முக்கியத்துவம் வாய்ந்த சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் 22 பேரின் விடுதலையை பம்பாய் உயர்நீதிமன்றம் ஏன் உறுதி செய்தது? -ஓம்கார் கோகலே

 சோராபுதீன் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு: சோராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுவித்து வழங்கப்பட்ட தீர்ப்பை, ஷேக்கின் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்ததன் மூலம் பம்பாய் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.



சோராபுதீன் என்கவுன்டர் வழக்கின் தீர்ப்பு: 2005-06-ஆம் ஆண்டுகளில் சோராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி என்கவுன்டர் மற்றும் ஷேக்கின் மனைவி கௌசர் பீயின் கொலை தொடர்பான வழக்கில், 21 காவல்துறை அதிகாரிகள் உட்பட 22 பேர் விடுவிக்கப்பட்டதை பம்பாய் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.


2018-ஆம் ஆண்டு டிசம்பரில் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 காவல்துறைப் பணியாளர்கள் உட்பட 22 பேரையும் விடுவித்திருந்தது. 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில், சோராபுதீனின் இரண்டு சகோதரர்கள் விடுவிப்புகளை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் மேல்முறையீடு மனுக்களை நிராகரித்தது.


இந்தியாவின் என்கவுன்டர் அரசியலில் நீண்டகாலமாக ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வரும் இந்த வழக்கு மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த விதம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.


வழக்குத் தொடுத்த தரப்பின் வாதம்


ஆரம்பத்தில், குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவும் (Anti-Terrorism Squad (ATS)) மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையும் (CID-Crime) இந்த வழக்கை விசாரித்து வந்தன. பின்னர், 2010-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation (CBI)) மாற்றியதோடு,  விசாரணையை மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டது.


குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சோராபுதீன் மீது பதிவு செய்யப்பட்டிருந்தன என்றும், அவர் ஒரு "மிகவும்  கொடூரமான குற்றவாளி" என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.


2005-ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று, ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் சாங்லிக்கு சொகுசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​இறந்த மூவரும் கடத்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு கூறியது. மேலும், சோராபுதீன் மற்றும் கௌசர் பீ ஆகியோர் குஜராத்தில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துளசிராம் கைது செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டது.


ஷேக்கைக் கொலை செய்வதற்காக குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் குற்றச் சதியில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக சோராபுதீனைக் கைது செய்ய வேண்டியுள்ளதாகவும், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் அவரது கூட்டாளியான பிரஜாபதியைத் தவறாக வழிநடத்தி அவர்கள் உதவி கோரியதாகவும் அரசுத் தரப்பு கூறியது.


2005-ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அகமதாபாத்தில் சோராபுதீன் ஒரு போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக மத்திய புலனாய்வுப் அமைப்பு கூறியது. இருப்பினும், அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், சோராபுதீனுக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருந்ததாகவும், ஒரு பிரபல அரசியல் தலைவரைக் கொல்வதற்காக அவர் அந்த நகரத்தில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.


கௌசர் பீ அதே மாதம் கொல்லப்பட்டார். மேலும், அவரது உடல் அந்த ஆண்டு நவம்பர் 29 அன்று அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து, குஜராத்தில் நடந்த மற்றொரு 'திட்டமிட்ட' மோதலில் பிரஜாபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 பேரில் 16 பேரை நீதிமன்றங்கள் விடுவித்தன. அவர்களில் தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அப்போதைய மூத்த இந்தியா ஆட்சி பணியில் இருந்த அதிகாரிகளான தினேஷ் எம்.என், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் டி.ஜி. வன்சாரா, மற்றும் ராஜஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோரும் அடங்குவர்.


2018-ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது 


2018-ஆம் ஆண்டில், மத்திய புலனாய்வுப் அமைப்பு சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், நீதிபதி எஸ்.ஜே. சர்மா தலைமையில், தனது 358 பக்க தீர்ப்பில், கூறப்படும் சதியை நிலைநாட்டுவதற்கு மத்திய புலனாய்வுப் அமைப்பு எந்தவொரு "ஆவண மற்றும் உறுதியான ஆதாரங்களையும்" (documentary and substantive evidence) சமர்ப்பிக்கத் தவறிவிட்டது என்று தீர்ப்பளித்தது.


சோராபுதீன் மற்றும் பிரஜாபதி ஆகியோரின் ‘கொலை' மரணங்களில் 'கொலை' குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய புலனாய்வுப் அமைப்பு கூறியது. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Criminal Procedure Code (CrPC)) பிரிவு 197-ன் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியைப் பெற புலனாய்வு அமைப்பு தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர் 'விடுதலைக்குத் தகுதியானவர்' (entitled to acquittal) என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


சிறப்பு நீதிபதி, சாட்சிகள் மத்திய புலனாய்வுப் அமைப்பு தனது விசாரணையின்போது பதிவு செய்த வாக்குமூலங்களின்படி சாட்சியம் அளிக்காததால் பிறழ் சாட்சிகளாக மாறியதாகவும், நீதிமன்றத்தின் முன் சாட்சிக் கூண்டில் நின்றபோது, ​​அவர்கள் "அச்சமின்றி" உண்மையைப் பேசியதன் மூலம், மத்திய புலனாய்வுப் அமைப்பில் "தங்களது வாக்குமூலங்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.


ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், விசாரணையின் போது நீதிபதி, “மத்திய புலனாய்வு அமைப்பு குற்றங்களின் உண்மையை அறிவதற்குப் பதிலாக வேறு ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்தது” என்றும், “உண்மையைக் கண்டறிவதைவிட, ஒரு குறிப்பிட்ட, முன்யோசனையுடன் உருவாக்கப்பட்ட கோட்பாட்டை நிறுவுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தது” என்றும் குறிப்பிட்டார்.


மத்திய புலனாய்வு அமைப்பானது, அரசியல் தலைவர்களை எப்படியாவது சிக்க வைப்பதற்காக, ஒரு முன் திட்டமிடப்பட்ட கோட்பாட்டையும் ஒரு செயல்திட்டத்தையும் தன்வசம் கொண்டிருந்தது என்றும், அந்த அமைப்பானது, சட்டப்படி விசாரணையை நடத்துவதற்குப் பதிலாக, அந்த இலக்கை அடைவதற்குத் தேவையானதை மட்டும் செய்தது என்றும் நீதிபதி தனது கருத்தை பதிவு செய்தார்.


அரசியல் கட்சியின் தலைவர்களை எப்படியாவது சிக்க வைக்கும்  முனைப்பில், மத்திய புலனாய்வு அமைப்பு ஆதாரங்களை உருவாக்கி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது என்று நீதிமன்றம் கூறியது.


முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட விசாரணையின் நகலைப் பயன்படுத்தி, விசாரணையை அவசரமாக முடித்ததில் மத்திய புலனாய்வு அமைப்பு அலட்சியம் காட்டியதாகவும், எந்தச் சதித்திட்டம் குறித்தும் அறியாத காவல்துறையினரைக் குற்றவாளியாக்கியதாகவும், மாறாக அவர்கள் நிரபராதிகள் போல் தோன்றியதாகவும் நீதிமன்றம்  கூறியது.


உயர் நீதிமன்றத்தின் முன் உள்ள சவால்


சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட சோஹ்ராபுதீனின் சகோதரர்களான ரூபாபுதீன் மற்றும் நயாபுதீன், சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரியும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களாக மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிபதியின் கண்டுபிடிப்புகள் "சாட்சியங்களுக்கு முரணானவை" (contradictory to the evidence) என்று அவர்கள் வாதிட்டனர்.


அரசுத் தரப்பால் 200-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 92 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், ஒரு நீதிபதிக்கு முன்பாகப் பதிவு செய்யப்பட்ட அல்லது புலனாய்வு அதிகாரிகளால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள், விசாரணை நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டப்படவோ அல்லது சமர்ப்பிக்கப்படவோ இல்லை என்று  மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பயிருந்தது. மேலும், பிறழ் சாட்சிகளாக இல்லாத ஏறத்தாழ 118 சாட்சிகளின் சாட்சியங்கள் "நம்பகத்தன்மையற்றவை" எனக் கூறித் தவறாகப் புறக்கணிக்கப்பட்டன என்று அந்த மேல்முறையீட்டு மனுவில்  குறிப்பிடப்பயிருந்தன.


பம்பாய் உயர்நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பளித்தது


உயர் நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று மேல்முறையீட்டு  மனுக்களை ஏற்றுக்கொண்டு, விடுவிக்கப்பட்ட நபர்களுக்கும் மத்திய புலனாய்வு அமைப்புக்கும் அறிவிப்பாணையை அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில், சாட்சியான மகேந்திரசிங் ஜாலா தான் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று கூறி, விடுவிப்புகளை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


2019-ஆம் ஆண்டு அக்டோபர் முதல், சோராபுதீனின் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள், தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் தலைமையிலான அமர்வின் முன் 2025-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இறுதி விசாரணைகள் வரை விசாரிக்கப்படாமல் இருந்தன. அந்த விசாரணைகள் ஜனவரி 16 அன்று நிறைவடைந்தன.


2025-ஆம் ஆண்டு அக்டோபரில், சிறப்பு நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், விசாரணை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பு கூறியது.


உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளபட்ட வாதங்கள்


2018-ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, மேல்முறையீட்டாளர்கள் — மற்ற ஆதாரங்களுடன் தகுந்த அதிகார அமைப்பின் ஒப்புதல்கள் தேவையில்லை என்றும், பிரஜாபதியின் சக கைதி "தன் உயிருக்கு அஞ்சினார்" என்பதைக் காட்டிய "ஏற்கத்தக்க" சாட்சியங்களை நீதிபதி நம்பத் தவறிவிட்டார் என்றும் வாதிட்டனர்.


தற்போதைய மேல்முறையீடுகளில் பிரதிவாதிகளாக உள்ள, விடுவிக்கப்பட்ட நபர்கள், தங்கள் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிக்கை விடுத்தனர். தங்களுக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை நிலைநாட்ட நேரடி ஆதாரம் எதுவும் இல்லை என்றும், தங்களை விடுவிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற உத்தரவு நியாயமானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


Original article : Why Bombay HC upheld acquittal of 22 in the landmark Sohrabuddin encounter case. -Omkar Gokhale

Share:

இந்தியா மற்றும் உலகளவில் சமத்துவமின்மை, சமீப ஆண்டுகளில் ஏன் மிகக் குறைந்த மாற்றத்தையே காட்டுகிறது? - ரித்விகா பட்கிரி

 2026-ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி, உலகளாவிய வருமானம் மற்றும் செல்வங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. இருப்பினும், இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்றத்தாழ்வு அதிகமாகவே நீடிக்கிறது. இதற்குப் பின்னாலுள்ள முக்கியக் காரணிகள் யாவை?


உலகளாவிய வருமானம் மற்றும் செல்வம் இதுவரை இல்லாத உச்ச அளவை எட்டியுள்ளபோதிலும், ஏற்றத்தாழ்வு இன்றும்அதிகமாகவே நீடிக்கிறது. உலக மக்கள் தொகையில் மிகவும் செல்வந்தர்களான 10 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் ஏறக்குறைய முக்கால் பங்கையும், மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பாதிப் பேர் 2 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளனர் என்று '2026 உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை' தெரிவிக்கிறது.


குறிப்பாக, இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மை உலகிலேயே அதிகமான ஒன்றாகத் தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சமத்துவமின்மை அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதிக வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 10 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 58 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதே, வேளையில் கீழ்மட்ட 50 சதவீதத்தினர் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.


தொடர்ந்து நிலவும் சமத்துவமின்மைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகள் யாவை? செல்வத்தைத் தாண்டி, பாலினம், வாய்ப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றில் சமத்துவமின்மை எவ்வாறு வெளிப்படுகிறது?


2026-ஆம் ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை: யாருக்கு என்ன கிடைக்கும்?


பொருளாதாரம் - உலகளாவிய சமத்துவமின்மை


உலக வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 1820-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், செல்வந்தர்களான 10% பேர் அதில் பாதிக்கும் மேற்பட்டதைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். 2026-ஆம் ஆண்டின் உலக சமத்துவமின்மை அறிக்கை இதையே காட்டுகிறது.


இரண்டு நூற்றாண்டுகளின் சீரற்ற விநியோகம்


1820-ஆம் ஆண்டு முதல், உலக மக்கள்தொகையில் மேல்தட்டு மக்கள் 10% பேர் உலகளாவிய வருமானத்தில் 50%-க்கும் குறைவாக ஒருபோதும் பெற்றதில்லை. கீழ்தட்டு மக்கள் 50% பேர் 15%-க்கும் அதிகமாக ஒருபோதும் பெற்றதில்லை. ஒட்டுமொத்த செல்வம் அதிகரித்து வந்தபோதிலும், இந்தக் கட்டமைப்புரீதியான ஏற்றத்தாழ்வில் பெரிய அளவில் மாறம் ஏற்படவில்லை.


சமத்துவமின்மை குறைந்து வருவதாகக் கூறப்படும் கூற்றுகள் குறித்து அறிக்கை வெளிப்படுத்தும் தகவல்கள் என்ன


'2026-ஆம் ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை' இரண்டு முக்கியக் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துகிறது. முதலாவதாக, உலகளாவிய வருமானம் மற்றும் செல்வம் ஆகியவை வரலாற்றியிலே இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, மக்கள் தொகை வளர்ச்சியைவிடத் தனிநபர் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளது.


1800 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் மக்கள்தொகை ஆண்டுக்குச் சராசரியாக 0.9 சதவீதம் அதிகரித்தபோதிலும், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்தது. கோட்பாட்டளவில், இது இன்றைய உலகம் செல்வம் மிக்கதாக மாறியுள்ளது என்றும், ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு ரூ. 1.32 லட்சம் அல்லது €1,200 வழங்க முடியும் என்றும் கூறுகிறது. இருப்பினும், யதார்த்தம் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.


அறிக்கையின் இரண்டாவது முக்கியக் கண்டுபிடிப்பு, பொருளாதார வளங்கள் தொடர்ந்து சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்பதை காட்டுகிறது. இது பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. உதாரணமாக, உலக மக்கள்தொகையில் முதல் 10 சதவீதத்தினர்  56 கோடி மக்கள் மொத்த உலக வருமானத்தில் 53 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதேசமயம், கடைசி 50 சதவீதத்தினர் (280 கோடி மக்கள்) வெறும் 8 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர்.


இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மேல்தட்டு மக்கள் 1 சதவீதத்தினர், கீழ்தட்டு மக்கள் 50 சதவீதத்தினரை விட 2.5 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றனர். அதே சமயம், மேல்தட்டு மக்கள் 0.1 சதவீதத்தினர், உலக மக்கள்தொகையின் கீழ்தட்டுப் பாதி மக்கள் சம்பாதிக்கும் அளவுக்குச் சமமாக சம்பாதிக்கின்றனர்.


1980-ஆம் ஆண்டு முதல் உலகளாவிய வருமானம் ஆண்டுக்கு 1.1 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வந்தபோதிலும், சமத்துவமின்மை குறைந்துவிட்டது என்ற கூற்றுகளுக்குச் சவால் விடும் வகையில், மிகவும் செல்வந்தர்களான 0.1 சதவிகிதத்தினர் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட அதிக வருமான வளர்ச்சி விகிதங்களைக் கண்டுள்ளனர் என்று தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவிகிதத்தினர் வருமான வளர்ச்சியில் தேக்கநிலையைச் சந்தித்தனர்.


நடுத்தர வருமானக் குழுக்களுக்கு ஏன் அதிக கவனம் தேவைப்படுகிறது?


செல்வப் பகிர்விலும் (wealth distribution) இதே போன்ற ஒரு போக்கு காணப்படுகிறது. உலகின் மொத்த செல்வத்தில் 37 சதவீதத்தை மேல்தட்டு மக்கள் 1 சதவீதம் பேர் கொண்டுள்ளனர். அதே, சமயம் கீழ்தட்டு மக்கள் 50 சதவீதம் பேருக்கு  2 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.


வருமான ஏற்றத்தாழ்வுக்கும் செல்வ ஏற்றத்தாழ்வுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம். வருமான ஏற்றத்தாழ்வு (income inequality) என்பது ஒரு நாட்டின் மக்களிடையே குடும்ப அல்லது தனிநபர் வருமானத்தின் (சம்பாத்தியம், ஊதியம், முதலீடுகள்) பகிர்வில் உள்ள வேறுபாட்டை அளவிடுகிறது. அதே, சமயம் செல்வ ஏற்றத்தாழ்வு (wealth inequality) என்பது திரட்டப்பட்ட சொத்துக்களின் (நிகர மதிப்பு, சொத்து, சேமிப்பு) பகிர்வில் உள்ள வேறுபாட்டை அளவிடுகிறது. இவை இரண்டுமே பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கின்றன.


இருப்பினும், அதிக வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல. 1820-ஆம் ஆண்டு முதல், உலக மக்கள்தொகையில் முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைத் தொடர்ந்து பெற்றுள்ளனர் என்றும், அதே சமயம் கீழ்மட்ட மக்கள் 50 சதவீதத்தினர் 15 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றதில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


ஆனால், நடுத்தர வருமானக் குழுக்களின் மாறிவரும் நிலை  கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நடுத்தர வருமானம்  உள்ள 40 சதவீதத்தினரின் வருமானப் பங்கு 1920 மற்றும் 1980-க்கு இடையில் உயர்ந்தது; அதைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு வரை அந்தப் பங்கு சரிந்து. அதன் பிறகு ஒரு பகுதி சிறிதளவு அதிகரித்தது. தரவுகள் குறிப்பிடும் வருமான ஏற்றத்தாழ்வின் வரலாற்றுச் சரிவானது,   நடுத்தர வர்க்கத்தினருக்கே பயனளித்துள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள 10 சதவீதத்தினருக்கு அது பயனளிக்கவில்லை.


ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகள் ஏன் அதிக சமத்துவத்துடன் இருக்கின்றன


பிரெஞ்சுப் பொருளியலாளர் தாமஸ் பிக்கெட்டி, தனது 'சமத்துவத்தின் ஒரு சுருக்கமான வரலாறு' (2022) என்ற நூலில், நடுத்தர வருமானம்  கொண்ட மக்கள்  40 சதவீதத்தினரைக் குறிப்பிடுவதற்கு "பரம்பரை நடுத்தர வர்க்கம்" (patrimonial middle class) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். சமத்துவமின்மைக் குறைப்புகளால் இந்தக் குழுவினர் எவ்வாறு பயனடைந்தனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி, முதலாம் உலகப் போருக்கு முந்தைய செல்வப் பங்கீட்டை ஆராய்வதாகும்.


1900-களின் முற்பகுதியில், முதல் 10 சதவீதத்தினர் உலகளாவிய செல்வத்தில் 85 சதவீதத்தை வைத்திருந்தனர். தற்போது, அந்தப் பங்கு 50-60 சதவீதமாகக் குறைந்திருந்தாலும் அது இன்னும் கவலைக்குரிய வகையில் அதிகமாகவே உள்ளது. இது ஒரு கணிசமான குறைப்பைக் காட்டுகிறது. இது, காலப்போக்கில் செல்வத்தில் தங்கள் பங்கை அதிகரித்துக் கொண்ட, நடுதர வருமானம் உள்ள 40 சதவீதத்தினருக்கோ அல்லது ‘மேல்-நடுத்தர’ வர்க்கத்தினருக்கோ பயனளித்துள்ளது.


பிக்கெட்டியும் (Piketty) உலக சமத்துவமின்மை அறிக்கையும், ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகள் அதிக சமத்துவத்துடன் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், இது எப்போதும் உண்மையாக இருந்ததில்லை. நலத்திட்டங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம், பொதுச் சேவைகள், மற்றும் தொலை நோக்க பார்வை கொண்ட வரிவிதிப்பு போன்ற அரசால் வழிநடத்தப்பட்ட கொள்கைகளின் மூலம், 20-ஆம் நூற்றாண்டில் முன்னேறிய பொருளாதாரங்களிடையே ஒப்பீட்டு சமத்துவம் குறிப்பிடத்தக்கதாக மாறியது.


மறுபங்கீட்டுக் கொள்கைகள் சமத்துவமின்மையைக் குறைக்க உதவியபோதிலும், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்குக் கிடைத்த முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதே பிக்கெட்டியின்  முக்கிய வாதமாக உள்ளது.


இந்தியாவின்  ஏற்றத்தாழ்வுக்குப் பின்னால் உள்ள காரணிகள்


இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள்தொகையில் முதல் 1 சதவீதம் பேர் 40 சதவீத செல்வத்தையும், முதல் 10 சதவீதம் பேர் 65 சதவீத செல்வத்தையும் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்தியாவை உலகின் மிகவும் சமத்துவமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்க வைக்கிறது. மேலும், சமத்துவமின்மையில் குறைப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. வருமான சமத்துவமின்மையைப் பொறுத்தவரை, முதல் 10 சதவீதம் பேர் மொத்த வருமானத்தில்  58 சதவீதத்தையும், கடைசி 50 சதவீதம் பேர் வெறும் 15 சதவீதத்தையும் ஈட்டுகின்றனர்.


இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுக்கு, தரமான கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் இல்லாமை, பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு உருவான சேவைத் துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.


"செல்வத்தின் நிதியமயமாக்கல்" (financialisation of wealth) அல்லது வர்த்தகம் மற்றும் முதலீடுகள் போன்ற செயல்பாடுகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது—மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் செல்வப் பங்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில், மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரின் வருமானப் பங்கு 1922-ஆம் ஆண்டில்   13 சதவீதமாக இருந்தது என்று வரலாற்றுத் தரவுகள் காட்டுகின்றன. 1950-கள் முதல் 1980-களின் முற்பகுதி வரையிலான காலத்தில் இந்தப்பங்கு குறைந்திருந்தாலும், பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரித்து. 2022-ஆம் ஆண்டில் 22.6 சதவீதம் என்ற இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது.


நிலம், பாலினம் மற்றும் காலநிலை


இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு  முக்கிய அம்சம் நில ஏற்றத்தாழ்வும் (land inequality) நிலப் பிரிவினையுமாகும் (land fragmentation). இந்தியாவில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களில்  46 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக உள்ளனர். அதே, சமயம் மேல்தட்டு மக்கள் 10 சதவீதத்தினர் மொத்த கிராமப்புற நிலத்தில் 44 சதவீதத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளனர்.


பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் கிராமங்களில் நில இல்லாத மக்களின் விகிதம் அதிகமாகக் காணப்படுவதாக 2026-ஆம் ஆண்டின் சமத்துவமின்மை அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், கேரளா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் விதிவிலக்குகளாகக் கருதப்படுகின்றன. அங்கு, சமத்துவமின்மையைக் குறைப்பதில் நிலச் சீர்திருத்தங்கள் முக்கியப் பங்கு வகித்தன என்று வாதிடலாம்.


பரவலான அனுமானங்களுக்கு மாறாக, சந்தைகளை எளிதில் அணுகுவது சமத்துவமின்மையைக் குறைத்துவிடாது. நகரங்கள், சாலைகள் மற்றும் பெருநகரங்களுக்கு அருகில் இருப்பது, வரலாற்றுரீதியாக வேரூன்றிய சமத்துவமின்மைகளை மாற்றுவதற்குப்  போதுமானதாக இருந்ததில்லை.


சமத்துவமின்மைக்கு பாலினம் மற்றும் சமூகப் பரிமாணங்களும் உண்டு. உதாரணமாக, இந்தியாவில் பெண்கள் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள், தொழிலாளர் வருமானம், செல்வம் மற்றும் நில உரிமையில் வரலாற்று ரீதியான சமத்துவமின்மை, மற்றும் வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளின் சமமற்ற சுமை ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். இதேபோல், ஆதிக்கக் குழுக்களுடன் ஒப்பிடும்போது ​​மற்ற விளிம்புநிலை மற்றும் நலிவடைந்த குழுக்கள் வளங்களையும் வருமானத்தையும் சமமற்ற முறையில் அணுகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


மேலும், காலநிலை மாற்றம் இந்த ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துகிறது. மிகவும் ஏழ்மையானவர்கள் பெரும்பாலும் குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் தண்ணீர் நெருக்கடி, வெப்ப அழுத்தம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற காலநிலை தொடர்பான அதிர்ச்சிகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


சமத்துவமின்மையை எவ்வாறு குறைப்பது (How to reduce inequality)


பயனுள்ள தலையீடுகள் மூலம் சமத்துவமின்மையைக் குறைக்க முடியும் என்று அந்த அறிக்கை வாதிடுகிறது. அவற்றுள் சில:


1) கல்வி மற்றும் சுகாதாரத்தில் பொது முதலீட்டை அதிகரித்தல்.


2) பணப் பரிமாற்றம், ஓய்வூதியம் மற்றும் வேலையின்மை உதவித்தொகை போன்ற மறுபங்கீட்டுத் திட்டங்கள்.


3) வேலை மற்றும் வாய்ப்புகளின் சமமற்ற பங்கீட்டை உருவாக்கும் கட்டமைப்புத் தடைகளை அகற்றுதல்.


4) ஒரு நியாயமான வரி முறையை உருவாக்குதல் போன்ற பணிகளாகும்.


மேல்தட்டு வர்க் மக்கள் அதிக விகிதத்தில் வரி செலுத்தும் முற்போக்கு வரிவிதிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் காலநிலை தகவமைப்பு ஆகியவற்றில்  அதிக மாற்றங்களைக் கொண்டுவர உதவும். இருப்பினும், "செல்வந்தர்களுக்கு வரி விதிப்பது" குறித்த விவாதங்கள், அது போன்ற நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை குறைத்து, மூலதன வெளியேற்றத்தைத் தூண்டக்கூடும் என்ற கவலைகளாகவே  சுருக்கப்படுகின்றன.


எனவே, வெறும் சமத்துவமின்மையைக் குறைப்பதைவிட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் வறுமையை ஒழிப்பதே மிகவும் முக்கியமானது என்று   வாதிடப்படுகிறது. இருப்பினும், இவை இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையின் அளவை உண்மை என்று நிரூபிக்கின்றன. உதாரணமாக, சஜித் பாய் மற்றும் அமல் வாட்ஸ் ஆகியோரின் 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று, “1% இந்தியர்கள் 45% விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். 2.6% இந்தியர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்கின்றனர், ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் (Unified Payment Interface (UPI)) நடைபெறும் 44% டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 6.5% பயனர்களே காரணமாக உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.


எனவே, “பரம்பரைச் சொத்து மறுபகிர்வு” (redistribution of inheritance) போன்ற ஒரு தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடுமையான சமத்துவமின்மை நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று பிக்கெட்டி வாதிட்டுள்ளார்.


Original article : Why inequality in India and the world shows little movement in recent years. -Ritwika Patgiri

Share:

மேற்கத்திய இடையூறு முதல் எல்-நினோ வரை -அனகா ஜெயகுமார்

 மேற்கத்திய இடையூறுகள் முதல் எல்-நினோ வரை, பலதரப்பட்ட காலநிலை நிகழ்வுகள், வானிலை எவ்வளவு குளிராக அல்லது வெப்பமாக இருக்கிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தச் சொற்களின் அர்த்தம் என்ன?, அவை உங்கள் சுற்றுப்புறத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான வழிகாட்டி கீழே குறிப்பிட்டுள்ளது.


வானிலை தொடர்பான விளக்கங்கள் : இந்தியா, பல தீவிர வானிலை நிகழ்வுகள் கொண்ட ஒரேநேரத்தில் நிகழும் ஒரு கோடைக்காலத்திற்குள் நுழைகிறது. ஒரு புதிய மேற்கத்தியக் காற்றழுத்தத் தாழ்வுநிலையானது, வட இந்தியாவிற்குப் பருவம் அல்லாத மழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு எல்-நினோ ஆண்டு, பலவீனமான பருவமழை மற்றும் வலுவான வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கக்கூடும். அதே நேரத்தில், அதிகரித்து வரும் ஈரப்பதம், வெப்பமானியில் காட்டப்படும் உண்மையான வெப்பநிலையைவிட வானிலையை மிகவும் வெப்பமாக உணர வைக்கிறது.


இந்தக் கோடை காலத்தில் வானிலை குறித்த உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்தும் சொற்கள் மற்றும் உண்மையில் என்னவிதமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது என்பதற்கான வழிகாட்டி தொடர்ந்து குறிப்பிட்டுள்ளது.


மே 11 முதல் மே 13 வரை வட இந்தியாவில் ஒரு புதிய மேற்கத்திய இடையூறு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மேற்கத்திய இடையூறு (Western Disturbance) என்றால் என்ன?


மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) என்பவை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அப்பால் உருவாகி, மத்திய தரைக்கடல், கருங்கடல், காஸ்பியன் கடல் மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றிலிருந்து ஈரப்பதத்தைப் பெற்று, கிழக்கு நோக்கி மழையைக் கொண்டுவரும் காற்று அமைப்புகளாகும். இவை பொதுவாக, துருவ மற்றும் வெப்பமண்டலக் காற்றுகளுக்கு இடையிலான தொடர்புகளால் உருவாக்கப்படும் குறைந்த அழுத்தப் பகுதிகளின் விளைவாக ஏற்படும் வெப்பமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புயலாகும்.


மேற்கத்திய இடையூறுகள், பூமியின் வளிமண்டலத்தில் அதிக உயரங்களில் காணப்படும் ஒரு வேகமாக நகரும் காற்று நீரோட்டமான துணை வெப்பமண்டல மேற்கத்திய ஜெட் நீரோட்டத்திற்குள் (subtropical westerly jet stream) பொதிந்துள்ளன. இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. இது இமயமலை மற்றும் திபெத்திய உயர்நிலப்பகுதிகளுக்கு மேல் அமைந்துள்ளது.


இந்த இடையூறுகள் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான வட குளிர்கால மாதங்களில் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. மேலும், இவை இந்தியா, குறிப்பாக அதன் வடமேற்குப் பகுதிகள், அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் வானிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


2026-ம் ஆண்டு எல்-நினோ ஆண்டாக விவரிக்கப்படுகிறது. இதன் பொருள் என்ன?


இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, நாம் முதலில் எல்-நினோ தெற்கு அலைவு (El Niño South Oscillation) அல்லது ENSO என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.


எல்-நினோ தெற்கு அலைவு (El Niño South Oscillation(ENSO)) என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடலுக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய ஒரு காலநிலை நிகழ்வாகும். இது உலகளாவிய வளிமண்டல சுழற்சியை மாற்றியமைத்து அதில் குறுக்கிடக்கூடும். இதன் விளைவாக, இது உலகம் முழுவதும் உள்ள வானிலை முறைகளைப் பாதிக்கிறது.


எல்-நினோ தெற்கு அலைவில் (ENSO) மூன்று கட்டங்கள் உள்ளன. வெப்பமான (எல்-நினோவானது ஸ்பானிய மொழியில் ’சிறுவன்’ என பொருள்படும்), குளிர்ச்சியான (லா-நினோவானது ஸ்பானிய மொழியில் ’சிறுமி’ என பொருள்படும்) மற்றும் நடுநிலையான கட்டமாகும். இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகள் வரையிலான ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கிறது.



நடுநிலையான கட்டத்தின் போது, பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி (தென் அமெரிக்காவின் வடமேற்குக் கடற்கரைக்கு அருகில்) மேற்குப் பகுதியை (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிற்கு அருகில்) விடக் குளிர்ச்சியாக இருக்கும். இதற்குக் காரணம், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் காற்றின் அமைப்புகளே ஆகும். இவை மேற்பரப்பில் உள்ள வெப்பமான நீரை இந்தோனேசியக் கடற்கரையை நோக்கி அடித்துச் செல்கின்றன. இந்த வெப்பமான நீர் விலகிச் செல்லும்போது, ​​ஆழமான அடுக்குகளிலிருந்து வரும் குளிர்ச்சியான நீர் மேற்பரப்பிற்கு உயர்கிறது. பின்னர் இந்தக் குளிர்ச்சியான நீர், இடம்பெயர்ந்த அந்த வெப்பமான நீருக்குப் பதிலாக அமைகிறது.


எல்-நினோ (El Niño) நிகழ்வின்போது, ​​பசிபிக் பெருங்கடலின் இந்தப் பகுதியின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைந்து, இந்தியாவில் ஈரப்பதமான காற்றின் ஓட்டத்தைத் தடுக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவில் பருவமழை பலவீனமாகவோ அல்லது தாமதமாகவோ பெய்கிறது. இக்காலகட்டத்தில், பல முக்கிய விவசாய மாநிலங்களும் வறண்ட காலநிலையை எதிர்கொள்கின்றன. இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலைகளின் அதிர்வெண்ணும் தீவிரமும் எல்-நினோ நிகழ்வுடன் தொடர்புடையவை என்பதற்கும் சான்றுகள் உள்ளன. ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் (US Climate Prediction Center), மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் எல்-நினோ நிகழ்வதற்கு 61% வாய்ப்பு இருப்பதாகக் கணித்ததுடன், அது ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.


லா-நினா (La Niña) நிகழ்வு ஏற்படும்போது இதற்கு நேர்மாறாக, கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் குளிர்ச்சியடைகிறது. இதனால், இந்தியாவில் ஈரப்பதம் நிறைந்த வலுவான காற்று வீசுவதோடு, வழக்கமாக அதன் தென்மேற்குப் பருவமழையும் அதிகரிக்கிறது. தீவிரமான சூழ்நிலைகளில், இந்த அதிகப்படியான மழைப்பொழிவானது வெள்ளப்பெருக்கத்திற்கும் மற்றும் பயிர்ச்சேதத்திற்கும் வழிவகுக்கக்கூடும்.


இந்த ஆண்டு மேலும் பல வெப்ப அலைகளை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், வெப்ப அலை (heat wave) என்றால் என்ன?


வெப்ப அலை (heat wave) என்பது இயல்பான வெப்பநிலையிலிருந்து மாறுபட்டு, வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவும் ஒரு காலகட்டமாகும். இப்பகுதிகளில் பதிவாகும் வெப்பநிலையானது, அப்பிராந்தியத்தில் பொதுவாகப் பதிவாகும் இயல்பான வெப்பநிலையைவிட மிக அதிகமாக இருக்கும். அதிக ஈரப்பதம், காற்றின் அதிக வேகம் மற்றும் வெப்ப அலை நிகழ்வின் கால அளவு போன்ற காரணிகளால் இது மேலும் தீவிரமடையலாம்.


ஒரு வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலையானது, சமவெளிப் பகுதிகளில் 40°C-ஐ எட்டினாலோ அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் 30°C-ஐ எட்டினாலோ, அது ஒரு வெப்ப அலையாகக் கருதப்படலாம். இந்த வெப்பநிலை வரம்பு எட்டப்பட்டவுடன், இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஒரு வெப்ப அலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்.


வெப்பநிலையானது இயல்பான நிலையிலிருந்து எவ்வளவு விலகிச் சென்றுள்ளது என்பதையும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அதாவது, ஆண்டின் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் பொதுவாக நிலவும் வெப்பநிலையை ஒப்பிடுகையில், தற்போதைய வானிலை எவ்வளவு அதிகமாக வெப்பமாக உள்ளது என்பதை அது ஆய்வு செய்கிறது. வெப்பநிலை இயல்பான அளவை விட 4.5°C முதல் 6.4°C வரை அதிகமாக இருந்தால் வெப்ப அலை அறிவிக்கப்படலாம், அதே சமயம் இந்த மேல் வரம்பைத் தாண்டினால் கடுமையான வெப்ப அலையாக அறிவிக்கப்படலாம்.


உண்மையான அதிகபட்ச வெப்பநிலையின் அடிப்படையில், உண்மையான அதிகபட்ச வெப்பநிலை 45°C-ஐ அடைந்தாலோ அல்லது அதைத் தாண்டினாலோ வெப்ப அலை (heat wave) தானாகவே அறிவிக்கப்படுகிறது. அதேசமயம், உண்மையான அதிகபட்ச வெப்பநிலை 47°C-ஐ அடைந்தாலோ அல்லது அதைத் தாண்டினாலோ கடுமையான வெப்ப அலை (severe அறிவிக்கப்படுகிறது.


கடலோர நிலையங்களில் ஈரப்பதத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக, அந்த முகமை சற்றே மாறுபட்ட அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. இதில் அதிகபட்ச வெப்பநிலையானது குறைந்தபட்சமாக 37°C-ஐ எட்டினாலும், அது இயல்பான வெப்பநிலையிலிருந்து 4.5°C மாறுபட்டால் வெப்பஅலை என அறிவிக்கப்படலாம்.


(இந்த அளவுகோல்கள் ஒரு வானிலை ஆய்வுப் பிரிவுக்குள் உள்ள குறைந்தபட்சம் இரண்டு நிலையங்களில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு நீடிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டாம் நாளில் நிகழ்கிறது.)


ஈரப்பதத்தைப் பற்றிப் பேசுகையில், ஈரக்குமிழ் வெப்பநிலை (wet bulb temperature) என்றால் என்ன?


நாம் அறிந்தபடி மற்றும் பொதுவாக ஒரு சாதாரண உலர் வெப்பமானி மூலம் அளவிடப்படும் வெப்பநிலை, உலர் குமிழ் வெப்பநிலை (Dry Bulb Temperature) ஆகும். இந்த மதிப்பு ஈரப்பதத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மறுபுறம், ஈரக் குமிழ் வெப்பநிலை (Wet Bulb Temperature) என்பது, காற்றில் நீரை ஆவியாக்குவதன் மூலம் அடையக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலையாகும். இதன் மூலம், ஆவியாதல் குளிர்ச்சிக்கு ஈரப்பதம் எவ்வளவு திறம்பட உதவுகிறது என்பதை அளவிட முடியும்.

மிக எளிமையாகச் சொன்னால், உங்கள் உடல் குளிர்ச்சியடையக்கூடிய அதிகபட்ச வெப்பநிலையை இது உங்களுக்குத் தெரிவிக்கிறது.


இந்த வேறுபாடு ஏன்? கடும் வெப்பத்தின் போது மனித உடல் அனுபவிக்கும் உடலியல் அழுத்தத்தில், வெப்பத்தைத் தவிர ஈரப்பதத்திற்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. ஈரப்பதம் அதிகரிக்கும்போது, தங்கள் உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றுவதற்காக மனிதர்கள் உருவாக்கும் வியர்வை ஆவியாவதில்லை. இதனால், ஒருவரால் தனது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வது கடினமாகிறது.


ஈர வெப்பநிலை பொதுவாக உலர் வெப்பநிலையைவிடக் குறைவாக இருக்கும். மேலும், காற்று வறண்டு போகும்போது இவ்விரண்டிற்கும் இடையிலான வேறுபாடு அதிகரிக்கிறது.


காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change(IPCC)) தயாரித்த 6-வது மதிப்பீட்டு அறிக்கை (AR6),35°C-க்கு மேலான ஈர வெப்பநிலைக்கு நீண்ட நேரம் இருப்பது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதேசமயம் தீவிரமான உடல் செயல்பாடுகளின் போது 31°C-க்கு மேலான ஈர வெப்பநிலைக்கு நீண்ட நேரம் இருப்பது ஆபத்தானது என்றும் அந்தக் குழு குறிப்பிடுகிறது. குறிப்பாக, ஏற்கனவே இதய நோய் அல்லது நீரிழிவு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், நீரிழப்பு காரணமாக அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் தொழிலாளர்களும் அதிக அபாயத்தில் உள்ளனர்.


இருப்பினும், 6-வது மதிப்பீட்டு அறிக்கையின் (AR6) படி, இத்தகைய வெப்பநிலை சில மணிநேரங்களுக்கு மேல் நீடிப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு.


மேலும், “உணரப்படும் வெப்பநிலை” என்பதன் அர்த்தம் என்ன? அது ஈரக்குமிழ் வெப்பநிலை (Wet Bulb temperature) போன்றதா? இல்லை, இரண்டும் ஒன்றல்ல.


"உணரப்படும் வெப்பநிலை" (Feels like temperature) அல்லது தோற்ற வெப்பநிலை (apparent temperature) என்பது, காற்று மற்றும் ஈரப்பத நிலைகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் உடல் வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் வெளிப்புறக் காற்றின் வெப்பநிலை எப்படி உணரப்படும் என்பதைத் தீர்மானிக்கிறது.


உதாரணமாக, டெல்லியில் நிலவும்வெப்பநிலையும், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள 40°C வெப்பநிலையும் ஒரே மாதிரியாக உணரப்படாது. டெல்லியில் குறைந்த ஈரப்பதம் மற்றும் வறண்ட, வெப்பமான மேற்குக் காற்றுடன் கூடிய வறண்ட, தீவிர வெப்பம் நிலவுகிறது. இதனால் இங்கு ஒருவருக்கு ஒப்பீட்டளவில் எளிதாக வியர்க்கும். இதற்கு மாறாக, பாலக்காட்டில் அதிக ஈரப்பதத்துடன் (60-70% வரை) பிசுபிசுப்பான, புழுக்கமான வெப்பம் நிலவுவதால், அங்கு வெப்பம் மிகவும் அதிகமாக உணரப்படுகிறது. அங்கு உணரப்படும் வெப்பநிலை சுமார் 45°C-ஆக இருக்கலாம். இது எளிதாக வியர்ப்பதற்கு வழிவகுக்கிறது.


இந்த வேறுபாடு வெப்பக் குறியீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது ஒரு வகையான தோற்ற வெப்பநிலையாகும் (apparent temperature). இது, ஒப்பு ஈரப்பதத்தை உண்மையான வெப்பநிலையுடன் இணைக்கும்போது, ​​மனித உடல் எவ்வளவு சூடாக உணர்கிறது என்பதை அளவிடுகிறது. இதை, வெப்பநிலை மற்றும் காற்றின் வேகத்தை இணைக்கும் மற்றொரு வகையான தோற்ற வெப்பநிலையான காற்றுக் குளிர் குறியீட்டெண்ணிலிருந்து வேறுபட்டது. உங்கள் உடல் தன்னைத் தானே காத்துக்கொள்ள இயற்கையாக உருவாக்கும் சூடான காற்றின் மெல்லிய அடுக்கை அகற்றி, திறந்த தோலில் வானிலை எவ்வளவு குளிராக உணரப்படுகிறது என்பதை இது அளவிடுகிறது.


Original article : From Western Disturbance to El Niño: The climate terms you’re hearing this summer, explained. -Anagha Jayakumar

Share:

கட்டிட ஆபத்துகள் : தீ விபத்துக்களை தடுத்தல் மற்றும் எதிர்த்துப் போராடுதல் குறித்து . . .

 தீ விபத்துகளைத் தடுக்கவும், அவற்றை எதிர்த்துப் போராடவும் இந்தியா இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


நகரங்களில் மனித உயிர்களைப் பறிக்கும் ஒவ்வொரு பெரியளவிலான தீ விபத்தும், அதற்கான காரணங்கள் மற்றும் அதைத் தீவிரப்படுத்தும் காரணிகளின் வெவ்வேறு தொகுப்புகளையும் வெளிப்படுத்துகிறது. டெல்லியின் கிழக்குப் பகுதியான ஷாஹ்தாராவில் சமீபத்தில் நடந்த விபத்து, அவசர காலங்களில், குறிப்பாக தீ விபத்துகளின்போது, ​​கட்டிடங்களைக் காலி செய்வதற்கான திட்டமிடலில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டியது. அந்த விபத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகளைக் கொண்ட, தூண்கள் மற்றும் நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பு கட்டிடத்தில், பாதுகாப்பை மேம்படுத்தும் நிலைகள் இருந்தன. ஆனால் அவையே பின்னால் ஆபத்தானவையாக மாறின. கதவுகளில் திறக்க முடியாத மின்னணு பூட்டுகள், எளிதில் அணுக முடியாத ஒரு மொட்டை மாடிப் பகுதி மற்றும் பால்கனிகள் உட்பட, கட்டிடத்தைச் சுற்றி உலோகக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதனால், தீயணைப்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை அடைந்து மீட்க இந்தக் கம்பிகளை வெட்ட வேண்டியிருந்தது. மார்ச் மாதம் பாலத்தில் நடந்த மற்றொரு தீ விபத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் உயிரிழந்தது, டெல்லியில் தீயணைப்புப் படையினரின் மீட்புநிலையின் சிக்கல்களை எடுத்துக்காட்டியது. அந்தக் கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடத்தில், அத்தகைய கட்டிடங்களுக்குத் தேவையான, பரிந்துரைக்கப்பட்ட தீயணைப்பு வசதிகள் குறைவாகவே இருந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். தீயணைப்புப் பணியாளர்கள் மேல் மாடிகளுக்குச் செல்லப் பயன்படுத்திய ஹைட்ராலிக் மின்தூக்கிகள் பழுதடைந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஷாஹ்தாரா விபத்து நடந்த இடத்திற்குத் தீயணைப்புப் படையினர் சரியான நேரத்தில் சென்றடைந்ததாகக் கூறினாலும், தலைநகரில் மற்ற நிகழ்வுகளில் மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளன. 2025-ம் ஆண்டு துவாரகாவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின்போது, ​​குடியிருப்புச் சங்கத்தின் பெயர் பலகை தீயணைப்பு வாகனங்களைத் தடுத்ததால், அவற்றால் உள்ளே நுழைய முடியவில்லை.


டெல்லியின் தீத்தடுப்புத் தயார்நிலை மற்றும் தீயணைப்புத் திறன்களை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நிச்சயமாக இருந்தாலும், இந்திய நகரங்கள் முழுவதும் இந்தத் தீவிபத்துகளுக்குக் காரணமான மின்சாரப் பிரச்சனைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. கோடைக்காலம் தொடங்கியதும், ஷாஹ்தாரா தீவிபத்தில் நடந்தது போல, குளிரூட்டி வெடிப்புகள் (air-conditioner blasts) பெரும்பாலும் சாதாரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. வெப்பமான கோடை நாட்களில் குளிரூட்டி போன்ற உபகரணங்கள் அதிக சுமையேற்றப்படுவதே பெரும்பாலும் நிகழ்கிறது. அத்தகைய அதிக மின்சாரச் சுமைகளைத் தாங்கும் வகையில் கம்பிகள் பெரும்பாலும் வடிவமைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவை சூடாகி எரிந்துவிடுகின்றன. மேலும், பாதுகாப்பிற்காக உபகரணங்களைத் துண்டித்திருக்க வேண்டிய மின்சுற்று முறிப்பான்கள் (circuit breakers) அவ்வாறு செய்வதில்லை. இந்தியாவில், மின்சுமை மற்றும் மின்சுற்று முறிப்பான்களின் சரியான விதிமுறை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஏனெனில், ஒரு மின்சார அமைப்பின் பாதுகாப்பான திறனுக்கு அப்பாற்பட்ட அதிக சுமை கொண்ட உபகரணங்களால் குடியிருப்புகள் நிரம்பியுள்ளன. எல்லாச் சூழ்நிலைகளிலும் உபகரணங்களை இயங்க வைப்பதே பெரும்பாலும் நோக்கமாக உள்ளது. ஆனால் அதிக சுமையேற்றப்பட்ட உபகரணங்களைத் துண்டிப்பது ஒரு அவசியமான பாதுகாப்பு அம்சமாகும். அடிப்படைத் தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் முறையாக அமல்படுத்தப்படாத போதிலும், தீயை அணைக்க ட்ரோன்களையும் ரோபோக்களையும் பயன்படுத்துவது குறித்து நகர அதிகாரிகள் பேசுகிறார்கள்.


Original article : Building hazards: On preventing and fighting fires.

Share:

இந்தியப் பிரிவினையின் புவிசார் சிக்கல்கள். -சாருதா கட்யல்பாட்டீல்

 1947-ல் நாட்டின் பிரிவினை என்பது ஒரு அரசியல் சமரசம் மட்டுமல்ல. அது புவியியல்ரீதியான உறுதித்தன்மையை அடைவதில் ஏற்பட்ட ஒரு தோல்வியும் ஆகும். எல்லை வரையறை ஆணையம் (Boundary Commission), சர்ச்சைக்குரிய வரைபடங்கள், தெளிவற்ற தரவுகள் மற்றும் பிராந்தியத் தொடர்ச்சியை மக்கள்தொகை யதார்த்தங்களுடன் சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது.


இந்தியாவில் பஞ்சாப், எல்லை வரையறை ஆணையத்துடன் தொடர்புடைய மிகச் சில புவியியலாளர்களில் ஒருவரான ஆஸ்கர் ஸ்பேட் (Oskar Spate), பாகிஸ்தானுக்கான அரசியல் கோரிக்கைக்கும் அதைச் செயல்படுத்துவதில் உள்ள புவியியல் யதார்த்தங்களுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு குறித்துத் தனது தனிப்பட்ட நாட்குறிப்புகளில் தொடர்ந்து எழுதி வந்தார். எல்லை வரையறை ஆணையத்திடம் தங்கள் கோரிக்கைகளைத் தயாரிக்க உதவுவதற்காக ஆஸ்கர் ஸ்பேட், அகமதியா சமூகத்தால் (Ahmadiyya community) பணியமர்த்தப்பட்டார். அவர் அவர்களின் சமூகத்துக்காகவும், முஸ்லிம் லீக்கிற்காகவும் விரிவான வரைபடங்களையும் ஆவணங்களையும் தயாரித்தபோதிலும், அவரது மனக்கலக்கம், புவியியலுக்கும் அரசியல் யதார்த்தத்திற்கும் இடையிலான ஒரு முக்கியப் பதற்றத்தை முன்னறிவித்தது. அந்தப் பதற்றத்தை எல்லை வரையறை ஆணையம் தனது பதவிக்காலம் முழுவதும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.


இந்தப் பதற்றம், ஹன்னா ஃபிட்ஸ்பேட்ரிக் எழுதிய 'பிரிவினையை வரைபடமாக்குதல்: இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அரசியல், நிலப்பரப்பு மற்றும் பேரரசின் முடிவு' (வைலி) ('Mapping Partition: Politics, Territory and the End of Empire in India and Pakistan' (Wiley)) என்ற நூலில் இன்னும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்நூல், பிரிவினைச் செயல்முறைக்காகப் புவியியல்சார் அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் பங்கு, அதன் பயன்பாடு அல்லது பயன்பாடின்மை ஆகியவற்றை ஆய்வு செய்கிறது. இது வரைபடங்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள், புவியியல் விவரப் பட்டியல்கள், இனவியல் அறிக்கைகள் மற்றும் நிலப்படத் தொகுப்புகள் ஆகியவற்றில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்தியப் பேரரசு குறித்த புவியியல்சார் அறிவின் காலனித்துவ ஆவணக்காப்பகத்தின் பரிணாம வளர்ச்சியைப் பின்தொடர்வதன் மூலம் இது தொடங்குகிறது. துணைக்கண்டத்தின் பிரிவினையின் போது பயன்படுத்தப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே இந்த புரிதல் காலனித்துவ ஆட்சியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது என்று ஃபிட்ஸ்பேட்ரிக் வாதிடுகிறார்.


பஞ்சாப் எல்லை வரையறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு எல்லை வரையறை முன்மொழிவுகளை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. இதன்மூலம், பிராந்தியரீதியாகத் தொடர்ச்சியாக இருக்கும் பிரதேசங்களுக்குள் மதப் பெரும்பான்மையினர் இருக்க வேண்டும் எனக் கோரிய ஆணையத்தின் வரையறைகள், புவியியல் யதார்த்தங்களை மக்கள்தொகை மற்றும் அரசியல் கட்டாயங்களுடன் நேரடியாகப் போட்டியிட வைக்கும் தீர்வுகளை எவ்வாறு அடிக்கடி கோரின என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, தனித்தனிப் பகுதிகள் அல்லது பாதுகாக்கப்பட்ட வழித்தடங்கள் போன்ற தீர்வுகள், மக்கள்தொகை ரீதியாக ஒரே மாதிரியான பிரதேசங்களை உருவாக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்யக்கூடும். இருப்பினும், இந்தத் தீர்வுகள் பிராந்தியத் தொடர்ச்சி என்ற தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. அதேசமயம், தொடர்ச்சியான எல்லைகள் பெரும்பாலும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்கள்தொகையின் பெரும் பிரிவுகளைத் தவிக்க விட்டன. இதனால், பெரிய அளவிலான மக்கள் இடமாற்றங்கள் மட்டுமே சாத்தியமான ஒரே வழியாக அமைந்தன. ஆஸ்கர் ஸ்பேட் அவர்கள் குறிப்பிட்டது போல, இந்தச் சிக்கலின் ஒரு பகுதி என்னவென்றால், அடிப்படையில் அரசியல் சார்ந்த ஒரு மோதலுக்கு, எல்லை வரையறை ஆணையம் புவியியல் மற்றும் பிராந்தியரீதியான ஒரு தீர்வைப் பயன்படுத்த முயன்றதே இந்தச் சிக்கலின் ஒரு பகுதியாக இருந்தது.


துல்லியமான தரவு என எதைக் கருதுவது என்பதில் தெளிவின்மை நிலவியது மற்றொரு பிரச்சனையாக இருந்தது. 'தெற்காசியாவில் எல்லைகளும் மோதலும்: ராட்க்ளிஃப் எல்லைக் கோடும் பஞ்சாப் பிரிவினையும்' (Borders and Conflict in South Asia: The Radcliffe Boundary Line and the Partition of Punjab) என்ற மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பதிப்பகம் நூலில், லூசி செஸ்டர் குறிப்பிடுகையில், ஒரு எல்லையை வரையறுக்கும்போது "பிற காரணிகளையும்" கருத்தில் கொள்ள வேண்டும் என்பது ஆணையத்தின் நிபந்தனையாக இருந்தது. இருப்பினும், இந்த பிற காரணிகள் மிகவும் தெளிவற்ற முறையில் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தன. இந்தத் தெளிவின்மை, எந்தத் தரவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும்  ஒவ்வொரு வகை தரவிற்கும் எவ்வளவு முக்கியத்துவமும் மதிப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் குழப்பம் நிலவியது. இதனால், ஒரே ஒரு எல்லைக் கோட்டில் உடன்படுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆனது. உண்மையில், ஆணையத்தின் தலைவரான சர் சிரில் ராட்க்ளிஃப் இறுதி எல்லை வரையறை  நிர்ணயத்தை (final boundary) அறிவித்தபோது, ​​ஒரு எல்லையை நிர்ணயிக்கும்போது ஆணையம் "சரியான" காரணிகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்று காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் இருவரும் வருத்தம் தெரிவித்தனர்.


மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்திய நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடங்களை அணுகுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஒவ்வொரு தூதுக்குழுவும் தங்களின் சொந்த வரைபடங்களைத் தயாரித்தது போலத் தோன்றியது. இதில், ஆணையம் எதிர்கொள்ள வேண்டியிருந்த இடம் மற்றும் நிலப்பரப்பு தொடர்பான கேள்விகளில் நிலவிய பரந்த கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்திய இந்த வரைபடங்கள், வாழ்க்கை முறைகளின் முரண்பட்ட சித்தரிப்புகள், சமூக-பொருளாதார வளங்கள் குறித்த ஆவணங்கள், இரயில்வே அல்லது பஞ்சாபின் கால்வாய் வலையமைப்பு எனப் பலதரப்பட்டவையாக இருந்தன. இவ்வாறு, எல்லையை வரையறை நிர்ணயிப்பதற்குப் புவியியல்சார் புரிதல் இன்றியமையாதது என்பது தெளிவாக இருந்தபோதிலும், உண்மையில் எந்த வகையான புரிதல் பயனுள்ளது மற்றும் அந்த புரிதல் எவ்வளவு துல்லியமானது என்பது குறித்து மிகக் குறைந்த தெளிவே இருந்தது.


தரவுகளின் நம்பகத்தன்மை குறித்த இதேபோன்ற சிக்கல்கள் வங்காளப் பிரிவினைச் செயல்பாட்டிலும் காணப்பட்டன. வங்காளத்தில், அப்பகுதியின் தனித்துவமான புவியியல் காரணமாக நிலைமை மேலும் சிக்கலானது. வில்லெம் வான் ஷெண்டலின் 'வங்காள எல்லைப் பகுதி: தெற்காசியாவில் தேசம் மற்றும் அரசுக்கு அப்பால்' என்ற நூல், ராட்க்ளிஃப் கோடு எவ்வாறு ஒரு "ஒட்டுவேலை எல்லையாக" (patchwork border) உருவானது என்பதை ஆராய்கிறது. அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் புவியியல் இடையூறுகள் ஆகிய இரண்டாலும் எல்லை வடிவமைக்கப்பட்டது என்று இந்த நூல் குறிப்பிடுகிறது. மேலும், வான் ஷெண்டல் குறிப்பிடுவது போல, வங்காள எல்லை வரையறை ஆணையம் புதுப்பிக்கப்பட்ட வரைபடங்கள் இல்லாதது மட்டுமல்லாமல், கடினமான நிலப்பரப்பின் தன்மைகளையும் அவர்கள் கையாள வேண்டியிருந்தது. இதில் முக்கியமாக, சுந்தர்பன்ஸ் டெல்டாவின் ஓதத் தீவுகளும் அடங்கும். இங்கு பல பகுதிகளில், வரைபடங்கள் துல்லியமற்றவையாக இருந்தன அல்லது முற்றிலும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, தனது இறுதி எல்லை முடிவை எடுப்பதற்கு ஆணையத்திடம் பெரும்பாலும் நம்பகமான ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.


இந்தியாவும் பாகிஸ்தானும் ராட்கிளிஃப் தீர்ப்பை இறுதி எல்லையாக ஏற்றுக்கொண்டபோதிலும், நடைமுறையில் அதன் அர்த்தம் என்னவென்பது தெளிவாக இருக்கவில்லை. இதன் விளைவாக, வான் ஷெண்டல் குறிப்பிடுவது போல, ஒரு எல்லை வரையறையை வரையறுப்பது என்பது புவியியல் அல்லது எல்லை நிர்ணய நிபுணத்துவம் சார்ந்த ஒரு கேள்வியாக இல்லாமல், உள்ளூர் அதிகாரவர்க்கங்களும் அரசாங்கங்களும் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சனையாகவே இருந்தது. 'வங்காள எல்லைப் பகுதி' (The Bengal Borderland) நூலை குறிப்பாக சுவாரஸ்யமாக்குவது, 1947-க்குப் பிந்தைய பத்தாண்டுகளில், காகிதத்தில் இருந்த ஒரு கோட்டிலிருந்து களத்தில் ஒரு உண்மையான எல்லையாக அந்த எல்லை எவ்வாறு உருமாற்றப்பட்டது என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்தப் பிராந்தியப் பொறியியல் அப்பகுதியில் வாழும் மக்கள் மீது ஏற்படுத்திய நீண்டகால விளைவுகளையும் இது ஆய்வு செய்கிறது.


புவியியல் நிபுணத்துவம் எவ்வாறு வரையறுக்கப்பட்டதாகவும், இன்னும் குறிப்பாக, கடுமையாகப் போட்டியிடப்பட்டதாகவும் இருந்தது என்பதை ஃபிட்ஸ்பேட்ரிக் மற்றும் செஸ்டர் காட்டினால், எல்லைகளை உருவாக்கும் முயற்சிகளில் புவியியல் எவ்வாறு செயல்பட்டது என்பதை விளக்கும் 'வங்காள எல்லைப் பகுதி' (The Bengal Borderland) என்ற நூல் ஒரு முக்கிய குறிப்பாக வழங்குகிறது. இறுதியில், அந்த நூல்கள் காட்டுவது போல, சமூகத்தில் நிலப்பட வரைவியலையோ அல்லது புவியியல் நடைமுறையையோ பயன்படுத்துவது கேள்விக்குரியதாக இருக்கவில்லை. மாறாக, வெளியைப் பற்றிய எந்தப் பார்வை நிஜமாகும் என்பதைத் தீர்மானிப்பதே கேள்விக்குரியதாக இருந்தது.


சாருதா கடியல்பட்டில், டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆவார்.


Original article : The geography of India’s Partition. -Charuta Ghadyalpatil

Share:

12 குறைமின்கடத்தி ஆலைகளுக்கு ஒப்புதல் : இந்தியாவின் சிப் தயாரிப்பு திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? -சௌம்யரேந்திர பாரிக்

 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 1.0 (India Semiconductor Mission 1.0 (ISM 1.0)), சிப் (சில்லு) தயாரிப்பு, பேக்கேஜிங், வடிவமைப்பு மற்றும் திரை உற்பத்தி (Display production) உள்ளிட்ட முழுமையான குறைமின்கடத்தி உற்பத்திச் சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாகத் திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0 (ISM 2.0) திட்டத்தை அறிவித்தார். இந்த இரண்டாம் கட்டத் திட்டம், இந்தியா குறைமின்கடத்தி உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யவும், முழுமையான இந்திய சிப் (சில்லு) அறிவுசார் சொத்துரிமையை (Chip Intellectual Property) உருவாக்கவும் மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5), இந்திய அமைச்சரவை நாட்டில் இரண்டு புதிய குறைமின்கடத்தி (Semiconductor) தொழிற்சாலைகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இந்தியாவின் முதல் திரை உற்பத்திப் பிரிவாகக் (Display fabrication unit) கருதப்படும் ஒரு பிரிவும் அடங்கும்; இது இந்தியாவின் சிப் (Chip - சில்லு) தயாரிப்பு இலக்குகளுக்கு ஒரு முக்கிய உந்துதலை வழங்கும். இதன் மூலம், இந்தியா குறைமின்கடத்தித்  திட்டத்தின் (ISM) முதல் கட்டத்தின்கீழ் அரசு இப்போது மொத்தம் 12 சிப் ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் திறன்பேசி உதிரிபாகங்கள் ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக விரிவுபடுத்திய பிறகு, இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தியைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு 76,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியா, குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் துறையில் தடம்பதிப்பது, உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியின் ஒரு அங்கமாக மாறுவதற்கும், மின்னணுத் துறையில் உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய உத்திசார் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ரொட்டி வாட்டும் இயந்திரங்கள் (Toasters) முதல் போர் விமானங்கள் (Fighter jets) வரை அனைத்துப் பொருட்களையும் இயக்கும் ஆற்றல் கொண்ட இந்தச் சிப்கள், சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக மிகவும் முக்கியமான ஒரு தொழில்நுட்ப வளமாக உருவெடுத்துள்ளன.


இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் 1.0 (ISM 1.0), சுமார் 1.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தை 2.0 (ISM 2.0) அறிவித்தார். இந்தத் திட்டம் குறைமின்கடத்தி உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களின் உற்பத்தியை ஆதரிப்பதையும், முழுமையான இந்திய சிப் அறிவுசார் சொத்துரிமையை (Chip Intellectual Property) உருவாக்குவதையும், மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியாவின் சிப் தயாரிப்பு ஆலைகளுக்கான  திட்டவரைவு


இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 12 சிப் உற்பத்தி ஆலைகள் குஜராத், அசாம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு முழு அளவிலான வணிக ரீதியான குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை மற்றும் பல சிப் பொருத்துதல் மற்றும் சோதனை செய்யும் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.


டாடா எலக்ட்ரானிக்ஸ் குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை (Tata Electronics Semiconductor Foundry (Gujarat): டாடா நிறுவனம் தைவானின் ‘Powerchip Semiconductor Manufacturing Corporation’ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் வணிகரீதியான சிப் தயாரிப்பு ஆலையை குஜராத்தின் தோலேராவில் அமைக்கிறது. சுமார் 91,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த ஆலைக்கு ‘Powerchip Semiconductor Manufacturing Corporation’ தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. இங்கு 28nm (நானோமீட்டர்) முதல் 110nm வரையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாதம் 50,000 தட்டுகள் (Wafers) உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மைக்ரான் தொழில்நுட்பம் (குஜராத்): ஒன்றிய அரசு உதிரிபாகங்கள் பொருத்துதல் மற்றும் சோதனை ஆலைகளுக்கான ஊக்கத்தொகையை 30%-லிருந்து 50%-ஆக உயர்த்திய பிறகு, 2023-ஆம் ஆண்டில் இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட முதல் திட்டம் இதுவாகும். அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் உலக அளவில் நினைவக சிப்களைத் (Memory chips) தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும். இதன் வருகை இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய உந்துதலாகக் கருதப்படுகிறது. இந்த ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் வணிகரீதியிலான உற்பத்தி தொடங்கியதாகக் கூறப்படுகிறது.


டாடா எலக்ட்ரானிக்ஸ் குறைமின்கடத்தி ஒருங்கிணைப்பு ஆலை (அசாம்): ‘Tata Electronics’ நிறுவனம் அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஜாகிரோட் பகுதியில், 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலையை உருவாக்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வாகனத் துறை, மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்காக தினமும் 4.8 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


HCL-Foxconn (உத்தரப் பிரதேசம்): ‘HCL’ மற்றும் ‘Foxconn’ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் (Jewar) பகுதியில் 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையின் செயல்பாடுகள் 2028-ஆம் ஆண்டிற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆலையில், கணினி, திறன்பேசி திரைகளில் படங்கள் தெரிவதைக் கட்டுப்படுத்தும் சிறிய சிப்கள் (Display driver chips) தயாரிக்கப்பட உள்ளன. மேலும், இங்கு மாதம் ஒன்றுக்கு 20,000 சிலிக்கான் தட்டுகள் (Wafers) உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.


கெய்ன்ஸ் செமிகான் (குஜராத்): குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலை, சுமார் 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் பரிசோதனை ஆலை ஆகும். இதனைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2026-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஆலை ஒரு நாளைக்கு 60 லட்சம் சிப்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு முக்கியமாக மின்சார வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்கான 'மின் தொகுதிகள்' (Power modules) தயாரிக்கப்படுகின்றன. இதன் வணிகரீதியான செயல்பாடுகள் மார்ச் மாதத்திலேயே தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


CG Semi (குஜராத்): முருகுப்பா குழுமத்தைச் சேர்ந்த ‘CG Power’ நிறுவனம், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலையை நிறுவி வருகிறது. இந்தத் திட்டம் ‘Renesas Electronics’ மற்றும் ‘Stars Microelectronics’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, 7,600 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.


SiCSem (ஒடிசா): ‘SiCSem Pvt Ltd’ நிறுவனம் 2,066 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை நிறுவுகிறது. இந்த ஆலை சிலிக்கான் கார்பைடு (Silicon Carbide) சார்ந்த டையோட்கள் (Diodes) மற்றும் மாஸ்பெட்கள் (Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor (MOSFETs)) ஆகியவற்றை உற்பத்தி செய்யவுள்ளது.


Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor (MOSFET) என்பது மின்சாரத்தை மிக உயர்ந்த வேகத்தில் இயக்கவும், நிறுத்தவும் பயன்படும் ஒரு மின்னணு விசை (switch) ஆகும். இது மின்னோட்டத்தை "புலம்" (Electric Field) மூலம் கட்டுப்படுத்துகிறது.


3D Glass Solutions (ஒடிசா): இது இந்தியாவின் முதல் மேம்படுத்தப்பட்ட 3D சிப் பேக்கேஜிங் பிரிவாகும். இந்தத் திட்டம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘3D Glass Solutions Inc’ நிறுவனத்தால், அதன் முழு உரிமையுடைய இந்திய துணை நிறுவனமான ‘Heterogeneous Integration Packaging Solutions Pvt Ltd’ மூலம் அமைக்கப்படுகிறது. இதற்கு ‘Intel’ உள்ளிட்ட பிற நிறுவனங்கள் நிதி உதவி வழங்குகின்றன.


Advanced System in Package Technologies (ஆந்திரப் பிரதேசம்): இந்த நிறுவனம் தென்கொரியாவின் ‘APACT Co. Ltd’ நிறுவனத்துடன் இணைந்து, ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 9.6 கோடி யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continental Device (பஞ்சாப்): இந்த நிறுவனம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனது குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை விரிவுபடுத்த உள்ளது. இந்த புதிய ஆலையில் சிலிக்கான் (Silicon) மற்றும் சிலிக்கான் கார்பைடு (Silicon Carbide) ஆகிய இரண்டையும் பயன்படுத்தி, MOSFETs, IGBTs, Schottky Bypass Diodes மற்றும் transistors (மின்மாற்றிகள்) போன்ற உயர்-சக்தி குறைமின்கடத்தி சாதனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


MOSFET (Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor): மின்னணு சமிக்ஞைகளை மாற்றவும் பெருக்கவும் பயன்படும் ஒரு வகை மின்மாற்றி.


IGBT (Insulated-Gate Bipolar Transistor): அதிக செயல்திறன் மற்றும் வேகமான விசைத் திறன் கொண்ட ஒரு அரைக்கடத்தி சாதனம்.


Schottky Bypass Diodes: சோலார் பேனல்கள் மற்றும் மின்சுற்றுகளில் மின்சாரம் தவறான திசையில் பாய்வதைத் தடுக்கப் பயன்படும் ஒரு வகை மின்னணு கருவி.


Silicon Carbide (SiC): இது சாதாரண சிலிக்கானைவிட அதிக வெப்பம் மற்றும் மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு மேம்பட்ட பொருள்.


Crystal Matrix Ltd. (குஜராத்): செவ்வாய்க்கிழமை அன்று, காலியம் நைட்ரைடு (Gallium Nitride (GaN)) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Mini/Micro-LED திரைத் தொகுப்புகளைத் தயாரிப்பதற்கான 3,068 கோடி ரூபாய் மதிப்பிலான குறைமின்கடத்தி புனையமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், இது இந்தியாவின் திரை உதிரிபாகங்களை இணைக்கும் வசதி கொண்ட முதல் ஆலையாக மாறும் என்கின்றனர். இதுவரை, இந்தத் தொழில்முறை முக்கியமாக ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் மட்டுமே குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Suchi Semicon (குஜராத்): இந்த நிறுவனம் குஜராத் மாநிலம் சூரத் நகரில், 868 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு ஒருங்கிணைந்த குறைமின்கடத்தி தொகுப்பு மற்றும் சோதனை ஆலையை அமைக்க உள்ளது. இந்த மையத்தில் தனிப்பட்ட குறைமின்கடத்தி கூறுகள் (Discrete Semiconductors) உற்பத்தி செய்யப்பட உள்ளன.


அடுத்த கட்ட நடவடிக்கை: இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின்படி, இந்திய அரசாங்கம் தனது அடுத்தகட்டத் திட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் 11 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 92,000 கோடி ரூபாய்) மதிப்பிலான புதிய திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படலாம். இருப்பினும், மாற்றியமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மாற வாய்ப்புள்ளது. குறைமின்கடத்தித் திட்டத்தின் முதற்கட்டமான இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின் (ISM 1.0) முக்கியமாக சிப் தயாரிக்கும் உள்கட்டமைப்பை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது. ஆனால், அதன் அடுத்தகட்டமான இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0 (India Semiconductor Mission 2.0), சிப் தயாரிப்பிற்குத் தேவையான வாயுக்கள், ரசாயனங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள், அதனுடன் தொடர்புடைய துணைத் தொழில்களுக்கு அதிக ஆதரவை வழங்க வாய்ப்புள்ளது.


இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் 2.0, சிப் பொருத்துதல் மற்றும் சோதனை செய்யும் ஆலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மூலதனச் செலவு மானியத்தை அரசாங்கம் குறைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், புதிய திட்டமானது இத்தகைய ஆலைகளுக்குத் தேவையான இயந்திர தளவாடங்கள் மற்றும் வாயுக்கள், ரசாயனங்கள், மூலப்பொருட்கள் போன்ற பிற சுற்றுச்சூழல் தேவைகளுக்கும் ஆதரவை வழங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டமானது, சிப் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடும் என்றும் நிறுவனங்கள் சந்தையிலிருந்து திரட்டும் மூலதனத்தின் அளவைப் பொறுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அரசாங்கம் இந்த முறையில் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Original article :  12 semiconductor plants approved: Where India’s chip manufacturing mission stands, what’s next. -Soumyarendra Barik

Share: