50 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், அவசரநிலைக்கு வழிவகுத்த, இந்திராகாந்திக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நினைவுகூர்தல். -நிகிதா மோத்தா

 ஜூன் 12 அன்று காலை, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 15-வது அறையில், நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ​​பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தார். இந்தத் தீர்ப்பு பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக, ஜூன் 25  இரவு அவசரநிலையை  இந்திரா காந்தி அறிவித்தார்.


1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவில், பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் காரணம் காட்டி, அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதற்கான முக்கியக் காரணியாக அமைந்தது, 1971-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திராகாந்தி ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டிய ஒரு மனுவை உறுதிசெய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஜூன் 12-ஆம் தேதி தீர்ப்புதான் என்கின்றனர்.


அந்தத் தீர்ப்பையும், இந்திரா காந்திக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும், நெருக்கடி நிலையை பற்றியும் நாம்  தெரிந்து கொள்வோம்.

பிரபலமான ‘தேர்தல் வழக்கு’


1971-ஆம் ஆண்டு ரேபரேலி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த சோசலிசத் தலைவர் ராஜ் நாராயண், அவரது வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தபோது, ​​அலகாபாத் உயர்நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட ஒரு சட்டப் போராட்டத்திற்கான களமாக மாறியது. 'தேர்தல் வழக்கு' என்று அறியப்பட்ட அந்த மனுவில், பிரதமர் ஊழல் முறைகள் மூலமாகவும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரச் செலவுகளுக்கான சட்ட வரம்பை மீறியதன் மூலமாகவும், தனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க அரசு அதிகாரிகளையும் அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தியதன் மூலமாகவும் தனது வெற்றியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ​​முன்னிலையில் வாதங்களும் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு 1973 மற்றும் 1974 முழுவதும்  நடைபெற்றது.


1975-ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தி பெற்றார். அவர் தனது தேர்தல் பிரச்சாரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக, சாட்சிக் கூண்டில் ஐந்து மணிநேரம் செலவிட்டார். தீர்ப்பு ஜூன் மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ (2008) என்ற தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஜூன் 12-ஆம் தேதி காலை,  இந்திரா காந்தியின் தந்தையும் தாத்தாவும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய நீதிமன்றத்தின் அறை எண் 15-ல், நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் நாராயண் தாக்கல் செய்திருந்த வழக்கில் தனது தீர்ப்பை வாசித்தார்.


நீதிபதி சின்ஹா, இந்திராகாந்திக்கு எதிரான 14 குற்றச்சாட்டுகளில் 12-ஐத் தள்ளுபடி செய்தார். இருப்பினும், தனது 238 பக்க தீர்ப்பில், அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார்.


முதலில், இந்திரா காந்தியின் முன்னாள் தனிச் செயலாளரான யஷ்பால் கபூர், அரசுப் பணியிலிருந்து முறைப்படி விலகுவதற்கு முன்பே அவரது தேர்தல் முகவராகச் செயல்படத் தொடங்கிவிட்டார் என்று நீதிபதி சின்ஹாநீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார்.


இரண்டாவதாக, உத்தரப் பிரதேச அரசாங்க அதிகாரிகள், தேர்தல் கூட்டங்களுக்கான வசதிகளைத் தயார் செய்து, மின்சார ஏற்பாடு செய்தல் மற்றும் அவர் வாக்காளர்களிடம் உரையாற்றுவதற்கான மேடையை அமைத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் அவரது பிரச்சாரத்திற்கு உதவியிருந்ததை நீதிபதி சின்ஹா கண்டறிந்தார்.


இந்தக் காரணங்களின் அடிப்படையில், சின்ஹா ​​காந்தியின் 1971-ஆம் ஆண்டு தேர்தலைச் செல்லாததாக அறிவித்து, ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தார். இருப்பினும், இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 20  நாட்கள் அவகாசம் வழங்கினார்.


ஜூன் 12 தீர்ப்புக்கான எதிர்வினைகள்


அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அடுத்த நாள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தாங்கள் "ஊழல்வாதி" என்று அழைத்த பிரதமரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி, ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இருப்பினும், இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்க விரைந்து செயல்பட்டனர். ஜூன் 13 அன்றே, ஹரியானா முதலமைச்சர் பன்சிலால், காங்கிரஸ் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, இந்திரா காந்திக்குத் தங்கள் விசுவாசத்தைப்  வெளிப்படுத்தத் தொடங்கினார். பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இருந்த சாலைகள் அவரது விசுவாசிகளால் நிரம்பி வழிந்தன. அவர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டதோடு, நீதிபதி சின்ஹாவின் உருவ பொம்மைகளையும் எரித்தனர் என்று குஹா குறிப்பிடுகிறார். 


தன்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக வெளிநாட்டு சக்திகள் தனது உள்நாட்டு எதிரிகளுடன் சதி செய்வதாகக் குற்றம் சாட்டி, இந்திரா காந்தி கூட்டத்தினரிடையே உரையாற்ற வெளியே வந்தார். தனது எதிரிகளிடம் "தாராளமாகப் பணம் இருக்கிறது" என்று இந்திராகாந்தி கூறினார். ஒவ்வொரு நாளும் இந்திராகாந்தியின் இல்லத்திற்கு வெளியே பல ஆதரவாளர்கள் கூடினர். அவரும் அவர்களிடம் பேசுவதற்காக வெளியே வந்தார்.


ஜூன் 20 அன்று, இந்திரா காந்தி டெல்லியின் போட் கிளப் புல்வெளியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் உரையாற்றினார். தனது மகன்கள் மற்றும் மருமகள் சோனியா காந்தியுடன் இருந்த அவர், நேரு-காந்தி குடும்பத்தின் பொதுச் சேவைப் பாரம்பரியத்தை நினைவுபடுத்தி, "தனது இறுதி மூச்சு உள்ள வரை" தேசத்திற்கு சேவை செய்வதாக உறுதியளித்தார்.


உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?


ஜூன் 23 அன்று, காந்தியின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. மறுநாள், நீதிபதி வி. ஆர். கிருஷ்ண ஐயர் அலகாபாத் தீர்ப்புக்கு நிபந்தனைத் தடை விதித்தார். பிரதமர் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வும் அவரது மேல்முறையீட்டை முடிவு செய்யும் வரை அவரால் வாக்களிக்கவோ அல்லது சம்பளம் பெறவோ முடியாது என்று கூறியது.


இருப்பினும், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விதிமீறல்கள் தொடர்புடைய சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "மிகவும் தீவிரமான தேர்தல் முறைகேடுகள்" அல்ல என்பதால், அந்தத் தீர்ப்பு இறுதியில் வலுவற்றதாக அமையக்கூடும் என்று சின்ஹா ​​குறிப்பிட்டார்.




இந்த நிலையில், இந்திரா காந்தி தற்காலிகமாகப் பதவி விலகி, வழக்கிற்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜக்ஜீவன் ராம் போன்ற ஒரு மூத்த நபர் இடைக்காலப் பிரதமராகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சிலர் அறிவுறுத்தினர்.


ஆனால் இது தற்காலிகமானது என்று அவர் நம்பவில்லை என்று வரலாற்றாசிரியர் கியான் பிரகாஷ் தனது 2019-ஆம் ஆண்டு அவசரநிலைக் காலக் குறிப்புகள் (Emergency Chronicles) என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். "தனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்படுவதாக அவர் உறுதியாக நம்பினார். சிலியின் சால்வடார் அலெண்டேவுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பைச் சுட்டிக்காட்டி, அவர் அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIA மற்றும் ரிச்சர்ட் நிக்சன் மீது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினர். 


அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் அவரது மகன் சஞ்சய் காந்தி, மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய், ஹரியானா முதல்வர் பன்சிலால், பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் அடங்குவர்.


அடுத்தநாள் ஜூன் 25 எதிர்க்கட்சியினர் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயண், பிரதமர் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29-ஆம் தேதி முதல் ஒருவார காலப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தார்.


அவசரநிலை பிரகடனம்

இதற்கிடையில், நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்ற பிறகு, அவசரநிலைப் பிரகடனத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் வேகமாக மேற்கொண்டாதாக பிரகாஷ் எழுதியுள்ளார். 


ஜூன் 25 அன்று, உள்நாட்டு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் அவசரச் சட்டத்தை வரைவதற்கு ரே உதவினார். அந்தச் சட்டம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​அவர் உடனடியாக அதில் கையெழுத்திட்டார். அன்றிரவு, டெல்லி முழுவதும் உள்ள செய்தித்தாள் அலுவலகங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், ஜூன் 26 அன்று காலைப் பதிப்புகள் வெளிவரவில்லை.


மறுநாள், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் உரிமைகள் முடக்கப்பட்டிருப்பதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள வானொலி நாட்டுக்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, காவல்துறைப் பிரிவுகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக விரைந்து செயல்பட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மற்றும் பலரைக் கைது செய்தன.


உச்சநீதிமன்றம் அலகாபாத் தீர்ப்பை ரத்து செய்யும் என்று பெரும்பாலான வழக்கறிஞர்கள் நம்பினர். இருப்பினும், டெல்லியைச் சேர்ந்த ஒரு மதிப்புமிக்க சட்ட அறிஞர் கூறியதுபோல், பிரதமர் மேல்முறையீடு என்ற நீதிமன்றத்தின் வழிமுறைகளைத் கண்டுகொள்ளாமல், அதற்கு பதிலாக அவசரநிலை (Emergency) என்ற அசாதாரணமான, ஜனநாயகத்திற்கு முரணான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தார்’ என்று குஹா  குறிப்பிடுகிறார்.


Original article : Over 5 decades on, recalling Allahabad HC verdict against Indira that paved way for Emergency. -Nikita Mohta

Share:

டெல்லியை, உலகின் மிக அதிக பறவை வகைகளைக் கொண்ட தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுவது எது? - ரோஷ்னி யாதவ்

 உலகத் தலைநகரங்களிலேயே பறவை இனங்களின் பன்முகத்தன்மையில் நைரோபிக்கு அடுத்தபடியாக டெல்லி ஏன் இரண்டாம் இடத்தில் உள்ளது? 471 வகையான பறவை இனங்களுக்கு ஒரு பெருநகரம் எவ்வாறு புகலிடமாக அமைகிறது? இந்தப் பல்லுயிர் வளம் அதிகமாக உள்ள பகுதியை எது வடிவமைக்கிறது? இது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.


தற்போதைய செய்தி


ஜூன் 5 அன்று வெளியிடப்பட்ட டெல்லி பறவைகள் வரைபடத் தொகுப்பு, முதன்முறையாக நகரம் முழுவதும் உள்ள பறவை இனங்களின் பரவல் மற்றும் எண்ணிக்கையை வரைபடமாக்கியுள்ளதாகக் கூறுகிறது. மேலும், இது "பறவைகளின் பன்முகத்தன்மையில் உலகின் தேசியத் தலைநகரங்களுள் நைரோபிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில்" டெல்லியை நிலைநிறுத்தியுள்ளது. இந்தச்சூழலில், டெல்லி பறவை வரைபடத் தொகுப்பு மற்றும் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட புல்வெளிப் பறவைகள் (grassland bird census) கணக்கெடுப்பு ஆகியவற்றின் முக்கிய முடிவுகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

முக்கிய அமங்கள்:


1. பறவை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், டெல்லி வனத்துறை, 'இந்திய பறவைகள் கணக்கெடுப்பு' (Bird Count India), 'இயற்கைக்கான உலகளாவிய நிதியம்' (World Wide Fund for Nature (WWF)) இந்தியா மற்றும் பிற கூட்டு  அமைப்புகள் இணைந்து இந்த வரைபடத் தொகுப்பை உருவாக்கின.


2. வரைபடத் தொகுப்பின்படி, 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பதிவு செய்யப்படாத 22 இனங்களைத் தவிர்த்து, “டெல்லி பறவைகள் பட்டியல் தற்போது 471 இனங்களைக் கொண்டுள்ளது.


3. ஆரவல்லி மலைத்தொடரின் வடக்கு விளிம்புப் பகுதியில், மேற்கு இமயமலைக்கு  அருகில் இடம் பெற்று இருப்பது, யமுனா மற்றும் சாஹிபி வெள்ளச் சமவெளிகள் மற்றும் ஆர்க்டிக்கிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்டுள்ள ஒரு முக்கியப் பறவைகள் வலசைப் பாதையான மத்திய ஆசியப் பறவைப் பாதைக்கு (Central Asian Flyway (CAF)) அருகே அமைந்திருப்பது, இந்நகரின் தனித்துவமான புவியியல் சூழலே, இங்குள்ள பறவை இனங்களின் பன்முகத்தன்மைக்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று வரைபடத் தொகுப்பு குறிப்பிடுகிறது.


4. இந்த வரைபடத் தொகுப்பு  தனது மாதிரி வடிவமைப்பில் டெல்லியின் பரப்பளவில் 11 சதவீதத்தை  கொண்டுள்ளது. ஜனவரி 2025-ல் தொடங்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் போன்ற ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளப்பட்டு, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெறும்.


5. முதல் ஆண்டில், நகரம் முழுவதும் 221 இனங்கள் பதிவு செய்யப்பட்டன; இதில் குளிர்காலத்தில் 200 இனங்களும், கோடையில் 152 இனங்களும் அடங்கும். இவற்றில், 126 இனங்கள் உள்ளூர் பகுதிகளில் நிரந்தரமாக வாழும் இனங்களாகவும், 81 இனங்கள் குளிர்கால வலசைப் பறவைகளாகவும், 14 இனங்கள் கோடைகால வலசைப் பறவைகளாகவும் இருந்தன. பதிவு செய்யப்பட்ட பறவைக் கூட்டத்தில் ஏறக்குறைய பாதி, 108 இனங்கள் அல்லது 48.87 சதவீதம், முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்ணும் பறவைகளாக இருந்தன. தாவரம் மற்றும் விதைகளை உண்பவை 37 இனங்களையும், அனைத்துண்ணிகள் (omnivores) 34 இனங்களையும், முதுகெலும்புள்ள உயிரினங்கள் மற்றும் அழுகிய உடல்களை உண்பவை 33 இனங்களையும், பழம் மற்றும் பூந்தேனை உண்பவை ஒன்பது இனங்களையும் கொண்டிருந்தன.


6. இந்த வரைபடத் தொகுப்பு, மேலும் 18 உள்ளூர்-பூர்வ (எண்டெமிக்) பறவை இனங்களையும் பதிவு செய்கிறது; அதாவது, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டுமே காணப்படும் இனங்கள். மேலும், இது பல பாதிக்கப்படக்கூடிய பறவை இனங்களையும் பட்டியலிடுகிறது. அவற்றில், ஆபத்தான நிலையில் உள்ள (Endangered) எகிப்திய கழுகு (Egyptian Vulture) மற்றும் கருப்பு வயிற்று ஆற்றுப் புறா (Black-bellied Tern), பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) ஆற்றுப் புறா (River Tern) மற்றும் பொதுவான போச்சார்ட் வாத்து (Common Pochard), மேலும் அச்சுறுத்தலுக்கு நெருக்கமான (Near Threatened) கருப்பு வால் கோட்விட் (Black-tailed Godwit), பெருஞ்சிவப்பு வாத்து (Ferruginous Duck), வர்ண நாரை (Painted Stork), கருந்தலை ஐபிஸ் (Black-headed Ibis) மற்றும் கிழக்கு டார்டர் (Oriental Darter) ஆகிய இனங்களை பட்டியலிடுகிறது.




7. இந்த வரைபடத் தொகுப்புடன் தொடர்புடைய வல்லுநர்கள், டெல்லியின் பறவைப் பன்முகத்தன்மைக்கு, டெல்லி ஒரு சூழலியல் சந்திப்பில் அமைந்துள்ளதே காரணம் என்று கூறுகின்றனர்: ரிட்ஜ் மலைத்தொடர் ஆரவல்லி நிலப்பரப்பைத் தலைநகருக்குள் கொண்டுவருகிறது. அதே நேரத்தில், யமுனை நதிப்படுகை மற்றும் அதனுடன் தொடர்புடைய சதுப்பு நிலங்கள், நீர்ப்பறவைகளுக்கும் வலசைப் பறவைகளுக்கும் புகலிடம் அளிக்கின்றன.


8. அதே சமயம், மேற்கு இமயமலைக்கு அருகில் இருக்கும் நகரம் அமைந்திருப்பது பருவகால இடப்பெயர்வுக்கு வழிவகுக்கிறது. டெல்லியை வரைபடத் தொகுப்பு குறிப்பிடுகிறது. மத்திய ஆசிய பறவைகள் வலசைப் பாதையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், இது "மத்திய ஆசியா மற்றும் ஆர்க்டிக் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் உயிரினங்களுக்கு ஒரு பருவகால புகலிடமாக" அமைகிறது.


9. இதற்கிடையில், இந்த வரைபடத் தொகுப்பு , டெல்லியை “வரலாறு, புவியியல் மற்றும் பல்லுயிர் வளத்தின் சங்கமப் புள்ளி” என்று விவரிக்கிறது. உலகின் மிக அதிக மக்கள்தொகைக் கொண்ட நகரப் பகுதிகளில் ஒன்றாக இருந்தாலும், டெல்லியில் இத்தகைய பன்முக உயிரியல் மற்றும் இயற்கை வளங்கள் இன்னும் நிலைத்திருப்பதாக அது குறிப்பிடுகிறது. மேலும், "டெல்லிப்பகுதியைத் பாதுகாக்கும் பசுமையான மற்றும் நீல நிறப் பகுதிகளைப்" பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. குறிப்பாக, யமுனை ஆற்றின் தாழ்வான நிலப்பகுதிகள், பாதுகாப்பு மற்றும் வாழ்விட மறுசீரமைப்பிற்கான ஒரு முக்கிய சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

முதல் புல்வெளிப் பறவைகள் கணக்கெடுப்பு


1. கடந்த ஆண்டு மே மாதம், கசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள புல்வெளிப் பறவைகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்வதற்காக, வனத்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை பாதுகாவலர்களை கொண்ட குழு ஒன்று ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதன் பின்னர், “முதல் புல்வெளி பறவைகள் கணக்கெடுப்பு அசாமின் கசிரங்கா தேசியப் பூங்காவில் நடத்தப்பட்டது.



2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்புப் பட்டியலின்படி, புல்வெளிப் பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 43 புல்வெளிப் பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், அதிகரித்து வரும் நிலையில் உள்ள 1 இனமும், அதிகரித்து வரும் நிலையில் உள்ள 2 இனங்களும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள 6 இனங்களும் அடங்கும்.


காசிரங்கா தேசியப் பூங்கா ஏன் புகழ் பெற்றது?


42,996 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட கசிரங்கா தேசியப் பூங்கா, அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் வெள்ளச் சமவெளியில் உள்ள, சிக்கல் இல்லாத மற்றும் பிரதிநிதித்துவமான மிகப்பெரிய பகுதியாகும். இது 1985-ல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக பாரம்பரிய தளமாகும். இது இங்குள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்காகப் புகழ்பெற்றது. கசிரங்கா தேசியப் பூங்கா, 446 பட்டாம்பூச்சி இனங்களுடன் இந்தியாவின் 2-வது பெரிய பட்டாம்பூச்சி வாழ்விடமாகத் திகழ்கிறது.


3. கணக்கெடுப்பில் ஒரு புதிய வழிமுறை பயன்படுத்தப்பட்டது. கசிரங்கா தேசியப் பூங்கா இயக்குநர் டாக்டர் சோனாலி கோஷின் கூற்றுப்படி, இதன் செயலற்ற ஒலிப்பதிவு அடிப்படையிலான கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டதே இந்தக் கணக்கெடுப்பின் முக்கிய சிறப்பம்சமாகும்.


4. உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான அல்லது பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளிகளுக்கு மட்டுமே உரிய 10 உயிரினங்களுக்கு இந்தக் கணக்கெடுப்பு முன்னுரிமை அளித்தது:


இனங்கள்

அறிவியல் பெயர்

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க சிவப்புப் பட்டியல் நிலை

வங்காள அரிவாள்மூக்குக் கொக்கு

ஹௌபரோப்சிஸ் பெங்காலென்சிஸ்

அதிக ஆபத்தான நிலை

சதுப்பு நில பிராங்கோலின்

ஆர்டிகோர்னிஸ் குலாரிஸ்

அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள நிலை

இந்திய புல் பறவை

கிராமினிகோலா பெங்காலென்சிஸ்

அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ள நிலை

பின் தூக்கணாங்குருவி

ப்ளோசியஸ் மெகர்ஹிஞ்சஸ்

ஆபத்தான நிலை

சதுப்பு நிலப் புல் பாப்லர்

லாடிசில்லா சினராசென்ஸ்

ஆபத்தான நிலை

ஜெர்டனின் பாப்லர்

கிரிசோமா ஆல்டிரோஸ்ட்ரிஸ்

பாதிக்கப்படக்கூடிய நிலை

மெல்லிய அலகு பாப்லர்

ஆர்க்யா லாங்கிரோஸ்ட்ரிஸ்

பாதிக்கப்படக்கூடிய நிலை

கருப்பு-மார்பு கிளிமூக்குக் குருவி

பாரடாக்ஸோர்னிஸ் ஃபிளாவிரோஸ்ட்ரிஸ்

பாதிக்கப்படக்கூடிய நிலை

மார்ஷ் பாப்லர்

பெல்லோர்னியம் சதுப்பு நிலம்

பாதிக்கப்படக்கூடிய நிலை

முள்முடிப் புல்சிட்டு

ஸ்கோனிகோலா ஸ்ட்ரியேட்டஸ்

பாதிக்கப்படக்கூடிய நிலை


5. பிரம்மபுத்திரா வெள்ளப்பரப்பிற்கு மட்டுமே சொந்தமான, அழிவின் அபாயத்தில் உள்ள பின் தூக்கணாங்குருவி (Finn’s Weaver) பறவையின் இனப்பெருக்கக் கூட்டத்தை கண்டறியப்பட்டுள்ளதால், தேசியப் பூங்கா அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Original article : What makes Delhi one of the world’s most bird-diverse capitals? -Roshni Yadav

Share:

தொகுதி மறுவரையறைக்காக இடங்களை இலக்கு சார்ந்த முறையில் பிரிக்குமாறு EAC-PM பரிந்துரைத்துள்ளது. அனைத்துப் பெரிய மாநிலங்களிலும் இடங்களின் எண்ணிக்கையை 50% உயர்த்த அனுமதிக்கும் மாதிரியை இது முன்வைக்கிறது. - வர்கீஸ் கே. ஜார்ஜ், அபினய் லக்ஷ்மண்

 

EAC-PM : Economic Advisory Council to the Prime Minister - பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு


வாக்காளர் பங்கேற்பு, தொகுதியின் அளவு மற்றும் ஒவ்வொரு தொகுதியின் ஐந்து முக்கியக் கட்டமைப்பு அம்சங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான 'புள்ளிவிவரத் தொடர்பை' (statistical relationship) மதிப்பிடுவதற்காக, 2009 முதல் 2024 வரையிலான மக்களவைத் தேர்தல் தரவுகளைத் தொகுத்ததாக ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இந்த மாதிரியின் அடிப்படையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கை 824-ஆக அதிகரிக்கிறது. இது, கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களைக் (Delimitation-related Bills)  கொண்டுவந்து, அவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தவறியபோது முன்மொழிந்த திட்டத்துடன் இந்த மதிப்பீடு பெருமளவில் ஒத்துப்போகிறது.


மக்கள்தொகை பரவலை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மறுபகிர்வு செய்வதற்குப் பல காரணிகளைக் கொண்ட அளவுகோல்களின் அடிப்படையில், இந்தியாவின் அடுத்தகட்ட நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையின்போது,  தொகுதிக்கான இடங்களை "குறிப்பிட்ட இலக்குகளின் அடிப்படையில்" (targeted) பிரிக்குமாறு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அதேவேளையில், அனைத்து பெரிய மாநிலங்களுக்கும் தற்போது கொண்டுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையை இது மாற்றமின்றி அப்படியே தக்கவைக்கிறது.



இந்த அளவுகோல்களின் அடிப்படையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) உருவாக்கிய மாதிரியின்படி, உதாரணமாக, கேரளாவின் மக்களவை இடங்கள் 20-லிருந்து 30-ஆகவும், தமிழ்நாட்டின் இடங்கள் 39-லிருந்து 59-ஆகவும், உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 80-லிருந்து 120-ஆகவும் உயர்கின்றன. இந்த மதிப்பீடுகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை (Delimitation-related Bills) மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியபோது முன்வைத்த திட்டத்துடன் பெருமளவில் ஒத்திருக்கின்றன.


பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) மாதிரியில் இந்த அளவுகோல்களைப் பயன்படுத்தியதன் மூலம், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம், லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், நாகாலாந்து, சண்டிகர் மற்றும் லட்சத்தீவு போன்ற சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் தெரியவந்துள்ளது.


தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், மொத்தம் 170 தொகுதிகளைப் பிரிக்குமாறு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) மாதிரி பரிந்துரைக்கிறது. இவற்றில், 59 தொகுதிகளை இரண்டு பகுதிகளாகவும், மற்ற 111 தொகுதிகளை மூன்று பகுதிகளாகவும் பிரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


800-க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்ட மக்களவை


இந்த மாதிரியின்படி, மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 824-ஆக உயரும். இந்தக் குழுவின் (Council) கணிப்பின்படி, தென்னிந்திய மாநிலங்களின் (தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு) மக்களவை இடங்களின் மொத்தப் பங்கு தற்போதுள்ள 23.7%-லிருந்து 23.6%-ஆக மாறும். அதேவேளையில், அதிக மக்கள்தொகை கொண்ட ஆறு வட மாநிலங்களின் (ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், பீகார் மற்றும் மகாராஷ்டிரா) பங்கு, தற்போதுள்ள 45.6%-லிருந்து 45.2%-ஆக அமையும் என்று இந்தக் குழு மாதிரி (model) தெரிவிக்கிறது.



மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய தொகுதி இடப்பகிர்வு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஏற்பாடு 1976-ல் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முடக்கப்பட்டது (மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டது).


அடுத்த தொகுதி மறுவரையறை நடவடிக்கை மிக முக்கியமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) குறிப்பிடுகிறது. ஏனெனில், 1971-க்குப் பிறகு மாநில வாரியான இடங்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்கு இதுவே முதல் வாய்ப்பாக அமையும். இருப்பினும், மாநிலங்களுக்கான இடங்களின் தற்போதைய விகிதாச்சாரத்தை பெரும்பாலும் அப்படியே தக்கவைப்பதற்கான கொள்கை குறித்து இந்தக் குழு விரிவாகக் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, மாநில வாரியான இடங்களின் எண்ணிக்கையை 50% வரை அதிகரிக்கும் அம்சத்தை "மதிக்கும்" வகையிலேயே தங்கள் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே அது கூறுகிறது.


பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) உறுப்பினரான ஷாமிகா ரவி மற்றும் இந்தியப் புள்ளிவிவர நிறுவனத்தைச் (Indian Statistical Institute) சேர்ந்த முதித் கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த ஆய்வறிக்கை, பின்வரும் கேள்விகளுக்கு விடை காண்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று கூறுகிறது. அவை, "எந்தெந்தத் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்?, அவை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்? மற்றும் எந்த அளவுகோலின் அடிப்படையில் அவை பிரிக்கப்பட வேண்டும்?" என்பனவாகும்.


இதன் ஒரு பகுதியாக, 2009 முதல் 2024 வரையிலான மக்களவைத்  தேர்தல்களுக்கான தரவுத்தொகுப்புகளைக் கொண்டு, வாக்காளர் பங்கேற்பு, தொகுதிகளின் அளவீடு மற்றும் தொகுதியின் ஐந்து முக்கியக் கூறுகள் (நகர்ப்புற மக்கள்தொகை விகிதம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் பங்கு, மொழிசார்ந்த முக்கியத்துவம் மற்றும் மொழிசார் பன்முகத்தன்மை) ஆகியவற்றுக்கு இடையேயான "புள்ளிவிவரரீதியான தொடர்பை" மதிப்பிட்டதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) தெரிவித்துள்ளது.



இந்த மதிப்பீடு செய்யப்பட்ட புள்ளிவிவரத் தொடர்பைப் பயன்படுத்தி, "மிகப்பெரிய மற்றும் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் அதிக மாற்றங்களை வெளிப்படுத்தும் தொகுதிகளை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிப்பதன் மூலம், வாக்காளர் பங்கேற்பை அதிகபட்சமாக்கும் தொகுதி மறுவரையறைத் திட்டம்" ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


தொகுதிகளைப் பிரிப்பதற்கான அளவுகோல்கள்


இந்த ஆய்வறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், தொகுதிகளைப் பிரிப்பதற்கு "ஒரே மாதிரியான அளவுகோலுக்கு" (uniform criterion) பதிலாக "குறிப்பிட்ட இலக்கு சார்ந்த அளவுகோலை" (targeted criterion) பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) பரிந்துரைக்கிறது. மேலும், "2027-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு அமைக்கப்படவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission), தொகுதிகளைப் பிரிப்பதற்குத் தொகுதி அளவை மட்டுமே அடிப்படையாகக் கருதாமல், அந்தத் தொகுதியின் மக்கள்தொகை மற்றும் மொழிசார் அம்சங்களின் கூட்டுப் பின்னணியைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றும் அது வலியுறுத்துகிறது.


அடுத்தகட்ட தொகுதி மறுவரையறைப் பணியை, "வாக்குச்சாவடிகளைச் சீரமைக்கும் புதிய நடைமுறையுடன்" (fresh booth rationalising cycle) இணைந்து மேற்கொள்ளுமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்திற்கு அக்குழு பரிந்துரைத்தது. அத்துடன், "2027 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் மற்றும் பாலின வாரியான வாக்காளர் புள்ளிவிவரங்கள்" ஆகியவை திட்டமிட்டபடி வெளியிடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.


தொகுதிகள் பிரிக்கப்பட்ட பிறகும் நகர்ப்புறங்களில் பெண்களின் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் ஒரு இடைவெளி நீடித்திருப்பதை அந்த ஆய்வறிக்கையின் மாதிரி கணக்கீடுகள் (model calculations) காட்டுவதாக அது மேலும் குறிப்பிட்டது. எனவே, பெண்களுக்கென பிரத்யேக வாக்குச்சாவடிகளை அமைத்தல், நகர்ப்புறங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்ற வகையில் மாலை நேரங்களில் வாக்களிக்க வாய்ப்பளித்தல், வாக்குச்சாவடிகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பெண்களைக் குறிவைத்து வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம்களை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய வகையில் தொகுதி மறுவரையறையைத் திட்டமிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு அது பரிந்துரைத்தது.


6 முக்கியக் கண்டுபிடிப்புகள்


தங்கள் ஆய்வறிக்கை மற்றும் கொள்கை விளக்கக் குறிப்பில், ரவி மற்றும் கபூர் ஆகியோர் தங்கள் மறுஆய்வை ஆறு முக்கியக் கண்டுபிடிப்புகளாகப் பகுத்து விளக்கியுள்ளனர். இவை, பல்வேறு காரணிகளுக்கும் தொகுதி வாரியான வாக்காளர் பங்கேற்புக்கும் இடையிலான தொடர்பை விவரிக்கின்றன. ஒரு முக்கியக் கண்டுபிடிப்பாக, அவர்கள் முன்மொழிந்த மாதிரியானது, அடுத்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்காளர் பங்கேற்பு விகிதத்தில் ஒட்டுமொத்தமாக 2.3 சதவீதப் புள்ளிகள் வரை அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், வாக்காளர் பங்கேற்பில் ஏற்படும் மாற்றம் என்பது எந்தப் புள்ளிவிவர மாதிரியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர்கள்ள் ஒரு நிபந்தனையுடன் இதைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வாக்காளர் தொகுதியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு மாறாமல் அதன் அளவு குறைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஆராயும் வகையிலேயே இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தனர்.


2009 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய தொகுதிகளுக்கும் இடையிலான வாக்காளர் பங்கேற்பு விகித வேறுபாடு பாதியாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. "2024-ல் பெரிய தொகுதிகளை விடச் சிறிய தொகுதிகளில் வாக்காளர் பங்கேற்பு அதிகமாக இருப்பதற்கு, அவை சிறியதாக இருப்பது மட்டுமே காரணமல்ல. மாறாக, அதிகப் பழங்குடியினர் (ST) எண்ணிக்கை, குறைந்த நகர்ப்புற மக்கள்தொகை மற்றும் மிதமான மொழிசார்ந்த முக்கியத்துவம் போன்ற வாக்காளர் பங்கேற்புக்குச் சாதகமான சமூகக் கட்டமைப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதே அதற்குக் காரணமாகும்" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.




மேலும், ஒரு தொகுதியின் ஐந்து "கட்டமைப்பு அம்சங்கள்" (compositional features) மற்றும் அவற்றுக்கும் தொகுதியின் அளவு மற்றும் வாக்காளர் பங்கேற்புக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்ந்ததில், காலப்போக்கில் இவை ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவோ இல்லை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. அதோடு, பெண்களின் வாக்களிப்பு விகிதத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான கட்டமைப்புப் பண்பு, நகர்ப்புற வாக்காளர்களின் விகிதமே என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது. "இன்று, தொகுதி அளவைப் பொருட்படுத்தாமல், முழுமையான நகர்ப்புறத் தொகுதிகளில் வசிக்கும் பெண்கள், கிராமப்புறத் தொகுதிகளில் வசிக்கும் பெண்களைவிட சுமார் 5 சதவீதப் புள்ளிகள் குறைவான விகிதத்திலேயே வாக்களிக்கின்றனர் என்று அது குறிப்பிட்டது. அதேவேளையில், ஆண்களைப் பொறுத்தவரை இந்த இடைவெளி சுமார் 2 சதவீதப் புள்ளிகளாகவே உள்ளது."


தங்கள் ஆய்வு மற்றும் முடிவுகள் குறித்த பிற குறிப்புகளில், இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட மக்கள்தொகை மற்றும் மொழிசார் தரவுகள் 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டவை என்றும், எதிர்காலத்தில் மிகவும் நம்பகமான மறுமதிப்பீட்டிற்கு 2027-ம் ஆண்டு கணக்கெடுப்புத் தரவுகளைக் கொண்டு இவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) தெரிவித்துள்ளது.


Original article : EAC-PM recommends targeted splitting of seats for delimitation, shows model allowing 50% rise for all large States. -Varghese K. George, Abhinay Lakshman

Share:

செயல்படுத்தும் பணி நிறைவடைந்தது. ஆனால், தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளனர். -கிங்ஷுக் சர்க்கார்

 


தொழிலாளர் சட்ட விதிகள் (Labour Code Rules), தொழிலாளர்களின் கவலைகளுக்குத் தீர்வு காணவில்லை.


மே மாதத்தில் நான்கு தொழிலாளர் சட்டத்திற்கான (labour codes) விதிகள் அறிவிக்கப்பட்டதன் மூலம், இந்தச் சட்டத் தொகுப்புகளைச் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தில் (new labour codes) உள்ள பல பிரிவுகள் பிற்போக்கானவை என்றும், தொழிலாளர்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பவை என்றும் வாதிட்டு, தொழிற்சங்கங்களும் கல்வியாளர்களும் அவற்றுக்குக் கடுமையான எதிர்ப்புகளை எழுப்பியுள்ளனர். மேலும், 2019-20-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத் தொகுப்புகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்தச் சட்டத் தொகுப்புகள் : ஊதியச் சட்டம்-2019 (Code on Wages), தொழில்துறை உறவுகள் சட்டம்-2020 (Industrial Relations Code), சமூகப் பாதுகாப்புச் சட்டம்-2020 (Code on Social Security) மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்-2020 (Occupational Safety, Health and Working Conditions Code) ஆகியவை அடங்கும்.


முக்கியமான குறைபாடுகள்


ஒரு சட்டம் அல்லது சட்டத் தொகுப்பைச் செயல்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (standard operating procedures (SoP)) விதிகள் முக்கியமாக வரையறுக்கின்றன. அவை, மூலச் சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இருக்க முடியாது என்றாலும், சட்டம் பரந்த அளவில் இருக்கும்போதோ அல்லது பல்வேறு விதமாகப் பொருள் கொள்ளும் வகையிலோ இருக்கும்போது, ​​இந்த விதிகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் உள்ள பல விதிகளுக்குத் தொடர்ச்சியான எதிர்ப்பு இருந்ததால், இந்த விதிகள் சர்ச்சைக்குரிய சில அம்சங்களை தளர்த்தும் அல்லது அவற்றுக்குத் தீர்வு காணும் என்று பலர் எதிர்பார்த்தனர். இருப்பினும், இந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.


பல பத்தாண்டுகளாக இதுபோன்ற வேலைவாய்ப்புகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், 2020-ம் ஆண்டின் தொழிலாளர் உறவுகள் சட்டம் (Industrial Relations Code), இந்தியாவின் தொழிலாளர் சட்டக் கட்டமைப்பில் நிலையான-கால வேலைவாய்ப்பு (Fixed-Term Employment (FTE)) என்ற கருத்தை முறையாக அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்தச் சட்டம் குறைந்தபட்ச பணிக்காலத்தையோ அல்லது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் எண்ணிக்கையையோ வரையறுக்கவில்லை.


தொழிலாளர்கள்மீது ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்காக, இந்த விதிகள் இக்குறைபாடுகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். குறைந்தபட்சப் பணிக்காலம் (ஓராண்டு) என்பது, ஊழியர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மிகக் குறுகிய காலப் பணிக்காலங்களைத் தவிர்த்திருக்க முடியும். மேலும், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் எண்ணிக்கையின் மீதும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம். இல்லையெனில், வழக்கமான நிரந்தரப் பணியிடங்கள்கூட வரம்பற்ற புதுப்பிப்புகளுடன் கூடிய நிலையான-கால வேலைவாய்ப்புகளாக (FTE) மாறிவிடும் அபாயம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த முக்கியமான விவகாரங்கள் குறித்து விதிகள் மௌனம் காக்கின்றன.


ஊதியச் சட்டத் தொகுப்பு (மத்திய) விதிகள், 'அடிப்படை ஊதியம்' (floor wage) என்பதற்கு ஒரு தெளிவற்ற வரையறையை மட்டுமே வழங்குகின்றன. மேலும், அதனை குறைந்தபட்ச ஊதியத்திலிருந்து (minimum wage) தெளிவாக வேறுபடுத்திக் காட்டவில்லை. இந்த விதிகள் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோரினாலும், அத்தகைய கலந்தாலோசனைகளுக்கான விரிவான கட்டமைப்பை அவை குறிப்பிடாததால், இந்தச் செயல்முறை பெரும்பாலும் பெயரளவில் மட்டுமே இருக்கும் என்ற கவலை எழுகிறது. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான தெளிவான கொள்கைகளை வகுப்பதிலும் இந்த விதிகள் தவறிவிட்டன. இதன் விளைவாக, நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை மூன்று நுகர்வு அலகுகளாகக் (consumption units) கருதும் நடைமுறை தொடரவே வாய்ப்புள்ளது. இதில், வயதுவந்த ஆணுக்கு 1.0 என்ற அளவு நிர்ணயிக்கப்படும் நிலையில், ​​வயதுவந்த பெண்ணுக்கு 0.8 என்ற அளவு வழங்கப்படுவதால், இது பாலினப் பாகுபாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது


மேலும், தினசரி ஊதியத்தை எட்டால் வகுப்பதன் மூலம் மணிநேர ஊதியம் கணக்கிடப்படும் என்று அந்த விதிகள் மேலும் குறிப்பிடுகின்றன. இருப்பினும் இம்முறையில் கருத்தியல் ரீதியாக, ஒரு குறைபாடுள்ள அணுகுமுறையாகும். ஒரு மணிநேர ஊதியம் என்பது தினக்கூலியின் விகிதாசாரப் பங்கீடாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனெனில், ஒரு நாளின் மீதமுள்ள நேரங்களில் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமல் போகலாம். சர்வதேச அளவில், குறைந்தபட்ச மணிநேர ஊதியங்கள் பெரும்பாலும் தினக்கூலி விகிதங்களிலிருந்து தனித்து நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வீட்டுப் பணியாளர்கள் இருப்பதாலும், எதிர்காலத்தில் பகுதிநேர மற்றும் தள அடிப்படையிலான வேலைகள் விரிவடைய வாய்ப்புள்ளதாலும், இந்தப் பிரச்சினை குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.


கிக் தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்


சமூகப் பாதுகாப்புச் சட்ட (மத்திய) விதிகள், கிக் பொருளாதாரத்தில் உள்ள வேலைவாய்ப்பு உறவைத் தெளிவுபடுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கிக் மற்றும் தளப் பணியாளர்கள் (Gig and platform workers) தொடர்ந்து சுயதொழில் செய்பவர்களாகவே கருதப்படுகிறார்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சக்தியின் ஒரு பகுதியாகவும் வகைப்படுத்தப்படுகிறார்கள். இந்தச் சட்டத்தின்கீழ் முன்மொழியப்பட்ட கட்டாயப் பணிக்கொடை காப்பீடு (mandatory gratuity insurance) குறித்தும் இந்த விதிகள் மௌனம் காக்கின்றன. இத்தகைய காப்பீடு, முதலாளிகளால் பணிக்கொடை வழங்கத் தவறினால், பணியாளர்களைப் பாதுகாக்கக்கூடும். இருப்பினும், இந்தப் பாதுகாப்பு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை விதிகள் குறிப்பிடவில்லை. இதன் விளைவாக, தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான வழிமுறை வரையறுக்கப்படாமல் உள்ளது. தொழில்துறை உறவுகள் சட்ட (மத்திய) விதிகளின்படி (Industrial Relations Code (Central) Rules), பதிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 30% உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். இதன் பொருள், பதிவு மட்டுமே அங்கீகாரத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதாகும். பெரிய நிறுவனங்களில், சிறிய அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த வரம்பை அடைவது கடினமாக இருக்கலாம். இது பல பத்தாண்டுகளாக தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தைக்கான திறன் ஏற்கனவே குறைந்துவரும் ஒரு காலகட்டத்தில், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவற்றின் திறனை மேலும் பலவீனப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 30% உறுப்பினர் தேவை என்ற நிபந்தனை சட்டத் தொகுப்பிலேயே சேர்க்கப்படவில்லை. மேலும், இந்த விதிகள் நிலையான கால ஊழியர்களைப் பணியமர்த்துவது மற்றும் அவர்களின் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து கூடுதல் தெளிவை அளிக்கத் தவறுவதால், தெளிவின்மைக்கும் தவறான பயன்பாட்டிற்கும் கணிசமான வாய்ப்பு ஏற்படுகிறது.


தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகள்


தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தொகுப்பு (மத்திய) விதிகள் (Occupational Safety, Health and Working Conditions Code (Central) Rules), அச்சட்டத்தின் கீழ் வரும் பல்வேறு தொழில்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலன்சார்ந்த விதிகளை வகுக்கின்றன. இருப்பினும், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற, தொழில் சார்ந்த சில நலன்சார்ந்த நடவடிக்கைகள் இதில் இடம்பெறவில்லை. மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடிய செயல்பாடுகளை இந்த விதிகள் குறிப்பிடவில்லை. அத்துடன், 'முக்கியப் பணிகள்' (core activities) மற்றும் 'முக்கியமற்ற பணிகள்' (non-core activities) ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டையும் இவை தெளிவாக வரையறுக்கவில்லை.


முக்கிய செயல்பாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர் சந்தையானது முறைசாராத் தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ​​எனவே, இந்த விடுபடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு முக்கியப் பணிகள் குறித்த தெளிவான வரையறை இல்லாதது, குழப்பம், தெளிவின்மை மற்றும் விதிமீறல்கள் அல்லது தவறான பயன்பாடுகளுக்குப் பெருமளவில் வழிவகுக்கிறது.


பொதுவாக, தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களால் விமர்சிக்கப்பட்ட பல தெளிவற்ற அல்லது விரிவான விளக்கங்களுக்கு இடமளிக்கும் வகையிலான (open-ended) விதிகளை, அவற்றை உருவாக்கும்போதே ஓரளவாவது சீரமைத்திருக்கலாம். ஆனால், இப்போது தெளிவாகத் தெரிவதுபோல, அது நடக்கவில்லை. இது மற்றுமொரு தவறவிடப்பட்ட வாய்ப்பாகவும், நாட்டின் உழைக்கும் வர்க்கத்திற்கு மேலும் கவலைக்குரிய ஒரு விஷயமாகவும் உள்ளது.


கிங்ஷுக் சர்க்கார், கோவா மேலாண்மை நிறுவனத்தில் (Goa Institute of Management) பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை துறைப் பேராசிரியராக உள்ளார்.


Original article : Implementation complete, but workers still vulnerable. -Kingshuk Sarkar

Share:

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா - குடிமைச் சமூகத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறது. -பி. வில்சன்

 2026-ம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (Foreign Contribution (Regulation) Amendment Bill) மசோதாவானது, சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரங்கள் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் சார்ந்திருக்கும் நல சேவைகளைச் சீர்குலைக்கக் கூடும் என்ற கவலைகளை எழுப்புகிறது.


2026 மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா-2026 (Foreign Contribution (Regulation) Amendment Bill), ஒரு வழக்கமான ஒழுங்குமுறை நடவடிக்கை மட்டுமல்ல. இது அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாக இது முன்வைக்கப்பட்டாலும், இது நிர்வாக அதிகாரத்தை கணிசமாக அதிகரிக்கிறது. வெளிநாட்டு நிதியுதவியை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமாக முன்வைத்த, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (FCRA), அரசு சாரா நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள் மற்றும் கல்வி, மத நிறுவனங்கள் மீது அரசின் விரிவான கட்டுப்பாட்டை அனுமதிக்கும் சட்டமாக இது மாற்றுகிறது.


கண்காணிப்பிலிருந்து வரம்பு மீறிய அதிகாரம் வரை


ஏற்கனவே நடைமுறையில் இருந்த வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) நடைமுறை, எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் சிவில் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் மிகக் கடுமையான அமைப்புகளில் ஒன்றாக இருந்தது. 2020-ம் ஆண்டின் திருத்தங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இதில், அனைத்து வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளும் புதுதில்லியில் உள்ள ஒரே ஒரு வங்கிக் கிளை (பாரத ஸ்டேட் வங்கி) வழியாகவே செல்ல வேண்டும் என்று கட்டாயமாக்குதல், நிர்வாகச் செலவின வரம்புகளை 50%-இலிருந்து 20%-ஆகக் குறைத்தல், சிறிய அமைப்புகளுக்கு நிதியை மறு-மானியமாக (sub-granting) வழங்குவதைத் தடை செய்தல் மற்றும் அமைப்புகளை இடைநீக்கம் செய்யும் அதிகாரங்களை விரிவுபடுத்துதல் ஆகியவை இவற்றில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் மட்டுமே ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை, குறிப்பாக விளிம்புநிலைக் குழுக்களுக்குச் (marginalised communities) சேவை செய்யும் சிறிய மதச்சார்புடைய மற்றும் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.


2026-ம் ஆண்டு மசோதா இன்னும் ஒரு படிநிலைகள் முன்னே செல்கிறது. இது ஒரு புதிய அத்தியாயம் IIIA-ஐ அறிமுகப்படுத்தி (முந்தைய பிரிவு 15-ஐ நீக்கி), தற்போதுள்ள சொத்து மேலாண்மை விதிகளை மாற்றுவதன் மூலம், இழப்பீடு அல்லது நிர்வாக உரிமைகளை வழங்காமல் நிறுவனங்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் தடையின்றி அரசுக்கு வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை இது உருவாக்குகிறது. இதில் மிகவும் கவலைக்குரிய அம்சம், முன்மொழியப்பட்ட பிரிவு 14B ஆகும். இந்தப் பரிவு வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவின் தானியங்கி "நிறுத்தத்தை" அறிமுகப்படுத்துகிறது. ஒரு நிறுவனத்தின் புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், சரியான நேரத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கத் தவறினாலும், ஒரு புதுப்பித்தல் விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும்கூட, அந்த நிறுவனம் தனது பதிவை இழக்க நேரிடலாம். இதன் பொருள், நிரூபிக்கப்பட்ட முறைகேடுகளுக்குப் பதிலாக, நடைமுறைத் தாமதங்கள் மூலம் நிறுவனங்களை முடக்கி, உரிய சட்ட நடைமுறையை பலவீனப்படுத்தி, நிர்வாகத்தின் தன்னிச்சையான அதிகாரத்தை அதிகரிக்கிறது.


புதிய அத்தியாயம் IIIA-இன் கீழ் உள்ள பிரிவு 16A தான் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அதன்படி, ஒரு வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவு ரத்து செய்யப்படும்போதோ, ஒப்படைக்கப்படும்போதோ, அல்லது நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும்போதோ, அனைத்து வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளும் மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களும், முன் நீதிமன்ற மறுஆய்வு அல்லது சுதந்திரமான தீர்ப்பு இல்லாமலேயே, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகார அமைப்பிடம் தானாகவே "தற்காலிகமாக ஒப்படைக்கப்படும்". இதன் பொருள், ஒரு எளிய நிர்வாக முடிவு, நிறுவனங்களின் நிதி மற்றும் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டைப் பறித்துவிடும் என்பதாகும்.


பிரிவு-14-ன் கீழ் ரத்துசெய்தல் என்பது “பொது நலன்” போன்ற பரந்த மற்றும் அகநிலை சார்ந்த காரணங்களின் அடிப்படையில் அமையக்கூடும் என்பதால், சிறிய, நடைமுறை சார்ந்த அல்லது சர்ச்சைக்குரிய விதிமீறல்களுக்காகக் கூட நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. பிரிவு 14-ன் கீழ் இரத்துசெய்வது, பிரிவு 16A-ன் பயன்பாட்டைத் தூண்டுவதால், நடைமுறை சார்ந்த, சிறிய அல்லது சர்ச்சைக்குரிய விதிமீறல்களுக்காகக் கூட நிறுவனங்கள் சொத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளது. பின்னர், நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பானது இந்தச் சொத்துக்களை நிர்வகிக்க, மாற்ற அல்லது அப்புறப்படுத்த அதிகாரம் பெறும். மேலும், விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைக்கப்படும்.


இந்த விதிமுறை குறிப்பாக விரிவானது. ஏனெனில், இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதியளிக்கப்பட்ட சொத்துக்களை உள்ளடக்கி, பல பத்தாண்டுகளாகக் கட்டப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், மத நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக்கூடும்.


நியமிக்கப்பட்ட அதிகார அமைப்புக்குள் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அசாதாரணமானவை. அது சொத்துக்களைக் கட்டுப்பாட்டில் எடுக்கவும், நிறுவனங்களை நிர்வகிக்கவும், நிதிகளை மேற்பார்வையிடவும் மற்றும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட "பொது நலன்" என்ற அடிப்படையில் செயல்பாடுகளை மாற்றியமைக்கவும் முடியும். இது நிர்வாகத்திற்கு பரந்த அளவிலான தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு நிறுவனம், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தனது பதிவை மீட்டெடுக்கவோ அல்லது மறுபதிவு செய்யவோ தவறினால், அந்த அதிகாரம் நிரந்தரமாகிவிடும். அதன் பிறகு, அந்த அதிகார அமைப்பு சொத்துக்களை மாற்றவோ அல்லது விற்கவோ செய்யலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India) வரவு வைக்கப்படும். இது சட்டப்பூர்வ செயல்முறைகள் மூலம் நிர்வாகம் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வழிவகுக்கிறது.



இது நிறுவனங்களின் இருப்பிற்கு மட்டுமல்லாமல், சமூகங்கள் சார்ந்திருக்கும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டச் (FCRA) சொத்துக்களில் நிலம், கட்டிடங்கள், வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் செலவிடப்படாத நிதிகள் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, நிறுவனங்கள் திறம்பட மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கான உண்மையான சாத்தியக்கூறு உள்ளது.


வெளிநாட்டு நிதிப் பங்களிப்பாளர்கள், விளிம்புநிலை சமூகங்களுக்கு உதவுவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் பிற பொதுநல இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தியத் தொண்டு நிறுவனங்களுக்கு முக்கியமாக ஆதரவளிக்கின்றனர். இந்தப் பங்களிப்புகள், நிறுவனங்கள் உறுதியான சமூகப் பலன்களை வழங்குவதற்கு உதவுகின்றன.


பலவீனமான அல்லது சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அத்தகைய நிதிகளைப் பறிமுதல் செய்து ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றுவது, இந்த நிதிப் பங்களிப்புகள் வழங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கிறது. எனவே, புதிய விதிகள் இந்திய நிறுவனங்களை அரசின் பறிமுதல் என்ற தொடர்ச்சியான அபாயத்திற்கு உள்ளாக்குகின்றன. இது பங்களிப்பாகப் பெறப்பட்ட நிதிகளையும், அந்த நிதிகளால் உருவாக்கப்பட்ட அல்லது ஆதரிக்கப்பட்ட சொத்துக்களையும் அபாயத்தில் ஆழ்த்துகிறது.


இந்தக் கட்டமைப்பு, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட “நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பிடம்” (Designated Authority) சொத்துக்களை “தற்காலிகமாக ஒப்படைப்பதற்கும்” “நிரந்தரமாக ஒப்படைப்பதற்கும்” விரிவான நடைமுறைகளையும் அறிமுகப்படுத்துகிறது.


இந்தத் திருத்தங்கள், இடைநீக்கம் மற்றும் விசாரணைக் காலங்களில் நிர்வாகக் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன. திருத்தப்பட்ட பிரிவு-13, நிறுவனங்கள் முன் அனுமதி பெறாமல் இடைநீக்கக் காலத்தில் தங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதைத் தடை செய்கிறது. அவற்றின் செயல்பாடுகளைத் திறம்பட முடக்குகிறது. திருத்தப்பட்ட பிரிவு 43, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) விதிமீறல்களை எந்தவொரு மாநில நிறுவனமும் விசாரிப்பதற்கு முன்பு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்று கோருவதன் மூலம் அமலாக்கத்தை மையப்படுத்துகிறது. கூடுதலாக, "முக்கியப் பொறுப்பாளர்கள்" என்பதற்கான விரிவான வரையறைகள் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கான அதிகரித்த தனிப்பட்ட பொறுப்பு ஆகியவற்றுடன் இணைந்த இந்த மசோதா, குடிமைச் சமூகப் பங்கேற்பைத் தடுக்கக்கூடிய ஒரு அச்சச் சூழலை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.


வரையறுக்கப்பட்ட பொறுப்புணர்வு


2026-ம் ஆண்டு மசோதாவானது, தற்போது செயலிழந்த அல்லது இயங்காத நிறுவனங்களின் சொத்துக்களைக் கையாள்வது தொடர்பான பிரிவு 22-ஐ ரத்து செய்யப் பரிந்துரைக்கிறது. மேலும், இந்தச் சட்டத்தில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள், அனுமதிகள், பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை அங்கீகரிப்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ தெளிவான காலக்கெடு இல்லாததால், நிச்சயமற்ற தன்மையும் தாமதங்களும் ஏற்படுகின்றன. இது வெளிநாட்டு நிதியைச் சார்ந்திருக்கும் திட்டங்களைத் தடுப்பதோடு,, விளிம்புநிலைச் சமூகங்களை அதிக அளவில் பாதிக்கக்கூடும்.


பெரும்பாலும், தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக உரிமம் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக, நிறுவனங்கள் இத்தகைய முடிவுகளை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது. நடைமுறைச் சார்ந்த குறைபாடுகள் காரணமாகவும் உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது இடைநிறுத்தப்படலாம். இது, சமூகங்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் மூடப்படுவதற்கு வழிவகுக்கலாம்.


சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்கம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கிறிஸ்தவ அமைப்புகள் ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், பழங்குடியினர் நல அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளை நடத்துகின்றன. இவற்றில் பல, தேவாலயங்கள், புலம்பெயர் குழுக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து தொடர்ச்சியான நிதியுதவியைப் பெறுகின்றன. கேரளா, தமிழ்நாடு, நாகாலாந்து, மிசோரம் மற்றும் மேகாலயாவில் இதுபோன்ற பல நிறுவனங்கள் உள்ளன. சிறுபான்மையினர் நடத்தும் அறக்கட்டளைகள் பெரும்பாலும் பெரும்பான்மையினருக்கே பயனளிக்கின்றன என்பது ஒரு உண்மையாகும். பிரிவு 16A-இன் கீழ், இவற்றின் பதிவு காலாவதியானாலோ, புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலோ, இந்நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அபாயம் உள்ளது. நீண்டகாலமாக இயங்கிவரும் கான்வென்ட் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளை மருத்துவமனைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற நிறுவனங்கள், நடைமுறை விதிகளைப் பின்பற்றாத காரணத்தால் மட்டுமே அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் வரும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. ஆனால், அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவனங்களைத் திட்டமிட்டுக் குறிவைக்கிறது என்பதும், 2014 மற்றும் 2026-க்கு இடையில், சுமார் 22,000 வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு  ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள் எந்தவொரு சரியான அல்லது நம்பகமான காரணங்களும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். அரசாங்கம் சிறுபான்மையினரின் சொத்துக்களைக் குறிவைப்பதாகத் தெரிகிறது. ஆனால், உண்மையில் அது பெரும்பான்மையினருக்கே நன்மை அளிக்கிறது என்று கவலையுடன் கூறலாம்.


வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) உரிமங்கள் ரத்து செய்யப்படுவது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு, தடுப்பூசி செலுத்துதல், பச்சிளம் குழந்தைகள் நலம், ஊட்டச்சத்து, மழலையர் கல்வி, பெற்றோரின் பங்களிப்பு, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் அரசுத் திட்டங்களுக்கான அணுகல் ஆகியவற்றில் நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இத்துறை பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% மற்றும் ரத்து செய்யப்பட்ட உரிமங்களால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏறத்தாழ நான்கு லட்சம் முதல் எட்டு லட்சம் வரையிலான தனிநபர்கள் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை இழக்க நேரிடுகிறது.


2014-ம் ஆண்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையின்படி, குடிமைச் சமூக அமைப்புகள் பொதுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட, 27 லட்சம் வேலைவாய்ப்புகளையும் 34 லட்சம் முழுநேரத் தன்னார்வலர்களையும் உருவாக்குகின்றன. 515 தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் (NGOs) நடத்தப்பட்ட ஒரு தனி கணக்கெடுப்பில், அவற்றில் 47% நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இந்தத் திருத்தங்கள் நிறுவனங்களின் இருப்பை மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக வளங்களையும் அச்சுறுத்துகின்றன. நிலம், சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத நிதிகள் போன்ற சொத்துக்கள் பல நிறுவனங்கள் முழுமையாக மூடப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.


அரசியலமைப்பு உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன


இந்த மசோதா சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினர் சார்ந்த அமைப்புகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள "பொது நலன்" (public interest) என்ற வரையறையானது, சிறுபான்மையினர் உரிமைகள், பழங்குடியினர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் அல்லது மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக, நிதிப் பங்களிப்பாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அத்தகைய அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதைத் தடுத்து, ஒருவித அச்சமூட்டும் தாக்கம் ஏற்படக்கூடும்.


இந்த மசோதா, சட்டப்பிரிவுகள் 14, 19(1)(c), 25, 26, 29, 30 மற்றும் 300A ஆகியவற்றின் கீழ் அரசியலமைப்புரீதியான கவலைகளையும் எழுப்புகிறது. நிர்வாகத் துறைக்கு (அரசுக்கு) விரிவான அதிகாரங்களைக் குவிப்பதன் மூலம், இது சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம், மத மற்றும் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமை மற்றும் சொத்துரிமைகளைச் சீர்குலைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.


வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகள் மீதான எந்தவொரு ஒழுங்குமுறையும், முறையான சட்ட நடைமுறைகள், சுதந்திரமான மேற்பார்வை மற்றும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுடன் இணைந்திருக்க வேண்டும். அத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல், இந்த மசோதா நவீன இந்தியாவில் குடிமைச் சமூகத்தைப் பாதிக்கும் மிகவும் அடக்குமுறைச் சட்டங்களில் ஒன்றாக மாறும் அபாயம் உள்ளது.

பி. வில்சன், நாடாளுமன்ற உறுப்பினராகவும் (மாநிலங்களவை), இந்திய உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article : FCRA Bill — expanding state control over civil society. -P. Wilson

Share: