதை இந்த ஆணையம் சுட்டிக்காட்டியது. எனவே, மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்குப் பயிற்சி பெற்ற தொழில்முறை நீதிமன்ற மேலாளர்களைக், குறிப்பாக, வணிக மேலாண்மை முதுகலை (Master of Business Administration (MBA)) பட்டதாரிகளைக் கொண்ட ஒரு தனிப்பிரிவை உருவாக்க இந்த ஆணையம் பரிந்துரைத்தது. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.300 கோடி நிதியையும் ஒருமுறைக்கான மானியமாக வழங்கியது.


இந்தத் திட்டத்தின் நோக்கம் மிகவும் எளிமையானது: நீதிமன்ற மேலாளர்கள் வழக்குகளை நிர்வகித்தல், மனித வளம், உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளைக் கண்காணித்தல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்வர்.  இதன் மூலம் நீதிபதிகள் தங்களின் முக்கியக் கடமையான வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குவதில் முழு கவனம் செலுத்த முடியும். இருப்பினும், நடைமுறையில் இந்தத் திட்டத்தின் செயலாக்கமானது அனைத்து இடங்களிலும் சீராக இல்லாமலும், மிகவும் வரம்புக்குட்பட்டதாகவுமே இருந்தது.


ஐந்தாண்டு கால நிதியுதவி காலத்தில், ஒதுக்கப்பட்ட நிதியில் மிகக் குறைந்த பகுதியே பயன்படுத்தப்பட்டது.  சில ஆதாரங்களின்படி இது வெறும் 13 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக இருந்தது. ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் 'நீதிமன்ற மேலாளர்களை' நியமித்தன, ஆனால், அவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் அல்லது தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டனர். 13-வது நிதி ஆணையத்தின் காலம் மார்ச் மாதம் 2015-ஆம் ஆண்டில் முடிவடைந்தபோது, நாடு முழுவதும் இது போன்ற பதவிகளில் சுமார் 128 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தன.


ஒன்றிய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டு, அதன் நிதிச்சுமை மாநில அரசுகளின்மீது சுமத்தப்பட்ட பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அந்தந்த உயர்நீதிமன்றங்களின் பொறுப்பில் விடப்பட்டது. பல இடங்களில், இதற்கெனத் தனியாக நிதி ஒதுக்கப்படாததால், இந்தப் பதவிகள் முற்றிலும் கைவிடப்பட்டன.


இருப்பினும், இந்தத் திட்டத்தின் தோல்விக்கு நிதிப்பற்றாக்குறை மட்டுமே காரணம் அல்ல, அதற்குப் பல காரணங்கள் இருந்தன. கட்டமைப்புரீதியாக, இந்தத் திட்டம் ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றப்படவே இல்லை. இதனால், ஒன்றிய அரசின் நிதியுதவி ஆதரவு நிறுத்தபட்டதும் இந்தத் திட்டம் பலவீனமடைந்தது. நிறுவனரீதியாக, இதற்கு எதிர்ப்புகளும் நீடித்தன: நீண்டகாலமாகத் தங்களின் அதிகார வரம்பிற்குள் இருந்த நிர்வாகப் பொறுப்புகளை விட்டுக்கொடுக்க பல நீதிபதிகள் விரும்பவில்லை. மேலும், நீதிமன்றப் பணியாளர்களால்கூட இந்த நீதிமன்ற மேலாளர்கள் பெரும்பாலும் ஒரு வெளிநபராகவே நடத்தப்பட்டனர்.


தெளிவற்ற பொறுப்புகள் மற்றும் தரப்படுத்தப்பட்ட செயல்திறன் அளவீடுகள் இல்லாதது போன்ற வடிவமைப்பு குறைபாடுகளால் இந்தப் பிரச்சனைகள் மேலும் மோசமடைந்தன. தொழில்முறைப் பயிற்சிக்கும் நிறுவனத் தேவைகளுக்கும் இடையே இருந்த இடைவெளி மற்றொரு சவாலாக இருந்தது. நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுவான மேலாண்மைப் பின்னணியைக் கொண்டிருந்தார்களே தவிர, நீதிமன்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றிய புரிதல் அவர்களுக்குக் குறைவாகவே இருந்தது. இதனால், நீதித்துறைப் பணிகளுக்கு அவர்களால் திறம்பட ஆதரவளிக்க முடியாமல் போனது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் சேர்ந்து, இந்த சீர்திருத்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்குத் தேவையான நிறுவன ஆதரவு கிடைக்காமல் போனதால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.


இதன் விளைவாக, நீதிபதிகள் தங்களது கணிசமான நேரத்தை நிர்வாகப் பணிகளிலேயே தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளது. இது வழக்குகள் முடிவுக்கு வருவதை தாமதப்படுத்துவதோடு, தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. ஆகஸ்ட் மாதம் 2018-ஆம் ஆண்டில் நீதிமன்ற மேலாளர்கள் குறித்து முதன்முதலில் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கிய இந்திய உச்சநீதிமன்றம், தற்போது இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. மே மாதம் 2025-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவில், முந்தைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது குறித்து நீதிமன்றம் தனது கவலையைத் தெரிவித்தது. மேலும், அனைத்து உயர்நீதிமன்றங்களும் மூன்று மாதங்களுக்குள் தங்களது சேவை விதிகளை உருவாக்க வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க அடுத்த மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


நீதிபதிகள் தொடர்ந்து நிர்வாகப் பணிகளையும் சேர்த்து கவனித்து வரும் வரை, டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிற சீர்திருத்தங்களின் பலன்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். நீதிமன்ற நிர்வாகப் பணிகளுக்கென்று ஒரு வலுவான மற்றும் நிரந்தரமான நீதிமன்ற மேலாளர்கள் குழுவை உருவாக்குவதும், நீதித்துறைப் பணியை நிர்வாகப் பணியிலிருந்து தெளிவாகப் பிரிப்பதும் மிக எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இது நீதித்துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கான கட்டமைப்பு மற்றும் காலக்கெடுவை உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ளது. மாநிலங்களும் உயர்நீதிமன்றங்களும் இந்த மாற்றங்களை நிரந்தரமாக்கி, நீதிமன்ற நிர்வாகத்தை ஒரு தற்காலிக அமைப்பிலிருந்து ஒரு தொழில்முறை அமைப்பாக மாற்றியமைக்குமா என்பதுதான் தற்போதுள்ள உண்மையான சிக்கல் ஆகும்.


லவீஷ் பண்டாரி, புது தில்லியில் உள்ள சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையம் (CSEP) என்ற கொள்கை ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும், மூத்த ஆய்வாளராகவும் உள்ளார். ஷாகுன் சூர்யாம், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையம் (CSEP) அமைப்பின் தலைவர் அலுவலகத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.



Original Link: Why India’s courts are slow: the need for court managers.


Share:

பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின் பின்னணியில் குறைமின்கடத்தி முன்னெடுப்பு - சக்தி பிரசாத் ஸ்ரீசந்தன்

மேம்பட்ட குறைமின்கடத்திகளைத் தயாரிக்கத் தேவையான, அதி-புற ஊதாக் (extreme ultraviolet (EUV)) அச்சுக்கலை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே நிறுவனம் ASML ஆகும்.


பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததற்குக் காரணம், அது வெறும் ராஜதந்திரரீதியான அடையாளமாக இருந்தது மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்நுட்ப  இலக்குகளுக்கும் குறைமின்கடத்திச் சூழலமைப்பில் டச்சு ஆதிக்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்புமே ஆகும். குறைக்கடத்திகள், பொருளாதாரப் போட்டித்திறன், இராணுவத் திறன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இறையாண்மை ஆகியவற்றை வடிவமைக்கும் புதிய புவிசார் அரசியல் அதிகார மையமாக  மாறியுள்ள ஒரு காலகட்டத்தில் இந்தப் பயணம் அமைந்தது.

உருவாகிவரும் இந்தக் கூட்டாண்மையில், உலகளாவிய சிப் சூழலமைப்பில் ஏறக்குறைய நிலை வகிக்கும் டச்சுத் தொழில்நுட்ப நிறுவனமாக ASML திகழ்கிறது. அதிநவீன குறைக்கடத்திகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும், மிகவும் நுட்பமான அமைப்புகளான 'அதி-புற ஊதாக் கதிர் அச்சுக்கலை இயந்திரங்களை' (lithography machines) உற்பத்தி செய்யும் உலகின் ஒரே நிறுவனம் ASML ஆகும். அதன் இயந்திரங்கள் இல்லையேல், அதிநவீன சிப்களின் உற்பத்தி என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகிவிடும். இது, ஒப்பீட்டளவில் ஒரு சாதாரண ஐரோப்பிய சக்தியாகத் திகழ்ந்த நெதர்லாந்தை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் ஒரு முக்கிய நாடாக  உருமாற்றியுள்ளது.


இந்தியா இந்த ராஜதந்திரத்தைப் புரிந்துகொண்டுள்ளது. 'மேக் இன் இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் 'இந்தியா குறைமின்கடத்தி திட்டம்' போன்ற முன்முயற்சிகளின்கீழ், நாட்டின் பரந்த தொழில்நுட்பத் தன்னிறைவுக்கான வளர்ச்சிக்கு குறைக்கடத்திகள் முக்கியமானவை என்பதை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. உற்பத்தி ஆலைகள், பொதிப்படுத்தும் வசதிகள், சிப் வடிவமைப்பு மையங்கள் மற்றும் குறைமின்கடத்தி ஆராய்ச்சி உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஒரு உள்நாட்டு குறைமின்கடத்தி சூழலமைப்பை உருவாக்குவதற்காக, இந்தியா பில்லியன் கணக்கான டாலர்களை மானியங்களாகவும் சலுகைகளாகவும் ஒதுக்கியுள்ளது. உதாரணமாக, குஜராத்தின் தோலேராவில் முன்மொழியப்பட்டுள்ள, $11 பில்லியன்   முதலீட்டில் உருவாக்கபடவுள்ள டாடா குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை, உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியின் மேம்பட்ட உற்பத்தித் துறையில் நுழைவதற்கான இந்தியாவின் இதுவரை இல்லாத மிகவும் முக்கியமான  முயற்சியாக இருந்து வருகிறது.


அமெரிக்க-சீன தொழில்நுட்பப் போட்டி, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போது ஏற்பட்ட விநியோகச் சங்கிலிப் பாதிப்புகள் போன்றவற்றின் காரணமாக, உலகளாவிய குறைமின்கடத்தித் தொழில் ஒரு ஆழமான மறுசீரமைப்பு பணியை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக, ASML உள்ளிட்ட டச்சு நிறுவனங்கள் தற்போது சீனாவுக்கான ஏற்றுமதியில் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக, பரந்த "சீனா மற்றும் மற்ற நாடுகள்” (China-plus-one) என்ற கட்டமைப்பிற்குள், ஜனநாயக, அரசியல்ரீதியாக நிலையான மற்றும்  ராஜதந்திரரீதியாக இணைந்த ஒரு மாற்று உற்பத்தி மையமாக இந்தியா இருக்கிறது. டச்சு குறைமின்கடத்தி நிறுவனங்கள் சீனாவிற்கு வெளியே பல்வகையான வாய்ப்புகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அதேநேரத்தில் இந்திய அதிகாரிகள், இந்தியாவை ஒரு நீண்டகால உற்பத்தி மற்றும் புத்தாக்கத் தளமாகக் (innovation base) கருதுமாறு நெதர்லாந்தை ஊக்குவிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


தற்போது முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெல்ட்ஹோவனில் உள்ள ASML தலைமையகத்திற்கு வருகை தந்தார். அங்கு, லித்தோகிராபி தொழில்நுட்பங்கள் (lithography technologies) மற்றும் இந்தியாவின் குறைக்கடத்தி இலக்குகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடியின் பயணத்தின் போது, தோலேராவில் அமையவிருக்கும் தனது 300 மிமீ (12-அங்குல) குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை அமைப்பதற்கும், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், Tata Electronics நிறுவனம் ASML உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்குகளில் ஒரு  முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இருப்பினும், இந்தக் கூட்டாண்மையின் முக்கியத்துவம் வன்பொருள் மற்றும் உற்பத்திக்கு அப்பாற்பட்டது. ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள், ஒளியியல் தொகுப்புகள், துல்லியப் பொறியியல் நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட வடிவமைப்புத் திறன்களை உள்ளடக்கிய குறைக்கடத்திப் புத்தாக்கத்தின் ஒரு முழுமையான சூழலமைப்பை நெதர்லாந்து இந்தியாவிற்கு வழங்குகிறது. இது போன்ற ஒத்துழைப்பு, இந்தியா குறைந்த விலை ஒருங்கிணைப்புத் தளமாக மாறும் தவறைத் தவிர்க்க உதவும். மாறாக, சிப் வடிவமைப்பு, குறைமின்கடத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மேம்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைந்த உற்பத்தி அமைப்புகள் ஆகியவற்றை நோக்கி மதிப்புச் சங்கிலியில் முன்னேறுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, பிரதமர் மோடியின் இந்தப் பயணம், வர்த்தகம் மற்றும் அரசியலை மையமாகக் கொண்ட பாரம்பரிய ராஜதந்திரத்திலிருந்து, “தொழில்நுட்ப ராஜதந்திரம்” (technology diplomacy) என்று அழைக்கப்படக்கூடிய ஒன்றை நோக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கையின் வளர்ச்சியை வெளிக் காட்டுகிறது.

எச்சரிக்கையாக இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. குறைமின்கடத்தி உற்பத்தி என்பது உலகின் மிகவும் மூலதனம் தேவைப்படும் மற்றும் தொழில்நுட்பரீதியாக சிக்கலான தொழில்களில் ஒன்றாகும். மானியங்கள் மற்றும் அரசியல் ஆதரவு இருந்தபோதிலும், உள்கட்டமைப்பு இடைவெளிகள், மின்சார நம்பகத்தன்மை சிக்கல்கள், உயர் சிறப்பு வாய்ந்த உற்பத்தித் திறமையாளர்களின் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி செய்யப்படும் குறைக்கடத்தி தரப் பொருட்களைச் சார்ந்திருத்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சவால்களை இந்தியா இன்னும் எதிர்கொள்கிறது. மேலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைச் சுற்றியுள்ள ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அரசியல், ஆழமான தொழில்நுட்பப் பரிமாற்றங்களைச் சிக்கலாக்கக்கூடும். குறைக்கடத்திக் கட்டுப்பாடுகள் தொடர்பான அமெரிக்காவின் ராஜதந்திர  விருப்பங்களுடன் நெதர்லாந்து நெருக்கமாக இருந்து வருகிறது.


இருப்பினும், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவை ஆழமாக உள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியாவும் நெதர்லாந்தும் ஒன்றைஒன்று சார்ந்த இருக்கும் நாடுகளாக கருதுகின்றன. பிரதமர் மோடியின் பயணம், மேம்பட்ட தொழில்நுட்பங்களின் முதன்மை நுகர்வோராக இருப்பதிலிருந்து, உலகளாவிய குறைமின்கடத்திச் சூழலமைப்பை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கேற்பாளராக மாறுவதற்கான இந்தியாவின்  பயணத்தை  வேகப்படுத்தக்கூடும்.


கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர், ஐரோப்பிய ஆய்வுகள் மையம், சர்வதேச ஆய்வுகள் பள்ளி, ஜே.என்.யு.





Original Link: The semiconductor push behind PM Modi’s Netherlands visit.


Share:

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பிணை : கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகள் எவ்வாறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின? -அபூர்வா விஸ்வநாத்

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் விதிக்கப்பட்டுள்ள கடுமையான பிணை கட்டுப்பாடுகள் (bail restriction), அரசியலமைப்புப் பாதுகாப்புகளை விட மேலானதாக இருக்க முடியுமா என்ற சிக்கலான கேள்வி குறித்து, வெவ்வேறு நீதிமன்ற அமர்வுகளுக்கிடையே மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன.


திங்களன்று, போதைப்பொருள் சார்ந்த பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை (bail) வழங்கியதன் மூலம், கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) கீழ் உள்ள பிணைக் கட்டுப்பாடுகள், அரசியலமைப்புப் பாதுகாப்புகளைவிட மேலானதாக இருக்க முடியுமா என்ற சிக்கலான கேள்வி குறித்து, உச்சநீதிமன்றத்தின் பல்வேறு அமர்வுகள் தனித்துவமான கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள பலதரப்பட்ட நீதித்துறை அணுகுமுறைகளை உச்சநீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

"ஒரு பெரிய அமர்வு வகுத்துள்ள விகிதாச்சாரத்துடன் சிறிய அமர்வுகள் முரண்பட்டாலும், அக்கோட்பாட்டை அவற்றால் புறக்கணிக்க முடியாவிட்டால், இவ்விஷயத்தை இன்னும் பெரிய நீதிமன்ற அமர்வின் பரிசீலனைக்கு வைப்பதற்காக, மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதிக்கு இதனைப் பரிந்துரைப்பதே சரியான மற்றும் சாத்தியமான ஒரே நடவடிக்கையாகும். இரண்டு நீதிபதிகள் கொண்ட கூட்டமைப்பில் இருப்பதால், கே. ஏ. நஜீப் வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வகுத்த விகிதாச்சாரத்தால் கட்டுப்பட்டுள்ளோம். இதை மட்டுமே நாங்கள் கூறுகிறோம், இதற்கு மேல் எதுவும் இல்லை," என்று நீதிபதிகள் பி. வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 102 பக்க தீர்ப்பில் கூறியுள்ளது.


முன்னுதாரணங்களின் நிலைமை


ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர் மிக நீண்டகாலம் சிறையில் இருந்தும், வழக்கு விசாரணை முடிவின்றி தாமதமாகும் சூழல்களில், வலுவிழக்குமா என்பதை இத்தீர்ப்புகள் விவாதித்தன. இத்தகைய சூழ்நிலைகளில், வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பின் சரத்து 21 (Article 21) மீறப்படும் பட்சத்தில், பிணை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 43(D)(5)-ன் கடுமையாக "செயலிழக்குமா" என்பது குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்த முன்னுதாரணங்களின் நிலைமையிலிருந்து அதன் கவலை எழுகிறது.


அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி என். வி. ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 2021-ல் வழங்கிய தீர்ப்பு, இந்த விவகாரத்தில் பின்பற்றப்பட வேண்டிய முதன்மையான சட்டமாகக் கருதப்படுகிறது. குற்றவியல் விசாரணைக்கு முடிவே தெரியாமல் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் விசாரணைக் கைதியான குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. பின்னர், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட (UAPA) வழக்குகளில் பிணை தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பான, தேசிய புலனாய்வு முகமை எதிர் ஜஹூர் அகமது ஷா வதாலி (NIA vs Zahoor Ahmed Shah Watali) வழக்கில் 2019-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் ஆய்வு செய்தது. ஜஹூர் அகமது ஷா வதாலி வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் பிணை மனுக்களைப் பரிசீலிக்கும்போது, ​​நீதிமன்றங்கள் அரசின் தரப்பு வாதங்களை அதன் தகுதியின் அடிப்படையில் நுணுக்கமாக ஆய்வு செய்யாமல், மேலோட்டமாகவே (face value) ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.


திங்கட்கிழமையன்று, உச்ச நீதிமன்றம் பின்வருமாறு குறிப்பிட்டதாவது, "நஜீப் வழக்கில் வழங்கப்பட்ட எச்சரிக்கை என்னவென்றால், பிரிவு 43-D(5)-ன் கீழ் அரசு தனது 'மேலோட்டமான முகாந்திரத்தை' (prima facie standard) நிரூபித்ததாலேயே மட்டும், ஒருவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கும் நடைமுறை தடையின்றித் தொடர அனுமதிக்கப்படக்கூடாது." இதன் மூலம், வதாலி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைவிட நஜீப் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பே முன்னுரிமை பெறும் என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


நீதித்துறை ஒழுக்கமும் உறுதியும், குறைந்த நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகள், பெரிய அமர்வுகளால் வழங்கப்படும் தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு, அவற்றையே பின்பற்றக் கடமைப்பட்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இருப்பினும், உச்ச நீதிமன்றம் போன்ற ஒரு நீதிமன்றத்தில், ஒரே நேரத்தில் பலவிதமான இரண்டு மற்றும் மூன்று நீதிபதிகள் அமர்வுகள் செயல்பட்டு வரும் நிலையில், இத்தகைய விதிகள் எப்போதும் சீராகப் பின்பற்றப்படுவதில்லை.


”குர்விந்தர் சிங் எதிர் பஞ்சாப் அரசு” (Gurwinder Singh vs State of Punjab) வழக்கில், 2024-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், பிணை கோருவதற்கு வழக்கில் ஏற்படும் காலதாமதத்தை ஒரு "இயந்திரத்தனமான" வழியாகப் பயன்படுத்துவதற்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு எச்சரிக்கை விடுத்தது. ஒரு வழக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 43(D)(5)-ன் கீழ் வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே பிணை வழங்கப்பட வேண்டும் என்று அந்த அமர்வு குறிப்பிட்டது.


2026 ஜனவரியில், மற்றொரு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் நஜீப் முன்னுதாரணத்தைப் புறக்கணித்து, வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பிணை கோருவதில் தாமதம் செய்வதற்கான "அரசியலமைப்புரீதியான வரம்பை" இன்னும் எட்டவில்லை என்று தீர்ப்பளித்தது.



Share:

‘இந்து மதம் ஒரு வாழ்வியல் முறை’ என்ற சொற்றொடரை உருவாக்கிய 30 ஆண்டுகள் பழமையான தீர்ப்பை குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம் அதனை மேற்கோள் காட்டியுள்ளது. -அமால் ஷேக்

சபரிமலை விசாரணையின் போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து, மதச்சார்பின்மையை (secularism) வலியுறுத்திய அதே வேளையில், அறியாமலேயே ஒரு குறிப்பிட்ட சொற்றொடரை அரசியல் உரையாடலில் நிலைநிறுத்திய 1995-ம் ஆண்டு தீர்ப்பின் நினைவுகளை மீண்டும் நினைவு கூறுகிறது.


முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இந்து மதத்தை ஒரு “வாழ்க்கை முறை” (way of life) என்று குறிப்பிட்டிருந்தது. இந்தச் சொற்றொடர், வரும் ஆண்டுகளிலும், பத்தாண்டுகளிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த வாரம் நடைபெற்ற சபரிமலை வழக்கு விசாரணைகளின் போதும், இச்சொற்றொடர் மீண்டும் இடம்பெற்றது.


இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன் வழக்கறிஞர் ஜி. மோகன் கோபால், தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் பலர், இந்து மதத்திற்கான ஏதேனும் ஒரு இறுக்கமான அல்லது நிலையான வரையறைக்குள் பொருந்தாமல் போகலாம் என்று குறிப்பிட்டார்.


நீதிபதி பி. வி. நாகரத்னா இதற்குப் பதிலளித்ததாவது, “அதனால்தான் இந்து மதம் ஒரு வாழ்க்கை முறை (Hinduism is called a way of life) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் இந்துவாகத் தொடர்ந்து நீடிப்பதற்கு, அவர் கட்டாயமாக ஒரு கோவிலுக்குச் செல்லவோ அல்லது ஏதேனும் ஒரு சடங்கைச் செய்யவோ வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.


அவரது இந்தக் கூற்று, இச்சொற்றொடரை முதன்முதலில் பயன்படுத்திய 1995-ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, பலருக்கும் உடனடியாக நினைவூட்டியது. நீதிமன்றத்தின் நோக்கம் இதுவாக இல்லாவிட்டாலும், காலப்போக்கில் இச்சொற்றொடர் அரசியல் மேடைப் பேச்சுகளில் வலுவாக வேரூன்றிவிட்டது.


இருப்பினும், “இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அதற்குமேல் ஒன்றுமில்லை” என்ற முழுமையான சொற்றொடரைப் பலரும் நினைவில் வைத்திருப்பதில்லை. இச்சொற்றொடர் எந்தச் சூழலில் பயன்படுத்தப்பட்டது என்பதை நினைவில் வைத்திருப்பவர்கள் இன்னும் மிகச் சிலரே. இந்தத் தீர்ப்பு, மதச்சார்பின்மையை வலியுறுத்தி, மதத்தின் பெயரால் வாக்குகள் கோரிய தேர்தல் உரைகளைக் கடுமையாகக் கண்டித்த ஒரு தீர்ப்பில் இது பயன்படுத்தப்பட்டது.


இந்த உரைகள் எவ்வாறு உச்சநீதிமன்றத்தை அடைந்தன?, அவற்றைப்பற்றி நீதிமன்றம் என்ன கூறியது? மற்றும் அதன் தீர்ப்பு எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சொற்றொடருடன் இணைக்கப்பட்டது? என்பதற்கான நிலை கீழே குறிப்பிட்டுள்ளது.



இந்த உரைகள்


மும்பையில், டிசம்பர் 1987-ல் நடைபெற்ற வைல் பார்லே (Vile Parle) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது இந்தக் வழக்கு தொடங்கியது. அந்தத் தேர்தலில் சிவசேனா வேட்பாளர் ரமேஷ் யஷ்வந்த் பிரபு வெற்றி பெற்றார்.


இருப்பினும், இடைத்தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மூன்று சர்ச்சைக்குரிய உரைகளை ஆற்றினார்.


நவம்பர் மாதத்தில், வைல் பார்லேவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய தாக்கரே, இந்தத் தேர்தல் "இந்து மதத்தைப் பாதுகாப்பதற்காக" நடத்தப்படுவதாகவும், சிவசேனாவுக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்றும், இந்தியா "இந்துக்களுக்குச் சொந்தமானது, அப்படியே நீடிக்கும்" என்றும் கூறினார்.


டிசம்பர் மாதம், கார் தண்டா (Khar Danda) பகுதியில் அவர் பேசுகையில், மசூதிகள் தோண்டப்பட்டால் அவற்றின் அடியில் இந்து கோவில்கள் காணப்படும் என்றும், இந்துக்களுக்கு எதிராக நிற்பவர்கள் “காலணிகளால் கவனிக்கப்பட வேண்டும்” என்றும், தலைவன் (Prabhoo) “மதத்தின் பெயரால் வெற்றிக்கு வழிநடத்தப்பட வேண்டும்” என்றும் கூறினார்.


ஒரு நாள் கழித்து, அவர் மற்றொரு கூட்டத்தில், தலைவன் (Prabhoo) தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், “இந்துக்கள் அழிந்து போவார்கள்” என்றும் எச்சரித்தார். அந்த உரை முழுவதும் முஸ்லிம்கள் இழிவான சொற்களால் குறிப்பிடப்பட்டனர்.


தலைவன் (Prabhoo) மூன்று கூட்டங்களிலும் கலந்துகொண்டார். மேலும், தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையக்கருத்துகளுடனே அந்த உரைகளும் ஒத்துப் போவதாக, தனது சாட்சியத்தில் அவர் ஒப்புக்கொண்டார். இந்த உரைகளின் எழுத்து வடிவம் ஒருபோதும் மறுக்கப்படவில்லை.


இருப்பினும், தலைவனின் (Prabhoo) வெற்றியை பிரபாகர் குண்டே என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.


தலைவனின் (Prabhoo) பிரச்சாரத்தை வழிநடத்திய தாக்கரே, இந்து அடையாளத்தின் பெயரால் வாக்குகள் கோரியும், முஸ்லிம்களைத் தாக்கியும் உரையாற்றினார் என்று பிரபாகர் குண்டே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


தெளிவாகக் கூறுவதானால், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) கீழ், மதத்தின் பெயரால் வாக்குகள் கேட்பது ஒரு “ஊழல் நடைமுறை” (corrupt practice) ஆகும்.


இச்சட்டத்தின் பிரிவு 123(3), வேட்பாளர்களோ அல்லது அவர்களின் முகவர்களோ மதம், சாதி, இனம், சமூகம் அல்லது மொழி அடிப்படையில் வாக்குகளைக் கோருவதைத் தடை செய்கிறது. மேலும், இப்பிரிவு 123(3A), பிரச்சாரங்களின் போது சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுவதைத் தடை செய்கிறது.


மேற்கூறிய இரண்டு பிரிவுகளின்கீழ், அந்தப் பேச்சுகள் உண்மையில் “ஊழல் நடைமுறைகளுக்கு” ​​ஒப்பானவை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது தலைவனின் (Prabhoo) தேர்தலை ரத்து செய்ததுடன், அதே சட்டத்தின் 99-வது பிரிவின் கீழ் தாக்கரே அவர்களைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கரேயும் பிரபுவும் உச்சநீதிமன்றத்தை நாடினர்.


அக்காலகட்டத்தில், ராம ஜன்மபூமி இயக்கமும் இந்து தேசியவாத அரசியலும் இந்தியாவின் பல பகுதிகளில் தேர்தல் உரையாடலை வடிவமைத்துக் கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் தொடர்பான ஒரு சர்ச்சையாகத் தொடங்கிய இம்முயற்சி, விரைவில் மதம், மதச்சார்பின்மை மற்றும் அரசியல் பேச்சுரிமை குறித்த ஒரு பெரிய அரசியலமைப்பு விவாதமாக உருவெடுத்தது.


உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்


மேல்முறையீட்டாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, அந்த உரைகள் உண்மையில் இந்து மதத்தைப் பற்றியதல்ல, மாறாக ஒரு இந்தியப் பண்பாடாகிய “இந்துத்துவா”வைப் பற்றியதே என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

தேர்தல் சட்டமானது, நேரடி மத ரீதியான வேண்டுகோள்களை மட்டுமே தடை செய்கிறது என்றும், ஒரு வேட்பாளர் “‘A’ ஒரு இந்து என்பதால் அவருக்கு வாக்களியுங்கள்” என்று வெளிப்படையாகக் கூறாத வரையில், அந்தத் தடைச் சட்டம் பொருந்தாது என்றும் அவர் வாதிட்டார்.


நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது. நீதிமன்ற அமர்வு சார்பாகத் தீர்ப்பளித்த நீதிபதி ஜே.எஸ்.வர்மா, மறைமுகமான சொற்றொடர்கள் அல்லது குறியீட்டு மொழி மூலம் தேர்தல் சட்டத்தை மீற முடியாது என்று குறிப்பிட்டார். இதில் முக்கியமானது, ஒரு பேச்சின் வார்த்தைகள் மட்டுமல்ல, அதைக் கேட்கும் பார்வையாளர்களால் அது எவ்வாறு புரிந்து கொள்ளப்படும் என்பதுதான்.


தேர்தல்களின் போது மத முறையீடுகளுக்கான கட்டுப்பாடுகள் மதச்சார்பற்ற ஜனநாயகத்துடன் இணக்கமானவை என்றும் அரசியலமைப்பின் 19(2) பிரிவின்கீழ் அனுமதிக்கப்பட்டவை என்றும் கூறி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3) மற்றும் 123(3A) ஆகிய இரண்டு விதிகளின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையையும் நீதிமன்றம் உறுதி செய்தது.


“ஒரு மதச்சார்பற்ற அரசியல் அமைப்பில், வேட்பாளரின் மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்குகள் கோரப்படக்கூடாது,” என்று நீதிமன்றம் கூறியது.


உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன கூறியது?


இந்து மரபுகள் என்பவை, ஒரே ஒரு இறைத்தூதர், ஒரே ஒரு புனித நூல் அல்லது ஒரே ஒரு நிலையான கோட்பாடு ஆகியவற்றைக் கொண்ட, ஒரு ஒற்றை ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் கட்டமைப்பிற்குள் கச்சிதமாகப் பொருந்தவில்லை என்ற கருத்துகணிப்புகள் உட்பட, இந்து மதம் குறித்த முந்தைய அரசியலமைப்பு அமர்வுத் தீர்ப்புகளையும் எழுத்துக்களையும் இந்த நீதிமன்ற அமர்வு ஆய்வு செய்தது. இந்தச் சூழலில்தான், இந்து மதத்தை “பரவலாக ஒரு வாழ்க்கை முறையாக மட்டுமே விவரிக்க முடியும், அதற்கு மேலாக வேறெதுவும் இல்லை” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


"இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை முறையாக அல்லது ஒரு மனநிலையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது" என்றும், அதைத் தானாகவே மத அடிப்படைவாதத்துடன் சமப்படுத்தக் கூடாது என்றும் அந்தத் தீர்ப்பு மேலும் கூறியது. ஒரு பேச்சு பிரிவு 123-ஐ மீறுகிறதா என்பது, "ஒவ்வொரு வழக்கிலும் அது ஒரு உண்மை நிலவரத்தைப் பொறுத்தே அமைகிறது" என்று நீதிமன்றம் கூறியது. உண்மையான அளவுகோல் என்பது பயன்படுத்தப்பட்ட தனிச்சொல் அல்ல, மாறாக, அந்தப் பேச்சின் ஒட்டுமொத்தத் தன்மையும், அது ஏற்படுத்தும் தாக்கமுமே ஆகும் என்று நீதிமன்றம் விளக்கமளித்தது.


முதல் உரை, பிரிவு 123(3) மற்றும் 3A ஆகிய இரண்டையும் மீறியதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இதன் பொருள், முஸ்லிம்களைப் பற்றிய குறிப்புகள் அரசியல் அணிதிரட்டல் மட்டும் பார்க்கப்படவில்லை, சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்பட்டன.


மீதமுள்ள இரண்டு உரைகளும் பிரிவு 123(3)-ஐ (மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோருதல்) மட்டுமே மீறுவதாகக் கருதப்பட்டது.


"மேலும், அந்த உரைகள், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மொழியின் கட்டுப்பாடின்மையும், அதில் பயன்படுத்தப்பட்ட இழிவான சொற்களும் நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கவை" என்று நீதிமன்றம் கூறியது.


இந்த உரைகள், “நமது வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் போற்றத்தக்க நெறிமுறைகளைப் புறக்கணித்து, மதச்சார்பற்ற அரசியல் அமைப்பைச் சிதைக்கும் போக்கைக் கொண்டிருந்தன” என்று நீதிமன்றம் கூறியது.


பின்னர் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, “இந்துத்துவா” குறித்து விவாதித்து, இந்தப் பிரச்சினையை ஒரு பெரிய அரசியலமைப்பு விவாதமாக மாற்றியது.


மேலும் இதில் கூறப்பட்டிருந்ததாவது, “இந்து மதம் என்பது கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளின் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொகுப்பாகும். அது எதையும் தேர்ந்தெடுக்கவோ அல்லது நீக்கவோ அவசியப்படுத்தாமல், அனைத்து வகையான நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.”

மேலும், “‘இந்துத்துவா’ (Hindutva) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையுடன் அதிகம் தொடர்புடையது. இந்தத் தீர்ப்புகளின் முன்னிலையில், ‘இந்துத்துவா’ அல்லது ‘இந்து மதம்’ என்ற சொல்லை, அவை தாமாகவே மற்றும் ஒரு கருத்தியல் அர்த்தத்தில், தானாகவே குறுகிய மற்றும் அடிப்படைவாத இந்து மதவெறியாகக் கருதுவதை ஏற்றுக்கொள்வதும், அல்லது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123-இன் துணைப் பிரிவுகள் (3) மற்றும்/அல்லது (3A)-ன்கீழ் இந்தச் சொற்களைத் தானாகவே மீறல்களாகக் கருதமுடியாது என்றும் அது கூறியது.


பின்னர், “நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு, எந்த நிறத்திலோ அல்லது வகையிலோ உள்ள அடிப்படைவாதம் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும்” என்று அது மேலும் கூறியது.


தீர்ப்பு ஏன் இன்னும் விவாதிக்கப்படுகிறது?


தீர்ப்பைச் சுற்றியுள்ள விவாதம், இறுதி முடிவைப் பற்றியதைவிட, அந்த முடிவை எட்டுவதற்கு நீதிமன்றம் பயன்படுத்திய நடைமுறையிலேயே அதிகம் அடங்கியுள்ளது. இந்துத்துவாவை ஒரு “வாழ்க்கை முறை” என்று விவரிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தில் மதத்திற்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மங்கச் செய்கிறது என்றும், “கலாச்சாரம்” அல்லது “நாகரிகம்” என்று கட்டமைக்கப்பட்ட அரசியல் உரைகள் தேர்தல் சட்டத்தின் கீழ் ஆய்விலிருந்து தப்பிக்க அனுமதிக்கிறது என்றும் விமர்சகர்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருகின்றனர்.


மதத்தின் பெயரால் வாக்குகள் கோருவதற்கான கட்டுப்பாடுகளை நிலைநிறுத்தும் அதேவேளையில், இந்து மரபுகளுடன் வரலாற்றுரீதியாக தொடர்புடைய பரந்த மற்றும் பன்மைத்துவ தன்மையை நீதிமன்றம் வெறுமனே ஏற்றுக்கொண்டது என்று தீர்ப்பின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.


காலப்போக்கில், அந்தத் தீர்ப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட வரி, அந்த வழக்கை விட அதிக செல்வாக்கு பெற்றது.


அதைத் தொடர்ந்த வழக்குகளில், வகுப்புவாதப் பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்கள், தங்கள் தரப்பு வாதத்திற்காக 1995-ம் ஆண்டு தீர்ப்பை மேற்கோள் காட்டத் தொடங்கினர். இதற்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டுகளில் ஒன்று அபிராம் சிங் vs சி.டி. கொமாச்சென் (Abhiram Singh vs C.D. Commachen) வழக்கில் காணப்பட்டது. அதில், அத்தகைய குறிப்புகள் தானாகவே ஊழல் நடைமுறைகளாகிவிடாது என்று வாதிடுவதற்கு முந்தைய இந்துத்துவா தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டன.


நீதிமன்றங்களுக்கு வெளியே, 1990-களின் பிற்பகுதி முழுவதும் சங் பரிவார் மற்றும் பாஜகவின் சில பிரிவுகள் இந்தத் தீர்ப்பை பகிரங்கமாக ஆதரித்தன. பாஜகவின் தேர்தல் அறிக்கை, இந்தத் தீர்ப்பை இந்துத்துவா மதச்சார்பின்மையுடன் இணக்கமானது என்பதற்கான அங்கீகாரம் என்று விவரித்தது. அது, "இந்துத்துவாவின் உண்மையான பொருளும் உள்ளடக்கமும் மதச்சார்பின்மையின் உண்மையான பொருளுடனும் வரையறையுடனும் ஒத்துப்போவதாக இத்தீர்ப்பு அங்கீகரிக்கிறது" என்று கூறியது.


Original Link: As Supreme Court cites ‘Hinduism as way of life’, recalling 30-year-old ruling that coined the phrase.


Share:

இந்திய ஆராய்ச்சி நிதி ஒதுக்கீட்டில் பாலினம், பராமரிப்பு மற்றும் சட்டம் குறித்து... - நபீலா சித்திக்கி

இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழலமைப்பில் நிலவும் கட்டமைப்புரீதியான பாலின இடைவெளிகள்  சரி செய்யப்பட வேண்டும்.


இந்தியாவின் அறிவியல் முன்னேற்ற இலக்குகள் இன்று விண்வெளி ஆய்வு திட்டங்கள், மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சம மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுப்பணிகள் மூலம் தெளிவாக வெளிப்படுகின்றன. இருப்பினும், இதைத் தக்கவைக்கும் அதன் நிறுவனக் கலாச்சாரம் பல ஆராய்ச்சியாளர்களைத் புறக்கணித்துக் கொண்டே செல்கிறது. கல்வித்துறையில் உள்ள பெண்கள், குறிப்பாகத் தங்கள் தொழில் வாழ்க்கையின் நடுப்பகுதியில், தங்களுடன் பணியாற்றும் சக ஆண் பணியாளர்கள் எதிர்கொள்ளாத தொழில் தொடர்பான  பொறுப்புகளையும் குடும்பப் பொறுப்புகளையும் ஒரேநேரத்தில் எதிர்கொள்கின்றனர். இந்த இடைவெளியைச் சரிசெய்ய, ஆராய்ச்சி நிதியுதவி திட்டங்களில் வயது வரம்பில் தளர்வு (age relaxation) வழங்கும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், இது போன்ற  கொள்கைகள் காலப்போக்கில் மாறும்போது, ​​அவற்றின் செயல்திறனைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக மேம்படுத்துவதற்காக அவற்றை இன்னும் கவனமாக  ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தியாவில் பாலின உணர்வுள்ள ஆராய்ச்சிக் கொள்கைக்கான சட்ட அடிப்படை அனுமதி அளிப்பதற்கானதாக மட்டும் இல்லை. அது, முக்கிய சூழல்களில், வழிகாட்டுவதாகவும் உள்ளது. இந்திய அரசியலமைப்பின் 15(3)-வது பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக (special provisions for women and children) சிறப்பு விதிகளை உருவாக்க அரசுக்கு அனுமதி அளிக்கிறது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பொது வாய்ப்புகளில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தப்பிரிவு வழிவகுப்பதாக நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. பிரிவு 16 சமமான வேலைவாய்ப்புகளை (equality of opportunity) உறுதி செய்கிறது. இது போதுமான வாழ்வாதாரத்திற்கான சம உரிமையைப் பற்றிப் பேசும் வழிகாட்டி நெறிமுறைகளுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டும். பெண் ஆராய்ச்சியாளர்கள் பராமரிப்புப் பணிகளுக்காகக் கட்டமைப்புரீதியாகத் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு, நிதி உதவி அளிக்கும் அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குவது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான பொறுப்பும் உள்ளது என்ற, ஒரு வலுவான அரசியலமைப்புரீதியான வாதம் நிலவுகிறது.


பெண்களின் கண்ணியத்திற்குக் பாதிப்பை விளைவிக்கும் நடைமுறைகளைத் கைவிடுதல் எனும் அடிப்படை கடமையான பிரிவு 51A(e), மற்றொரு  கருத்தைச் உருவாக்குகிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டுமே மானியங்களை அடிக்கடி வழங்கும் ஒரு கொள்கை அமைப்பு நடுநிலையானதல்ல. இது அரசியலமைப்புச் சட்டம் நிறுவனங்கள் சரிசெய்யுமாறு கோரும்,  குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறது.


முக்கியப் பிரச்சனை, சட்டத்தில் உள்ள ஒரு இடைவெளியால் ஏற்படுகிறது.


2017-ஆம் ஆண்டின் மகப்பேறு நலன் (திருத்த) சட்டம், பெண்களுக்குக் கிடைக்கும் மிகவும் வலுவான சட்டப் பாதுகாப்பாகத்  இருந்து வருகிறது. 2017-ஆண்டு மேற்கொள்ளபட்ட இந்தத் திருத்தம், இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக நீட்டித்ததுடன், பெரிய நிறுவனங்களில் குழந்தைகள் காப்பக வசதிகளுக்கான விதிகளையும் அறிமுகப்படுத்தியது. கல்வி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு இது முக்கியமானது. ஆனால், முழுமையாக நிறைவேற்றபடவில்லை. முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய அல்லது தொழில் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள், இந்தச் சட்டத்தின் தெளிவான வரம்பிற்குள் வராத ஆய்வு உதவித்தொகைகள், திட்டப் பதவிகள் அல்லது ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


தற்போதைய கட்டமைப்புகள், குழந்தைப்பேற்றுக்குப் பிறகு பெண்கள்   மீண்டும் ஆராய்ச்சிக்கே திரும்புகிறார்கள் என்பதையும் புறக்கணிக்கின்றன. மகப்பேறு விடுப்பிலிருந்து பணிக்குத் திரும்பும் பெண்கள், பெரும்பாலும் தடைபட்ட ஆய்வகப் பணிகள், மாறிய ஒத்துழைப்புகள் மற்றும் பொருந்தாத மானியக் கால அட்டவணைகள் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். மேலும், மீண்டும் பணியில் இணைவதற்கோ அல்லது பணிச்சுமையைக் குறைப்பதற்கோ முறையான ஆதரவு குறைவாகவே கிடைக்கிறது. குழந்தை பிறந்த பின்னர் முழுமையான ஈடுபாட்டை  எதிர்பார்ப்பது சாதியமாற்றது. இதற்கு மேற்பார்வையாளர்களின் முறைசாரா நல்லெண்ணத்தைவிட, தெளிவான கொள்கைகளே தேவைப்படுகிறது.

 

இந்தியாவில் தந்தைவழி விடுப்பு குறித்து சட்டம் எதுவும் இல்லை. ஒன்றிய அரசு ஊழியர்கள், 1972-ஆம் ஆண்டின் மத்திய குடிமைப் பணிகள் (விடுப்பு) (Central Civil Services (Leave) விதிகளின்கீழ் 15 நாட்கள் விடுப்பு பெறுகிறார்கள். ஆனால், இது சட்டப்பூர்வமானதல்ல. மாறாக நிர்வாகரீதியானது. மேலும், வெளிநிறுவன மானியங்கள் மூலம் நிதியுதவி பெறும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது போன்ற உரிமை எதுவும் வழங்கபடவில்லை. அதிகமான தாய்வழிப் பாதுகாப்பு, குறைந்தபட்ச தந்தைவழி விடுப்பு ஏற்பாடு ஆகிய இந்தச் சட்டரீதியான சமச்சீரற்ற தன்மை தற்செயலானது அல்ல. இது, நிறுவனங்களும் நிதி அளிக்கும் முகமைகளும் பராமரிப்புப் பணியைப் பற்றி சிந்திக்கும் திறனை  வடிவமைக்கிறது. மேலும், வயது தளர்வு (age relaxation) கொள்கைகள், பராமரிப்பு செயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படாமல், பெண்களை மட்டும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதற்கான ஒரு காரணமாகவும் இது விளங்குகிறது.


ஆராய்ச்சி நிதியுதவியில் பெண்களுக்கு என பிரத்யேக ஆதரவு தேவை என்பதற்கான வாதம், அனுமானங்களால் அல்ல, மாறாக தொடர்ச்சியான தரவுகளால் ஆதரிக்கப்படுகிறது. 2021-22-ஆம் ஆண்டு அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின்படி உயர்கல்வி அமைப்பில் 2021-22-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 16 லட்சம் ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களில் 57% ஆண்கள் மற்றும் 43% பெண்கள் ஆவர். மத்திய பல்கலைக்கழகங்கள்  அனைத்திலும், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும், ஆசிரியர் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமும் (Science and Engineering Research Board (SERB)), பெண் ஆராய்ச்சியாளர்களிடையே விண்ணப்ப விகிதமும், வெற்றி விகிதமும்  குறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.


போக்கு தெளிவாக உள்ளது. இருபதுகளின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதிக்குள் முனைவர் பட்டங்களை பெறும் பெண்கள், தங்கள் குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில், முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் பணிகளில் (postdoctoral work) ஈடுபடுகின்றனர். கல்வி உதவித்தொகை சுழற்சிகள், வெளி அழுத்தம், பயணம் மற்றும் குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவது கல்வி சார்ந்துள்ள குடும்பங்களில் சமமாகப் பகிரப்படுவதில்லை. Tata Institute of Social Sciences உள்ளிட்ட நிறுவனங்களில் நடத்தப்பட்ட இரட்டை-தொழில் பேராசிரியர் ஆய்வுகள், பெண்கள் தங்களின் தொழில்முறை நிலை எதுவாக இருந்தாலும் வீட்டு வேலைகளில் அதிக பங்கைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. இதன் விளைவுகள் தெளிவாக தெரிகின்றன: ஆய்வுக் கட்டுரைகள் வெளியீட்டில் தாமதம், ஆராய்ச்சி நிதி (grant) பதிவுகளில் ஏற்படும் இடைவெளிகள் மற்றும் சர்வதேச அளவில் காணப்படும் அங்கீகாரம் மற்றும் தெரிவு குறைதல் ஆகியவை அதில் அடங்கும். இந்தச் சூழலில், வயது வரம்பில் தளர்வு வழங்குவது ஆவணப்படுத்தப்பட்ட கட்டமைப்பு சார்ந்த பாதிப்புக்கு ஒரு பகுதியளவிலான தீர்வாகும்.


நீதிமன்றங்கள் பரிந்துரைத்தவை


2003-ஆம் ஆண்டின் விஜயலட்சுமி vs பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பிறர் (Vijay Lakshmi vs Punjab University And Others) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இங்கு பொருந்துகிறது. சேவை, தொடர்பான விவகாரங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைச் சலுகைகள் குறித்து, நீதிமன்றம் முறையான சமத்துவம் (Formal Equality) மற்றும் உண்மையான/பொருளாதார சமத்துவம் (Substantive Equality) ஆகியவற்றுக்கிடையில் தெளிவான வேறுபாட்டைக் குறிப்பிட்டது.


நிரூபிக்கப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்யும் பட்சத்தில், பெண்களுக்குச் சாதகமான நடவடிக்கைகள் அரசியலமைப்புரீதியாகச் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் கருதியது. இந்தத் வாதம் ஆராய்ச்சி மானியங்களுக்கும் பொருந்தும்: பெண்களுக்கான தகுதிக் கால அவகாசத்தை நீட்டிப்பது என்பது பாரபட்சமான அணுகுமுறை அல்ல, மாறாக அது கட்டமைப்புரீதியான குறைபாடுகளைச் சரிசெய்யும் ஒரு நடவடிக்கையாகும்.


இவை அனைத்தும் தற்போதைய கொள்கை போதுமானதாக உள்ளது குறிக்கப்படவில்லை. அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB) போன்ற அமைப்புகள் வழங்கும் வயது வரம்பு தளர்வு கொள்கைகள், விண்ணப்பிக்கும் கட்டத்தில் தகுதி பெற உதவுகின்றன. ஆனால், ஆராய்ச்சியின் போது  தினமும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சரி செய்யவில்லை. உச்ச வயது வரம்பில் வழங்கப்படும் ஐந்தாண்டு நீட்டிப்பானது, பெண்கள் தாங்கள் தவறவிட்டிருக்கக்கூடிய மானியங்களுக்கு விண்ணப்பிக்கவழிவகுக்கலாம். இருப்பினும், முன்மொழிவு தயாரிப்பின்போது குழந்தைப் பராமரிப்புக்கான ஆதரவையோ, மகப்பேறு விடுப்பின்போது நிறுவனரீதியான ஆதரவையோ அல்லது பணி இடைவேளைக்குப் பிந்தைய மறுபிரவேசத்திற்கான நிதியுதவியையோ இது வழங்குவதில்லை.


இந்தக் கொள்கை யாரை விலக்குகிறது என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு தனியாக குழந்தையை வளர்க்கும் தந்தையோ அல்லது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெற்றோரைக் கவனிக்கும் ஆணோ தனது தொழில் வாழ்க்கையில்   இடையூறுகளைச் சந்திக்கலாம். ஆனால், தற்போதைய கொள்கை அவர்களின் சூழ்நிலையை அங்கீகரிப்பதில்லை. பெண்களுக்கான பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வாதம் இதுவல்ல. மாறாக,   அதிகமாக நிலவி வரும் பின்தங்கிய நிலையைச் சரிசெய்யும் பெண்களுக்கென பிரத்யேகமான விதிகளைத் தக்கவைத்துக்கொண்டு, அவற்றை மேலும் வலுப்படுத்துவதோடு; ஆவணப்படுத்தப்பட்ட பராமரிப்புப் பொறுப்புகளுக்குக் கூடுதல்  ஆதரவை வழங்குமாறு இது வலியுறுத்துகிறது.


இன்னும் ஆழமாகச் சிந்திக்கப்பட்ட கொள்கை எத்தகையதாக இருக்கும்


2020-ஆம் ஆண்டு  தேசியக் கல்விக் கொள்கை, நிறுவன நெகிழ்வுத்தன்மை மற்றும் பேராசிரியர்களின் வாழ்வை சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்குகிறது. ஆனால், இந்த உறுதிமொழிகள் இன்னும் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சி நிதி தொடர்பான கொள்கையாக மாற்றப்படவில்லை. இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யவேண்டிய காலம் கடந்துவிட்டது. நிதி வழங்கும் முகமைகள், ஆவணப்படுத்தப்பட்ட பராமரிப்புக் காலங்களுக்கான கட்டணமில்லா மானிய நீட்டிப்புகள், ஆராய்ச்சிக்கு மீண்டும் திரும்பும் பெண்களுக்கான ஆய்வு உதவித்தொகைகள் மற்றும் பராமரிப்புப் பொறுப்புகளைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கான நெகிழ்வான சாதனை அறிக்கை ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும். பல ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுக்கள் இதேபோன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன. இதன் மூலம், பாலினத்திற்கேற்ற ஏற்பாடுகளுடன் பாலினப் பாகுபாடற்ற பராமரிப்பு ஆதரவானது, குறிப்பிட்ட-பாலின விதிகளுடன் இணைந்து, தன்னிச்சையானதாகத் தோன்றாமல் சமத்துவத்தை மேம்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஆராய்ச்சி நிதியுதவித் திட்டங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் வயது வரம்பு தளர்வு, அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலும் அனுபவ ஆதாரங்களாலும் முழுமையாக நியாயப்படுத்தப்படுகிறது. இது சரிசெய்ய முயலும் பாதிப்பு உண்மையானது, ஆவணப்படுத்தப்பட்டதும் தொடர்ந்து நிலைத்திருப்பதுமான ஒன்றாகும். “பாலின சமத்துவம்” (gender neutrality) என்ற பெயரில் இந்த தளர்வை நீக்குவது, ஆதாரங்களால் ஆதரிக்கப்படாத ஒரு தவறான கொள்கை முடிவாகும். அதற்குப் பதிலாக, பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான இது போன்ற ஒரு ஆதரவைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு, பிற பராமரிப்பு பொறுப்புகளை ஏற்ற கொள்பவர்களுக்கும் கூடுதல் சலுகைகளை வழங்கும் பல அடுக்குகள் கொண்ட அணுகுமுறை முக்கியமானதாகும். இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்கள், பெண் ஆய்வாளர்களுக்கு வெறும் மானியங்களுக்கான முறையான அணுகலை மட்டும் வழங்காமல், ஒரு நிலையான ஆராய்ச்சிப் பணியை சாத்தியமாகக்கூடிய கட்டமைப்புச் சூழல்களையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளன. வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வு ஒரு தொடக்கமே; இதை ஒரு முடிவாகக் கருதக் கூடாது. வயது வரம்பு தளர்வு என்பது இந்தப் பயணத்தின் தொடக்கமே. அதையே இறுதியான தீர்வாக கருதக்கூடாது.


நபீலா சித்திக், விநாயகா மிஷனின் சட்டப் பள்ளி, விநாயகா மிஷனின் ஆராய்ச்சி அறக்கட்டளை (டீம்ட் யுனிவர்சிட்டி), சென்னை உதவிப் பேராசிரியராக உள்ளார்.


Original Link: Gender, caregiving, the law in Indian research funding.


Share: