மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) என்பவை யாவை? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• கடந்த வாரத்திலிருந்து, கடும் வெப்பத்திற்குப் பதிலாக இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை பொழிந்து, வெப்பநிலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.


• மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) என்பவை மழையைப் பொழிவிக்கும் ஒரு முக்கிய காற்றழுத்த மண்டலங்களாகும். இவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பகுதிகளைத் தாண்டி உருவாகி, கிழக்கு நோக்கி இந்தியாவை நோக்கி நகரும்போது மெடிட்டரேனியன் கடல், கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றிலிருந்து  ஈரப்பதத்தை (moisture) சேகரித்துக்கொள்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், இந்தியாவைப் பாதிக்கும் மேற்கத்திய இடையூறு காற்று ஓட்டங்களின் நிகழ்வெண்ணும் (frequency) தீவிரமும் (intensity) குறைந்துள்ளதால், மழை மற்றும் பனிப்பொழிவு நேரடியாகப் பாதிப்புகளை சந்தித்துள்ளது.



வாரம்

இந்தியா


கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா

வடமேற்கு இந்தியா

மத்திய இந்தியா

தென் தீபகற்ப இந்தியா

பிப் 26 - மார்ச் 4

-86

-74

-99

-99

9

மார்ச் 5 - 11

-92

-85

-93

-98

-92

மார்ச் 12 - 18

66

267

-19

-30

3.4


• கடந்த வாரம் அடுத்தடுத்து வந்த இரண்டு தீவிரமான 'மேற்கத்திய இடையூறுகள்' மார்ச் 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவைக் கடந்து சென்றபோது, ​​இந்தப்போக்கு மாறியது.


• இதன் விளைவாக கடுமையான வானிலை நிகழ்வுகள் — இடியுடன் கூடிய மழை, மின்னல் , ஆலங்கட்டி மழை (hailstorm), குறுகிய காலத்திலேயே அதிக மழை (24 மணி நேரத்தில் 115 மிமீக்கு மேல்) மற்றும் பனிப்பொழிவு, மேற்கு இமயமலைப் பகுதிகள், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, தென் இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகின. அண்டை நாடான பாகிஸ்தானும், சில நாட்களுக்கு முன்பு கடுமையான வானிலையைச் சந்தித்தது.


• வளிமண்டலக் கீழடுக்குகளில் ஏற்பட்ட இடையூறுகளுடன் சேர்த்து, ஒரு காற்று சுழற்சி (cyclonic circulation) நீண்டகாலம் நீடித்தது. மேலும், வங்காள விரிகுடாவிலிருந்து இப்பகுதிக்கு ஈரப்பதத்தைக் கொண்டுவந்த வலுவான தென்மேற்கு அல்லது தெற்கு திசைக்காற்றும் வீசியது. இது மத்திய மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் காற்றுகள் ஒன்றிணையும் சூழலை உருவாக்கியது. இதேபோன்ற வானிலை மார்ச் 2023-லும் பதிவானதாக, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) வல்லுநர்கள் தெரிவித்தனர்.



உங்களுக்குத் தெரியுமா?



• மார்ச் மாதத்தின் நடுப்பகுதியை ஒட்டி ஏற்பட்ட பல்வேறு வானிலை காரணிகளின் கூட்டு விளைவாக, நாடு முழுவதும் ஆலங்கட்டி மழை பொழிந்தது. முதலாவதாக, பருவமழை பொழியாத மாதங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை), மேற்கத்திய இடையூறுகள் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவையும் (உயரமான மலைப்பகுதிகளில் பனிப்பொழிவையும்) ஏற்படுத்துகின்றன. குளிர்காலத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.


ஆலங்கட்டி மற்றும் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு மார்ச் மாதமே மிகவும்  ஏற்ற மாதமாக அமைகிறது. மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு வெப்பநிலை உயரத் தொடங்குகிறது; அப்போது சாதகமான வானிலை சூழல்கள்  ஏற்படும் பட்சத்தில், இடி, மின்னல் மற்றும் தீவிர மழைப்பொழிவு  ஏற்படக்கூடும்.


கிழக்கு இந்தியப் பகுதிகளில், வடமேற்குக் காற்றால் உருவாகும் திடீர் புயல்கள் (Nor’westers”) மேற்கு வங்கத்தில் 'Kalbaisakhi' என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் காற்றுகள், இந்தக்காலகட்டத்தில் திடீரெனத் தீவிரமான புயல்கள், கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை ஆகியவற்றை உருவாக்கக்கூடும்.


• 'வெப்ப அலை' (Heatwave) என்பது அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கத்திற்கு மாறாக மிக அதிக வெப்பநிலை நிலவும் ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட சூழலை 'வெப்ப அலை' என்று அறிவிப்பதற்கான அளவுகோலானது, அந்த ஆண்டின் அப்போதையக் காலகட்டத்தில் அப்பகுதியில் நிலவும் வெப்பநிலையைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.


• இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விதிமுறைகளின்படி, "சமவெளிப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு வானிலை நிலையத்தின் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், மலைப்பகுதிகளில் பகுதிகளில் குறைந்தது 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் பதிவாகும் பட்சத்தில்," அந்தப் பகுதியில் 'வெப்ப அலை' நிலவுவதாக அறிவிக்கப்படுகிறது. 


இயல்பான வெப்பநிலையிலிருந்து ஏற்படும் விலகலின் அடிப்படையில், இந்த விலகல் 4.5°C முதல் 6.4°C வரை இருந்தால் அது 'வெப்ப அலை' (Heatwave) என்றும்; இந்த விலகல் 6.4°C-க்கு மேல் இருந்தால் அது 'கடுமையான வெப்ப அலை' (Severe Heatwave) என்றும் அறிவிக்கப்படுகிறது.


உண்மையான அதிகபட்ச வெப்பநிலையின் அடிப்படையில், அதிகபட்ச வெப்பநிலை 45°C-க்கு மேல் இருந்தால் அது 'வெப்ப அலை' என்றும்; வெப்பநிலை 47°C-க்கு மேல் இருந்தால் அது 'கடுமையான வெப்ப அலை' என்றும் இந்திய வானிலை மையம்  (IMD) தெரிவிக்கிறது.


• 'மேற்கத்திய இடையூறுகள்' (Western disturbances) என்பவை மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் புயல்களாகும். இவை டெல்லிக்குக் கிழக்குக் காற்றைக் கொண்டுவருவதுடன், காற்றில் ஈரப்பதத்தின் அதிகரிப்பு மற்றும் மேகமூட்டம் அல்லது மழையையும் ஏற்படுத்துகின்றன. இவை குளிர்காலத்தில் வழக்கமாக நிகழும் நிகழ்வுகளாகும். பருவமழை மற்றும் கோடைக்காலங்களில், இவை அதிகமாக வெப்பமண்டல (tropical) பண்புகளைக் கொண்டு மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்துகின்றன. குளிர்காலத்தில், இவை மலைப்பகுதிகளில் மழையும் பனிப்பொழிவும் ஏற்படுத்தி, சமவெளி பகுதிகளுக்கு அதிக ஈரப்பதத்தையும் கொண்டு வருகின்றன. மேகமூட்டம் காரணமாக இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கிறது. அதே சமயம் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை குறைகிறது.



Original Link: What are western disturbances?

Share:

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு : அது என்ன? அது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? இந்தியா ஏன் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறது? - ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி :


நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கா– இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இதுவரை இந்தியாவின் எரிவாயு துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமையலுக்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மற்றும் தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு அதற்குள் இருக்கும், வணிகரீதியான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு நுகர்வோர் (உணவகங்கள், தாபாக்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் வழக்கமான எரிவாயு இணைப்புகள் இல்லாத புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள்) மற்றும் உரங்கள், பெட்ரோ கெமிக்கல்கள் முதல் மட்பாண்டங்கள் மற்றும்  பஞ்சிரும்பு வரை, இயற்கை எரிவாயு மூலப்பொருளைச் சார்ந்திருக்கும் உற்பத்தியாளர்களாக உள்ளனர்.


முக்கியக் குறிப்புகள்:


1. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) என்பது ஒப்பீட்டளவில் சுத்தமான, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் செயல்திறன் மிக்க எரிசக்தி மூலமாகும். இது நிறமற்றதும், மணமற்றதாகும். மிகச்சிறிய கசிவைக்கூட எளிதில் கண்டறியும் வகையில், இதில் ஒரு கடும்  "துர்நாற்றத்தை" (stenching) ஏற்படுத்தும் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.


2. சாதாரண வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு வாயுவாக இருக்கும். ஆனால், குறைந்த அழுத்தம் அல்லது குளிர்வித்தல்  பணிகளை செய்யும் போது அது திரவமாக மாறுகிறது. திரவநிலையில் இருப்பதால் அதை எளிதாக சேமிக்கவும், எடுத்துச் செல்லவும் முடியும். குளிர்விக்கப்பட்டு அல்லது அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட பிறகு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பொதுவாக எஃகு அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்ட கொள்கலன்களில் (containers) சேமிக்கப்படுகிறது.


3. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என்பது அதிக ஆற்றல்கொண்ட எரிபொருள் ஆகும். இது டீசல், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோல் மற்றும் உயிரிப் பொருள் தொகுப்பு (biomass) மூலம் பெறப்படும் ஆல்கஹால்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் எரிபொருட்களைவிட ஒரு அலகிற்கு அதிக வெப்ப மதிப்பை (calorific value) வழங்குகிறது. இதன் காரணமாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு அதிக வெப்பத்துடன் எரிகிறது. இது அதிக செயல்திறனை அளிக்கும் ஒரு முக்கிய நன்மையாகும். இதன் தனித்துவமான பண்புகள் காரணமாக, இது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலமாக இருந்து வருகிறது.


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?


1. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போதோ அல்லது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பதப்படுத்தும்போதோ, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு துணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயற்கையாகவே காணப்படும் ஹைட்ரோகார்பன்களான புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


2. உலக லிக்விட் கேஸ் சங்க அளித்த (World Liquid Gas Association) தகவலின்படி, உலகளவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவில் 60% இயற்கை எரிவாயு செயலாக்கத்திலிருந்து கிடைக்கிறது. மேலும், 40% மூல எண்ணெய் சுத்திகரிப்பில் (refining) இருந்து பெறப்படுகிறது. ஆனால், இந்த விகிதங்கள் பகுதிகளுக்கு ஏற்பவும், காலத்துக்கு ஏற்பவும் மாறுபடலாம். எனவே, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என்பது ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரித்தலின் போது இயற்கையாகவே உருவாகும் ஒரு துணைப் பொருளாகும்.




திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பயன்பாடுகளும் நன்மைகளும் என்ன?


1. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவிற்கு பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. இது வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்துத் துறை, விவசாயம், மின் உற்பத்தி, சமையல், வெப்பமூட்டும் அமைப்புகள் எனப் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் சமையல் எரிவாயுவாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பயன்படுத்தப்படுகிறது. மேலும், வேளாண் துறையிலும், குறைந்த அளவு புகையை வெளியிடும் வாகனப் போக்குவரத்து எரிபொருளாகவும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


2. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு முழுச் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் கிராமப்புற சமூகங்களுக்கு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பாரம்பரிய சமையல் எரிபொருட்கள் மரக்கட்டி, கரி, மாட்டு சாணம் போன்றவைக்கு மாற்றாக முதல் நவீன தீர்வாக அமைகிறது. இதன் மூலம் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.


3. 'உலக திரவ எரிவாயு சங்கத்தின்' (World Liquid Gas Association) கூற்றுப்படி, "வீடுகளுக்குள் சமையல் செய்யும்போது விறகு அல்லது பிற உயிரிப் பொருட்கள்  தொகுப்பு (biomass) எரிக்கப்படுவதால் உருவாகும் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்களின் கலவை, ஏழைச் சமூகங்களில் வாழும் பல மக்களிடையே பரவலான நோய்களுக்கும், அவர்களின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைவதற்கும்  முக்கிய காரணமாக அமைகிறது. இயல்பாகவே சுத்தமாக எரியும் தன்மையைக் கொண்டிருப்பதால், நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு நடைமுறை வழிமுறையை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு வழங்குகிறது.


4. அதிக மாசு ஏற்படுத்தும் திட எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், 'கருப்பு கார்பன்' (black carbon) மற்றும் நுண்துகள்களின் வெளியேற்றத்தைக் குறைக்க திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு உதவுகிறது. இதன்மூலம் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள காற்றின் தரம் மேம்படுவதுடன், அதனால் ஏற்படும் உடல்நல அபாயங்களும் குறைகின்றன.



இந்தியாவின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் இறக்குமதி சார்பு நிலை பற்றி


1.  ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (Petroleum Planning and Analysis Cell (PPAC)) வெளியிட்ட தரவுகளின்படி, தரவுகள் கிடைத்த முந்தைய ஆண்டான 1999 முதல், இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் நிகர இறக்குமதியாளராக இருந்து வருகிறது.


2. நாடு படிப்படியாகத் தனது சொந்தப் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் திறனைப் பெற்று வந்தபோதிலும், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மட்டும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. தற்போது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு  நாட்டின் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருளாகவும் திகழ்கிறது.


3. இந்தியா தனது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) தேவையில் 60 சதவீதத்தைப் பூர்த்திசெய்ய இறக்குமதியை சார்ந்துள்ளது. மேலும், அதன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதிகளில் 90 சதவீதம், ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கு ஆசியாவிலிருந்து வருகிறது.


4. பிற எரிபொருள் பொருட்களுக்கான இறக்குமதிச் சார்புநிலையை இந்தியா கணிசமாக குறைத்தாலும், சமையல் எரிவாயுவிற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேவையை பூர்த்திசெய்ய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதியை  அதிக அளவு சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


5. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதற்குப் பின்னால், அதற்கான தேவை உயர்ந்து வருவதே முக்கியக் காரணமாகும். வேகமாக நடந்துவரும் நகரமயமாக்கல், நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் வளர்ச்சி மற்றும் கிராமப்புறக் குடும்பங்களுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு சிலிண்டர்களை வழங்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் இந்தத் தேவை அதிகரிப்பிற்குப்  முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.


                                  உங்களுக்குத் தெரியுமா?


மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரின் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் கடுமையான தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டில் மின் தூண்டல் அடுப்புகள் (induction cooktops) விற்பனை அதிகரித்துள்ளது. பாரம்பரிய எரிவாயு அடுப்புகள் (gas stoves) திறந்த எரிப்பு (combustion) செயல்முறையை பயன்படுத்தி தீயை உருவாக்குகின்றன. ஆனால், ஒரு மின் தூண்டல் அடுப்பு இந்த எரிப்பு வேதியியல் செயல்முறையை தவிர்க்கிறது.


6. 1998–99 முதல் 2023–24 வரை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பயன்பாடு ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் உற்பத்தி மூன்று மடங்கிற்கு குறைவாகவே உயர்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பயன்பாட்டு வளர்ச்சி குறைந்தாலும், தேவைக்கு ஏற்ப உற்பத்தித் திறனை (production capacity) அதிகரிக்க இந்தியா போராடி வருகிறது.


7. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஒரு துணைப் பொருளாக இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்முறையின் திறனை இந்தியா விரிவுபடுத்திய போதிலும், உள்நாட்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு உற்பத்தி ஒரு வரம்பை (ceiling) எட்டியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


8. உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெட்ரோலியப் பொருட்களின் மொத்த உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பங்கு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 1998-99-ல், மொத்த சுத்திகரிப்பு உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் அளவு 5.2%-ஆக இருந்தது. ஆனால், 2024-25-ல், உற்பத்தித் திறன் அதிகரித்து வந்தபோதிலும், சுத்திகரிப்பு உற்பத்தியில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் பங்கு 4.2% ஆக மட்டுமே உள்ளது.




அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்றால் என்ன?


1. மேற்கு ஆசியப் போரின் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிபொருள் ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த எரிபொருளைச் சார்ந்திருக்கும் "முன்னுரிமைத் துறைகளுக்கு" (priority sectors) இயற்கை எரிவாயுவை திசைதிருப்பும் வகையில், மார்ச் 9-ஆம் தேதியன்று அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தைப் பயன்படுத்தியது.


2. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (Essential Commodities Act (ECA)) 1955-ல், பொது மக்களின் நலன் கருதி, சில பொருட்களின் உற்பத்தி, வழங்கல், விநியோகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக” இயற்றப்பட்டது. பதுக்கல் அல்லது கள்ளச்சந்தையில் விற்கப்படும் அபாயத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அல்லது தயாரிப்புகளின் விநியோகம் தடைபட்டால், அது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்.

3. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் (Essential Commodities Act) படி, “அத்தியாவசிய பொருட்கள்” என்பது, மாட்டுத் தீவனம், நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் அணிகலன்கள், பருத்தி மற்றும் கம்பள துணிகள், மருந்துகள் (Drugs and Cosmetics Act, 1940-ன் பிரிவு 3-ல் வரையறுக்கப்பட்டவை ஆகும். மேலும், உணவுப் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் அவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், மூல பருத்தி, மூல சணல் போன்றவை. ஒன்றிய அரசு அறிவிப்பின் மூலம் (notified order) சேர்க்கும் பிற பொருட்களும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில்  இடம் பெற்றிருக்கும்.


4. சட்டத்தின்கீழ், “அத்தியாவசியப்” பொருளாகக் கருதப்படும்  வகைப்படுத்தப்பட்ட எந்த ஒரு பொருளுக்கும் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க அதிகாரம் கொண்டுள்ளது.


5. ஜூன் 2020-ல், ஒன்றிய அரசு ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம், குறிப்பிட்ட சில பண்டங்களை 'அத்தியாவசியப் பண்டங்கள்' பட்டியலிலிருந்து நீக்கியது. இதன் விளைவாக, போர், பஞ்சம், பொருட்களின் விலை   உயர்வு மற்றும் அதிக தக்கதை கொண்ட இயற்கை சீற்றங்கள் போன்ற "அசாதாரணச் சூழல்களில்" மட்டுமே, அப்பண்டங்களின் விலைகளை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பண்டங்களில், தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கும். இத்தகைய சூழ்நிலைகளில், தனிநபர்கள் வைத்திருக்கும் கையிருப்பு அளவிற்கும் அரசு வரம்புகளை விதிக்கலாம்.


Original Link: LPG in Focus: What it is, how it is produced, and why India depends on imports


Share:

சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

கடந்த மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கீழ் (International Emergency Economic Powers Act (IEEPA)) விதிக்கப்பட்டிருந்த வரிவிதிப்புகளை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் பிரிவு 122-ன்கீழ் (Section 122) ஐந்து மாத காலத்திற்கு 10% உலகளாவிய வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (United States Trade Representative (USTR)), தனது வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சட்டப்பூர்வமாக ஆதரவளிக்கும் வகையில் ஒரு புதிய வரிவிதிப்பு முறையை உருவாக்கக்கூடும் என்கின்றனர். 


முக்கிய அம்சங்கள்:


— அமெரிக்காவால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிரிவு-301 (Section 301) விசாரணைகளின் அடிப்படையில் இந்த புதிய வரி விதிப்பு முறை அமையக்கூடும் என்கின்றனர். இந்த விசாரணைகளின் மூலம் விதிக்கப்படும் வரிகள், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட அமெரிக்காவின் பிற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அடிப்படையாக அமையும் என்கின்றனர். இந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் ஏற்கனவே இரு நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


— சர்வதேச வர்த்தக நிபுணர்களின் கருத்துப்படி, அமெரிக்க சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்ட (IEEPA) தீர்ப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்கள் அவற்றின் பொருளாதார மதிப்பை இழந்துவிட்டன. இதற்கு முக்கியக் காரணம், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே 15-20% வரையிலான வரிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதோடு, சந்தை அணுகல், கொள்முதல் மற்றும் விதிமுறைகளில் முக்கிய சலுகைகளையும் வழங்கியிருந்தன. இருப்பினும், பரஸ்பர வரிக் கொள்கையை நீதிமன்றம் ரத்துசெய்த பிறகு, வாஷிங்டன் அனைத்து வர்த்தகப் பங்காளிகள் மீதும் ஒரே மாதிரியான 10% வரியை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


— அமெரிக்கா தனது வரி விதிப்பு முறையை மறுசீரமைப்பு செய்துவரும் வேளையில், இந்தியா அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும், எதிர்கால வரி கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க சந்தையில் இந்தியா பெறக்கூடிய நன்மைகள் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்தும் என்று வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் கடந்த  திங்கள்கிழமை, மார்ச் மாதம் 16-ஆம் தேதி தெரிவித்துள்ளார்.


— இதற்கு முக்கியக் காரணம், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பல வர்த்தக பங்குதாரர்கள் தங்களது வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


— கடந்த மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம் சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கீழ் (IEEPA) விதிக்கப்பட்டிருந்த வரிவிதிப்புகளை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பிரிவு-122-ன்கீழ் ஐந்து மாத காலத்திற்கு 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளது. இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, தனது வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சட்டப்பூர்வமாக ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிவிதிப்பு முறை ஒன்றை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) உருவாக்கக்கூடும் என்கின்றனர்.


— இந்திய அரசு அதிகாரிகள் இறுதி வர்த்தக ஒப்பந்தம் பிரிவு-301 வரிகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் என்று கூறியுள்ள நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) தனது விசாரணையில், இந்தியா "கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியைக்" கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 


— அமெரிக்காவின் உயர்மட்ட வர்த்தக அமைப்பான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுடன் $58 பில்லியன் மதிப்பிலான இருதரப்பு வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது. மேலும், உலகளாவிய சரக்கு வர்த்தகத்தில் ஜவுளி, சுகாதாரம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகிய துறைகளில் இந்தியா உபரி வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


— இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின்மீது அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரிகளே சுங்க வரிகள் எனப்படும். இவை வெளிநாட்டுப் பொருட்களை உள்நாட்டுப் பொருட்களைவிட அதிக விலையுள்ளதாக மாற்றுகின்றன, இதன் மூலம் நுகர்வோரை உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கின்றன. மேலும், சுங்க வரிகள் வெளிநாட்டுப் போட்டியிலிருந்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதோடு, அரசாங்கத்திற்குத் தேவையான வருவாயையும் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கின்றனர். 

Original Link:  What is the International Emergency Economic Powers Act (IEEPA)? 


Share:

மின்காந்த தூண்டல் பாத்திரங்கள் (induction pan) ஏன் அதிக ஆற்றல் திறன் கொண்டது? -பிரியா குமாரி சுக்லா

தற்போதைய நிலை : மேற்கு ஆசியாவில் நடக்கும் போர், இந்தியாவிற்கான சமையல் எரிவாயு விநியோகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக, எல்பிஜி சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் அதிகமான மக்கள் மின்காந்த தூண்டல் அடுப்புகளை (induction cooktops) வாங்குகிறார்கள்.


முக்கியக் குறிப்புகள் :


பொதுவாக எரிவாயு அடுப்புகள் (gas stoves), திறந்த தீச்சுடரை உருவாக்க எரிதலைச் சார்ந்துள்ளன. ஆனால், மின்காந்த தூண்டல் அடுப்பு (induction cooktop) இந்த எரியும் செயல்முறையைப் பயன்படுத்துவதில்லை. இது தீச்சுவாலையை உருவாக்காது. இதன் கண்ணாடி மேற்பரப்பு சமைக்கும்போதும் ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாகவே இருக்கும்.


மின்காந்த தூண்டல் அடுப்பின் (induction cooktop) வழவழப்பான செராமிக் அல்லது கண்ணாடி மேற்பரப்பிற்குக் கீழே, செப்புக் கம்பியால் இறுக்கமாகச் சுற்றப்பட்ட ஒரு சுருள் அமைந்துள்ளது. அடுப்பை இயக்கும்போது மின்சுற்று முழுமையடைந்து, அந்தக் கம்பி வழியாக மாறுதிசை மின்னோட்டம் (AC) பாய அனுமதிக்கிறது. பின்னர், இந்த மாறுதிசை மின்னோட்டம் அடுப்பின் மேற்பரப்பிற்குச் சற்று மேலே, விரைவாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது.


இந்த மாறும் காந்தப்புலம், மேற்பரப்பையோ அல்லது காற்றையோ சூடாக்காமல், கண்ணாடி மேற்பரப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள காற்று வழியாக எளிதாக கடந்து செல்கிறது. இது அடுப்பின் மேற்பரப்பு அதன் இயல்பான வெப்பநிலையை பெரும்பாலும் பராமரிக்க அனுமதிக்கிறது. பொதுவாக இந்த அடுப்பு பெறும் எந்த வெப்பமும் சூடான பாத்திரத்துடனான தொடர்பினால் மட்டுமே ஏற்படுகிறது.


ஆனால் சில சமையல் பாத்திரங்கள் ஏன் மின்காந்த தூண்டல் அடுப்புகளுடன் பொருந்தாது? ஏனென்றால், மின்காந்த தூண்டல் முறையானது ஃபெரோகாந்த சமையல் பாத்திரங்களில் (ferromagnetic materials) சிறப்பாகச் செயல்படுகிறது. அதாவது, காந்தப்புலங்களுக்கு எதிர்வினையாற்றும் இரும்பு அல்லது சில வகை எஃகு போன்ற பொருட்களில் மட்டும் வினைபுரியும். சில நேரங்களில், சமையல் பாத்திரத்தின் அடிப்பகுதி மட்டுமே அத்தகைய பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம். இதுவே "மின்காந்த தூண்டல் அடிப்பகுதி" (induction base) என்று சந்தைப்படுத்தப்படுகிறது.





அப்படியானால், உணவு எப்படி சூடாகிறது? இதற்கான பதில் அறிவியலில், குறிப்பாக ஃபாரடேயின் மின்காந்த தூண்டல் விதியில் (Faraday’s Law of Induction) உள்ளது. இந்த விதியின்படி, ஒரு காந்தப்புலம் தொடர்ந்து மாறும்போது, அது ஒரு மின்னழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த மின்னழுத்தம் பின்னர் ஒரு மின்சாரத்தை உருவாக்குகிறது. இது உலோகம் போன்ற அருகிலுள்ள எந்தவொரு மின் கடத்தியிலும் நிகழ்கிறது.


இந்த அதிக ஏற்ற இறக்கமுள்ள காந்தப்புலத்திற்குள் உலோகப் பாத்திரம் வைக்கப்படும்போது, அது ஒரு கடத்தியைப் போல செயல்படுகிறது. காந்தப்புலம், பாத்திரத்தின் அடிப்பகுதியில் சிறிய, வட்டவடிவ மின்சார மின்னோட்டங்களை உருவாக்குகிறது. இந்த மின்னோட்டங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிந்து, உலோகத்திற்குள் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கின்றன. இவை சுழல் மின்னோட்டங்கள் (eddy currents) என்று அழைக்கப்படுகின்றன. வெப்பத்தை உருவாக்குவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.


இரும்பு போன்ற உலோகங்கள் முழுமையான மின்-கடத்திகள் அல்ல. அவற்றுக்கு இயற்கையான மின்தடை (electrical resistance) உண்டு. எனவே, சுழல் மின்னோட்டங்கள் (eddy currents) பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள அணுக்கள் வழியாகச் செல்லும்போது, அவை இந்த மின்தடையை எதிர்கொள்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையே ஏற்படும் மின் உராய்வு, நகரும் எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலை நேரடியாக வெப்ப ஆற்றலாக (வெப்பமாக) மாற்றுகிறது. இந்தச் செயல்முறை ஜூல் வெப்ப விதியால் (Joule’s Law of Heating) நிர்வகிக்கப்படுகிறது.



உங்களுக்குத் தெரியுமா? 


விக்கிப்பீடியாவின்படி, மின்காந்தவியலில், மாறும் காந்தப்புலம் ஒரு மின்சுற்றில் எவ்வாறு மின்சாரத்தை உருவாக்க முடியும் என்பதை ஃபாரடேயின் மின்தூண்டல் விதி விவரிக்கிறது. மின்காந்த மின்தூண்டல் (electromagnetic induction)  என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, மின்மாற்றிகள் (transformers), மின்தூண்டிகள் (inductors) மற்றும் பல வகையான மின் மோட்டார்கள் (electric motors), மின்னாக்கிகள் (generators) மற்றும் மின்சுருள்களின் (solenoids) ஆகியவற்றின் அடிப்படைச் செயல்பாட்டுக் கொள்கை இதுவே ஆகும்.


விக்கிப்பீடியாவின்படி, ஃபோகால்ட் மின்னோட்டம் (Foucault’s current) என்றும் அழைக்கப்படும் சுழல் மின்னோட்டம் என்பது ஒரு மின்சாரச் சுழற்சியாகும். ஒரு கடத்தியில் உள்ள காந்தப்புலம் மாறும்போது, கடத்திக்குள் இது உருவாகிறது. ஒரு கடத்தி காந்தப்புலத்தைப் பொறுத்து நகரும்போதும் இது உருவாகலாம். இது ஃபாரடேயின் மின்தூண்டல் விதியின்படி நிகழ்கிறது. சுழல் மின்னோட்டங்கள் கடத்திகளுக்குள் மூடிய சுழற்சிகளாகப் பாய்கின்றன. அவை காந்தப்புலத்திற்குச் செங்குத்தான தளங்களில் நகர்கின்றன.


விக்கிப்பீடியாவின்படி, ஜூல் வெப்பமாக்கல் என்பது ஒரு மின்கடத்தி வழியாக மின்சாரம் பாயும்போது வெப்பம் உருவாகும் செயல்முறையாகும். இது மின்தடை வெப்பமாக்கல் (resistance heating) அல்லது ஓமிக் வெப்பமாக்கல் (Ohmic heating) என்றும் அழைக்கப்படுகிறது.



Original Link: Why an induction pan is so energy efficient?


Share:

உழவர்களுக்கான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை

உழவர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


உழவர்களுக்கான முழு கடன் தள்ளுபடி தொடர்பான திட்டம் எதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை  என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மார்ச் மாதம் 23-ஆம் தேதி, 2026 -ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இருப்பினும், உழவர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இதில் கிசான் கடன் அட்டை (Kisan Credit Card (KCC)) மூலம் சரியான நேரத்தில் போதுமான கடன் வழங்குவதும் அடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ், மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் (Modified Interest Subvention Scheme (MISS)) மூலமாக ₹3 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் மானிய விலையிலான குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன. மேலும், கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் உழவர்களுக்குக் கூடுதல் வட்டிச் சலுகைகளும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும், அரசாங்கம் பிணையில்லா (Collateral-free) குறுகியகால விவசாயக் கடன்களை, அதன் சார்பு தொழில்களுக்கான கடன்களையும் சேர்த்து, ₹1.60 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தியுள்ளது. அதோடு, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைத் துறை கடன் வழங்கும் வழிகாட்டுதல்களின்கீழ், வேளாண்மை உள்ளிட்ட பொருளாதாரத்தின் முக்கிய முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கிகள் மூலம் போதுமான கடன் உதவி கிடைப்பதை உறுதிசெய்து வருவதாகவும் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மேலும், நிலம் வைத்துள்ள உழவர்களுக்குக் பயிர் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கே ரொக்கப் பணத்தை மாற்றும் வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.


மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், ராணுவப் பணியின் காரணமாகவோ அல்லது பணியின் போது ஏற்பட்ட பாதிப்பு தீவிரமடைந்ததாலோ உடல் ஊனமுற்றுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் மாற்றுத்திறனாளர் ஓய்வூதியத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறினார். இந்த வரி விலக்கு என்பது 1922-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின்கீழ் (Income-Tax Act, 1922) மார்ச் மாதம் 21-ஆம் தேதி, 1922-ஆம் ஆண்டு தேதியிட்ட அறிவிப்பு எண் 878-F மூலம் வழங்கப்பட்ட நடைமுறையிலிருந்து இன்றுவரை நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் (Income-tax Act, 1961) அமலுக்கு வந்தபோது, அந்தச் சட்டத்திலுள்ள நீக்கம் மற்றும் பாதுகாப்பு விதிகளின் மூலம் முந்தைய வரிவிலக்கு சலுகை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


2025-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் (Income-tax Act, 2025) இயற்றப்பட்டதோடு, இதற்கு முன்னிருந்த 1922-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் மற்றும் அது தொடர்பான சேமிப்பு விதிகள் ஆகியவை செயல்பாட்டில் இல்லாமல் போனதாகவும்  எனவே, புதிய சட்டத்தில் இதற்கெனத் தனியாக ஒரு தெளிவான விதி குறிப்பிடப்படாத நிலையில், அந்த வரிவிலக்கு தானாகவே காலாவதியாகிவிடும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


முன்னர் நடைமுறையில் இருந்த அதே வரிவிலக்கு, அதன் வரம்பு மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட அனைத்தும் எந்த மாற்றமுமின்றித் தொடர்வதை உறுதி செய்யும் வகையிலேயே தற்போதைய இந்த நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


குறிப்பிட்ட இந்த வரி விலக்கு நிறுத்தப்படவில்லை என்பதையும், அது தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதையும் நிதி அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.


இதற்கு மாறாக, 2025-ஆம் ஆண்டு வருமானவரிச் சட்டத்தின்கீழ் (Income-tax Act, 2025), ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத்திற்கு (Disability Pensions) எனத் தனியாக வரி விலக்கு அளிப்பதற்கான திருத்தத்தை 2026-ஆம் ஆண்டு நிதி மசோதா (Finance Bill, 2026) முன்மொழிவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஜனவரி மாதம் 31-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆயுதப் படைகளைச் சேர்ந்த 1,47,263 பணியாளர்கள் உடல் ஊனமுற்ற நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்; மேலும், பணியைத் தொடரத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட 89,598 பணியாளர்கள் தற்போது ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத்தைப் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். 

வருமான வரிச் சட்டம், 2025-ன் (Income-tax Act, 2025) விதிகள் தற்போதுள்ள சட்ட நிலையை அப்படியே தொடர்வதாகவும், அவை எந்தப் புதிய வரியையும் அறிமுகப்படுத்தவோ அல்லது ஏற்கனவே உள்ள வரி விலக்குகளை நீக்கவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, பழைய வரிச் சலுகைகளைப் பாதுகாப்பதற்கான 'முன்னோர் உரிமைப் பிரிவு' (Grandfathering Clause) எனப்படும் பாதுகாப்புக் காலநீட்டிப்பு எதுவும் இந்தச் சட்டத்தில் தேவையில்லை என்று அவர் விளக்கமளித்தார்.


பணியிலுள்ள ராணுவப் பணியாளர்கள் ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், அதில் நோய், காயம் அல்லது இதர உடல்நலக் குறைபாடுகள் கண்டறியப்படுபவர்கள் குறைந்த மருத்துவ வகைப்பாட்டில் (Low Medical Classification (LMC)) வைக்கப்பட்டு, சேவை விதிகளின்படி அவர்கள் அவ்வப்போது தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்த வருடாந்திர மருத்துவப் பரிசோதனையானது பொதுவான உடல் நலப் பரிசோதனை மற்றும் உடல் உறுப்பு மண்டலப் பரிசோதனைகளை உள்ளடக்கியது; இது ஒரு தொகுதி மருத்துவப் பரிசோதனைகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அந்தந்தப் படைகளில் அந்த அதிகாரி வகிக்கும் பொறுப்பு அல்லது பணி நிலைக்கேற்ப இந்தப் பரிசோதனைகள் மாறுபடும் என்றும் கூறினார்.


ஒருவரது உடல்நிலை அல்லது நோயின் பாதிப்பைக் கண்டறிந்த பிறகு, அந்தப் பணியாளரின் மருத்துவநிலை, அவர் பணியில் தொடர்வதற்கான கட்டுப்பாடுகள்  மற்றும் அவரது மருத்துவத் தரம் அல்லது வகைப்பாடு ஆகியவை குறித்து ஒரு மருத்துவச் சேவை நிபுணர் தனது கருத்தைத் தெரிவிப்பார் என்றும் சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு நபருக்கான மருத்துவ வகைப்பாடானது (Medical classification), ஆயுதப்படைகளுக்கான மருத்துவச் சேவை விதிமுறைகள்-2010 திருத்தப்பட்ட பதிப்பின் பத்திகள் 418 மற்றும் 419-ன்படி அமைக்கப்பட்ட ஒரு மருத்துவக் குழுவால் இறுதி செய்யப்படுகிறது. 


ஒருவரின் உடல்நிலை மற்றும் நோயின் தீவிரத்தைப் பற்றி மட்டுமே மருத்துவ வாரியங்கள் வரையறுக்கின்றன. மேலும், அந்த நோயாளி முழுமையாகக் குணமடையவும், அவரது உடல்நிலை மேலும் மோசமடையாமல் இருக்கவும் வேலையில் என்னென்ன கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் மருத்துவ வாரியம் பரிந்துரைப்பதாகத் தெரிவிக்கின்றனர். 


இராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு கொள்கைகள், அந்தந்தப் படைகளின் நிர்வாகப் பிரிவு (Military Secretary Branch (MS Branch)) அல்லது மற்ற படைகளில் (விமானம் மற்றும் கடற்படை) அதற்கு இணையான பிரிவுகளால் கையாளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Original Link: No proposal for complete loan waiver for farmers

Share:

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்யவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் (Foreign Contribution (Regulation) Act (FCRA)) ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் (Non-Governmental Organization (NGO)) அல்லது சங்கத்தின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப் பதிவு (FCRA) இடைநீக்கம் செய்யப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாமல் போனாலோ, அந்த நிறுவனம் வெளிநாட்டு நிதியைக் கொண்டு உருவாக்கிய சொத்துக்களைப் பொறுப்பேற்க, நிர்வகிக்க அல்லது விற்பனை செய்ய ஒரு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்கும் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் (NGO) "முக்கியப் பொறுப்பாளர்" என்பதற்கான வரையறையை விரிவுபடுத்துவது மற்றொரு முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தமாகும். இனி, "அலுவலகப் பொறுப்பாளர் அல்லது இயக்குநர்" (என்ற வரம்பைத் தாண்டி, அந்தப் பட்டியலில் இயக்குநர்கள், கூட்டாளிகள் (Partners), அறங்காவலர்கள் (Trustees), இந்து கூட்டமைப்பின் தலைவரான கர்த்தா (Karta), மற்றும் சங்கங்கள், அறக்கட்டளைகள் அல்லது தொழிற்சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அல்லது அதன் செயல்பாடுகள்மீது கட்டுப்பாடு கொண்டுள்ள அல்லது பொறுப்பு வகிக்கின்ற எவரேனும் ஒருவரும் இந்த வரையறைக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.


வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ்  (FCRA) நடைபெறும் விதிமீறல்களுக்கு அந்தந்த அமைப்புகளின் முக்கிய அதிகாரிகளையே பொறுப்பாக்கும் வகையில் இந்தத் திருத்தம் முன்மொழியப்படுகிறது.



வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவதற்கு எந்தவொரு தன்னார்வத் தொண்டு நிறுவனமும் (NGO) வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (FCRA) பதிவு செய்வது அவசியமாகும். 2010-ஆம் ஆண்டுச் சட்டம் இதுவரை வெளிநாட்டு நிதி வருவதை மட்டுமே முறைப்படுத்தியது, ஆனால், அத்தகைய நிதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பதற்கான முறையான சட்ட அமைப்பைக் கொண்டிருக்கவில்லை  என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 (Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026), சட்டப்பிரிவு 43-ல் மாற்றங்களை முன்மொழிகிறது. இதன்மூலம், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) தொடர்பான புகார்கள் குறித்து எந்தவொரு சட்ட அமலாக்க முகமையோ அல்லது மாநில அரசோ விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பாக, ஒன்றிய அரசிடம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால் மக்களவை உறுப்பினர்களிடம் பகிரப்பட்ட இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையில், தற்போது சுமார் 16,000 சங்கங்கள் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (FCRA) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வோர் ஆண்டும் சுமார் ₹22,000 கோடி நிதியைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம், 2010 (FCRA - Foreign Contribution Regulation Act) என்பது வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி மற்றும் சேவைகளை முறைப்படுத்துகிறது. இந்த நிதியுதவிகள் நாட்டின் நலன், பொது அமைதி அல்லது தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்வதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. 


இந்தச் சட்டம் மே மாதம் 1-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது, பின்னர் 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில், குறிப்பாக ஒரு அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படும்போதோ, தாமாக முன்வந்து ஒப்படைக்கப்படும்போதோ அல்லது முடிவுக்கு வரும்போதோ, அந்நிய நாட்டு நிதி மற்றும் சொத்துக்களை நிர்வகிப்பதில் சில செயல்பாட்டு மற்றும் சட்டரீதியான இடைவெளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 15 (Section 15) சொத்துக்களைக் கையகப்படுத்தும் முறைக்கு வழிவகை செய்கிறது. இருப்பினும், அந்தச் சொத்துக்களை மேற்பார்வையிடவும், நிர்வகிக்கவும் மற்றும் விற்பனை செய்யவும் ஒரு தெளிவான நடைமுறை இல்லாதது நிர்வாகக் குழப்பத்தையும், அத்தகைய சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


இதனைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அது சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, ஒரே விவகாரத்தில் பலமுறை விசாரணைகள் நடத்தப்படுவது, தண்டனைகள் மற்றும் அபராதங்களில் சீரான தன்மை இல்லாதது, நிதியைப் பயன்படுத்துவதற்கு நிலையான காலக்கெடு நிர்ணயிக்கப்படாதது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஒரு அமைப்பின் பதிவை ரத்து செய்வது குறித்து தெளிவான விதிகள் இல்லாததும், தற்காலிக இடைநீக்கத்தின்போது அந்த அமைப்பின் சொத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதில் தெளிவற்ற நிலை நீடிப்பதும் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.


இந்த மசோதா, முன் அனுமதி பெற்று வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கப் பரிந்துரைக்கிறது. மேலும், சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலம் முடிந்தாலோ அல்லது அவை புதுப்பிக்கப்படாவிட்டாலோ, அவை தானாகவே ரத்து செய்யப்படுவதற்கும், இடைநீக்கக் காலத்தின்போது சொத்துக்களைக் கையாள்வதற்கான தெளிவான விதிகள் மற்றும் எளிமையாக்கப்பட்ட அபராத முறைகளுக்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்தச் சட்ட மசோதா, வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) விதிமீறல்களுக்கான அதிகபட்சச் சிறைத்தண்டனையை ஐந்து ஆண்டுகளிலிருந்து ஒரு ஆண்டாகக் குறைக்கப் பரிந்துரைக்கிறது. மேலும், 2010-ஆம் ஆண்டுச் சட்டத்தில் காலவரம்பு ஏதுமின்றி இருந்த நடைமுறைக்கு மாறாக, "முன் அனுமதி" என்கிற பிரிவின்கீழ் (ஒரே ஒருமுறை மட்டும் பெறப்படும் நிதி) பெறப்படும் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை இந்த மசோதா அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


Original Link:  Centre to amend the Foreign Contribution (Regulation) Act


Share:

இருண்ட கண்ணோட்டம் : பொருளாதாரம், குழப்பமான தரவுகள் குறித்து…


இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளுக்கு ஒரு யதார்த்தமான மறுமதிப்பீடு தேவை.


மேற்கு ஆசியாவில் போர் தொடங்குவதற்கு முன்பே, பொருளாதாரம் சமீபகாலமாக சில கவலையளிக்கும் தரவுகளை அளித்து வருகிறது. இவற்றில் மிகச் சமீபத்தியது, எட்டு முக்கியத் தொழில்களின் குறியீடு (Index of Eight Core Industries) குறித்த பிப்ரவரி 2026 தரவுகள் இதற்கு ஒரு முக்கிய உதாரணமாகும். இந்த வெளியீட்டின்படி, ஒட்டுமொத்தக் குறியீட்டின் வளர்ச்சி, ஜனவரியில் காணப்பட்ட விகிதத்தில் பாதியாக, பிப்ரவரியில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தது தெரியவந்தது. இந்தச் சரிவு உயர் அடிப்படை விளைவால் ஏற்பட்டதல்ல. ஏனெனில், பிப்ரவரி 2025-ல் வளர்ச்சி வெறும் 3.4%-ஆக மட்டுமே இருந்தது. துறைவாரியான தரவுகள் மேலும் பல சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன. உள்நாட்டு கச்சா எண்ணெய் தொழில் தொடர்ந்து ஆறு மாதங்களாகச் சுருங்கி வருகிறது. உண்மையில், கடந்த 24 மாதங்களில் 20 மாதங்கள் இத்துறை அதிகளவு குறைந்துள்ளது. இயற்கை எரிவாயுத் துறையும் கடந்த 20 மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் பின்னணியைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்தே, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிந்தது. அப்போது போரின் சரியான தன்மையை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. இந்தியா எரிசக்தி இறக்குமதியை, குறிப்பாக இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தால் அதன் பெரும் பாதிப்பைச் சந்திக்கக்கூடிய அதே நாடுகளிலிருந்து வரும் இறக்குமதியை, பெரிதும் சார்ந்துள்ளது. உண்மையில், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் பெரும்பகுதிக்கு, இறக்குமதிகள் குறைந்த விலையில் கிடைத்ததாலேயே ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், பதற்றங்கள் அதிகரித்த நிலையில், இறக்குமதிச் சார்பை தற்காலிகமாகக் குறைக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கையிருப்பை உருவாக்குவதற்காவது கடந்த எட்டு மாதங்களில் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரித்திருந்தால் அது மிகவும் விவேகமானதாக இருந்திருக்கும். இறக்குமதி சார்புநிலையை நிரந்தரமாகக் குறைப்பதற்கு நேரம் எடுக்கும். இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியில் ஒரு தற்காலிக அதிகரிப்பு தற்போதைய விநியோகப் பற்றாக்குறையைக் குறைத்திருக்கக்கூடும். அத்தகைய ஒரு உந்துதல் இப்போது தொடங்கப்பட்டுள்ளது, ஆனால் அது தாமதமாகியுள்ளது. நடந்த பிறகுதான் பின்னோக்கிப் பார்க்கும்போது விஷயங்கள் தெளிவாகின்றன. ஆனால் இது தொலைநோக்குப் பார்வை இல்லாததை நியாயப்படுத்தாது. 2016-ம் ஆண்டின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana), எல்பிஜி விநியோகத்தைப் (LPG supplies) பாதுகாக்கவும் போதுமான கையிருப்பை உருவாக்கவும் ஒரு வலுவான கொள்கை முயற்சிக்கு வழிவகுத்திருக்க வேண்டும்.


இந்தியப் பொருளாதாரம் முன்பு மதிப்பிடப்பட்டதை விடச் சிறியது என்பதைக் காட்டும் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகளின் தொடர்ச்சியாக, இந்த மோசமான முக்கியத் துறைகளின் செயல்திறன் வெளிப்பட்டுள்ளது. மேலும், 2022-23 மற்றும் 2025-26-க்கு இடையில், தனியார் நுகர்வு, மூலதன உருவாக்கம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற முக்கிய உந்துசக்திகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்புகள் அனைத்தும் குறைந்துள்ளன. இருப்பினும், 'சரக்கு இருப்புகளில் ஏற்படும் மாற்றத்தின்' (change in stocks) பங்கு கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஆனால் அவை போதுமான அளவில் விற்பனையாவதில்லை. இதன் விளைவாக, சரக்கு இருப்புகளின் அளவு அதிகரித்து வருகிறது. சந்தைத் தேவை தொடர்ந்து பலவீனமாகவே இருந்தால், குறைந்த விற்பனை அளவிற்கேற்ப உற்பத்தியும் காலப்போக்கில் குறையத் தொடங்கும். வணிக எரிபொருள் விநியோகங்கள் குறைக்கப்பட்டதாலும், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 டாலருக்கும் அதிகமாக இருப்பதாலும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையும் மிக அதிகமாக இருப்பதாலும், பொருளாதார வல்லுநர்களும் தரமதிப்பீட்டு நிறுவனங்களும் ஏற்கனவே இந்தியாவின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தை சுமார் 6.5% ஆகக் குறைத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் பெரிதும் பாராட்டப்படும் பேரியல் பொருளாதார அடிப்படைகளும், பொருளாதார மீள்திறனும் இன்னும் யதார்த்தமான முறையில் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டியிருக்கலாம்.



Original Link: ​Grim future: On the economy, discomfiting data


Share:

நோய் சார்பிலிருந்து, தனிநபரை மையப்படுத்தும் பராமரிப்பிற்கு -ரம்யா அனந்தகிருஷ்ணன், அனுபமா சீனிவாசன்

காசநோயை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்துவதன் மூலம், ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு முறையானது பொது சுகாதாரத் திறனை மேம்படுத்தி, பயனுள்ளதாகவும் மாற்ற முடியும்.


காசநோய் (Tuberculosis (TB)) ஒரு தனிநபருக்கு அரிதாகவே ஒரு தனிப்பட்ட நோயாக வெளிப்படுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், காசநோய்க்கான சிகிச்சையில் இருக்கும்போதே, அவர்கள் அதேநேரத்தில் சமாளிக்க வேண்டிய பிற இணை நோய்கள் (comorbidities) அல்லது உடல்நலம் குறித்து சில நிலைகளும் (disease conditions) உள்ளன. இதன் காரணமாக, காசநோய்க்கு மட்டும் சிகிச்சை அளிப்பது போதுமானதல்ல. நோய் சார்ந்த கவனிப்பிலிருந்து ஒரு தனிநபர் சார்ந்த பராமரிப்புக்கு மாறுவதன் மூலம் ஒருங்கிணைந்த பரமரிப்பு அணுகுமுறைகளைப் பின்பற்றுவது, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் காசநோய் ஒழிப்பு ஆகிய இரண்டையும் அடைவதற்கான இந்தியாவின் முயற்சிகளை விரைவுபடுத்தும். எளிமையாகச் சொன்னால், நாம் நோய்க்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல், நபருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்.


2023-ல் காசநோயால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட 48 வயதான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அவர் பல ஆண்டுகளாக நீரிழிவு (diabetes) மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் (hypertension) வாழ்ந்து வந்தார். மேலும், அவருக்குக் காசநோய் ஏற்படுவதில் அவரது நீரிழிவு நோய் ஒரு முக்கியப் பங்கு வகித்திருக்க அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக, அவரது HbA1c அளவு 10-க்கு மேல் இருந்ததால், அவரின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு அளவு அதிகளவாக இருந்தது. இந்த மோசமான இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு அளவு, அவரது காசநோய் சிகிச்சை மற்றும் குணமடைதலை நேரடியாகப் பாதித்தது.


HbA1c பரிசோதனையானது, கடந்த 2-3 மாதங்களின் சராசரி இரத்தச் சர்க்கரை அளவுகளை அளவிடுகிறது. இது நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு முதன்மைக் கருவியாகச் செயல்படுகிறது.


காசநோய் போன்ற தொற்று நோய்கள், நீரிழிவு மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் சமூக, பொருளாதாரரீதியான பாதிப்புகள் ஆகியவை பெரும்பாலும் தனிநபர்களிடமும் குடும்பங்களிடமும் தவிர்க்க முடியாமல் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. இதற்கான சிகிச்சைக்கான முடிவுகளையும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றன. இந்த பலதரப்பட்ட பாதிப்புகளின் ஒன்றோடொன்று இணைந்த தன்மையை அங்கீகரிப்பதே, ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குவதற்கான முதல் படியாகும்.


உலக காசநோய் தினம் 2026


காசநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளித்தல்


திவ்யாவின் விஷயத்தில் காணப்படுவதுபோல, இந்தியாவில் நீரிழிவு நோயின் சுமை அதிகரித்து வருவதால், காசநோய் மற்றும் நீரிழிவு நோயை ஒருங்கிணைக்க வேண்டிய வலுவான தேவை உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (National TB Elimination Programme (NTEP)), நீரிழிவு நோயை காசநோய்க்கான ஒரு முக்கிய இணை நோயாக அடையாளம் கண்டு, காசநோய்-நீரிழிவு நோய்க்கான (TB-diabetes) முறையான இருவழிப் பரிசோதனை வழிகாட்டுதல்களை (bidirectional screening guidelines) வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களின்படி, காசநோய் இருப்பது கண்டறியப்பட்ட ஒவ்வொரு நபரும் நீரிழிவு நோய்க்காகப் பரிசோதிக்கப்பட வேண்டும். அதேபோல், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை காசநோய்க்காகப் பரிசோதிக்கப்படுவது சிறந்தது. நீரிழிவுநோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தீவிர காசநோய் உருவாகும் அபாயம் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதேபோல், காசநோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய இரண்டும் உள்ளவர்களுக்கு, காசநோய் சிகிச்சையின் முடிவுகள் மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


சென்னையில், மூன்று ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்ட 9,000-க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குழுவில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் (34%) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும், இந்தக் குழுவில் 41% பேருக்கு இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மோசமாக இருந்தது. இதுவே மிகப்பெரிய சவாலாகும். எனவே, காசநோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ள ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவை காசநோய் சிகிச்சை காலம் முழுவதும் கண்காணிப்பது அவசியமாகும். அதேபோல், காசநோய்க்கான முதன்மை வழிகாட்டுதலில் இருந்து வழங்கப்படும் மருத்துவ மேலாண்மை மற்றும் ஆலோசனைகளை விரிவுபடுத்தி, ஒட்டுமொத்த வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றிலும் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.

சுவாசப் பராமரிப்பை ஒருங்கிணைத்தல்


ஒருங்கிணைப்பதற்கான மற்றொரு முக்கியமான வாய்ப்பு, காசநோய் மற்றும் ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) போன்ற நாள்பட்ட சுவாச நோய்களின் (Chronic Respiratory Diseases (CRD)) ஒருங்கிணைப்பு, பரிசோதனை நிலையிலேயே உள்ளது. சுவாச அறிகுறிகள் உள்ளவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே இறுதியில் காசநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு வைரஸ் காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்றவை இருக்க வாய்ப்புள்ளது. பீகார் மற்றும் தமிழ்நாட்டின் தலா இரண்டு மாவட்டங்களில் REACH அமைப்பின் தற்போதைய காசநோய்-நாள்பட்ட சுவாச நோய் (CRD) ஒருங்கிணைந்த பராமரிப்பு முன்னோட்டத் திட்டத்தில், காசநோய்க்காகப் பரிசோதிக்கப்பட்டு காசநோய் இல்லை எனக் கண்டறியப்பட்ட 26,000 பேரில், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் ஆஸ்துமா உள்ள சுமார் 3,000 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சையுடன் இணைக்கப்பட்டனர். மேலும், காசநோய் சிகிச்சையை முடித்த பலருக்கும் சுவாசக் குறைபாடுகள் தொடர்வதால், ஒருங்கிணைந்த பராமரிப்பு சிகிச்சையானது சிகிச்சைக்குப் பிந்தைய தொடர் கண்காணிப்பையும் மேம்படுத்தும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற ஆபத்துக் காரணிகளும் நோய்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய பிற பொதுவான காரணிகளாகும். சமூக மற்றும் ஆரம்ப சுகாதார நிலைகளில் விரிவான பராமரிப்பை வழங்குவதற்காக, இந்த பல நோய்களுக்கான அணுகுமுறை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களின் (Ayushman Arogya Mandir) கட்டமைப்பில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.


இருப்பினும், பெரிய அளவில் ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குவது சவாலானதாக இருக்கலாம். சுகாதார அமைப்பு அதன் நிலையில், இது ஏற்கனவே குறைவாக உள்ள மனிதவளத்தின்மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இதன் அதிகரித்த பணிச்சுமையின் பெரும்பகுதியை சமூக சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ள நேரிடலாம். கூடுதலாக, இந்தியாவின் பல முக்கிய சுகாதாரத் திட்டங்கள் தனித்தனி நோய் சார்ந்த கட்டமைப்புகளில் செயல்படுகின்றன. மேலும், அவை மனிதவளம் மற்றும் தரவு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் எப்போதும் ஒன்றோடொன்று ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதற்கு ஆக்கப்பூர்வமான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வுகள் தேவைப்படும். ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குவதற்குப் போதுமான மற்றும் கூடுதல் மனிதவளம், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கவனிப்பு பெறுபவர்களுக்கும் இடையிலான விகிதம் கவனமாகச் சரிசெய்தல் மற்றும் வழக்கமான மற்றும் காலமுறைப் பயிற்சிகளில் முறையான முதலீடு செய்தல் ஆகியவை தேவைப்படும்.


முழுமையான நல்வாழ்வு


தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) இந்தியாவின் மிகவும் வலுவான, நன்கு கட்டமைக்கப்பட்ட பொது சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக இருப்பதால், நீரிழிவு, நாள்பட்ட சுவாச நோய்கள் (CRD), ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற அதனுடம் நெருங்கிய தொடர்புடைய பிற நோய்களைக் கண்டறிந்து தீர்வுகாண காசநோயை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்துவது, சுகாதார சேவையை மேம்படுத்தவும் பொது சுகாதாரத் திறனை அதிகரிக்கவும் உதவும். மிக முக்கியமாக, இந்த முறை நோயறிதலில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, பல சுகாதார மையங்களுக்குச் செல்லவேண்டிய தேவையைக் குறைத்து, தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பிற்கான தடைகளை அகற்றவும் இது உதவும்.


சுகாதாரப் பராமரிப்பு, பரிவுணர்வுடன் வடிவமைக்கப்பட்டு, தனிநபரின் மீது கவனம் செலுத்தினால், ஒருங்கிணைந்த சுகாதார சேவையானது, காசநோயால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இரு தரப்புக்கும் வெற்றி தரும் ஒன்றாக அமையும்.


அனுபமா சீனிவாசன் REACH அமைப்பின் துணை இயக்குநர் ஆவார். டாக்டர் ரம்யா அனந்தகிருஷ்ணன் REACH அமைப்பின் இயக்குநர் ஆவார்.


Original Link: From disease-specific to person-centred care 


Share: