மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சாதியைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கலான பிரச்சினைகள். - பி.சி. மோகனன், அமிதாப் குண்டு

சாதிப் பெயர்கள், மாற்றுப் பெயர்கள் மற்றும் உட்பிரிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பட்டியலைத் தயாரிப்பதற்கு பரந்த அளவிலான ஆலோசனைகளை  மேற்கொள்ள வேண்டியிருக்கும்.


மிகவும் தாமதமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கான வீடுகள் பட்டியலிடும் பணி (house-listing operations) தற்போது முடிவடைந்து, முதன்மை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், கணக்கெடுப்பு முன்னோட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அதில் என்னென்ன கேள்விகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.


மேலும், பதிலளிப்பவர் கூறுவதுபோலவே சாதிப்பிரிவு பதிவு செய்யப்படும் என்று மூத்த அதிகாரிகள் கூறியதாகப் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இது சாதிகளைக் கணக்கிடுவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் அவ்வாறு திரட்டப்படும் தரவுகளின் பயன்பாடு ஆகிய இரண்டைப் பற்றியும் அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. 2011-ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பின் (Socio-Economic and Caste Census (SECC)) தாக்கம் தற்போதும் நினைவில் இருக்கும் வேளையில், இத்தகையதொரு முடிவு பெரும் கவலையளிப்பதாக அமையும் என்கின்றனர்.





பிரம்மாண்டமான பணி 


எந்தவொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் துல்லியத்திற்கும், கணக்கிடப்படும் விவரங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட வேண்டும். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற ஒரு பிரம்மாண்டமான பணியில், வினாத்தாளில் சேர்க்கப்படும் கேள்விகள் தரப்படுத்தப்பட்டதாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், எவ்வித குழப்பமும் இன்றி பதிவு செய்யக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும். மாதிரி ஆய்வுகளில் (Sample surveys) கணக்கெடுப்பாளர்கள் தனிநபர்களின் பதில்களை விரிவாக ஆராய முடியும் என்பதால் அதில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும். மாறாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கணக்கெடுப்பாளர்களால் பின்பற்றப்படுவதால், அது ஒரேமாதிரியான கருத்துருக்கள் மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிமுறைகளையே சார்ந்திருக்க வேண்டும்.


பொதுவாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வினாத்தாள்கள் தீவிர தொழில்நுட்ப பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். இது, சேகரிக்கப்படும் தரவுகளின் பின்னணியில் உள்ள கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் பற்றிய புரிதலைப் பயனர்களுக்கு வழங்கும். உதாரணமாக, 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டபோது, வினாத்தாளில் சாதி தொடர்பான கேள்வியைச் சேர்க்கும் திட்டம் எதுவுமில்லை. இருப்பினும், கணக்கெடுப்போடு இணைந்து தேசிய மக்கள்தொகை பதிவேடும் (National Population Register (NPR)) புதுப்பிக்கப்படும் என்றும், அது தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் (National Register of Citizens (NRC)) தயாரிப்பதற்கான வழியை அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சரால் விவரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை உருவாக்கியது.


சாதி தொடர்பான கேள்வியை நடைமுறைப்படுத்துவது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப சவாலாகும். 2011-ஆம் ஆண்டின் 'சமூகப் பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு' அனுபவம் இதற்கு ஒரு பெரிய எச்சரிக்கையாகும். சாதி பெயர்கள் தரப்படுத்தப்படாமலும், பதில்களை வகைப்படுத்துவதற்கான முழுமையான பட்டியல் இல்லாமலும் இருந்ததால், அந்தச் சாதி தரவுகளைச் சரியாக அட்டவணைப்படுத்த முடியாமல் போனது. இந்த நடைமுறை லட்சக்கணக்கான சாதி மற்றும் சமூகப் பெயர்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் அந்தத் தரவுகளைச் சரியாக ஒருங்கிணைப்பது முற்றிலும் சாத்தியமில்லாமல் போனது.


சாதி பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் பொறுப்பை முழுமையாகப் பதில் அளிப்பவரிடமே விட்டுவிடும்போது எத்தகைய சிக்கல்கள் ஏற்படும் என்பதற்குப் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளே போதுமான சான்றாகும். பீகார், தெலங்கானா போன்ற மாநிலங்கள் அண்மையில் நடத்திய சாதி ஆய்வுகள், சாதிப் பிரிவுகளை முறைப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட வரையறையை வழங்கி வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றின. இருந்தபோதிலும், இந்த மாநில அளவிலான அனுபவங்களை அப்படியே தேசிய அளவிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், ஒரு மாநில அரசு நடத்தும் கணக்கெடுப்பில் அம்மாநிலத்திற்குள் இருக்கும் சாதிகளை மட்டுமே பட்டியலிட முடியும். ஆனால், இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கு இடையே பெருமளவில் மக்கள் புலம்பெயர்வதால், ஒரு தேசிய கணக்கெடுப்பில் அவ்வாறு செய்ய முடியாது.


மாநிலங்களின் அனுபவங்கள்


பீகாரில், பொதுமக்களால் கூறப்பட்ட சாதிப் பெயர்கள் அம்மாநிலத்தின் 214 தனித்துவமான சாதிகளைக் கொண்ட முதன்மைப் பட்டியலோடு ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டன. தெலங்கானாவில், சாதிகள் மற்றும் உட்பிரிவுகளின் பெயர்கள் அரசு பயன்படுத்தும் சாதிப் பிரிவுகளுடன் சேர்த்துப் பதிவுசெய்யப்பட்டன. இருப்பினும், இந்த இரண்டு முறைகளிலுமே ஒரு சிக்கல் உள்ளது. வேறு மாநிலத்தில் பட்டியலிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர், அவர் குடிபெயர்ந்து வாழும் உள்ளூர் மாநிலப் பட்டியலில் இல்லை என்றால், அவர் பட்டியலில் இருந்து விடுபடும் அபாயம் உள்ளது. அவர்கள் "இதரப் பிரிவினர்" (Others) என வகைப்படுத்தப்பட்டு, தேசிய அளவில் சரியான கணக்கெடுப்பை நடத்துவதற்குத் தேவையான அடையாளத்தை இழக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


இந்தச் சிக்கல் வெறும் கற்பனையானது அல்ல. டெல்லியில் கணிசமான எண்ணிக்கையில் பட்டியல் சாதியினர் (Scheduled Castes) வாழ்கின்றனர். ஆனால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) யாருமில்லை. ஏனெனில், இந்த அங்கீகாரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும். இருப்பினும், 2011-12-தேசிய மாதிரி கணக்கெடுப்பு மதிப்பீட்டின்படி, டெல்லியில் ஏறத்தாழ 5 லட்சம் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பலர், பழங்குடியின தகுதிநிலை அங்கீகரிக்கப்பட்ட பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். தேசிய அளவிலான சாதிச் சான்றிதழ் கணக்கெடுப்பு முழுக்க முழுக்க மாநிலப் பட்டியல்களை மட்டுமே நம்பியிருந்தால், இதுபோன்ற மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்த மக்கள் "இதரப் பிரிவினர்" என்ற தெளிவற்ற பிரிவுக்குள் மறைந்து போக வாய்ப்புள்ளது. அதிக அளவில் வெளிமாநிலத்தவர் வந்து குடியேறும் மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இந்தச் சிக்கல் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


எனவே, இந்த சாதிப் பட்டியல்களைத் தயாரிப்பதே மிகவும் முக்கியமான பணியாகும். 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட சாதிப் பட்டியல்கள், 1980-களில் தயாரிக்கப்பட்ட சாதி மற்றும் சமூகங்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள், மற்றும் சமூக மற்றும் கல்விரீதியாகப் பின்தங்கிய வகுப்பினரின் ஆவணங்கள் ஆகியவை இதற்கான நல்ல தொடக்கப் புள்ளிகளாக அமையும். ஆனால், எந்தவொரு பழைய பட்டியலையும் அப்படியே பயன்படுத்த முடியாது. பெயர்களில் உள்ள வேறுபாடுகள், மாற்றுப் பெயர்கள், உட்பிரிவுகள் மற்றும் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான கோரிக்கைகளைத் தீர்க்க விரிவான நடவடிக்கைகள் அவசியமாகிறது.


இதற்குச் சில மாதங்கள் வரை காலஅவகாசம் தேவைப்படலாம்; ஆனால், சாதிச் சான்றிதழ் கணக்கெடுப்பு துல்லியமானதாகவும் அரசு திட்டங்களுக்குப் பயன்படும் வகையிலும் அமைய வேண்டுமானால், இத்தகைய தயாரிப்புப் பணிகள் தவிர்க்க முடியாதவை ஆகும். போதிய தயாரிப்பின்றி அவசர அவசரமாக நடத்தப்படும் கணக்கெடுப்பு, அதிக அளவிலான தகவல்களைத் தருமே தவிர, கொள்கை முடிவுகளுக்குத் தேவையான பயனுள்ள புள்ளிவிவரங்களைத் தராது என்கின்றனர்.


சிக்கலான பிரச்சினைகள்


கருத்தியல் தெளிவு (conceptual clarity) ஏன் முக்கியம் என்பதை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்று அனுபவம் விளக்குகிறது. உதாரணமாக, 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, அப்போது செல்வாக்கு மிக்க சமூகமாக இருந்த "ஆங்கிலோ-இந்தியர்" (Anglo-Indian) என்ற பிரிவை வரையறுப்பதில் சிரமங்கள் எழுந்தன. 1921-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, ஆங்கிலம் பேசும், ஐரோப்பிய பாணி ஆடைகளை அணிந்த சில கிறிஸ்தவர்களும் தகுந்த நியாயமின்றி இப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்ததாக திருவிதாங்கூர் (Travancore) மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை சுட்டிக்காட்டியது. அதன் பிறகு, தந்தை வழியில் ஐரோப்பிய வம்சாவளியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற துல்லியமான வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இயற்கையாகவே, இந்த புதிய வரையறையின் காரணமாக பெருவாரியான மக்கள் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் எப்போதும் நிலவும் ஒரு சிக்கலை இந்த நிகழ்வு உணர்த்துகிறது: ஒரு வகைப்பாடு (category) முற்றிலும் எல்லைகளற்றதாகவும் இருக்க முடியாது; அதேநேரத்தில் புள்ளிவிவரரீதியாக ஒப்பிடக்கூடியதாகவும் இருக்க முடியாது.


இன்றைய சாதிவாரி கணக்கெடுப்பு சிக்கலான கோட்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளை முன்வைக்கிறது. ஒருவர் தனது பரந்த சாதிப் பிரிவு, உட்பிரிவு, சமூகத்தின் பெயர், உள்ளூர் மாற்றுப்பெயர் அல்லது வேறு மாநிலத்தில் பயன்படுத்தப்படும் சாதிப் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடும்போது எதைப் பதிவு செய்வது? ஒன்றோடொன்று தொடரக்கூடிய பெயர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? ஒரு சாதி மற்றொரு சாதிக்கு இணையானது அல்லது வேறுபட்டது என்ற கோரிக்கைகளை எவ்வாறு அணுகுவது? கோடிக்கணக்கான மக்களின் தரவுகள் சேகரிக்கப்பட்ட பிறகு அல்லாமல், கணக்கெடுப்புத் தொடங்குவதற்கு முன்பே இந்தக் கேள்விகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.


கேள்வித்தாளில் சாதி பற்றிய கேள்வி எந்த இடத்தில் கேட்கப்படுகிறது என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகும். அதை ஆரம்பத்திலேயே கேட்பது, அடுத்து கேட்கப்படும் சமூக-பொருளாதார கேள்விகளுக்கான பதில்களைப் பாதிக்கக்கூடும். ஏனெனில், பதிலளிப்பவர்கள் தங்களின் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளைச் சாதியின் வழியே பார்க்கத் தொடங்குவர். எனவே, கேள்விகளின் வரிசையை கவனமாகத் திட்டமிட வேண்டும். குறிப்பிடத்தகுந்த விஷயமாக, 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி பற்றிய கேள்வி கேள்வித்தாளின் கடைசியில்தான் கேட்கப்பட்டிருந்தது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் நேரத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்படும் மாற்றங்கள், அது எதையெல்லாம் உள்ளடக்கும் என்பதில் உள்ள நிச்சயமற்றத்தன்மை மற்றும் சேகரிக்கப்படும் தரவு இறுதியில் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதில் தொடரும் தெளிவின்மை ஆகியவை, இந்தியாவின் மிகவும் முக்கியமான புள்ளிவிவரப் பணிகளில் ஒன்றான இந்த கணக்கெடுப்பின் மீதான நம்பிக்கையை ஏற்கனவே சீர்குலைத்துள்ளன. தொழில்நுட்பத் துல்லியத்தைச் சீர்குலைத்துவிட்டு, அரசியல் சமரசங்களுக்கும் சுயநலன்களுக்குமான ஒரு செயலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மாறிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தப்படுகிறது.


ஒருவேளை சாதி பற்றிய கேள்வி சேர்க்கப்பட வேண்டும் என்றால், அரசியல்ரீதியாக உணர்வுபூர்வமான ஒரு பணியை மிக உயர்ந்த புள்ளிவிவர மற்றும் நிர்வாகத் திறமையுடன் வடிவமைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பாகவே இது அமைய வேண்டும்.


மோகனன், கேரள மாநில புள்ளிவிவர ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார். அமிதாப் குண்டு, 'IORA Ecological Solutions' நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார்.                              


Original Link: Census, and tricky issues in recording caste.

Share:

டெல்லியில் கூர்வால் உள்ளான் (Sharp-tailed Sandpiper) காணப்பட்டது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? -ரோஷ்னி யாதவ்

டெல்லியில் உள்ள நஜஃப்கர் ஏரியில், 'கூர்வால் உள்ளான்' (Sharp-tailed Sandpiper) எனப்படும் அரிதான சைபீரியப் பறவை சமீபத்தில் காணப்பட்டது. இந்த அரிதான புலம்பெயர் பறவை எங்கே இனப்பெருக்கம் செய்கிறது மற்றும் குளிர்காலத்தைக் கழிக்கிறது? இதன் எண்ணிக்கைக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன?


ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி நஜஃப்கர் ஏரியில் கூர்வால் உள்ளான் (Sharp-tailed Sandpiper - Calidris acuminata) காணப்பட்டது. டெல்லி மற்றும் இந்தியாவில் இந்த வகை பறவைகளின் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், இது ஒரு அரிதான நிகழ்வாகும். இந்தச் சூழலில், கூர்வால் உள்ளான் பற்றியும், இந்தியாவில் அதன் வருகையின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. டெல்லியைச் சேர்ந்த இயற்கைப் பாதுகாப்பாளரும் பறவை நிபுணருமான அக்ஷித் துவா, கூர்வால் உள்ளான் (Sharp-tailed sandpiper) பறவையை ஆவணப்படுத்தினார். அது வயல்வெளிகளில், சாதாரண கொக்கு மற்றும் வன கொக்கு பறவைகளின் கூட்டத்திற்கு நடுவே தீவிரமாக இரை தேடிக் கொண்டிருந்தபோது பதிவு செய்யப்பட்டது.


2. கூர்வால் உள்ளான் பறவை காணப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், கடந்த ஒன்றரை நூற்றாண்டில் இந்தியாவில் இந்தப் பறவை இனம் பதிவு செய்யப்படுவது இது ஐந்தாவது முறை மட்டுமே ஆகும்.


3. இந்தியாவின் முதன்மையான பறவையியல் இதழாகக் கருதப்படும் 'Indian Birds' இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இதன் முந்தைய பதிவுகளை ஆவணப்படுத்துகிறது: 1880-ஆம் ஆண்டில் கில்கிட்டில் ஒரு ஆண் பறவை, 1915-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வண்டலூரில் ஒரு பெண் பறவை, 2004-டாம் ஆண்டில் சத்தீஸ்கரின் குருத் குளத்தில் உறுதிப்படுத்தப்படாத ஒரு பதிவு, மற்றும் செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி, 2019-ஆம் ஆண்டு நஜஃப்கர் சதுப்பு நிலத்தில் புகைப்படமெடுக்கப்பட்ட ஒரு பறவை ஆகியனவாகும்.


4. கூர்வால் உள்ளான் பறவைகள் வடக்கு சைபீரியாவில், கிழக்கு ஆர்க்டிக் பெருங்கடலின் லேனா நதிப் படுகையிலிருந்து தென்கிழக்கே கொலிமா பகுதி வரை பரந்து விரிந்துள்ள இடத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. பின்னர், கிழக்கு ஆசியாவின் வழியே தெற்கு நோக்கிப் புலம்பெயர்ந்து, தங்களின் முக்கிய வாழ்விடங்களான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை அடைகின்றன.


5. குறைந்த எண்ணிக்கையிலான பறவைகள் மேற்கு புதிய கினியாவிற்கும் கிழக்கே பிஜிக்கும் இடையே தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளின் கூட்டமான மெலனேசியா பகுதிகளுக்குப் பறந்து செல்கின்றன. எனவே, இந்தப் பறவை இனம் இந்தியாவிற்கு மிக அரிதாகவே வரக்கூடிய ஒரு பறவை இனமாகும்.

6. கூர்வால் உள்ளான்கள் கடற்கரை மற்றும் உள்நாட்டு ஈரநிலங்கள், நன்னீர் மற்றும் அதிக உப்புத்தன்மை கொண்ட வாழிடங்கள் ஆகிய இரண்டிலும் உணவு தேடுகிறது. மழைக்குப் பிறகு இது விதைகள், புழுக்கள், மெல்லுடலிகள், ஓடுடைய கணுக்காலிகள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்கிறது. மேலும், இது வேளாண் புல்வெளிகளிலும் ஈரநிலங்களின் ஆழமற்ற நீர்நிலைகளின் ஓரங்களிலும் உணவு தேடுகிறது. 


7. கூர்வால் உள்ளான்கள் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டின்படி, இதன் எண்ணிக்கை ஏறக்குறைய 15 ஆண்டுகளில் சுமார் 45 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாழிட இழப்பு மற்றும் சீரழிவு ஆகியவை இந்த இனத்திற்கு ஏற்படும் முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இது இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் குறிப்பிடும் சிவப்புப் பட்டியலில் 'பாதிக்கப்படக்கூடியவை' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 


8. இந்தப் பறவையின் வருடாந்திர இடம்பெயர்வுப் பாதையில் ஒரு முக்கியமான இடைநிறுத்தப் பகுதியாக உள்ள சீனா மற்றும் கொரிய தீபகற்பத்திற்கு இடையிலான மஞ்சள் கடலைச் (Yellow Sea) சுற்றியுள்ள கடலோர வாழிடங்கள் குடியிருப்பு, தொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாடுகளால் இழக்கப்பட்டுள்ளன. மாசுபாடு, வண்டல் படிமங்களின் ஓட்ட மாற்றம் மற்றும் கடல்மட்ட உயர்வு ஆகியவையும் இதன் அழுத்தத்தை அதிகரித்துள்ளன. ஆஸ்திரேலியாவில் வறட்சி மற்றும் உள்நாட்டு ஈரநிலங்கள் குறைதல் ஆகியவை பெரும் கவலைக்குரிய விஷயங்களாக உள்ளன. 


டெல்லியை உலகின் மிக அதிகப் பறவைகளின் பன்முகத்தன்மை கொண்ட தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுவது எது?


1. கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட டெல்லி பறவைகள் வரைபடத் தொகுப்பு, முதன்முறையாக நகரம் முழுவதும் உள்ள பறவை இனங்களின் பரவல் மற்றும் எண்ணிக்கையை வரைபடமாக்கியுள்ளதாகக் கூறுகிறது. மேலும், இது பறவைகளின் பன்முகத்தன்மையில் உலகின் தேசியத் தலைநகரங்களில் நைரோபிக்கு அடுத்தபடியாக தலைநகரை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளது.


2. இந்தப் பறவைப் பட்டியல், டெல்லி வனத்துறை, ‘Bird Count India’, ‘World Wide Fund for Nature-India’ மற்றும் பிற அமைப்புகளால், பறவை நோக்குபவர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டது. இந்த தகவல் தொகுதியின்படி, 1975-ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் பதிவு செய்யப்படாத 22 இனங்களைத் தவிர்த்து, டெல்லி பறவைகள் பட்டியலில் தற்போது 471 இனங்கள் உள்ளன.


3. இந்த நகரம் செழுமையான பறவைகள் பன்முகத்தன்மையைக் கொண்டிருப்பதற்கு, அதன் தனித்துவமான புவியியல் அமைப்பே முக்கியக் காரணம் என்று அந்த வரைபடத்தொகுப்பு கூறுகிறது. இதில் ஆரவல்லி மலையின் வடக்குப் பகுதி, மேற்கு இமயமலைக்கு அருகில் அமைந்திருப்பது, யமுனை மற்றும் சாகிபி ஆற்றுப்படுக்கைகள் (வெள்ளச்சமவெளிகள்), மேலும் ஆர்டிக் பகுதியிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீளும் முக்கியமான பறவைகள் இடப்பெயர்வு பாதையான மத்திய ஆசிய பறக்கும் பாதைக்கு (Central Asian Flyway) அருகில் அமைந்துள்ளதும் முக்கியக் காரணங்களாகும்.


4.இந்தத் வரைபடத்தொகுப்பானது  தன் ஆய்வுக்காக டெல்லியின் 11 சதவீதப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இந்த ஆய்வு ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு, குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. முதல் ஆண்டில், நகரம் முழுவதும் 221 பறவையினங்கள் பதிவாகியுள்ளன. இதில் குளிர்காலத்தில் 200 இனங்களும், கோடைக்காலத்தில் 152 இனங்களும் அடங்கும். அவற்றுள், 126 உள்ளூர் பறவையினங்கள் (resident species), 81 குளிர்கால வலசைப் பறவைகள் (winter migrants) மற்றும் 14 கோடைக்கால வலசைப் பறவைகள் (summer migrants) ஆகும்.


5. இந்த வரைபடத் தொகுப்பில் குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டுமே காணப்படும் 18 உள்ளூர் பறவை இனங்களும் பதிவிடப்பட்டுள்ளன. மேலும், இது ஆபத்தான நிலையில் உள்ள எகிப்திய கழுகு (Egyptian Vulture) மற்றும் கருப்பு வயிற்று ஆலா (Black-bellied Tern), பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள ஆற்று ஆலா (River Tern) மற்றும் காரை வாத்து (Common Pochard), அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலைக்கு அருகில் இருக்கும் கருப்புவால் மூக்கன் (Black-tailed Godwit), வெள்ளைக்கண் வாத்து (Ferruginous Duck), வர்ண நாரை (Painted Stork), கருப்புத்தலை அரிவாள் மூக்கன் (Black-headed Ibis) மற்றும் பாம்புத் தாரா (Oriental Darter) போன்ற அழிவின் விளிம்பில் உள்ள பல பறவை இனங்களையும் பட்டியலிடுகிறது.


6. நிபுணர்களின் கூற்றுப்படி, டெல்லி ஒரு சூழலியல் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு பலவகையான பறவைகள் காணப்படுகின்றன. ஆரவல்லி நிலப்பரப்பை ரிட்ஜ் பகுதி தலைநகருக்குள் கொண்டுவருகிறது, அதேவேளையில் யமுனை வெள்ளப்பெருக்குப் பகுதிகளும் அருகிலுள்ள நீர்நிலைகளும் நீர்ப்பறவைகளுக்கும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குகின்றன.


7. அதேசமயம், டெல்லி மேற்கு இமயமலைக்கு அருகில் அமைந்திருப்பதும், பறவைகளின் பருவகால இடப்பெயர்வுக்கு சாதகமாக உள்ளது. மத்திய ஆசிய பறக்கும் பாதையின் (Central Asian Flyway) மையப்பகுதியில் டெல்லி அமைந்துள்ளது என்று இந்த வரைபடம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, மத்திய ஆசியா மற்றும் ஆர்டிக் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் பறவைகளுக்கு இது ஒரு பருவகால புகலிடமாக விளங்குகிறது.



8. அந்த வரைபடத்தொகுப்பானது டெல்லியை 'வரலாறு, புவியியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் சந்திப்புப் புள்ளி' என்றும் விவரிக்கிறது. உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில் ஒன்றாக இருக்கும் அழுத்தங்களுக்கு இடையிலும், இந்தச் செழிப்பான பல்லுயிர் பெருக்கம் தொடர்ந்து நிலைத்திருப்பதை இது குறிப்பிடுகிறது.


Original Link: Why is the sharp-tailed sandpiper’s sighting in Delhi significant?

Share:

1.5°C வெப்பநிலை உயர்வு வரம்பைத் தாண்டுவது இனி தவிர்க்க முடியாதது என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) கூறுகிறது. காலநிலை நடவடிக்கையில் இதன் தாக்கம் என்ன?

1.5°C வெப்பமயமாதல் வரம்பைக் கடப்பது இப்போது தவிர்க்க முடியாதது என்றும், சிறந்த சூழ்நிலையில் வெப்பநிலை 1.8°C-ஆக உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்றும் ஒரு புதிய ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) அறிக்கை கூறுகிறது. இனி காலநிலைக் கொள்கை மற்றும் உலகளாவிய நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.


ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) புதிய அறிக்கை ஒன்று, தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது உலக வெப்பநிலை உயர்வை 1.5°C-க்குள் கட்டுப்படுத்தும் இலக்கை, அடுத்த சில ஆண்டுகளில் உலகம் “தற்காலிகமாகத் தாண்டும்” அல்லது “மீறும்” (overshoot) வாய்ப்பு அதிகம் எனக் கூறுகிறது.


வெப்பமயமாதல் இலக்கு வரம்பைத் தாண்டுவதை கட்டுப்படுத்துதல் (Limiting Overshoot) என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, 1.5°C என்ற வரம்பைத் தாண்டுவது “தவிர்க்க முடியாதது” எனக் கூறுகிறது. மேலும், நம்பிக்கையளிக்கும் சூழ்நிலையிலும்கூட உலக வெப்பநிலை தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய நிலையைவிட 1.8°C வரை உயர்ந்து உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பிடத்தக்க வகையில், 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கானது, "எட்டக்கூடிய நிலையிலேயே" உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றப் பிரிவுத் தலைவர் சைமன் ஸ்டீல் கடந்த ஆண்டுதான் வலியுறுத்திக் கூறியிருந்தார்.


முதலில், 1.5°C இலக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? இந்த இலக்கை தற்காலிகமாகத் தாண்டுவது ஏன் கவலைக்குரியதாக இருக்கலாம்?


2015-ஆம் ஆண்டு 193 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய முடிவுகளில் ஒன்றாக 1.5°C இலக்கு அமைந்தது. பாரிஸ் ஒப்பந்தத்தின் 2-ஆம் பிரிவின்படி, உலக சராசரி வெப்பநிலை தொழில்துறைப் புரட்சிக்கு முந்தைய நிலையைவிட 2°C-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும், முடிந்தவரை 1.5°C-க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நாடுகள் உறுதியளிக்க வேண்டும்.


குறைந்த வெப்பநிலை வரம்பு முக்கியமானது. ஏனெனில், வெப்பமயமாதலின் ஒவ்வொரு சிறிய அளவு அதிகரிப்புடனும் காலநிலை அபாயங்கள் அதிகரிக்கின்றன. 1.5°C வரம்பு ஒருபோதும் முற்றிலும் “பாதுகாப்பான” வெப்பமயமாதல் நிலையாகக் கருதப்படவில்லை. இருப்பினும், இந்த வரம்பிற்கு அருகிலேயே இருப்பது மக்கள் மற்றும் சூழல் மண்டலங்களுக்கான அபாயங்களின் தீவிரத்தைக் குறைக்கிறது.


பல ஆண்டுகளாக, ஆபத்தான காலநிலை மாற்றத்தை மதிப்பிடுவதற்கு 2°C என்ற வரம்பே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. புவி வெப்பமடைதல் 2°C-ஐத் தாண்டினால், மனித நாகரிகம் இதுவரை எதிர் கொள்ளாத வாழ்வாதாரச் சூழலுக்கு காலநிலை மாற்றம் நம்மைத் தள்ளிவிடும் என்று யேல் பல்கலைக்கழகப் பொருளாதார நிபுணர் வில்லியம் நார்ட்ஹவுஸ் முதன்முதலில் சுட்டிக்காட்டினார். காலப்போக்கில், விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் காலநிலை நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய வழிகாட்டியாக 2°C என்ற அளவைப் பயன்படுத்தத் தொடங்கினர்.


ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டின் (Climate Change Conference (COP16)) போது கையெழுத்திடப்பட்ட கான்கன் ஒப்பந்தங்களில் (Cancun Agreements) 2°C மற்றும் 1.5°C இரண்டு அளவுகளும் ஒரு சர்வதேச பருவநிலை ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன. பின்னர், 2015-ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தம் 2°C-ஐ அதிகபட்ச எல்லையாக நிர்ணயித்த அதேவேளையில், 1.5°C-ஐ மிகவும் விரும்பத்தக்க இலக்காகவும் அடையாளம் கண்டது. ஏனெனில், 2°C-உடன் ஒப்பிடுகையில் 1.5°C-ஆம் ஆண்டில் கடுமையான வெப்பம், வறட்சி, நீர் பற்றாக்குறை மற்றும் பிற பருவநிலைத் தாக்கங்கள் தொடர்பான அபாயங்கள்  குறைவாகவே உள்ளன.


இதனால் 1.5°C-க்குள் வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது “பாதுகாப்பானது” என்று அர்த்தமல்ல. வெப்பமயமாதல் அதிகமாக காலநிலை பாதிப்புகளும் தீவிரமடைகின்றன என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நிரந்தர உறைபனி உருகுதல் மற்றும் பனிப்பாறைத் தட்டுகள் சரிவு போன்ற சரிசெய்ய முடியாத மாற்றங்களுக்கான அபாயங்களும் அதிகரிக்கின்றன. மேலும், வெப்பநிலை 1.5°C-க்கு மேல் எவ்வளவு அதிகமாக உயர்கிறதோ, அதை மீண்டும் குறைப்பது அவ்வளவு கடினமாகவும் அதிக செலவுடையதாகவும் மாறும். இதனால், உமிழ்வைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை அகற்றும் நடவடிக்கைகளைச் சார்ந்திருப்பதும்  முக்கியமான ஒன்றாக மாறுகிறது.


அதேவேளையில், சில மாதங்களுக்கோ அல்லது ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கோ வெப்பநிலை 1.5°C-ஐ தாண்டுவது என்பது, பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கு மீறப்பட்டுவிட்டது என்று அர்த்தமாகாது. 1.5°C என்ற இலக்கு என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நிலவும் சராசரி வெப்பநிலையைக் குறிப்பதல்ல. மாறாக, பல ஆண்டுகளாக கணக்கிடப்படும் நீண்ட கால வெப்பமடைதலையே அது குறிக்கிறது.


அப்படியானால், சமீபத்திய அறிக்கை என்ன கூறுகிறது?


அரசுகள் தற்போதைய காலநிலைத் திட்டங்களையும் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழிகளையும் முழுமையாகச் செயல்படுத்தும் ஒரு நம்பிக்கையளிக்கும் சூழ்நிலையிலும் கூட, உலக வெப்பமயமாதல்  1.8°C வரை உயர்ந்து உச்சத்தை எட்டும் என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஒப்புக்கொள்கிறது.




இந்தச் சூழலில், அறிக்கை ஐந்து முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது.


உத்தியை மாற்றுங்கள்; 1.5°C இலக்கைக் கைவிட வேண்டாம்:


உலகம் 1.5°C வரம்பைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. ஆனால், அதற்காக அந்த இலக்கைக் கைவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. நாடுகள் இப்போது தங்கள் உத்தியை மாற்றிக்கொண்டு, 1.5°C வரம்பை 'கீழிருந்து அணுகுவதற்குப் பதிலாக மேலிருந்து அணுகுமுறையை' பின்பற்ற வேண்டும். இந்த வரம்பைத் தாண்டிச் சென்றாலும், அந்த உச்ச அளவை முடிந்தவரை குறைவாகவும் குறுகியகாலத்திற்கு மட்டுமே நீடிக்கும்படியும் வைத்துக்கொண்டு, பின்னர் வெப்பநிலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


முடிவுகள், அறிவியல் மற்றும் மனநிலைகளாக மாற வேண்டும். 1.5°C-ஐ கீழிருந்து அணுக வேண்டிய இலக்காக அல்லாமல், மேலிருந்து அணுக வேண்டிய இலக்காக நாம் பார்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் தகவமைப்பு மற்றும் மீள்திறன் பிரிவின் தலைவரும், இந்த அறிக்கையின் ஒருங்கிணைப்பாளருமான மிரே அடல்லா கூறினார். உமிழ்வை அதிக அளவில் குறைப்பதும், நாம் தற்போது சென்று கொண்டிருக்கும் 'வரம்பைத் தாண்டும் பாதையின்' (overshoot pathway) தீவிரத்தைக் குறைப்பதும் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்வதற்கான தொடக்கப்புள்ளி இதுவாகும்.


சில பாதிப்புகளைச் சரிசெய்ய முடியாது:


இரண்டாவதாக, வெப்பநிலை பின்னர் மீண்டும் குறைக்கப்பட்டாலும், 1.5°C-ஐ தாண்டுவது தீங்கு விளைவிக்கும் மற்றும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். வெப்பநிலை எவ்வளவு அதிகமாக உயர்கிறதோ, 1.5°C-க்கு மேல் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, கடுமையான வெப்பம், காட்டுத்தீ, பனிப்பாறைகள் இழப்பு மற்றும் பவளப்பாறைகள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்களின் அபாயமும் அதிகரிக்கும்.



சில மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருக்கலாம். கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிகாவின் பனிப்பாறைத் தட்டுகள், அமேசான் மழைக்காடுகள் மற்றும் காலநிலையை ஒழுங்குபடுத்த உதவும் முக்கிய கடல் நீரோட்ட அமைப்பான அட்லாண்டிக் மெரிடியோனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் ஆகியவற்றுடன் தொடர்புடைய அபாயங்களை அறிக்கை குறிப்பிடுகிறது.


வெப்பநிலையை மீண்டும் குறைப்பதும் எளிதான பணியல்ல. வளிமண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை அகற்றுவது முக்கியமானதாக இருக்கும் என்று UNEP கூறுகிறது. ஆனால், நம்பிக்கையளிக்கும் அளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட வெப்பமயமாதலை பத்தில் ஒரு டிகிரிக்கு மேல் குறைக்க முடியாது. தற்போதைய வேகத்தில், மீதமுள்ள CO₂ உமிழ்வுகள் எதுவும் இல்லை என்று கருதினாலும், மரம் வளர்ப்பு மற்றும் வன மேலாண்மை நடவடிக்கைகள் மட்டுமே வெப்பமயமாதலை வெறும் 0.1°C குறைக்க 100 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக்கொள்ளும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.


மேலும், வெப்பநிலையை மீண்டும் 1.5°C-க்கு கீழ் கொண்டுவருவது, இந்த வரம்பைத் தாண்டிய காலகட்டத்தில் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் சரிசெய்து விடமுடியாது. வெப்பநிலை குறைந்தாலும், கடல் மட்ட உயர்வு, உயிரின அழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து நிகழக்கூடும்.


வெப்பநிலை வரம்பு மீறலின் அளவு:


1.5°C-ஐத் தாண்டும் அளவு முக்கியமானது. குறைந்த அளவிலும் குறுகிய காலத்திலும் இந்த வரம்பைத் தாண்டுவது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், வெப்பமயமாதலை மீண்டும் 1.5°C-க்கு கீழ் கொண்டுவரும் வாய்ப்பையும் அதிகரிக்கும். உடனடியாக எதிர்காலத்தில் மீத்தேன் மற்றும் குறுகிய காலம் மட்டுமே வளிமண்டலத்தில் நீடிக்கும் பிற காலநிலை மாசுபடுத்திகளை குறைப்பதும், வெப்பமயமாதலை ஒப்பீட்டளவில் விரைவாகக் கட்டுப்படுத்த உதவும்.




பாதிப்பைக் குறைத்தல்:


வெப்பநிலை வரம்பு மீறலுக்கு மூன்று கட்ட நடவடிக்கைகளை அறிக்கை முன்வைக்கிறது. உடனடியாக, நாடுகள் உமிழ்வுகளைப் அதிக அளவில் குறைத்து, பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும். வெப்பநிலை உச்சத்தை அடையும் காலகட்டத்தில், கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் அதே நேரத்தில், உலகம் குறைந்தபட்சம் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைய வேண்டும். அதன்பிறகு, வெப்பநிலையைக் குறைப்பதற்கு, தொடர்ச்சியான நிகர-எதிர்மறை CO₂ உமிழ்வுகள் தேவைப்படும் அல்லது வளிமண்டலத்திலிருந்து வெளியேற்றப்படுவதைவிட அதிக கார்பன்-டை-ஆக்சைடை அகற்ற வேண்டும்.


உமிழ்வைக் குறைத்தலும், காலநிலை மாற்றத்திற்குத் தகவைமப்பு கொள்வதும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்று அறிக்கை சுட்டிகாட்டுகிறது. உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகள் பலவீனமாக இருந்தால், காலநிலை மாற்றத்திற்குத் தகவைமத்து கொள்வது மிகவும் கடினமாகவும் அதிக செலவுடையதாகவும் மாறும். அதேபோல், தேவையான தகவைமப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் காலநிலை அபாயங்களுக்கு தொடர்ந்து வெளிப்படும்.


சமமற்ற சுமை:


வெப்பநிலை வரம்பைத் தாண்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்காது. உலக வெப்பமயமாதலுக்கு மிகக் குறைவாகப் பங்களித்த நாடுகளே, அதன் விளைவுகளுக்கு அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக உள்ளன. கடந்த ஆண்டு பிரேசிலின் பெலேமில் நடைபெற்ற COP30 மாநாட்டிலும் இதுவே முக்கிய கவலையாக இருந்தது. அங்கு, வளரும் நாடுகளுக்கான காலநிலை மாற்றத் தகவைமப்பு நிதியை அதிக அளவில் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை நாடுகள் ஒப்புக்கொண்டன. காலநிலை மாற்றத் தகவைமப்பு நடவடிக்கைகளுக்கான தேவை 2035-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு $310 பில்லியனுக்கும் அதிகமாகலாம் என்று இந்த மாநாட்டிற்கு முன்னதாகவே UNEP மதிப்பிட்டிருந்தது. இது தற்போதைய சர்வதேச பொது நிதியுதவியைவிட 12 மடங்கு அதிகமாக அளவாகும்.


Original Link: UNEP says 1.5°C ‘overshoot’ is now unavoidable. Here’s what this means for climate action.

Share:

மெட்டாவுடனான அமெரிக்காவின் உடன்படிக்கை ஒரு தொடக்கமே : இந்தியா தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் -ராஜீவ் சந்திரசேகர்

குழந்தைகள்மீது சமூக ஊடகங்களின் தாக்கத்திற்கு இந்தியா தானே பதில் கண்டுபிடிக்க வேண்டும்.


ஆகஸ்ட் 26 அன்று, அமெரிக்கா, அதன் பிராந்தியங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டம் முழுவதும் உள்ள இருகட்சி தலைமை வழக்கறிஞர்கள் கூட்டணியால் கொண்டுவரப்பட்ட குழந்தை-பாதிப்பு வழக்குகளுக்குத் தீர்வு காண, மெட்டா நிறுவனம் 17.1 பில்லியன் டாலர் வரை செலுத்த ஒப்புக்கொண்டது. இது இணைய வரலாற்றில் நுகர்வோர் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய தீர்வுகளில் ஒன்றாகும். மிக முக்கியமாக, சமூக ஊடகத் தளங்கள் வளர்ச்சி மற்றும் லாபத்தைத் தேடும் நோக்கில், குழந்தைகளைத் தெரிந்தே தீங்குக்கு உள்ளாக்கினவா என்பது குறித்த விவாதத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமைகிறது.

இந்த வழக்கு மெட்டாவின் வடிவமைப்புத் தேர்வுகளை சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில், அதன் தயாரிப்புகள் எவ்வாறு நீண்டகாலப் பயன்பாட்டை ஊக்குவித்தன, இளம் வயதினருக்கான பாதுகாப்பு அம்சங்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு வழங்கப்பட்டன, மற்றும் அதன் தளங்கள் இளம் பயனர்களுக்கு உருவாக்கும் அபாயங்களை அந்நிறுவனம் எவ்வாறு புரிந்துகொண்டது என்பனவற்றை ஆராய்ந்தது. மெட்டா எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுக்கிறது. ஆனால், தன்னார்வ சுய-ஒழுங்குமுறை என்பது அமல்படுத்தக்கூடிய பொறுப்புணர்வுக்கு மாற்றாக அமையாது என்பதை இந்தத் தீர்வு நிரூபிக்கிறது.


முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், மெட்டா நிறுவனம் 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்காக வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் இயல்புநிலை நேர வரம்புகள், இரவு நேரப் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள், பள்ளி நேரங்களில் அறிவிப்புகளுக்கான வரம்புகள், மேம்படுத்தப்பட்ட வயது உறுதி நடவடிக்கைகள் மற்றும் சுதந்திரமான இணக்கக் கண்காணிப்பு ஆகியவை அடங்கும். இவை வெறும் வெளித்தோற்ற மாற்றங்கள் அல்ல. முகநூல் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற தளங்கள் சிறார்களுக்காக எவ்வாறு செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என்பதன் அடிப்படையையே இவை கேள்விக்குள்ளாக்குகின்றன.


அமெரிக்கக் குழந்தைகள் இப்போது நீதிமன்றத்தின் ஆதரவுடன் தீங்கு விளைவிக்கும் தள வடிவமைப்பிலிருந்து பாதுகாப்பைப் பெற்றால், இந்தியக் குழந்தைகள் ஏன் அதே பாதுகாப்பைப் பெறக்கூடாது?


இந்த ஒப்பந்தம் மெட்டா நிறுவனம் இந்தப் பிரச்சனையைத் தீர்த்துவிட்டது என்று அர்த்தமல்ல. 2025-ல் 201 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய ஒரு நிறுவனத்தால், 10 ஆண்டுகளில் செலுத்தப்படும் 17 பில்லியன் டாலர் தொகையை அதனால் எளிதாகக் கையாள முடியும். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மெட்டாவின் பங்கு 5 சதவீதம் உயர்ந்தது. இந்த ஒப்பந்தம் அந்நிறுவனத்தின் மீது சிறிதளவும் அல்லது எந்தவொரு நிதி தண்டனைத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கிறது. தேவையான பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் அர்த்தமுள்ளவை. ஆனால் அவை காலங்கடந்தவை. மிக முக்கியமாக, இந்த ஒப்பந்தம் அமெரிக்கச் சட்டத்தின் கீழ், அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் மூலம் அமெரிக்கக் குழந்தைகளைப் பாதுகாக்கிறது. இது இந்தியாவின் 35 கோடி இளம் பயனர்களை உள்ளடக்கவில்லை. அதே தளங்கள் இந்தியாவிலும் செயல்படுகின்றன. அதே பரிந்துரை அமைப்புகள்தான் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை வடிவமைக்கின்றன. அதே ஊக்கத்தொகைகள் கவனம், ஈடுபாடு மற்றும் நீண்டகாலப் பயன்பாட்டிற்கு வெகுமதி அளிக்கின்றன. இருப்பினும், இந்தியாவில் இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளோ, கட்டாயத் தகவல்களை வெளியிடுவதோ அல்லது நீதிமன்ற மேற்பார்வையிடப்பட்ட சீர்திருத்தமோ காணப்படவில்லை.


இதற்குக் காரணம், இந்தியாவில் பாதிப்பு குறைவான தீவிரத்தன்மை கொண்டது என்பதல்ல. மாறாக, இந்த இணையத் தளத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்த நமது விவாதம் அவ்வப்போது மட்டுமே நிகழ்ந்து, ஒரு முடிவுக்கு வராமல் இருப்பதுதான். ஒரு துயரச் சம்பவம் நிகழ்கிறது, அதைத் தொடர்ந்து பொதுமக்களின் கோபம் வெளிப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட தளம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது. ஒரு நாடாளுமன்றக் கேள்வி கேட்கப்படலாம். பின்னர் அந்தப் பிரச்சினை மீண்டும் அமைதியாகிவிடுகிறது. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை இந்தச் சுழற்சியை உடைத்தது. அதேபோன்ற தகவல்களை வெளியிடக் கட்டாயப்படுத்தும் திறன் கொண்ட ஒரு சட்ட செயல்முறை இப்போது இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது.


அமெரிக்க வழக்கின் மிக முக்கியமான விளைவு இந்தத் தகவல்களை வெளியிடுவதுதான். நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட தகவல் சேகரிப்பு, மெட்டா நிறுவனத்தை அதன் உள் ஆராய்ச்சி, வடிவமைப்பு ஆவணங்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்பான தகவல்தொடர்புகளை சத்தியப்பிரமாணத்தின்கீழ், பொதுவெளியில், குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தி சமர்ப்பிக்கக் கட்டாயப்படுத்தியது. இந்திய நீதிமன்றங்களில் எடுக்கப்படும் ஒரு தீவிரமான சட்ட நடவடிக்கை, பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கட்டாயப்படுத்தும்.


இந்திய இளம் பெண்களின் மனநல பாதிப்புகள் குறித்து மெட்டாவின் உள்நாட்டு ஆய்வுகள் என்ன தெரிவிக்கின்றன? இரவு 11 மணிக்கு 14 வயது சிறுமிக்கு இந்தி, தமிழ் மற்றும் பெங்காலி மொழிகளில் பரிந்துரை அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? சட்டப்படி உறுப்பினராகச் சேரத் தடைசெய்யப்பட்ட தளங்களில் 13 வயதுக்குட்பட்ட எத்தனை இந்தியக் குழந்தைகள் தீவிரமாகச் செயல்படுகிறார்கள்? இந்தியப் பயனர்களைப் பாதிக்கும் குழந்தை பாலியல் துஷ்பிரயோக நிலைமைகள் (child sexual abuse material) எந்த அளவில் உள்ளன? அது எவ்வாறு புகாரளிக்கப்படுகிறது? அமெரிக்காவில் மட்டும், 7.5 மில்லியன் அளவிலான இத்தகைய நிலைமைகள் நிறுவனத்தின் உள்நாட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.


அதே அடிமையாக்கும் வடிவமைப்பு அம்சங்கள் இந்தியப் பயனர்களிடமும் பயன்படுத்தப்பட்டனவா? ஆம் எனில், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமலேயே இந்தியப் பயனர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.


இதற்கான விடைகள் மெட்டாவின் (Meta) சேவையகங்கள், உள்-ஆராய்ச்சித் தரவுத்தளங்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தகவல் பரிமாற்றங்களில் உள்ளன. நீதிமன்றங்கள் மூலமாக மட்டுமே அவற்றைப்பெற முடியும். நடவடிக்கை எடுக்க இந்தியாவிடம் வலுவான சட்டக் கட்டமைப்பு உள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019 (Consumer Protection Act), தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள்) விதிகள்-2021 (IT (Intermediary Guidelines) Rules), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences Act (POCSO)), சிறார் நீதிச் சட்டம் (juvenile Justice Act) மற்றும் இந்திய அரசியலமைப்பு (Constitution of India) ஆகியவை இதில் அடங்கும். புதிய சட்டங்களுக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை.


பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் 2021-ல் உருவாக்கப்பட்ட 'பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய' (Safe, Trusted and Accountable) கட்டமைப்பு இதற்காகவே வடிவமைக்கப்பட்டது. நானும் அக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தேன். பரந்த அளவில் செயல்படும் தளங்கள், தங்கள் வடிவமைப்புத் தேர்வுகளால் ஏற்படும் விளைவுகளுக்குச் சட்டரீதியான பொறுப்பை ஏற்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். அமெரிக்க வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட செயல்பாடுகள் இந்தத் தரநிலையை எட்டவில்லை.


இந்தியா ஒரு தேசிய அளவிலான சட்ட உத்தியை ஒருங்கிணைக்க வேண்டும். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights(NCPCR)), முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இக்குழுவிற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம், இந்தியாவுக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி முடிவுகள், அல்காரிதம் (algorithm) தொடர்பான ஆவணங்கள், சிறார் பயனர்கள் குறித்த தரவுகள் மற்றும் உள்-பாதிப்பு ஆராய்ச்சித் தகவல்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கத் தளங்கள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.


இந்தியாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நுகர்வோர் மன்றங்களையும் உயர் நீதிமன்றங்களையும் நேரடியாக அணுகலாம். அல்காரிதமிக் வெளிப்படுத்தலுக்கான (algorithmic disclosure) சட்டப்பூர்வ உரிமையை உருவாக்கும் ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும். இதன்படி, உள்ளடக்கக் கண்காணிப்புக் கொள்கைகள், பரிந்துரை அமைப்பின் (recommendation engine) அளவுகோல்கள் மற்றும் இந்தியப் பயனர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி முடிவுகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட இந்திய அதிகார அமைப்பிடம் தளங்கள் வெளிப்படுத்த வேண்டும். இறுதியாக, மாநில அரசுகள் இத்தளங்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைந்த வழக்குகளை இந்திய நீதிமன்றங்களில் தொடர வேண்டும்.


முன்னோடியாகச் செயல்படும் ஒரு மாநிலம்கூட தேசிய அளவிலான ஒரு இயக்கத்தைத் தொடங்கி வைக்க முடியும்.


அமெரிக்காவில் எட்டப்பட்ட தீர்வு ஒரு தொடக்கமே. நீண்டகாலமாக, மேற்கத்திய நாடுகளில் எதிர்கொள்வதைக் காட்டிலும் குறைவான ஆய்வுகள், பலவீனமான கண்காணிப்பு மற்றும் குறைந்த அளவிலான பொது விழிப்புணர்வு ஆகியவற்றுடன் உலகளாவிய தளங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச சட்டப் பொறுப்புணர்வு மட்டுமே கொண்ட நிலையில், இந்தியாவின் இளம் பயனர்களிடமிருந்து அவை மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளன.


சமூக ஊடகங்கள் தங்கள் நாட்டுச் சிறார்களுக்கு இழைத்த பாதிப்புகளுக்கு அமெரிக்கா கண்டறிந்த தீர்வே இந்த ஒப்பந்தம். இந்தியாவும் இப்போது அதற்கான சொந்தத் தீர்வுகளைக் கண்டறிய வேண்டும். மறைமுகமான விவாதங்கள் முடிவுக்கு வர வேண்டும். பாதிப்பு என்பது உண்மையானது. அது தளங்களுக்கும் தெரியும். அதற்கான சட்ட வழிமுறைகளும் உள்ளன. அனைத்துத் தளங்களையும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், பொறுப்புக்கூறக்கூடியதாகவும் மாற்ற உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது.


கட்டுரையாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் இணை அமைச்சராகப் பணியாற்றியவர்; தற்போது கேரள மாநில பாஜக தலைவராகவும், நேமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.


Original Link: US settlement with Meta is a start. India must protect itself

Share:

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர்பான வழக்குகள் ரத்து : அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு உச்சநீதிமன்றத்திற்கு என்ன அதிகாரங்களை வழங்குகிறது, அது ஏன் சர்ச்சைக்குரியதாக உள்ளது? - அபூர்வா விஸ்வநாத்

'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையிலான தேர்வுகள் (exam) தொடர்பான போராட்டங்களுடன் தொடர்புடைய முதல் தகவல் அறிக்கைகளை (FIR) ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்தே சட்ட நிபுணர்களிடையே விவாதத்திற்குரியதாக இருந்து வரும் 142-வது பிரிவின் மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பிரிவு என்ன?, இதன் பயன்பாடு ஏன் சர்ச்சைக்குரியதாக உள்ளது?


இந்த வாரம், 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையிலான நாடு தழுவிய தேர்வுப் போராட்டங்களில் (exam protests) பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) ரத்து செய்ய, அரசியலமைப்பின் 142-வது பிரிவின்கீழ் தனக்குள்ள சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது.


இவ்வழக்குகளைத் தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு "தெளிவான முடிவை" எடுத்ததாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதிகள் சூர்யா காந்த், ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்குகளை முடித்து வைத்தது. அத்துடன், NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


"தீவிரமான மற்றும் கடுமையான குற்றப் பின்னணி" கொண்டதாகக் கூறப்படும் சுமார் 2,873 நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தவிர, ஜூலை மாதப் போராட்டங்கள் தொடர்பான மற்ற அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் (FIR) ரத்து செய்யப்பட்டன. விசாரணையின் போது, ​​செப்டம்பர் 5-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த போராட்ட ஊர்வலத்தைக் கைவிடுவதாக வெளிப்படையான நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சியிடம்' (CJP) கேட்கப்பட்டது. அதாவது, ஜூலை மாதத்தில் CJP விடுத்த முக்கிய கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதற்கு ஏதுவான ஒரு நடுநிலைக் களமாக நீதிமன்றம் செயல்பட்டது.


அரசின் உறுதிமொழிக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் இந்த உத்தரவு, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்தே சட்ட நிபுணர்களிடையே விவாதத்திற்குரியதாக இருந்து வரும் 142-வது பிரிவின்மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


அரசியலமைப்புப் பிரிவு-142 என்றால் என்ன, அது எங்கிருந்து வந்தது?


தனது பரிசீலனையில் உள்ள எந்தவொரு வழக்கிலும் அல்லது விவகாரத்திலும் "முழுமையான நீதியை நிலைநாட்டத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை" பிறப்பிக்க 142-வது பிரிவு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. பெரும்பாலான அரசியலமைப்புப் பிரிவுகளைப் போலன்றி, இப்பிரிவு "முழுமையான நீதி" (complete justice) என்பதை வரையறுக்கவோ அல்லது அதைப் பயன்படுத்த வேண்டிய சூழல்களைக் குறிப்பிடவோ இல்லை.


பிரிவு 142-ன் தோற்றத்தை, 1935-ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின் (Government of India Act) 210-வது பிரிவிலும், அதற்கும் அப்பால், எழுத்துப்பூர்வமான சட்டம் இல்லாத சூழலில் "நீதி, நேர்மை மற்றும் மனசாட்சி" (justice, equity and good conscience) அடிப்படையில் தகராறுகளைத் தீர்க்கும் காலனித்துவ கால நடைமுறையிலும் காணமுடியும். அரசியலமைப்பு வரைவில் இது 118-வது பிரிவாக இடம்பெற்றிருந்தது. எவ்வித விவாதமும் இன்றி 1949-ம் ஆண்டு மே 27 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையால் (Constituent Assembly) இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான இரண்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டன.



இந்தப் பிரிவின் நோக்கத்தைப் பற்றி விவாதிப்பதற்கு அரசியலமைப்பு நிர்ணய சபை மிக நெருக்கமாக வந்தது ஒரு தற்செயலான நிகழ்வாகவே அமைந்தது. மேல்முறையீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீதி கோரும் சூழலில் தலையிடும் பழைய 'பிரிவி கவுன்சிலின்' (Privy Council) அதிகாரத்தோடு, நீதிமன்றத்திற்கு முன்மொழியப்பட்ட அதிகாரங்களை உறுப்பினர் கிருஷ்ண சந்திர சர்மா ஒப்பிட்டுப் பேசியதே அந்தத் தருணமாகும். அதைத் தாண்டி, நீதிமன்றத்தின் மிக விரிவான அதிகாரமாக அமையவிருந்த இப்பிரிவின் செயல்வரம்பு என்ன என்பது குறித்துத் தீர்மானிக்கும் பொறுப்பு, அடுத்த எழுபதாண்டுகளில் ஒவ்வொரு வழக்கின் மூலமாகவும் நீதிமன்றத்திடம் விடப்பட்டது.


உச்சநீதிமன்றம் இந்த அதிகாரத்தை இதற்கு முன் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது?


பிரிவு 142-ன் வரம்புகள் வரையறுக்கப்படாத தன்மையானது (open-ended nature), நீதிமன்றம் அடிக்கடி பயன்படுத்தும் கருவிகளில் ஒன்றாக இதனை மாற்றியுள்ளது. நீதிமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் இப்பிரிவு, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


யூனியன் கார்பைட் நிறுவனத்திடமிருந்து 470 மில்லியன் டாலர் இழப்பீட்டைப் பெற்றுத் தருவதற்கும், அந்நிறுவனத்தின் மீதான குற்றவியல் வழக்குகளை ரத்து செய்வதற்கும் 1989-ல் போபால் விஷவாயு விபத்து தொடர்பான வழக்கில் இப்பிரிவு பயன்படுத்தப்பட்டது.


அயோத்தி நில உரிமை வழக்கில், "நிகழ்தகவின் வலுவான சாத்தியக்கூறு" (preponderance of probability) அடிப்படையில் தீர்வு காண்பதற்கும், முஸ்லிம் தரப்பினருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கும் இது பயன்படுத்தப்பட்டது.


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏ.ஜி. பேரறிவாளனை 2022-ல் விடுதலை செய்ய உத்தரவிடவும் இது பயன்படுத்தப்பட்டது.


ஒரு திருமணம் மீட்க முடியாத அளவுக்கு முறிந்துவிட்டதாகக் கண்டறியப்படும்போது விவாகரத்து வழங்குவதற்கும், பொதுநல வழக்குகள் மற்றும் பிற வழக்குகளிலும் நீதிமன்றம் இப்பிரிவைப் பயன்படுத்த முடியும்.


ஐஐஎம் அகமதாபாத் (IIM Ahmedabad) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வு, 1950 முதல் 2023 வரை "பிரிவு 142" அல்லது "முழுமையான நீதி" (complete justice) ஆகியவற்றைக் குறிப்பிட்ட அனைத்து வழக்குகளையும் ஆய்வு செய்தது. இவ்வாய்வில் 1,579 குறிப்புகளும், 791 நேரடிப் பயன்பாடுகளும் கண்டறியப்பட்டன. இவை பெரும்பாலும் உரிமையியல் (civil) சார்ந்த விவகாரங்களில் இடம்பெற்றிருந்தன.


நீதிமன்றம் தனது சொந்த விருப்புரிமையைக் கட்டுப்படுத்த முயற்சித்திருக்கிறதா?


உச்சநீதிமன்றம் உலகின் மிக வலிமையான அரசியலமைப்பு நீதிமன்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த வலிமைக்கு முக்கியக் காரணம், பிரிவு 142-ன் கீழ் அது கொண்டிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தும் விதமாகும். 38 நீதிபதிகளைக் கொண்ட, பெரும்பாலும் இருவர் கொண்ட அமர்வுகளாகச் செயல்படும் ஒரு நீதிமன்றத்தில், இத்தகைய விருப்புரிமையின் தாக்கம் பன்மடங்காகிறது.


நீதிபதிகளுக்கு அளவுக்கு அதிகமான விருப்புரிமை கிடைப்பதைத் தவிர்க்க, உச்சநீதிமன்றமே இந்தப் பிரிவின் பயன்பாட்டிற்குச் சில வரம்புகளை வகுக்க முயன்றுள்ளது.


'பிரேம் சந்த் கார்க் vs உத்தரப் பிரதேச மாநிலம்-1962' (Prem Chand Garg vs State of Uttar Pradesh) வழக்கில், பிரிவு 142-ன்கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்திற்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 'உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் vs இந்திய அரசு-1998' (Supreme Court Bar Association vs Union of India) வழக்கில், பிரிவு 142 ஒரு சட்டத்தின் குறைகளை அல்லது இடைவெளிகளை நிரப்ப உதவலாமே தவிர, அச்சட்டத்தையே மாற்றவோ அல்லது ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறையை மீறவோ முடியாது என்று கூறியது. இருப்பினும், பிரிவு 142-ன்கீழ் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது உச்சநீதிமன்றம் பல சமயங்களில் இத்தகைய எச்சரிக்கைகளைப் புறக்கணித்துள்ளது.




'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) உத்தரவு அந்த வரம்பை எவ்வாறு சோதிக்கிறது?


'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா'வின் (Bharatiya Nagrik Suraksha Sanhita) பிரிவு 528-ன் கீழ் ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, வழக்கமாக அதன் தனிப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் அது பரிசீலிக்கப்படுகிறது. ஒரு குற்றம் உண்மையில் நிகழ்ந்துள்ளதா அல்லது வழக்குகள் வெளிப்படையாகத் தீய நோக்கத்துடன் (malicious) தொடரப்பட்டவையா என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டும்.


'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) உத்தரவில், மத்திய அரசுக்கும் ஒரு போராட்டக் குழுவுக்கும் இடையிலான சமரச ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகள் (FIR) முறையான ஆய்வின்றி ஒன்றாக இணைக்கப்பட்டன. வசதிக்காகப் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, முதல் தகவல் அறிக்கை (FIR) ரத்து தொடர்பான சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதுடன், சட்டம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த நீதிமன்றத்தின் புரிதலுக்குப் பதிலாகப் பிரிவு 142-ன் கீழ் நீதிமன்றத்தின் விருப்புரிமையை முன்னிறுத்துகிறது. யாருக்கு நிவாரணம் கிடைக்கும், யார் அதிலிருந்து விலக்கப்படுவார்கள் என்பதைத் தீர்மானிக்கவும் நீதிமன்றம் பிரிவு 142-ன்கீழ் உள்ள தனது விருப்புரிமையைப் பயன்படுத்துகிறது.


குற்றவியல் சட்ட விதிகளை ஒரு பொதுவான நீதிமன்ற உத்தரவின் மூலம் மீற முடியாது என்று சட்ட அறிஞர் கௌதம் பாட்டியா வாதிடுகிறார்.


பிரிவு 142 விமர்சனத்திற்கு உள்ளாவது இதுவே முதல் முறையா? நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தமிழ்நாடு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருத, கடந்த ஆண்டு நீதிமன்றம் இதே சட்டப்பிரிவைப் பயன்படுத்தியபோது, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அதனை ஜனநாயக நிறுவனங்களுக்கு எதிரான ஒரு "அணு ஏவுகணை" (nuclear missile) என்று வர்ணித்தார்.


இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான கே.கே. வேணுகோபாலும் கடந்த காலத்தில் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு இச்சட்டப்பிரிவு "மிகப்பெரிய நன்மைகளை" செய்திருந்தாலும், இதில் தகுந்த கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் 2017-ல் குறிப்பிட்டிருந்தார்.


அதற்கடுத்த ஆண்டு, சபரிமலை தீர்ப்புக்குப் பிறகு, அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று, 142-வது சட்டப்பிரிவை "வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் காமதேனு" (Kamdhenu from which unlimited powers flowed) என்று விமர்சனரீதியாக விவரித்தார். ஒரு சிறிய அமர்வின் தனிப்பட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் இது பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வுகள் மட்டுமே இச்சட்டப்பிரிவைச் செயல்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.


Original Link: CJP cases scrapped: What powers does Article 142 give the Supreme Court, and why is it controversial?

Share:

இந்தியாவில் கல்வி சார்ந்த பாலின இடைவெளி, நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. -கரண் பப்பர், ரவுனக் மைத்ரா

எந்தவொரு மாநிலத்திலும் கிராமங்களுக்கு மேல்நிலைக் கல்வி வசதி விரிவுபடுத்தப்படாத நிலையில், அந்த மாநிலங்களில் முதலில் கல்விக்கான வாய்ப்பை இழப்பது பெண் குழந்தைகள்தான்.


2023-24-ஆம் ஆண்டுகளின் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (National Family Health Survey (NFHS))-6-வது, தரவுகளின்படி, 54.6% இந்திய ஆண்களும் 46.4% இந்தியப் பெண்களும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கல்வியை முடித்துள்ளனர்.  5-தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பைவிட இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் அதிகரித்துள்ளன. பெண்களுக்கான விகிதம் 5.4 சதவீதப் புள்ளிகளும், ஆண்களுக்கான விகிதம் 4.4 சதவீதப் புள்ளிகளும் அதிகரித்துள்ளதால், இருபாலருக்கும் இடையிலான இடைவெளி 9.2-லிருந்து 8.2-ஆகக் குறைந்துள்ளது.


அந்த ஒற்றை தேசிய அளவிலான புள்ளிவிவரமானது, ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரண்டு குழுக்களின் சராசரி மதிப்பைக் குறிக்கிறது. நகர்ப்புற இந்தியர்களைப் பொறுத்தவரை, 64% ஆண்களும் 61.5% பெண்களும் 10 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலான வித்தியாசம் 2.5 சதவீதப் புள்ளிகளாக உள்ளது. கிராமப்புற இந்தியர்களைப் பொறுத்தவரை, இந்தப்புள்ளிவிவரங்கள் முறையே 49.9% மற்றும் 39.7%-ஆக உள்ளன. இங்குள்ள இடைவெளி 10.2 புள்ளிகளாகும். இது நகர்ப்புற இடைவெளியைவிட நான்கு மடங்கு அதிகமான அளவாகும்.


இந்தியா நகரங்களில் இடைநிலைப் பள்ளிக் கல்வியில் (secondary schooling) பாலின இடைவெளி கணிசமான அளவு ஒழித்துள்ளது. ஆனால் கிராமங்களில் அவ்வாறு நிகழவில்லை.


6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியைப் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதத்தை வசிப்பிட வாரியாக எடுத்துக்காட்டுகின்றன.


பெண்கள் எங்கே முன்னணியில் இருக்கிறார்கள், எங்கே பின்தங்கியிருக்கிறார்கள்?


மாநில அளவில் பார்க்கும்போது இந்த வேறுபாடு இன்னும் தெளிவாகத் தெரிகிறது: சிக்கிம் (5.3 புள்ளிகள்), கேரளா (4.6), உத்தரகண்ட் (4.2), இமாச்சலப் பிரதேசம் (3.7), மேற்கு வங்கம் (2.2), மிசோரம் (2.0), உத்தரப் பிரதேசம் (1.7), பீகார் (0.6) மற்றும் சத்தீஸ்கர் மற்றும் புதுச்சேரி (தலா 0.1) போன்ற 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், நகர்ப்புற ஆண்களைவிட நகர்ப்புறப் பெண்கள் இந்தக் குறியீட்டில் முன்னிலையில் உள்ளனர்.


கிராமப்புற இந்தியாவைப் பொறுத்தவரை,   பட்டியலில் மூன்று மாநிலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கிராமப்புறப் பெண்கள், கிராமப்புற ஆண்களைவிட அதிக அளவில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியை முடித்துள்ள இடங்கள் கேரளா, சிக்கிம் மற்றும் மேகாலயா மட்டுமே. கேரளாவில் பெண்கள் 4.5 சதவீதப் புள்ளிகளும், சிக்கிமில் 4.3 புள்ளிகளும், மேகாலயாவில் 3.2 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.


சில மாநிலங்களில் இந்த இரு நிலைகளும் ஒரே நேரத்தில் காணப்படுகின்றன. பீகாரில், நகர்ப்புறப் பெண்கள் 51.9% என்ற நிலையில், நகர்ப்புற ஆண்களின் 51.3%-ஐ விட சிறிதளவு முன்னிலையில் உள்ளனர். ஆனால், கிராமப்புற ஆண்கள் 44.6% என்ற நிலையில் இருக்கும்போது, கிராமப்புறப் பெண்கள் 30.6% மட்டுமே உள்ளனர். இதனால், கிராமப்புற ஆண்கள் பெண்களைவிட 14.0 சதவீதப் புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். உத்தரப் பிரதேசத்தில், நகர்ப்புறப் பெண்கள் 1.7 புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். ஆனால், கிராமப்புற ஆண்கள் பெண்களைவிட 8.8 புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். புதுச்சேரியில் நகர்ப்புறப் பாலின இடைவெளி பூஜ்ஜியமாக இருந்தபோதிலும் கிராமப்புற இடைவெளி 15.1 புள்ளிகளாக உள்ளது. ஒரு மாநிலத்தின் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான பாலின இடைவெளியானது, அந்த மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைவிட அதிகமாக உள்ளது.


கிராமப்புறப் பின்னடைவு அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை


கிராமப்புறங்களில் ஏற்படும் பின்தங்கிய நிலை மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கும் ஒரு எளிய கதையாக இதனை எளிதாக கருதிவிடலாம். ஆனால், உண்மையில் நிலைமை அதுவல்ல. இந்திய ஆண்களை விட இந்தியப் பெண்களுக்கு, கிராமப்புறத்தில் வசிப்பது என்பது மிக அதிக அளவிலான பாதிப்பையே ஏற்படுத்துகிறது.


தேசிய அளவில், ஒரு கிராமப்புறப் பெண்ணை விட ஒரு நகர்ப்புறப் பெண் 10 வருடப் பள்ளிப்படிப்பை முடித்திருப்பதற்கான வாய்ப்பு 21.8 சதவிகிதப் புள்ளிகள் அதிகமாக உள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை, நகர்ப்புற ஆண்களுக்கு கிராமப்புற ஆண்களைவிட உள்ள முன்னிலை 14.1 புள்ளிகள் மட்டுமே. அதாவது, கிராமப்புறமாக இருப்பதால் ஏற்படும் கல்விப் பின்னடைவு பெண்களுக்கு ஆண்களைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக உள்ளது. நகரங்களைவிட்டு கிராமங்களை நோக்கிச் செல்லச் செல்ல பாலின இடைவெளி ஏன் அதிகரிக்கிறது என்பதற்கான முக்கியக் காரணம் இதுவாகும்.


இந்தப் நிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் பல பெரிய மாநிலங்களில் இது தீவிரமாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில், நகர்ப்புறப் பெண்கள் கிராமப்புறப் பெண்களை விட 28.0 புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். அதே, சமயம் நகர்ப்புற ஆண்கள் கிராமப்புற ஆண்களைவிட 22.9 புள்ளிகள் முன்னிலையில் உள்ளனர். ஜார்க்கண்டில், இந்த புள்ளிவிவரங்கள் முறையே 29.2 மற்றும் 18.1-ஆக உள்ளன. பீகாரில், இந்த புள்ளிவிவரங்கள் 21.3 மற்றும் 6.7-ஆக உள்ளன. கிராமப்புற ஆண்கள் நகர்ப்புற ஆண்களைவிட சிறிதளவு பின்தங்கியுள்ளனர். அதே, சமயம் கிராமப்புறப் பெண்கள் நகர்ப்புறப் பெண்களைவிட மிகவும் பின்தங்கியுள்ளனர்.


எந்த மாநிலத்தில் கிராமங்களுக்கு இடைநிலைக் கல்வி விரிவுபடுத்தப்படவில்லையோ, அங்கு மகள்கள்தான் முதலில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.


இப்போது பாலினத்தைவிட புவியியல் முக்கியமானதாகிறது


இரண்டு புள்ளிவிவரங்களை நெருக்கமாக வைத்துப் பார்க்கும்போது, இந்த வேறுபாட்டை புறக்கணிப்பது கடினம். கேரளாவில் 84.6% கிராமப்புறப் பெண்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியை முடித்துள்ளனர். ஆனால் பீகாரில் நகர்ப்புறப் பெண்களின் விகிதம் 51.9% மட்டுமே. குஜராத்திலும் நகர்ப்புறப் பெண்களின் விகிதம் 51.9%-ஆக உள்ளது; மேற்கு வங்கத்தில் 52.1%-ஆகவும், ராஜஸ்தானில் 52.9%-ஆகவும் உள்ளது.


கேரளாவின் கிராமப்புறத்தில் வாழும் ஒரு பெண், பீகாரின் நகர்ப்புறத்தில் வாழும் ஒரு பெண்ணைவிட 30 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் அதிகக் கல்வி பெற்றிருக்கிறார். மேலும், அவரது கல்வி நிலை சராசரி இந்திய ஆணின் கல்வி நிலையையும்விட அதிகமாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலும், ஒரு மாநிலத்தின் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலும் காணப்படும் இந்தப் பாலின வேறுபாடு போதுமான அளவு கவனம் பெறாத ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியாவில், ஒரு பெண் குழந்தை என்பதைக் காட்டிலும், அந்த பெண் எந்த இடத்தில் பிறக்கிறார் என்பதே அந்த பெண்ணிற்கு கிடைக்கும் கல்வியை  தீர்மானிக்கிறது.

கேரளாவைக் குறிப்பிடுவதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உள்ளது.  மாநிலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளின் புள்ளிவிவரங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளன: நகர்ப்புறங்களில் 88.7% பேரும், கிராமப்புறங்களில் 84.6% பேரும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியை முடித்துள்ளனர். இந்த இரண்டுக்குமான வேறுபாடு 4.1 சதவீதப் புள்ளிகள் மட்டுமே. ஆனால், தேசிய அளவில் இந்த வேறுபாடு 21.8 புள்ளிகளாக உள்ளது. இந்த வகையில் கேரளாவைப் போன்ற நிலை கொண்ட மாநிலங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் (6.6 புள்ளிகள்), புதுச்சேரி (6.8 புள்ளிகள்) மற்றும் கோவா (6.9 புள்ளிகள்) ஆகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கல்வி இடைவெளி குறைந்துள்ள அனைத்து இடங்களிலும், அதற்கு முன்பாக நகர்ப்புற–கிராமப்புற இடைவெளியே குறைந்துள்ளது.


விதிவிலக்காக இருக்கும் புதிய திட்டம்


ஒரே ஒரு நிகழ்வு இந்தப் போக்கிலிருந்து வேறுபடுகிறது: மிகவும் இளைய வயதினருக்கான கல்வி. நகர்ப்புற இந்தியாவில், 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளின் முன்பள்ளி வருகை விகிதம் 50.0%-ஆக உள்ளது. கிராமப்புற இந்தியாவில் இது 46.0%-ஆக உள்ளது. இதற்கிடையிலான வேறுபாடு 4 சதவீதப் புள்ளிகள் மட்டுமே. இதனுடன் ஒப்பிடும்போது, பெண் குழந்தைகளின் பள்ளி வருகையில் 15 புள்ளிகளும், பெண்களின் இடைநிலைக் கல்வி அடைவில் 22 புள்ளிகளும் வேறுபாடு காணப்படுகிறது.


பல மாநிலங்களில், நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் வருகைப்பதிவு அதிகமாக உள்ளது: மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 68.0%-ஆகவும், நகர்ப்புறங்களில் 54.3% ஆகவும் உள்ளது. புதுச்சேரியில் இது 76.5%-ஆகவும், நகர்ப்புறங்களில் 60.7%-ஆகவும் உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இது 72.1%-ஆகவும், நகர்ப்புறங்களில் 64.1%-ஆகவும் உள்ளது. தெலங்கானா, ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களிலும் இதேபோன்ற மாற்றம் காணப்படுகிறது.


இதற்கான மிகவும் சாத்தியமான விளக்கம் அங்கன்வாடி வலையமைப்பு (anganwadi network) ஆகும். இது ஒரு கிராமப்புற நிறுவனமாக அமைக்கப்பட்டு, தனியார் மழலையர் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் குழந்தைப் பருவக் கல்வியை வழங்குகிறது. நகர்ப்புறங்களில், பெற்றோர்கள் பெரும்பாலும் இந்தச் சேவைக்குக் கட்டணம் செலுத்துகிறார்கள். அதேசமயம் கிராமப்புறங்களில், பெற்றோர்கள் இதை பெரும்பாலும் அரசிடமிருந்து பெறுகிறார்கள். மேலும்,  பல மாநிலங்களில், அரசே இதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.


அரசின் சேவைகள் எப்போதும் தனியார் சேவைகளைவிட பின்தங்கியிருக்கும் என்ற கருத்தைத் திருத்துவதற்கு இது ஒரு பயனுள்ள திருத்தமாகும். எடுத்துக்காட்டாகும். இந்தியாவில், அரசு நடத்தும், கிராமப்புறங்களை மையமாகக் கொண்ட முன்பள்ளி அமைப்பில்தான் நகர்ப்புற–கிராமப்புற இடைவெளி மிகக் குறைவாக உள்ளது. குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குடும்பங்கள் தங்கள் சொந்தப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பள்ளிகளைச் சார்ந்திருக்க வேண்டிய இடங்களில் இந்த மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.


இது என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது


கடந்த 20 ஆண்டுகளாக, இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விவாதம் பாலின இடைவெளியை மையமாகக் கொண்டே நடைபெற்று வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்குதல், நிபந்தனையுடன் கூடிய பணப் பரிமாற்றங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த அணுகுமுறை, ஒரு மகனையும் ஒரு மகளையும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பங்களை நோக்கியே செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கணிசமான அளவிலும் இந்த இடைவெளி நிலவும் ஒரு தேசத்தில், இந்தப் பிரச்சினையை இவ்வாறு கட்டமைப்பது பொருத்தமானதாக இருந்தபோதிலும், நகரங்களில் 2.5 புள்ளிகளாகவும், கிராமங்களில் 10.2 புள்ளிகளாகவும் மட்டுமே இருக்கும் நிலையில், அதே அணுகுமுறை அவ்வளவு பொருத்தமானதாக இல்லை.


6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியப் பெண் குழந்தைகளில் பெருமபாலனோர் எதிர்கொள்ளும் முக்கியத் தடையாக தற்போது குடும்பத்தின் முடிவு இருப்பதில்லை. அதற்குப் பதிலாக, அருகிலேயே ஒரு இடைநிலைப் பள்ளி இருக்கிறதா என்பதுதான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. கேரளா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் அருகிலேயே இடைநிலைப் பள்ளி இருக்கும் போது, குடும்பங்களைச் சம்மதிக்க வைக்க எந்தவித முயற்சியும் தேவையில்லாமலேயே பாலின இடைவெளி மறைந்து விடுகிறது. ஆனால், பள்ளி வசதி இல்லாத பகுதிகளில், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அந்த இடைவெளியை  குறைக்க முடியவில்லை.


குறிப்பு: அனைத்து புள்ளிவிவரங்களும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் (International Institute for Population Sciences) நிறுவனம் வெளியிட்ட NFHS-6 (2023–24) மற்றும் NFHS-5 (2019–21) உண்மைத் தாள்களிலிருந்து பெறப்பட்டவை. பள்ளிக் கல்வி தொடர்பான புள்ளிவிவரங்கள் 15–49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை அடிப்படையாகக் கொண்டவை. மணிப்பூர் 6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பை கொண்டு கணக்கெடுக்கப்படவில்லை. எனவே, இந்தப் புள்ளிவிவரங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. சிறிய யூனியன் பிரதேசங்களுக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற மதிப்பீடுகள் குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டவை என்பதால், அவற்றை எச்சரிக்கையுடன் புரிந்துகொள்ள வேண்டும்.


கரண் பப்பர், XLRI ஜாம்ஷெட்பூரில் பொருளியல் உதவிப் பேராசிரியராகவும், ரவுனக் மைத்ரா, அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளியல் கல்விசார் இணை ஆய்வாளராகவும் உள்ளனர்.


Original Link: India’s education gender gap four times wider in rural areas than urban.

Share:

பச்சிளம் குழந்தைகளைக்கு, மருத்துவமனை மற்றும் வீடுசார்ந்த பராமரிப்பு ஆகிய இரண்டுமே முக்கியமானவை - அபய் பாங்

இந்தியாவில் பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு என்பது, பாதுகாப்பான மற்றும் நெரிசல் இல்லாத மருத்துவமனைப் பிரிவுகளையும், வலுப்படுத்தப்பட்ட வீடு சார்ந்த ஆதரவு அமைப்புகளையும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.


இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. முன்பு, மருத்துவ வசதிகள் ஏதுமின்றி பல குழந்தைகள் வீட்டிலேயே உயிரிழந்தன. இப்போது மருத்துவமனைகளிலும் குழந்தைகள் உயிரிழக்கின்றன. 2026 ஆகஸ்ட் 24 அன்று, மகாராஷ்டிராவின் அமராவதியில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. அரசு மருத்துவமனைகளின் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகளில் (newborn care units) நிகழ்ந்த இத்தகைய சம்பவம் இது முதல் முறையல்ல. இத்தகைய சம்பவங்களைத் தனித்தனி நிகழ்வுகளாகப் பார்க்காமல், ஒரு பரந்த போக்கின் ஒரு பகுதியாக நாம் கருதாத வரை, இதுவே இறுதியான சம்பவமாகவும் இருக்காது.


அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆண்டுக்கு / அரசு மருத்துவமனை / உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்ற வரிசையில் அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை, 


  • 2017 — பி.ஆர்.டி. (BRD) மருத்துவக் கல்லூரி, கோரக்பூர் — 17

  • 2017 — அரசு மருத்துவமனை, அகமதாபாத் — 18

  • 2019 — ஜே.கே. லோன் (JK Lon) மருத்துவமனை, கோட்டா — 10

  • 2020 — ஜே.கே. லோன் (JK Lon) மருத்துவமனை, கோட்டா — 9

  • 2020 — அரசு மருத்துவமனை, ஷஹ்தோல் — 8

  • 2021 — மாவட்ட மருத்துவமனை, பண்டாரா — தீ விபத்து — 10

  • 2021 — கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனை, போபால் — தீ விபத்து — 4

  • 2021 — அரசு மருத்துவக் கல்லூரி, அம்பிகாபூர் — 4

  • 2022 — மருத்துவக் கல்லூரி, அம்பிகாபூர் — 4

  • 2023 — அரசு மருத்துவக் கல்லூரி, நாந்தேட் — 12

  • 2024 — மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரி, ஜான்சி — தீ விபத்து — 10

  • 2025 — மாவட்ட மகளிர் மருத்துவமனை, புடான் — 4

  • 2026 — மாவட்ட மகளிர் மருத்துவமனை, அமராவதி — தீ விபத்து — 3


இது நாடு தழுவிய முழுமையான பதிவேடு அல்ல, ஒரு பகுதிப் பட்டியல் மட்டுமே. இருப்பினும், இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தப் பிரச்சனைக்கு ஒரு முறையான, கட்டமைப்புரீதியான தீர்வு தேவை என்பதை இது காட்டுகிறது.


சிக்கல்களும் சவால்களும்


எங்கு தவறு நடக்கிறது? முதல் காரணம் இடநெருக்கடி (overcrowding) ஆகும். சுகாதார நிலையங்களில் பெண்கள் பிரசவம் செய்துகொள்வதை உறுதி செய்வதில் இந்தியா பெரும் வெற்றியை அடைந்துள்ளது. 2005-06-ல் 39%-ஆக இருந்த இந்த மருத்துவமனைப் பிரசவங்களின் விகிதம் 2023-24 இல் 90%-ஆக உயர்ந்துள்ளது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (National Family Health Survey) காட்டுகிறது. ஆனால், இந்த வெற்றி ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது. மருத்துவமனைகளில் பிரசவம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 2005-ல் 109 லட்சத்திலிருந்து 2024-25-ல் 194 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தெரிவித்துள்ளது. அரசு நடத்தும் பொதுத்துறை சிறப்புப் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகளில் (Special Newborn Care Units (SNCUs)) அனுமதிக்கப்படும் உடல்நலக்குறைவுள்ள பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது. இது 2021-22-ல் 11.3 லட்சமாக இருந்தது 2023-24-ல் 14.45 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது, இரண்டு ஆண்டுகளில் 28% அதிகரிப்பு  என்ற தகவலை சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு & MoHFW குறிப்பிட்டுள்ளது. இதனால், எல்லா இடங்களிலும் உள்ள பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் அதிகப்படியான பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றன.


இரண்டாவது காரணம், சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் வகைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும். மருத்துவமனைகளில் பிரசவம் செய்துகொள்ளும் முறை அதிகரித்துள்ள நிலையில், சாதாரணப் பிரசவங்களுக்கு மட்டுமல்லாமல், அதிக ஆபத்து நிறைந்த பிரசவங்களுக்கும் அரசு மருத்துவமனைகளே முக்கிய இடமாக மாறியுள்ளன. இதில் குறைப்பிரசவம், குறைந்த பிறப்பு எடை மற்றும் பிற மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் உடல்நலக்குறைவுள்ள பச்சிளம் குழந்தைகள் எனப் பலரும் அடங்குவர்.


கட்டமைப்பு வசதிக் குறைபாடுகள் மூன்றாவது காரணமாகும். ஆகஸ்ட் 2017-ல் கோரக்பூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம், ஆக்சிஜன் விநியோகத் தடை காரணமாக ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையாலேயே நிகழ்ந்ததாக மாவட்ட அளவிலான விசாரணையில் கண்டறியப்பட்டது. ஜனவரி 2021-ல் பண்டாரா, நவம்பர் 2021-ல் போபால் மற்றும் நவம்பர் 2024-ல் ஜான்சி ஆகிய இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளும், சமீபத்தில் அமராவதியில் நடந்த சம்பவமும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகளில் தீ மற்றும் மின்சாரம் சார்ந்த ஆபத்துகள் இருப்பதை உணர்த்துகின்றன. உடல்நலக்குறைவுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு வெப்பமூட்டிகள் (warmers), அடைகாப்புப் பேழைகள் (incubators) மற்றும் செயற்கை உயிர்ப்பு அமைப்பு (ventilators) தேவைப்படுகின்றன. அதிகப்படியான கூட்டம் அல்லது இடநெருக்கடி இப்பிரிவுகளில் மின்சாரப் பயன்பாட்டுச் சுமையை அதிகரிக்கக்கூடும்.

தொற்றுநோய் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகியவை நான்காவது காரணமாக அமைகின்றன. அதிகப்படியான இடநெருக்கடி, போதிய செவிலியர்-குழந்தை விகிதம் இல்லாமை, உபகரணப் பற்றாக்குறை மற்றும் தொற்றுத் தடுப்பு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவை மருத்துவமனை சார்ந்த தொற்றுகள் (hospital-acquired infections) வேகமாகப் பரவும் இடமாக மாற்றிவிடக்கூடும்.


கட்சிரோலி மாதிரி (The Gadchiroli model)


கட்சிரோலி மாதிரி (Gadchiroli Model) என்பது மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் என்பவரால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கிராமப்புற மற்றும் பழங்குடியினர் மருத்துவப் பராமரிப்பு முறை ஆகும்.


இந்தப் பரிசோதனைகள் சில தெளிவான தீர்வுகளுக்கு இட்டுச் செல்கின்றன. ஆனால், இதற்கென மற்றொரு வழியும் உள்ளது.


இந்தியாவிடம் ஏற்கனவே மற்றொரு தீர்வு உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சமூக சுகாதாரத்தில் கல்வி, செயல்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கான சங்கம் (Society for Education, Action and Research in Community Health (SEARCH)) நடத்திய கட்சிரோலி கள ஆய்வு, பயிற்சி பெற்ற சமூக சுகாதாரப் பணியாளர்கள் (community health workers (CHW)) திறம்பட வீட்டிலேயே பச்சிளங்குழந்தை பராமரிப்பை (home-based neonatal care (HBNC)) வழங்க முடியும் என்பதை நிரூபித்தது. இதன் விளைவாக, கிராமப்புறங்களில் பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம் 62.2% குறைந்தது என்பதை தி லான்செட், 1999 இதழ் வெளிப்படுத்தியுள்ளது. பயிற்சி பெற்ற சமூக சுகாதாரப் பணியாளர்கள், வீட்டிலேயே பச்சிளங்குழந்தை நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். மேலும், அவர்கள் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்ததோடு, குழந்தைகளை கதகதப்பாக வைத்திருக்கவும் உதவினர். குறைந்த பிறப்பு எடை மற்றும் குறைமாதக் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டனர். 2005-ல் 'ஜர்னல் ஆஃப் பெரிநாட்டாலஜி'யில் வெளியிடப்பட்ட கட்சிரோலியின் அடுத்தடுத்த தரவுகள், 1996 மற்றும் 2003-க்கு இடையில், 1,800 கிராமுக்கு மேல் பிறப்பு எடை மற்றும் 34 வாரங்களுக்கு மேல் கர்ப்பகால வயதுடைய குழந்தைகள் உட்பட, 97% குறைந்த பிறப்பு எடை மற்றும் குறைமாதக் குழந்தைகள் வீட்டிலேயே மிகக் குறைந்த இறப்பு விகிதத்துடன் கவனிக்கப்பட்டனர் என்பதைக் காட்டின.


கட்சிரோலி மாதிரியின் கோட்பாடுகள் ஏற்கனவே இந்தியாவின் பொது சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாகிவிட்டன (MoHFW, 2011). கட்சிரோலி அனுபவத்தின் அடிப்படையில் பயிற்சி தொகுதிகளைப் பயன்படுத்தி, சுமார் 8,00,000 அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHAs)), வீட்டு அடிப்படையிலான பச்சிளங்குழந்தை பராமரிப்பை (HBNC) வழங்க பயிற்சி பெற்றுள்ளனர். எனவே, இந்தியா ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டியதில்லை. ஆஷாக்கள், போதுமான பயிற்சி, மேற்பார்வை மற்றும் ஆதரவுடன் இருந்தால், பச்சிளங்குழந்தை பராமரிப்பின் பல கூறுகளை வழங்க முடியும். இது பச்சிளங்குழந்தை பராமரிப்புப் பிரிவுகளின் (SNCUs) மீதான கணிசமான சுமையைக் குறைத்து, இடநெருக்கடியைக் குறைக்கவும் உதவும்.


நிச்சயமாக, கடுமையான குறைப்பிரசவம், சுவாசக் கோளாறு, அதிர்ச்சி, கடுமையான செப்சிஸ், தீவிர பிறப்பு மூச்சுத்திணறல் அல்லது வேறு ஏதேனும் ஆபத்து அறிகுறி உள்ள குழந்தைக்கு உடனடி மருத்துவமனை சார்ந்த சிகிச்சை தேவைப்படுகிறது. வீட்டு அடிப்படையிலான பச்சிளங்குழந்தை பராமரிப்பு (HBNC) என்பது பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றானது அல்ல. ஆனால் பராமரிப்பு தேவைப்படும் ஒவ்வொரு பச்சிளங்குழந்தைக்கும் மருத்துவமனை படுக்கை தேவைப்படுவதில்லை.


உகந்த உத்தி


எனவே, இந்தியா மூன்று பகுதி உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக, பச்சிளங்குழந்தை பிரிவுகளில் உள்ள இடநெருக்கடியைக் குறைக்க வேண்டும். பற்றாக்குறையாக உள்ள பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவு (SNCU) படுக்கைகளை ஆக்கிரமிப்பதற்குப் பதிலாக, தகுதியான, நலமுடன் இருக்கும் பச்சிளம் குழந்தைகள் வீட்டிலேயே பாதுகாப்பாகப் பராமரிப்பைப் பெறுவதை உறுதிசெய்ய, ஆஷா பணியாளர்கள் மூலம் வீட்டு அடிப்படையிலான பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு (HBNC) வலுப்படுத்தப்பட வேண்டும்.


இரண்டாவதாக, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். போதுமான எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பொருத்தமான செவிலியர்-குழந்தை விகிதம், செயல்படும் உபகரணங்கள், காப்பு அமைப்புகளுடன் (backup systems) கூடிய நம்பகமான ஆக்ஸிஜன் மற்றும் மின்சார விநியோகம், அத்துடன் கடுமையான தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.


மூன்றாவதாக, பச்சிளங்குழந்தைகள் பிரிவுகளை உள்ளார்ந்த பாதுகாப்புடையதாக மாற்ற வேண்டும். தீயைக் கண்டறிந்து அணைக்கும் அமைப்புகள், மின்சார மற்றும் ஆக்ஸிஜன் அமைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரகால வெளியேற்றப் பயிற்சிகள் மற்றும் சுதந்திரமான பாதுகாப்புத் தணிக்கைகள் ஆகியவை கட்டாயமாக்கப்பட வேண்டும்.


ஜனனி சுரக்ஷா யோஜனாவின் (Janani Suraksha Yojana (JSY)) வெற்றி கேள்விக்குட்பட்டதல்ல. மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது தாய்மார்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற உதவும். ஆனால், இந்தியாவின் பச்சிளங்குழந்தை சுகாதார உத்தியின் அடுத்த கட்டம், தாய்மார்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவது முதல் படி மட்டுமே என்பதை அங்கீகரிக்க வேண்டும். ஒவ்வொரு தாயும் கவனிப்பு தேவைப்படும் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள். ஆனால், கவனிப்பு தேவைப்படும் ஒவ்வொரு பச்சிளங்குழந்தைக்கும் மருத்துவமனைப் படுக்கை தேவைப்படுவதில்லை. பச்சிளங்குழந்தை பராமரிப்பின் எதிர்காலம் என்பது மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் இடையே தேர்ந்தெடுப்பதாக இருக்கக்கூடாது. அது மருத்துவமனை மற்றும் வீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


இந்த அணுகுமுறை இடநெருக்கடியைக் குறைக்கும். மேலும் மிக முக்கியமாக, ஒவ்வொரு பச்சிளங்குழந்தையும் சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்யும்.


அபய் பாங் ஒரு மருத்துவர் மற்றும் சமூக சுகாதார ஆராய்ச்சி அமைப்பான, சமூக சுகாதாரத்தில் கல்வி, செயல் மற்றும் ஆராய்ச்சிக்கான சங்கத்தின் (SEARCH) நிறுவனர் ஆவார்.


Original Link: For newborns, the answer is hospital plus home 

Share: